‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் வீதிதோறும் ஒலித்த உரிமை முழக்கம். இப்போது களத்தில் மக்களின் குரலாக தென் மாநில ஆட்சிகளின் பிரகடனமாகும் வரலாற்றுப் போக்கு உருவாகியிருக்கிறது.

இந்தியத் துணைகண்டத்தில் அடைப்பட்டுக் கிடக்கும் தேசிய இனங்களின் தனித்தன்மைகளை அழித்து உருவாகும் ஒற்றை இந்திய அமைப்புதான் பார்ப்பனிய இந்துத்துவ கலாச்சாரத் திணிப்பை செயல்படுத்துவதற்கான தளம் என்ற பா.ஜ.க. சங்பரிவாரங்களின் இலக்கும் - ஒரே உரிமம், ஒரே அனுமதியுடன் பரந்த சந்தையை பெறும் வாய்ப்புள்ள ஒற்றை இந்தியாவே பன்னாட்டு பெரும் முதலாளிகளின் பெரு விருப்பம் என்ற இலாபவேட்டை இலக்கும் இணைந்து நிற்கும் சூழலில் தென்மாநிலங்களின் உரிமைக் குரல் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,14ஆவது நிதி ஆணையம், தென் மாநில வளர்ச்சிகளை முடக்கும் நிதி ஒதுக்கீடு கொள்கைகளை சுட்டிக்காட்டி முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆந்திர முதல்வரும் தெலுங்கானா முதல்வரும் நடுவண் அரசின் புறக்கணிப்பைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். பா.ஜ.க. கூட்டணியிலிருந்து  தெலுங்கு தேசம் உறவை முறித்துக் கொண்டு விட்டது.

காங்கிரஸ் எனும் தேசியக் கட்சியில் இருந்தாலும் கருநாடக முதல்வர் சித்தராமய்யா இந்தி எதிர்ப்பு மற்றும் மாநிலத்துக்கு தனிக் கொடி என்று மாநில உரிமைகளை முழங்கி வருகிறார்.

“வரலாற்று ரீதியாகவே, தெற்குதான் வடக்குக்கு மானியம் அளித்து வருகிறது. உத்திரபிரதேசம் மத்திய வரித் தொகுப்புக்கு ரூ.1/- செலுத்தி 1.79 திரும்பப் பெறுகிறது என்றால், கருநாடகம் அதே மத்திய வரித் தொகுப்புக்கு ரூ.1/- செலுத்தி வெறும் 0.47 காசு மட்டுமே பெறுகிறது” என்று சுட்டிக் காட்டியதோடு, பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் உரிமை மாநிலங்களுக்கு வேண்டும். மாநில அதிகாரங்களை உறுதி செய்யும் புதிய பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த உரிமைப் போராட்டத்தில் மற்றொரு அகில இந்திய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலமும் தன்னை இணைத்துக் கொண்டிருப்பது - மகத்தான திருப்பம். தென் மாநில வரி வருவாயை வடமாநிலங்கள் சூறையாடுவதைத் தடுத்து நிறுத்த தென் மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, தென் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார், கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் அய்சக்.

நதி நீர்ப் பங்கீடுகளில் தென் மாநிலங்களுக்கிடையே முரண்பாடுகள் இருந்தாலும் இந்தியாவின் ஒற்றை ஆட்சிக்குள் அடங்கிக் கிடப்பதிலிருந்தும் கொள்கை வகுப்பு உரிமைகள் நடுவண் அரசிடம் குவிந்து கிடப்பதிலிருந்தும் விடுவித்துக் கொள்வதே ‘முதன்மையான முரண்பாடு’ என்ற சரியான புரிதலை வரலாறு உணர்த்தி நிற்கிறது. திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பு காலத்தின் தேவையாகியிருக்கிறது!

Pin It