தோழர் சுப.வீரபாண்டியனை நிறுவனராகவும், மேலாண்மை அறங்காவலராகவும் கொண்டு, 21.10.2016 அன்று சென்னையில், திராவிடத் தமிழர் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தோழர்கள் எழில் இளங்கோவன், மா. உமாபதி ஆகியோர் அறங்காவலர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். விரைவில் தோழர்கள் ஆ.சிங்கராயர், சிற்பி செல்வராஜ் ஆகியோர் அறங்காவலர்கள் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

சமூக நீதிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், தமிழின, மொழி மேம்பாட்டிற்குப் பாடுபடுவதும், பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்ப்பதும் இவ்வறக்கட்டளையின் முதன்மை நோக்கங்களாகும்.

திராவிடத் தமிழர் என்றால் என்ன, ஆரியத் தமிழர்களும் உள்ளனரா என்ற வினாவிற்கு, அறக்கட்டளை நிறுவனர் சுபவீ, ‘ஆம் உண்டு’ என்று விடையளிக்கிறார். “திராவிடம் என்பது ஆரியம் என்னும் சொல்லின் எதிர்ச் சொல்லே ஆகும். ஆதலால் பார்ப்பனிய எதிர்ப்புத் தமிழர்களையே திராவிடத் தமிழர்கள் என்கிறோம். பார்ப்பனியத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிப்பவர்கள் ஆரியத் தமிழர்கள்தாமே” என்றார் அவர். திராவிடர் என்பதற்கான உண்மை வரலாற்றுப் பொருளை மறைப்பதற்காக பல்வேறு பொருள்களை அகராதிகளிலிருந்து தேடிப்பிடிக்கும் ‘அதிமேதாவிகள்’ குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

அடுத்த இதழில், அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு முதலான செய்திகள் கருஞ்சட்டைத் தமிழர் இதழில் வெளியிடப்படும். சமூக நீதியை நிலைநாட்ட விரும்பும் திராவிடத் தமிழர்கள் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். 

பேரவைச் செயற்குழுத் தீர்மானங்கள்

22.10.2016 அன்று சென்னை, மேற்கு கலைஞர் கருணாநிதி நகரில், அவைத்தலைவர் கயல் தினகரன் தலைமையில் நடைபெற்ற பேரவையின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், வெளியிடப்பட்ட அறிவிப்புகளும்:

-----------------------------------------------------------------------------------------------------------1.          திராவிடத் தமிழர் அறக்கட்டளை என்னும் அமைப்பு 21.10.2016 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதன் நிறுவனர்&-மேலாண்மை அறங்காவலர் சுப.வீரபாண்டியன் என்றும், தோழர்கள் எழில் இளங்கோவன், மா.உமாபதி, சிங்கராயர், சிற்பி செல்வராஜ் ஆகியோர் அறங்காவலர்களாக இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டது.

2.            இயக்கத்தின் தொய்வில்லாத தொடர்புகளுக்காக, பேரவைச் செயற்குழு அணி என ஒரு கட்செவிக் குழு (வாட்ஸ் அப்) அமைக்கப்பட்டு அதனைத் துணைப் பொதுச் செயலாளர்கள் இருவரும் நடத்திச் செல்வர் எனத் தீர்மானிக்கப்பட்டது.

3.            அதே நோக்கில், மகளிர் அணி, இலக்கிய அணி, வலைத்தள அணி, வழக்கறிஞர் அணி ஆகிய நான்கு அணிகளுக்கான தனித்தனிக் கட்செவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவ்வவ் அணிகளின் பொறுப்பாளர்களால் அவை நிர்வகிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

4.            2017 ஜனவரி 22 ஆம் நாள் நம் பேரவையின் 11 ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, அன்றையதினம், 10ஆம் ஆண்டு நிறைவுநாள் விழாவைச் சென்னையில் சிறப்பாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

5.            வரும் நவம்பர் முதல், மாநில அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான தோழர் புலேந்திரனை இயக்கத்தின் முழு நேரப் பணியாளராக நியமிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

6.            இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர்களாக, சென்னை மாவட்டச் செயலாளர் முத்தையா குமரன், காஞ்சி மாவட்டத் தலைவர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோரை நியமிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

7.            நவம்பர் முதல், மண்டலவாரியாக இயக்கத் தோழர்களுக்குப் பயிலரங்கம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

8.            ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும் நவம்பர் இறுதிக்குள், கருஞ்சட்டைத் தமிழர் பத்தாண்டுக் கட்டணமாகக் குறைந்தது 10 பேரிடம் ரூ.15000 பெற்று, அதனைக் கருஞ்சட்டைத் தமிழர் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

- சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர்

Pin It