நேர்காணல்: பாஷாசிங்
தமிழில்: மீனாமயில்

ஊடகங்களின் காலம் இது. மக்களின் சிந்தனையை அவைதான் கட்டுப்படுத்துகின்றன.  ஊடகங்களே "மாபியா' வாக மாறிவிட்ட சூழலில் அதற்குள் இயங்கிக் கொண்டு ஒருவர்  சமூக மாற்றங்களுக்காக  சிந்திப்பது என்பது சாத்தியங்களை தொலைத்ததாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்திய நாட்டின்  பேரிழிவான சாதியக் கட்டமைப்பு கூர்மையடைந்து வருகிற நிலையில்  கீழே இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக  ஊடகங்களில் சில பத்திகளுக்கான இடத்தைப் பிடிப்பது மலைச்சிகரத்தை ஏறிக் கடப்பதற்கு ஒப்பான  சவாலைக் கொண்டுள்ளது.

பெரும்பாலான ஊடகவியலாளர்கள் கணினியின் விசைப்பலகை வழியாக கோர்க்கும் எழுத்துகளை மக்களின் அற்ப சுவாரசிய வேட்கைக்கு  தீனி போடும் வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். இவற்றிலிருந்து விலகி சமூக மேம்பாட்டிற்கும்  சக மனிதரின் வாழ்வுரிமைக்குமாக தனது  ஊடகப்பணியை வரித்துக் கொள்வது என்பது  ஒரு சிலரால்தான் முடிகிறது.

அப்படியாக  தன் ஊடக வாழ்வை அறநிலை வழுவாத எல்லைக்குள் நிறுத்திக் கொண்ட நூற்றில், ஆயிரத்தில் ஒருவர்தான் பாஷா சிங். டெல்லியில் வசிக்கும் இவர் "அவுட்லுக்' இதழின் இந்திப் பதிப்பில் பணிபுரிகிறார். பத்தாண்டு காலமாக மனிதக் கழிவகற்றும் கொடிய வழக்கத்திற்குத் தள்ளப்பட்ட மனிதர்களோடு  நீண்ட பயணத்தை மேற்கொண்டு – அவர்களின்  வாழ்வியலையையும் போராட்டங்களையும் – மிக ஆழமாக எழுதி வருகிறார்.

இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களுக்கு பயணம் செய்து மனிதக் கழிவகற்றும் மனிதர்களின் புலப்படாத வாழ்க்கையை கள ஆய்வு மற்றும் உண்மைத் தரவுகளின்  அடிப்படையில் விரிவாக இவர் எழுதிய நூல் (Unseen: The truth about India's manual scavengers) ஆங்கில வழியாக தமிழிலும் ("தவிர்க்கப்பட்டவர்கள் : இந்தியாவின் மலமள்ளும் மனிதர்கள்') மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அண்மையில்  சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மனிதக்கழிவகற்றும் தொழிலாளர்கள் குறித்த கருத்தரங்கில் இந்நூலை வெளியிட, மலமள்ளும் பெண் தொழிலாளர்களுடன் வந்திருந்தார் பாஷாசிங். இத்தொழிலாளர்கள் குறித்து இவ்வளவு பரந்து பட்ட ஆய்வைச் செய்த ஒரே பத்திரிகையாளர் பாஷாசிங் மட்டுமே. அவரது நூலைப் போலவே அவருடனான உரையாடலும் விளிம்பிலும் கடைசி மனிதர்களாக ஒடுக்கப்பட்டு வாழும் கையால் மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றி ஆழமானதாகவும் அக்கறை கொண்டதாகவும் இருந்தது.

ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் சமூகத்திற்கு தேவையற்ற, முக்கியத்துவம் இல்லாத செய்திகளை மட்டுமே பதிவு செய்ய ஆர்வம் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நீங்கள் எவ்வாறு கையால் மலமள்ளும் தொழிலாளர்கள் குறித்து இவ்வளவு ஆழமாகப் பணிபுரிய முன்வந்தீர்கள்?

