டில்லிக்குத் தனி விமானத்தில் பறந்தார் முதல்வர் விஜய். மறுநாள் தமிழ்நாட்டுக்குப் பறந்து வந்துவிட்டார் அவர்.
டில்லியில் அவர் பிரதமரையும், நிதியமைச்சரையும் சந்தித்ததாகத் தொலைக் காட்சியில் செய்திகள் வந்தன.
அங்கு என்ன நடந்தது? என்ன பேசப்பட்டது? விஜயின் கோரிக்கைகள் என்ன? அவை ஏற்கப்பட்டதா? என்பது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒன்றும் சொல்லவில்லை டில்லியில். செய்தியாளர்களைப் பார்த்தாலே மோடியைப் போல ஏன் ஓடி ஒளிகிறார் அவர்.
நாளை சட்டமன்றம் கூடும்போது பேசவேண்டும், எதிர்கட்சியினர் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும், விவாதங்களில் பங்குகொள்ள வேண்டும். அங்கெல்லாம் சினிமா பாணி 'ஸ்கிரிப்ட்' வைத்து நடிப்பதெல்லாம், செல்லுபடியாகாது. முதல்வராக ஆகிவிட்டால் போதாது. நிழல் முதல்வராக இல்லாமல் நிஜ முதல்வராகச் செயல்பட வேண்டும்.
அடுத்ததாக, டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, கார்கேவைச் சந்திப்பதாகப் போட்டிருந்த திட்டம் என்ன ஆனது? உற்றுளி உதவி, தோழமை பாராட்டிய திமுகழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களையே நன்றிகெட்டுத் தூக்கி எறிந்த கட்சி காங்கிரஸ்.
தவெக ஆட்சிக்கு ஓடிப்போய் முட்டுகொடுத்த அதே காங்கிரஸ் விஜய்யால் தூக்கி எறியப்பட்டு, ராகுல் உள்பட யாரையும் பார்க்காமல், சொல்லாமலே ஓடிவந்துவிட்டார். கேரளாவில் காங்கிரஸ் அமைச்சரவைப் பதவியேற்பு விழாவையும் புறக்கணித்தார் விஜய் என்பது கவனிக்கத் தக்கது.
ஒன்றிய அரசின் ஏஜென்ட்டாக இருந்த ஆளுநர் ரவி தேசிய கீதத்தை முதலில் பாடச் சொல்லியும் கூட, அதைப் புறக்கணித்து தமிழ்த் தாய்ப் பாடலை முதலில் பாடச் செய்தார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்றைய முதல்வர் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் என மோடியிடம் 'மகஜர்' கொடுக்கிறார்.
தாமரையின் எஜமான விசுவாசத்தை டில்லில் வைக்க வேண்டும், தமிழ் நாட்டில் அரசியல்வாதியாக, முதல்வராகச் செயல்பட வேண்டும் விஜய்!
- கருஞ்சட்டைத் தமிழர்