மக்கள் மறந்திருக்க மாட்டார்கள், வேளாண் துறைப் பொறியாளர் முத்துக்குமாரசாமியை, அவரின் தற்கொலையை, அதனால் கைது செய்யப்பட்ட அத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை.
அத்துறையில் ஓட்டுநர் பணி நியமனத்திற்காக, இலட்சக் கணக்கில் பணம் வசூலித்துத் தரும்படி முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் அமைச்சர் அக்ரியும் அவரின் உதவியாளரும் என்பது குற்றச்சாட்டு.
நெருக்கடியைத் தாங்க முடியாமல் மன உளைச்சலால் முத்துக்குமாரசாமி இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது வழக்கு.
அப்பொழுதே அனைத்துக் கட்சிகளும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஆளும் அ.தி.மு.க. அரசின் அமைச்சர்.
அதனால் சி.பி.சி.ஐ.டி.யிடம் வழக்கைக் கொடுத்தது அதிமுக அரசு.
சி.பி.ஐ. தமிழ் மாநிலத்திற்குக் கட்டுப்படாத நிறுவனம். சி.பி.சி.ஐ.டி. தமிழக அரசுக்குக் கட்டுப்பட்ட நிறுவனம்.
அப்பொழுதே கலைஞர் சொன்னார், ஓர் அமைச்சர் தொடர்புடைய இந்த வழக்கில் அரசு என்ன சொல்கிறதோ, அதைத்தான் சி.பி.சி.ஐ.டி. முடிவாகத் தெரிவிக்கும் என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது என்று.
கலைஞரின் சந்தேகம் இப்பொழுது உறுதியாகி விட்டது.
மக்கள் கொடுத்த நெருக்கடியால் கைது செய்து சிறையில் வைக்கப்பட்ட அக்ரிக்கு முதலில் பிணையில் விடுதலை கிடைத்தது. இப்பொழுது விடுதலையே கிடைத்து விட்டது.
அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணம், சி.பி.சி.ஐ.டி. கொடுத்த ஆவணங்கள் வழக்குக்குச் சாதகமாக இல்லை என்று. எப்படி இருக்கும்? அதுதான் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் அல்லவா இருக்கிறது.
வழக்கு விசாரணை நடைமுறையில் இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்படுபவர், காவல் துறை காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவார். அவரின் வீடு, அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
அக்ரி விசயத்தில் இவை இரண்டும் நடைபெறவில்லை என்பதைக் காவல்துறை அதிகாரிகளின் கூற்றின் அடிப்படையில் கலைஞர் சுட்டிக் காட்டுகிறார்.
சாதாரணக் குடிமகன்; தவறு செய்தால் நடக்கும் விசாரணையும், கிடைக்கும் தண்டனையும் வேறு.
ஆளும் கட்சி அமைச்சர் தவறு செய்தால் பிணை கிடைக்கும், விடுதலையும் கிடைக்கும். அதிகார வரம்பு அவர்களுடையது அல்லவா.
முத்துக்குமாரசாமி வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்கு சி.பி.ஐ. விசாரணையைத் தவிர வேறு வழியில்லை.