முதன்முதலாக, மலமள்ளும் தொழிலாளர்கள் பற்றி ஒரு செய்திக்கட்டுரையை எழுத  முற்பட்டபோது, ஒரு பத்திரிகையாளராக (2003) எனக்கு அதுவொரு செய்தியாக மட்டுமே இருந்தது.  ராஜஸ்தானில் ஜூஞ்ஜூனு மாவட்டத்தில் பெண் கருக்கொலை குறித்த செய்திக்காக சென்றிருந்தேன். அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் சங்கத்தின் தேசியத் தலைவரான சிறீலதா சுவாமிநாதன், கைகளால் மனிதக் கழிவகற்றும் முறை அங்கே நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

கைகளால் மலத்தை அள்ளி கூடைகளில் நிரப்பி அதை தலையில் சுமந்து செல்லும் பெண்களைப் பற்றியும் அதற்கு கூலியாக மண்டியிட்டு நிற்கும் அவர்கள் மீது ரொட்டித்துண்டுகள் வீசப்படுவது குறித்த அவரது விவரணை என்னை மிகவும் பாதித்தது. மிகக் கொடுமையானதான அந்த வாழ்க்கையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஒரு பத்திரிகையாளராக நான் ஆர்வம் கொண்டேன்.

முதலில் நான் சந்தித்த பெண்மணி என்னிடம் பேச மிகவும் தயங்கினார்.  ஆனால் மலமள்ளும் தொழிலாளர்களின் வாழ்நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை என்னால் எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்ள  முடிந்தது. இந்த மக்களைப் பற்றி உண்மையாகவே தெரிந்து கொள்ள விழையும் யாருக்கும் இந்த அனுபவமே ஏற்படும். ஆனால் கெடுவாய்ப்பாக, இந்த சமூகம் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள  வேண்டிய சுரணையே இல்லாமல் இருக்கிறது.

அந்த செய்திக்கட்டுரையை எழுதிவிட்டு அது வெளிவர ஆறுமாத காலம் காத்திருந்தேன். ஏனென்றால் அதை வெளியிட நிர்வாகம் விரும்பவில்லை. அந்தப் படங்கள் அசிங்கமாக இருப்பதாக அவர்கள் நினைத்தனர். ஆனால் அந்த ஆறு மாத காலத்தில் மலமள்ளும் தொழிலாளர்களுக்காகப் பணிபுரியும் சிலரோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சங்கரன் போன்றவர்கள் மூலம் டெல்லியிலும் இத்தொழிலாளர்கள் இருப்பதை அறிந்தேன். மலமள்ளும் பெண் தொழிலாளியுடனான எனது முதல் சந்திப்பு – என்னுடைய நடுத்தர வர்க்க உளவியலை – தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. ஏன் அவர் இதைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்? ஏன் இம்மாதிரியான வழக்கங்கள் இன்றும் இருக்கின்றன? அவருக்கு கிடைக்கும் வருமானம் என எல்லாத் தகவல்களும் அந்தப் பெண்ணைப் பற்றிய எண்ணங்களும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன.

அதன் பின்னர்தான் பெஜவாடா வில்சனைப் (இருபது ஆண்டுகளாக கையால் மலமள்ளும் வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டரீதியாகவும் அம்மக்களை முன்னிறுத்தியும் போராட்டங்களை நடத்தி வருகிறார். இவர் "சபாய் கரம்சாரி அந்தோலன்' என்ற இயக்கத்தின் அமைப்பாளர்)பற்றி அறிந்தேன். அய்தராபாத்தில் இருந்த அவரிடம் தொலைபேசியில் பேசினேன். கடைசியாக அந்த செய்திக்கட்டுரை காந்தியின் நினைவு நாளான சனவரி 30 அன்று வெளியானது. மலமள்ளும் தொழிலாளர்களுக்கான இயக்கங்கள் மத்தியில் அந்த செய்திப் பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அது  முகப்புக் கட்டுரையாக வெளிவந்ததா?

இல்லை. இந்த செய்தி எப்போதுமே முகப்புக் கட்டுரையாக  முடியாது! தொடர்ந்து இங்கே இந்தப் பிரச்சினை இருக்கிறது, அங்கே இப்படி நடக்கிறது என எனக்கு நிறைய கடிதங்கள் வரத் தொடங்கின. அதன் பின்னர்தான் இந்தப் பிரச்சினையை நான் சற்று கவனிக்கத் தொடங்கினேன். வில்சன் டெல்லிக்கு வந்தபோது அவரை நான் சந்தித்தேன். எனது பார்வை இந்த கட்டத்தில்தான் விரிவடையத் தொடங்கியது. கையால் மலமள்ளும் தொழிலை ஒழிக்க ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இத்தொழிலாளர்களின் நல்வாழ்விற்காகவும் உலர் கழிப்பிடங்களை ஒழிப்பதற்காகவும் ஒதுக்கப்படும் நிதி என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. இத்தொழிலைப் பற்றியும் இந்த மனிதர்களைப் பற்றியும் கவலையே படாத இச்சமூகம், சட்டங்களின் நோக்கம், நமது கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகளின் மனநிலை – நான் நினைக்கிறேன் – இவையெல்லாம்தான் மலமள்ளும் தொழிலாளர்களை நோக்கி எனது பாதங்களை அழுந்தப் பதிய வைத்தன.

