தி.மு.க.வைத் தேர்தலில் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில், கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது தினமலர். இனிமேல் கருத்துக் கணிப்பு, மக்கள் கருத்து எல்லாம் எடுபடாது என்பது புரிந்து, சோதிடத்திடம் அடைக்கலம் புகுந்துள்ளது அந்த நாளேடு!

madurai aadeenam 3182016 மார்ச் 7 ஆம் நாள் ஏட்டில், தேர்தல் களம் பகுதியில், “ஜெயிக்கும் கூட்டணி இதுதான்” என்ற தலைப்பின் கீழ், 5 சோதிடர்களின் ‘அபார’க் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.

கலைஞருக்கு மேஷத்தில் புதன், ரிஷபத்தில் சந்திரன், மிதுனத்தில் சுக்கிரன், சிம்மத்தில் ராகு என்றெல்லாம் அடுக்கிவிட்டு, இந்தத் தேர்தல் இவருக்குப் பின்னடைவை உண்டாக்கும் என்று முடிக்கும் ஒரு சோதிடர், ஓட்டுப்பதிவு நாளின் கிரக நிலைகளையும் வைத்துப் பார்க்கும்போது ஜெயலலிதாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எழுதுகிறார்.

அ.தி.முக. கட்சி ஆரம்பித்த நாள் 17.10.1972. ஜெயலலிதா பிறந்த நாள் 24.2.1948. இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது இவரது ஜாதகப்படி வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது இன்னொரு சோதிடரின் கண்டுபிடிப்பு.

இப்படியாக ஐந்து சோதிடர்களும் ஒரே மாதிரியாக எழுதுகின்றனர் அல்லது எழுத வைக்கப்பட்டுள்ளனர். எனினும், விஜயகாந்த், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றால் வெற்றி கிடைக்கும் என்கிறார் ஒரு சோதிடர். கலைஞர் தலைமையில் கூட்டணி வந்தால் வெற்றி கிடைக்காதாம். (சுப்பிரமணிய சாமியின் சீடர் போலிருக்கிறது).

சோதிடமே சுத்தப் பொய் என்பது ஒரு புறமிருக்க, இந்த சோதிடர்களிடம் அல்லது வெளியிட்ட தினமலரிடம் நாம் கேட்பதற்கு இரண்டு வினாக்கள் இருக்கின்றன.

1. அ.தி.மு.க. கட்சி உருவான நாளும், ஜெயலலிதா பிறந்த நாளும் எப்போதும் மாறப் போவதில்லை. அப்படியிருக்க அவற்றைக் கொண்டு வெற்றியைத் தீர்மானிக்க முடியும் என்றால், 1996 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் அவர் ஏன் தோல்வி அடைந்தார்? அந்தத் தேர்தல்களின் போது அவருடைய பிறந்த நாளை யாராவது மாற்றி விட்டார்களா அல்லது அந்தத் தேர்தல்கள் நேரத்தில் மட்டும் அ.தி.மு.க. தொடங்கியது வேறு நாளில் என்று அறிவித்திருந்தார்களா?

2. ‘இன்னாரோடு இன்னார் கூட்டணி வைத்தால்’ என்று சந்தேகமாக எழுதும்போதே யார் யாரோடு கூட்டணி வைக்கப் போகின்றனர் என்பது இந்தச் சோதிடருக்குத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. இவர் இவருடன் இந்தத் தேதியில் கூட்டணி வைப்பார், இந்தக் கூட்டணி இத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்று சொன்னால் அது சோதிடம். பலிக்கிறதா என்று மக்களும் பார்ப்பார்கள். அப்படி இல்லாமல், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்றே தெரியாத இந்த சோதிடர்களுக்கு, எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பது மட்டும் துல்லியமாகத் தெரிகிறதே, அது எப்படி?

விருப்பத்தைச் செய்தியாய் வெளியிடும் ஏடுகளுக்கு இன்னும் இரண்டரை மாதம் கொண்டாட்டம்தான்!

ஒரு கொசுறு: “அம்மாவின் வெற்றியைப் பார்ப்பதற்காகத்தான் சந்நிதானம் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் மதுரை ஆதீனம். அடக் கொடுமையே, சைவத்தைப் பரப்புவதற்காக என்றல்லவா நாம் இதுவரை தவறாக எண்ணிக் கொண்டிருந்தோம். போகட்டும், தேர்தல் முடிவு வெளிவரும் மே 19 அன்று சந்நிதானத்துக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று வேறு கவலையாக உள்ளது.

==================

தெருச் சண்டையா, தொலைகாட்சி விவாதமா?

01.03.2016 அன்று இரவு தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து விவாத அரங்கைப் பார்த்துக் கொண்டிருந்த நான் ஓரிடத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். பார்த்த பலரும் அந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

விஜயகாந்த்தின் தே.மு.தி.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து உரையாடல் நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் அருணன், வானதி சீனிவாசன், சீமான், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்குபெற்ற அவ்விவாதத்தைப் பாண்டே நடத்திக் கொண்டிருந்தார்.

வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்ட்டணியை விடக் கூடுதலாக வாக்குகள் வாங்கவில்லையென்றால், தன் கட்சியைக் கலைத்துவிட்டு சி.பி.எம். கட்சியில் சேர்ந்து விடுவதாகச் சீமான் அறைகூவல் விட்டார். அந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதாக அருணன் கூறினார். இப்படித்தான் ‘நகைச்சுவையாக’ அந்த உரையாடல் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு கட்டத்தில், சீமான், பேராசிரியர் அருணனைப் பார்த்து, “யோவ், லூசு மாதிரிப் பேசாதே” என்றார். யாரும் எதிர்பார்க்கவில்லை. பொது இடத்தில், லட்சக் கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியில், ஒரு கட்சியின் தலைவர் இப்படிப் பேசுவார் என்று நினைத்தும் பார்க்க முடியவில்லை. அருணனும் சினம் கொண்டு, “டேய், நீதாண்டா லூசு” என்று திருப்பிச் சொன்னார். மக்கள் இனி நம்மையெல்லாம் எப்படி மதிப்பார்கள்?

பொது விவாதங்களில் அநாகரிகத்தின் உச்சம் தொட்ட நிகழ்வு என்று இதனைச் சொல்லலாம். பேராசிரியர் அருணன் வெளியிட்ட கருத்துகள் சில எனக்கும் உடபாடில்லாதவைதான். ஆனாலும் அவருடைய கல்வித் தகுதி, ஆய்வுத் திறன் எல்லாம் எவ்வளவு உயர்ந்தவை. தமிழகத்தின் இரு நூற்றாண்டு வரலாறு, தமிழர் தத்துவ மரபு, காலந்தோறும் பார்ப்பனியம், கடவுளின் கதை என்று எவ்வளவு அறிவார்ந்த நூல்களை அவர் தமிழ் மண்ணுக்குத் தந்துள்ளார். அவரைப் பார்த்து தடித்த சொற்களைப் பயன்படுத்துவது எவ்வளவு இழிவானது.

ஒருவேளை, அருணனுக்குப் பதிலாக , ஒன்றுமே படிக்காத இன்னொருவர் அந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் உரிய மதிப்போடு பேசுவதுதானே “தமிழர் பண்பாக” இருக்க முடியும். தமிழரை விடுங்கள், மனிதப் பண்பு அதுதானே!

ஆனால் “நாம் தமிழர்” பண்பாடு இதுதான் போலிருக்கிறது. தோழர் அருணனும் தன் தரத்தை விட்டுக் கீழே இறங்கிப் பேசியதற்குப் பதிலாக, அந்த அரங்கை விட்டு வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும்.

சீமான் அல்லது அவர் சார்பாக தந்தி தொலைகாட்சி வருத்தம் தெரிவித்தால் நாகரிகம் சற்றுப் பிழைக்கும்!

=====================

முத்தரசன் காட்டும் முகம்

நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், “அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் வரும் தேர்தலில் போட்டி. தி.மு.க. மூன்றாவது இடத்துக்குப் போய்விடும்“ என்று கூறியுள்ளார், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் முத்தரசன்.

ஒவ்வொருவருக்கும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி குறித்துத் தாங்கள் நம்புவதையோ, தங்கள் அணித் தொண்டர்களுக்குக் கூற வேண்டும் என்று கருதுவதையோ வெளிப்படுத்த அனைத்து உரிமையும் உண்டு. அவ்வாறுதான் முத்தரசன் தன் கருத்தைச் சொல்லியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர்களின் உள்மனத்தில் என்ன இருக்கிறது என்பது அவரை அறியாமலே வெளிப்பட்டுள்ளது.

பொதுவாகத் தேர்தல் என்பது, ஆளும் கட்சி குறித்த விமர்சனமாக இருக்கும். ஆட்சி தொடர வேண்டும் என்றோ, அது அகற்றப்பட வேண்டும் என்றோ அணிகள் பிரிவது இயற்கை. ஆனால் இங்குதான், ஆளும் கட்சியை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்பவர்கள் கூட, இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத தி.மு.க.வைத் தாக்குவதில் மட்டுமே மிகுந்த கவனத்தோடு உள்ளனர்.

தி.மு.க.விற்கு மூன்றாவது இடம்தான் என்கிறார் முத்தரசன், ஏதோ அவர் கட்சி முதலிடத்தில் இருப்பது போல! அவர்கள் இடம் பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணியில் கூட அவர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அவர்களே அறிவர். தங்களுக்கான மக்கள் செல்வாக்கையோ, வாக்கு எண்ணிக்கையையோ இன்றுவரை வளர்த்துக் கொள்ள இயலாத தோழர்கள், தி.மு.க.வின் இடம் பற்றிப் பேசுவது எவ்வளவு வேடிக்கையானது.

