வாழும் கலை என்ற பெயரில் ஓர் அமைப்பை வைத்திருப்பவர் ரவிசங்கர். ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் மோகன் பகவத்துடன் இவரின் படம் அண்மையில் முகநூலில் வலம் வந்தது.

Sri Sri Ravi Shankarஇவரின் அமைப்பைத் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் வகையில், யமுனை நதிக்கரையில் உலக கலாச்சாரத் திருவிழா என்ற பெயரில் மூன்று நாட்கள் கொண்டாட இருக்கிறார்கள்.அங்கே 35 லட்சம் பேர்கள் கூட இருக்கிறாள் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

கொண்டாடட்டும், அது அவர்கள் உரிமை. ஆனால் அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடமும், நடைமுறைச் செயல்களும் இன்று விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.

இதற்காக யமுனை நதிப்பகுதியில் பலநூறு ஏக்கர் நிலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கே மரங்கள் செடிகள் என அனைத்தும் வெட்டப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இதை சுற்றுச்சூழலின் பேரழிவு என்று டில்லி உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இவ்விழா தொடர்பாக எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்றும், அது தொடர்பான விண்ணப்பம் கூட அங்கு இல்லை என்றும் கூறுகிறது. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இத்தகைய விழாவுக்கு அனுமதி பெறத் தேவையில்லை என்று முரண்படுகிறது.

யமுனை நதியின் மீது மிதக்கும் பாலங்கள், நதிநீர் கெட்டுப் போகாமல் இருக்க என்சைம்கள் போடுதல் போன்று, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இக்கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் இருக்கிறது. நாட்டைக் காப்பாற்றுவது, இயற்கைப் பேரிடம் காலத்தில் மக்களுக்காகப் பணியாற்றக்;கூடிய இந்திய அரசின் இராணுவம், ஒரு தனி மனிதனின் கொண்டாட்டத்திற்காக இங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரவிசங்கர் நதியின் மீது கடந்து செல்ல மிதவைப்பாலத்தை இராணுவம் அமைத்துள்ளது.

இது மாநிலங்களவையில் எதிரொலித்து அமளியில் முடிந்துள்ளது. மோடி மட்டும் வழக்கம்போல் வாய்திறக்கவில்லை.

இதற்கு டில்லி வளர்ச்சி ஆணையம் இரண்டுமுறை மறுத்தது. தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்தக் கொண்டாட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்று அனுமதி தரமறுத்தது.

மோடியால் தொடங்கி வைக்கப்படும் இந்தக் கொண்டாட்டத்தை, முடித்து வைக்க ஒப்புக் கொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இப்பொழுது மறுத்துவிட்டார்.

இவ்விழாவைத் தடை செய்ய வேண்டும், அல்லது முழுமையாக விட்டுவிட வேண்டும்.

அதென்ன முதலில் அனுமதி மறுத்த பசுமைத் தீர்பாயம், இப்பொழுது அனுமதி கொடுப்பதற்கு 5 கோடி அபராதம் என்று தீர்ப்பெழுதுகிறது.

தெருவில் மோடி மஸ்தான் விளையாட்டு நடக்கும். இப்பொழுது நதிச் சமவெளிப் பிரதேசங்களிலும் மோடி மஸ்தானின் விளையாட்டு நடக்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யமுனை நதி தீரங்களில் சுற்றுச்சூழல் கெட்டு, மாசடையக் காரணமாகும் ஒரு தனி நபரின் கொண்டாட்டத்திற்கு இராணுவம் அழைக்கப்பட்டது மரபு மீறலா? சட்ட மீறலா? அதிகார வரம்பு மீறலா? வாய்திறப்பாரா மோடி?

கடைசியாக கிடைத்த செய்தி, பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தண்டத் தொகை 5 கோடியில் ஒரு காசும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார் ரவிசங்கர். தனி மனித அதிகாரமா? பசுமைத் தீர்ப்பாயமா?

Pin It