எனக்கு ஏதோ திடீரென அறிவொளி கிடைத்துவிட்டதாக அர்த்தமில்லை. முதல் கட்டுரை வெளிவந்த பிறகு எல்லாமே மிகக் கடினமாக இருந்தது. நிறைய பயணிக்க வேண்டியிருந்தது. சிலஅமைப்புகள் எனக்கு உதவின.இது போன்ற கட்டுரைகளுக்கு வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருக்க வேண்டும்.அப்போதுதான் அவை தொடர்ந்து வெளிவரும்.

எனது முதல் கட்டுரை வெளிவந்த போது சோனியா காந்தி அது குறித்து ஒரு கடிதம் எழுதினார்.நிறைய பேர் பாராட்டினார்கள். கையால் மலமள்ளும் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்காக எனக்கு சமஸ்கிருத பவுண்டேஷனின் "பிரபா தா பெல்லோஷிப்' கிடைத்தது. அதெல்லாம் சரிதான்.ஆனால் அதற்குப் பிறகுதான் எனக்கு சவால்கள் காத்திருந்தன.

உங்கள் குடும்பம் இதை எப்படி எடுத்துக் கொண்டது?

கையால் மலமள்ளும் தொழிலாளர்களை நோக்கிய எனது பயணங்கள் என்னை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கின. கான்பூர், பாட்னா, கொல்கத்தா என நான் போய்க்கொண்டே இருந்தேன். அதுவொரு புதைமணலைப் போல இன்னும்  ஆழமாக என்னை இழுத்துச் சென்றது.  என் குடும்பத்தில் "என்ன இவள் எப்போதும் இதையே பேசிக்கொண்டிருக்கிறாள்'  என நினைக்கத் தொடங்கிவிட்டனர். நான் எனது சொந்தப் பணத்தை செலவு செய்து கொண்டிருந்தேன்.  சிறிது காலம் கழித்து என் குடும்பத்தினர்  உதவி செய்தனர். ஆம், சிறிது காலத்திற்குப் பிறகு அவர்கள் முழுமையாக எனது பணியை அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வாழும் மலமள்ளும் தொழிலாளர்களைச் சந்தித்துள்ளீர்கள். எந்த மாநிலத்திலாவது  நிலைமை ஓரளவுக்கேனும் மாறியிருக்கிறதா? பத்தாண்டுகளுக்கு முன்னரே குஜராத்தில் இத்தொழில் ஒழிக்கப்பட்டதாகச் சொன்னார்களே?

நான் சுமார் 21 மாநிலங்களில் உள்ள மலமள்ளும் தொழிலாளர்களை சந்தித்துள்ளேன். என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது டெல்லிதான். நாம் வெகு காலமாக வசிக்கும் நகரம், நாட்டின் தலைநகர் என்றாலும் நகரத்தின் பகட்டில் மறைக்கப்பட்டு வெளிச்சத்திலிருந்து விலகி நாற்றமடிக்கும் ஓர் உலகில் மலமள்ளும் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை அறிந்த போது முதலில் நான் உடைந்து போனேன். யாருடைய மனசாட்சியையும் சுண்டாமல் இரு வேறு உலகங்களாக நகர வாழ்வும் நரகல் வாழ்வும் பிரிந்திருக்கின்றன.

என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்ட கேள்வி – இது டெல்லியில் இருக்கிறது; இது எப்படி டெல்லியாக  இருக்க முடியும்? மனித மாண்பை சிதைக்கும் இத்தொழில் நாட்டின் தலைநகரில் எப்படி இருக்க முடியும்?

உத்திரப் பிரதேசத்தை உலர் கழிப்பிடங்களின் மாநிலம் எனலாம். ஆனால் அதைப் பற்றி நமக்கு சிறிதளவே தெரியும். மலமள்ளும் தொழில் சாதியத் தொழில் என்பதால் ஆதிக்க சாதியினரைத் தாண்டி அதைப் பற்றிப் பேச அந்த மக்கள் அஞ்சுகின்றனர். குஜராத் – பத்திரிகையாளர்களுக்கே சவாலான மாநிலம். நீங்கள் அங்கு போன உடனே அங்கிருந்து போய்விடுமாறு வற்புறுத்துவார்கள்.  மோடி அப்போது முதலமைச்சர். துடிப்பான குஜராத்துக்கான முழக்கம் அப்போது ஓங்கி ஒலித்தது.