அ.தி.மு.க.வை அவர்கள் மறைமுகமாக ஆதரிப்பதைத்தான் அவருடைய நேர்காணல் காட்டுகிறது. தோழர் முத்தரசன் தன் உண்மை முகத்தை (அதில் கொஞ்சம் தா. பாண்டியன் முகத்தின் சாயலும் உள்ளது) வெளிக்காட்டி உள்ளமைக்கு நன்றி.

யார் எந்த இடத்தில் உள்ளனர் என்பது மே 19 ஆம் தேதி தெரிந்துவிடும்!

====================

தினமணியின் “அன்பு”

vaidhyanathan dinamaniதிரு வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தினமணி நாளேட்டின் சென்னைப் பதிப்பில், என் பெயரோ, என் படமோ இடம்பெறுவதில்லை. எங்கோ ஓரிரு விதிவிலக்கு இருக்கலாம். அது அவர்கள் உரிமை. தினமணி என்னும் மாபெரும் மக்கள் ஏடு வெளியிடுகின்ற அளவுக்கு என் வளர்ச்சி இல்லாமலும் இருக்கலாம்.

ஆனால் திடீரென்று, சில நாள்களுக்கு முன், தினமணி அலுவலகத்தில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். விஜயகாந்த் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையைத் தினமணியில் வெளியிடலாமா என்று கேட்டனர். என்னை நான் ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கனவில்லை, நினைவுதான்.

அந்தக் கட்டுரையை வெளியிடுவதன் மூலம் ஏதோ வில்லங்கம் ஏற்பட வழியுள்ளது என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். எப்படி என்றாலும் எனக்கு அது குறித்துக் கவலை ஏதுமில்லை. மக்களிடம் நம் கருத்து பரவ வேண்டும் என்பதற்காகத்தானே எழுதுகிறோம்! ஆகவே மகிழ்ச்சிதான். ஆனாலும் ஓர் எண்ணம் குறுக்கிட்டது. என்னைத் தொடர்புகொண்ட நண்பரிடம் இப்படிச் சொன்னேன் &

“திரு வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கும் வரை, என் எழுத்து எதுவும் தினமணியில் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை.”

ஆம், அதனை நான் இழிவாகக் கருதுகின்றேன்.

=====================

நஞ்சு “கலந்திருந்த” பால்

vaiko 274திராவிட இயக்கத்தால்தான் தமிழகம் சீரழிந்து விட்டது என்று நெஞ்சில் நேர்மையற்றவர்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர். திராவிடக் கட்சிகளை அகற்ற வேண்டும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தவறாமல் சொல்கிறார். என்ன வேடிக்கை என்றால், அதே மேடையில் வைகோவும் இருக்கிறார். மௌனம் காக்கிறார்.

அப்படியானால் அவர் என்ன கட்சி? திராவிடக் கட்சி இல்லையா? அவருக்கும் திராவிடத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? ஒருவேளை, வைகோவையும் சேர்த்தே ஒழிக்கப் போகிறோம் என்றுதான் ராமகிருஷ்ணன் சொல்கிறாரோ? அதனைப் புரிந்தோ புரியாமலோ, ம.தி.மு.க. தொண்டர்களும் அந்தப் பேச்சுக்குக் கை தட்டுகின்றனர்.

அங்கெல்லாம் எதுவும் பேசாத வைகோ, கலைஞர் என்ன பேசினாலும் உடனடியாக, மிகக் காட்டமாக விடை சொல்கிறார். தே.மு.தி.க.வுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை எப்படியுள்ளது என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “பழம் கனிந்து விட்டது. பாலில் எப்போது விழும் என்பது இன்னும் சில நாள்களில் தெரியும்“ என்று கூறினார். இது எந்த விதத்திலும் வைகோவைப் பாதிக்கக் கூடிய விடை இல்லை. ஆனாலும் வைகோ கோபப்படுகிறார். “பழம் கனிந்தாலும், அது நஞ்சு கலந்த பாலில் விழாது” என்று தன் நேர்காணலில் கூறுகின்றார்.

தி.மு.க.வை நஞ்சு கலந்த பால் என்று கூற வேண்டிய தேவை என்ன?அப்படியென்ன தி.மு.க. அவருக்குக் கேடு செய்தது - 18 ஆண்டுகள் அவரைத் தில்லிக்கு அனுப்பியதைத் தவிர? இப்போது அவருடைய மொழியிலேயே அவருக்கு நாம் விடை சொல்ல வேண்டியுள்ளது. “தி.மு.க. என்பது நஞ்சு ‘கலந்திருந்த’ பால்தான். ஆனால் அந்த நஞ்சு 1992 ஆம் ஆண்டே அகன்று விட்டது.”    

Pin It