அங்கு கையால் மலமள்ளும் வழக்கம் இருப்பதை நிரூபிக்கும் சில ஆவணங்கள் என்னிடம் இருந்தன. அவற்றை வைத்துக் கொண்டு நான் மோடியிடம் கேட்டேன்: " உங்கள் அரசு இந்தப் பிரச்சினையை எப்படி பார்க்கிறது?'  அவர்  அமைதியாக இருந்தார். பின்னர் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்றார்.என்னால் இந்தக் கேள்வியை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கேட்டார், ""நீங்கள் "இந்து'வா?("தி இந்து' நாளிதழ்) "அவுட்லுக்கா?'(ஆங்கில வார இதழ்) இந்த இரண்டு (பத்திரிகைகள்) மட்டுமே குஜராத்தில் இந்தக் கேள்வியைக் கேட்க முடியும்'' என்றார். என் கேள்விக்கு அவருடைய பதில் இது மட்டுமே.

குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே மலமள்ளும் தொழில் ஒழிக்கப்படவில்லை. நாம் 2015 இல் பேசிக்கொண்டிருக்கிறோம். மலமள்ளும் தொழில் பற்றி புதிய விளக்கம் நம்மிடம்  இருக்கிறது. 2013 இலிருந்து நமக்கு புதிய சட்டம் இருக்கிறது.அச்சட்டத்தின் படி மலத்தை கைகளால் அள்ளுகிறவர்கள் மட்டுமல்ல; சாக்கடை வழி மற்றும் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்பவர்களும் மலமள்ளும் தொழிலாளர்கள்தான்.

ஆனால் அப்போதும் குஜராத்தில் அத்தொழில் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவே அவர்கள் சொன்னார்கள்.இப்போதும் அதையேதான் சொல்கிறார்கள். எல்லா மாநில அரசுகளுமே உச்ச நீதிமன்றத்தில் மனிதர்களே மனிதர்களின் கழிவை அகற்றும் தொழில் ஒழிக்கப்பட்டுவிட்டதாக சொல்கின்றன. "சபாய் கரம்சாரி அந்தோலன்'  அமைப்பிற்கு மலமள்ளும் தொழில் நடைமுறையில் இருப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதுமே பெரும் வேலையாக இருக்கிறது.

நீதிமன்றமும் மாநில அரசுகளும் தலித் மக்களுக்கு என்ன எதிர்வினையாற்றுகின்றன என்பது பத்திரிகையாளர்களுக்கு சுவாரசியமான செய்தி என்றே நான் நினைக்கிறேன். அதாவது, நாள்தோறும் கண்முன்னே நடக்கிற ஒரு விஷயத்தை இல்லை என்று மறுப்பது. ஒவ்வொரு அரசும் தம் மாநிலத்தில் அப்படியொரு வழக்கம் இல்லவே இல்லை என்றுதான் மறுக்கின்றன.

கடந்த 13 ஆண்டுகளாக  உச்ச நீதிமன்றம் மலமள்ளும் தொழிலாளர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி ""என் பெயர் நாராயணம்மா. நான் இந்தத் தொழிலைச் செய்கிறேன். இதுதான் எனது மனு, இதுதான் மனித மலத்தை அகற்றும் எனது தற்போதைய புகைப்படம்'' என சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மக்கள் உண்மையிலேயே மலமள்ளும் தொழிலாளர்கள்தான் என்று நிரூபிக்கச் சொல்லி அந்தோலன் அமைப்பை நீதிமன்றம் கேட்பது ஒரு தொடர்கதையாக நீடிக்கிறது. மலமள்ளும் தொழிலாளி உலர் கழிப்பிடத்தை கைகளால் சுத்தம் செய்வதைப் போன்ற படத்தை எடுத்து – அன்றைய நாளுக்கான செய்தித்தாளில் வெளிவரும்படி செய்து – அந்த ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்களே யோசித்துப் பாருங்கள், இது எப்படி சாத்தியமென்று!  ஏற்கனவே வெளிவந்த செய்திகளைக் காண்பித்தால், அது பழைய நிலை; இப்போது  அது ஒழிக்கப்பட்டுவிட்டது என அரசு மறுத்துவிடுகிறது. அரசுகளும் நீதிமன்றமும் இந்த உத்தியைத்தான் பயன்படுத்தி வந்தன. அமைப்புகளும் பின்னர் இந்த உத்தியைக் கையிலெடுத்தன.வழக்கு விசாரணைக்கு வரும் நாளன்று செய்தித்தாளில் மலமள்ளும் தொழிலாளியின் புகைப்படம் வருமாறு அவை செய்தன.

என்னுடைய வருத்தம் என்னவென்றால் 2015 ஆம் ஆண்டிலும் உச்ச நீதிமன்றம் மலமள்ளும் தொழில் இருக்கிறதா என்று கேட்கிறது. இருப்பதாக ஏற்றுக் கொண்டால்தானே அதை ஒழிக்க ஏதாவது செய்ய முடியும்? 2014 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மலமள்ளும் தொழிலுக்கான விளக்கத்தை விரிவுபடுத்திக் கூறியது. அதாவது, மனித மலத்தை சுத்தம் செய்யும் அனைவருமே மலமள்ளும் தொழிலாளர்களே என்கிறது அது. ரயில் தண்டவாளங்களைச் சுத்தப்படுத்தும் பெண்கள், ரயில் நிலைய சாக்கடைகளில் இறங்கி வேலை செய்பவர்கள், திறந்தவெளி கழிவறைகளை, கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்வோர் என இவர்கள் அனைவருமே மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களே.

மனிதக் கழிவகற்றும் தொழில் மட்டும்தான் மலமள்ளும் தொழிலாகிறதா? எந்த எல்லையில் தொடங்கி எந்த எல்லையில் அது முடிகிறது? துப்புரவுப் பணியை வரையறை செய்யுங்கள்.

துப்புரவுப்பணி மற்றும்  மலமள்ளும் தொழில் இரண்டுமே அசிங்கமானதுதான். இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சுத்தப்படுத்துதல் மற்றும்  குப்பைகளை அகற்றுதல் இதெல்லாம் துப்புரவுப்பணி. இந்தியாவில் துப்புரவுப்பணி பெருமளவில் தலித் மக்களாலேயே செய்யப்படுகிறது.

மலமள்ளும் தொழில் என்பது மனிதக் கழிவுடன் தொடர்புடையது. அதை கைகளால் அள்ளி தலையில் தூக்கிச் சென்றாலோ, உபகரணங்களைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தினாலோ, சாலையில் கிடக்கும் மனித மலத்தை சுத்தம் செய்தாலோ, மலம் சேரும் திறந்தவெளி கால்வாய்களில் இறங்கினாலோ, ரயில் தண்டவாளங்களில் மலக்குழிக்குள் இறங்கி அடைப்பை நீக்கினாலோ – அதாவது மனிதக் கழிவுடன் தொடர்பிருந்தாலே – அது மலமள்ளும் தொழிலாகிறது. இவையெல்லாம் தடை செய்யப்பட்டவை.

ஆனால் அரசின் மிகப்பெரிய பொதுப்பணித்துறை நிறுவனமான ரயில்வேயில் தொடங்கி பல்வேறு இடங்களில் இவ்வேலை செய்பவர்களை நாம் பார்க்க முடியும். சாக்கடை வேலை மட்டும் தடை செய்யப்படவில்லை. ஆனால் அதில் இறங்குவதற்கு முன் சட்டப்படி பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படியான ஒன்றை அரசு இத்தொழிலாளர்களுக்கு  அளிப்பதில்லை. சென்னையில் நிறைய மலக்குழிகள் இருக்கின்றன.

நிறையப்பேர் மலக்குழியின் நச்சுவாயு தாக்கி இறந்து போகிறார்கள். சண்டிகர் மற்றும் இன்னும் சில மாநிலங்களைத் தவிர்த்து இந்தியாவில் எங்குமே 100 சதவிகித பாதாள சாக்கடை கட்டமைப்பு இல்லை. நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: திறந்தவெளி கழிப்பிடம் மட்டுமல்ல, உலர் கழிப்பிடங்கள் மட்டுமல்ல, மனித மலத்துடன் பணி செய்யும் கட்டாயத்திலுள்ள அனைவருமே மலமள்ளும் தொழிலாளர்களே. ஆனால் கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு உலர்  கழிப்பிடங்களில் வேலை செய்வோரை மட்டுமே மலமள்ளும் தொழிலாளர்களாக வகைப்படுத்துகிறது. அது தவறு.

உலர் கழிப்பிடங்கள் இன்றும் இருக்கின்றனவா?

நாம் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு வளர்ச்சியை கண்டுவிட்ட இந்தக் காலத்தில் யாராவது கைகளால் மலத்தை வாரியெடுத்து கூடையில் கொட்டி தலையில் சுமந்து செல்வார்களா என்று.  நாம் காண மறுக்கும் – ஆனால் நம்  கண் முன்னே இருக்கும் – உலகங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த மலமள்ளும் வாழ்க்கை. உலர்கழிப்பிடங்கள் நகரங்களில் பெருமளவில் உள்ளன. நீர் பாய்ச்சி சுத்தம் செய்ய வகையற்ற எல்லாமே உலர்கழிப்பிடங்களே. இவற்றில் நிறைய வகையுண்டு. நமது பொதுக் கழிவறைகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

ஒரு சில நிமிடங்கள் கூட நம்மால் நிற்க முடியாத இடத்தை யார் சுத்தம் செய்வதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? அமர்நாத் யாத்திரையைப் போன்ற பெரும் திருவிழாக்களில் உலர்கழிப்பிடங்களே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை சுத்தம் செய்ய நாடு முழுவதிலிருந்தும் மலமள்ளும் தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர்.

சாக்கடை வசதியற்ற எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. எந்திரங்கள் இருந்தாலும் கூட சென்னை போன்ற இடங்களில் பாதாள சாக்கடையையும் மலக்குழியையும் சுத்தம் செய்ய நாம் மனிதர்களையே நாடுகிறோம். அப்படியான மனிதர்களில் நிறையபேர் இறந்து போவது குறித்து நாம் எந்தக் கவலையும் படுவதில்லை.

மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்கும் உலர்கழிப்பிடங்களை மாற்றுவதற்கும் இவர்கள் எவ்வளவு பணத்தை செலவு செய்கிறார்கள் என்று அரசு ஆவணங்களை எடுத்துப் பாருங்கள். ஆனால் நாடு முழுவதும் 7 லட்சம் உலர் கழிப்பிடங்கள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரம்தான் கூறுகிறது. அப்படியென்றால் அந்தப்பணத்தை எல்லாம் யார் விழுங்குகிறார்கள்? இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்த 7 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது எத்தனை வேடிக்கையானது! இந்தப் பணமெல்லாம் எங்கே போனது? நிறைய மனிதர்கள் இத்தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள்; செய்யச்சொல்லி நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். உலர்கழிப்பிடங்களை ஒழிக்க மூன்றாண்டுகளுக்கு 500 கோடி ரூபாய்களை இந்திய அரசு செலவு செய்திருக்கிறது.

ஆனால் உலர்கழிப்பிடங்கள் அப்படியே இருக்கின்றன எனில் அது எப்படி? இந்த மக்களின் பெயரால் ஒதுக்கப்படும் நிதியை அவர்களுக்கு செலவிட மறுப்பதன் மூலம் அரசு மிகப்பெரிய துரோகத்தை அவர்களுக்கு இழைத்து வருகிறது.

மனித மாண்புக்கு எதிரான இத்தொழிலுக்கு பொதுச்சமூகம் ஆதரவாக இருப்பதன் காரணம் என்ன?

நாள்தோறும் இத்தொழிலைச் செய்வோரை நாம் கடந்து செல்கிறோம். ஆனால் குமட்டலெடுக்கும் இழிவான இவ்வேலையை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்வி நமக்குள் வருவதேயில்லை. ஏனென்றால் அவ்வேலையைச்செய்யவே அவர்கள் பிறந்திருப்பதாக நமது மூளை நம்புகிறது. இங்கு நிலவும் சாதியக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள மலமள்ளும் தொழிலை உற்று நோக்கினாலே போதுமானது. பரவலாக துப்புரவுப் பணியையும் முற்றிலுமாக மலமள்ளும் தொழிலையும் தலித் மக்களே செய்கின்றனர்.  இதை அவர்கள் விரும்பிச் செய்யவில்லை. ஆனால் உளவியல் ரீதியாக குறிப்பிட்ட சமூகத்தில் பிறக்கும் குழந்தைகள் இவ்வேலையை ஏற்று செய்யத் தயாராவதற்கான சூழல் இங்கு காலங்காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மலமள்ளும் சமூகத்தில் பிறந்தவர்கள் (ஒருவேளை வேறு எந்த வேலைக்குப் போனாலும்) அவர்களை மலமள்ளுபவர்களாகவே ஒதுக்கி வைக்கிறது இச்சமூகம். வேறு எந்த வேலையும் மறுக்கப்படுவதாலேயே மீண்டும் மீண்டும் அவர்கள் நாற்றமடிக்கும் இக்கொடுமையான அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடிவதில்லை.

அரசும் நீதிமன்றமும் இவ்விஷயத்தை ஒழிக்க முன் வராததன் மூலம் சாதியக் கட்டமைப்பையும் சாதி இழிவுத் தொழில்களையும் பாதுகாத்து வருகின்றன. இந்துத்துவம் கட்டிக் காக்கும்  சாதி அமைப்பின்  பேரிழிவாகவே  இத்தொழில் இருக்கிறது. இதை ஒழிக்க முற்படாமல் வெறும் பொய்களால் அரசு இதைப் புறக்கணித்துச் செல்வதென்பது அநீதியின் உச்சகட்ட செயல்நிலை என்றே நான் கருதுகிறேன்.

செவ்வாய் கிரகத்தை ஆராய செயற்கைக்கோள்களை  அனுப்ப முடிகிற ஒரு நாட்டில் இத்தொழிலுக்கு மட்டும் ஏன் மனிதர்களே பயன்படுத்தப்படுகிறார்கள்?

சாதிய மனப்போக்கு என்பதைக் கடந்து இதற்கு வேறு காரணங்களே இல்லை. இதற்கு வேறு விளக்கங்களும் தேவைப்படாது. ஏனெனில் நமது  கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நீதிமன்றம் என எல்லோருமே என்ன நினைக்கிறார்கள் என்றால் இந்த வேலையைச் செய்வதற்கு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். அதனால்தான் மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்கான முன்னுரிமையை அரசு வழங்கவில்லை. இத்தொழில் செய்யும் சாதியைச் சேர்ந்த மக்களை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க அதற்கு மனமில்லை.

அதனால்தான் எந்திரங்கள் பயன்படுத்தும் எண்ணம் நமக்கு வரவில்லை; நம்மிடம் கழிவகற்றும் கொள்கைத் திட்டங்கள் இல்லை; சரியான சுகாதாரத்திட்டங்கள் இல்லை; ஒட்டுமொத்தமாக கழிவு நீரைக் கையாள்வதற்கான திட்டங்கள் இல்லை; கழிவு நீர் அடைத்துக் கொண்டால் அதை அகற்ற எந்திரங்கள் இல்லை; சுகாதாரத்துறையை நவீனப்படுத்துவதற்கு நாம் முதலீடு செய்யவில்லை; நவீனக் கட்டமைப்பிற்குத் தேவைப்படும் எந்திரங்களோ, முன்னேறிய தொழில்நுட்பமோ இல்லவே இல்லை.

ஆனால் உண்மையில் இத்துறை பல தொழில்நுட்ப முன்னேற்றங்களை கண்டுள்ளது. அவற்றைப் பெற நம்மிடம் பணமும் இருக்கிறது; ஆனால் நாம் ஏன் அதைப் பயன்படுத்த மறுதலிக்கிறோம்? ஒரேயொரு காரணம்தான். அது சாதிய மனப்பான்மை.  மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்ய குறிப்பிட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்று ஒட்டுமொத்த சமூகமும் நினைப்பதே இதற்குக் காரணம். ஒரு மனிதரை உடைகளைக் களைந்துவிட்டு அப்படியே சாக்கடைக்குள் இறங்கச் சொல்வதென்பது அவரை தற்கொலை செய்து கொள் என்று சொல்வதற்கு இணையானது. நமக்குத் தெரியும் அவர் உயிர் பணயம் வைக்கப்படுகிறது என்று.வேறென்ன?

இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும்  சமூக அமைப்பு முறையும் இந்த வேலையைச் செய்ய இந்த மக்களைப் பிடித்து தள்ளுகிறது. அவர்கள் இதிலிருந்து வெளியேறிவிடாதவாறு தடுத்து நிற்கிறது. இந்திய ரயில்வேக்கு எதிராக பெஜவாடா வில்சன் ஒரு வழக்கு தொடுத்தார்.தன் துறையில் மனிதக் கழிவகற்றும் முறையை ஒழிக்க இந்திய ரயில்வே இன்றளவிலும் காலக்கெடுவை விதித்துக் கொள்ளவில்லை. புதிய சட்டம் இருக்கிறது, புதிய வரையறைகள் வழங்கப்பட்டுவிட்டன. தீர்ப்புகள் எல்லாம் உள்ளன.

ஆனால் அதை ஒழிப்பதற்கான காலக்கெடு மட்டும் நம்மிடம் இல்லை. மனித மாண்பு தொடர்பான ஒரு விஷயத்தில் இப்படியான விளையாட்டுகளை இந்திய ரயில்வே எப்படி அரங்கேற்ற முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை. 

உண்மை இப்படியிருக்க, "தூய்மை இந்தியா'  பிரச்சாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்? சுகாதாரம் குறித்து இத்தகைய பிற்போக்கான கருத்துகள் நிலவும் சமூகத்தில் தூய்மை என்பது தன் வேலை அல்ல; அது யாராலோ செய்யப்பட வேண்டியது என நம்பும் மக்களிடையே இப்பிரச்சாரம் எப்படி செல்லுபடியாகும்?

"தூய்மை இந்தியா' பிரச்சாரத்தைத் தொடங்கியவர்களிடமும் அதன் ஆதரவாளர்களிடமும் நாம் கேட்கவேண்டிய கேள்வி: "நீங்கள் எதை சுத்தப்படுத்த விரும்புகிறீர்கள்?' தூய்மைப்படுத்துவதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் யார் அதை செய்யப் போகிறார்கள்? இந்த பிரச்சார நாடக நடிகர்கள் துடைப்பத்தோடு இருக்கும் சில படங்களை நாம் தொடக்கத்தில் பார்த்தோம். இதுதான் அவர்களின் செயல்திட்டம். அது ஒன்றே இந்த பிரச்சாரத்தின் தன்மையை விளக்கப் போதுமான ஆதாரம்.

எல்லோருமே இது குறித்துப் பேசுகிறார்கள். "லார்சன் அண்ட் டூப்ரோ' வருகிறது; அதானி வருகிறார்;  அனைத்து கார்ப்பரேட்டுகளும் கழிவறைகளைக் கட்ட முன்வருகிறார்கள். ராஜஸ்தானில் அதானி 10 ஆயிரம் கழிவறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். என் கேள்வி என்னவென்றால் யார் இந்த கழிவறைகளைச் சுத்தம் செய்யப் போகிறார்கள்? நாம் ஏன் இத்தனை காலமும் இந்நாட்டைத் தூய்மைப்படுத்தும் மக்களைப் பற்றி பேச மறுக்கிறோம்? இந்த மக்களைப் பற்றி சிந்திக்காமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்காமல், அவர்களுக்கான மாண்புரிமையை வழங்காமல், கழிவுநீர் கட்டமைப்பை நவீனப்படுத்தாமல் நீங்கள் "தூய்மை இந்தியா'  வை எப்படி நடைமுறைப்படுத்துவீர்கள்?

இந்தப் பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாதி பணத்தை சுகாதாரத்துறையை நவீனப்படுத்தவும் கழிவுநீர் கட்டமைப்பை நவீனப்படுத்தவும் மோடி செலவழித்தால் இந்நாடு வாழ்வதற்கு தகுதியானதாக ஓரளவுக்கேனும் மாறும். கார்ப்பரேட்டுகளை நாம் வரவேற்க வேண்டும் என்கிறார்கள்; ஆனால் அதனை துப்புரவுத் தொழிலாளர்களின் பெயரில் செய்யாதீர்கள்.இந்நாட்டின் முதன்மையான தேவை நவீனப்படுத்தப்பட்ட சுகாதாரக் கட்டமைப்பு. நமக்கு நிறைய கழிவு நீர் அடைப்பு நீக்கும் எந்திரங்கள் வேண்டும்.

ஒரு மனிதர் கூட கழிவுநீர் கால்வாயில் – மலக்குழியில் இறங்க நிர்பந்திக்கப்படவில்லை என்ற நிலை இங்கு உருவாக்கப்பட வேண்டும். இதை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர ஒரு காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கு பதிலாக நாம் எத்தகைய திசை திருப்பும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்? இந்தியாவைத் தூய்மைப்படுத்த உண்மையில் நாம் எதுவுமே செய்துவிடவில்லை. சில அடிப்படையான கேள்விகளுக்கு விடை கண்டறியாமல் எதையும் செய்துவிட முடியாது.

"தூய்மை இந்தியா'வை ஆதரிக்கும் தலைவர்களே! இந்நாட்டிற்கு ஒரு சத்தியத்தைச் செய்யுங்கள். எந்த மனிதரும் சாக்கடைக்குள் இறங்க, எந்தப் பெண்ணும் ரயில் தண்டவாள அசுத்தத்தை சுத்தம் செய்ய அல்லது உலர் கழிப்பிடங்களை, திறந்தவெளி கழிப்பிடங்களை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என உறுதி கொடுங்கள். இந்திய சுகாதாரம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை இதுதான்.

துப்புரவு செய்யும் மக்களின் அடிமைத்தளைகளை அறுத்தெறிவது மட்டுமே உண்மையான "தூய்மை  இந்தியா'வாக இருக்க முடியும். அதைவிடுத்து ஒட்டுமொத்த நிதியையும் நீங்கள் வேறெதற்கோ செலவழிக்கிறீர்கள்.  "தூய்மை  இந்தியா' என்ற மேம்போக்கான வணிகத்தனமான திட்டங்களால் மலமள்ளும் / துப்புரவுத் தொழில் செய்யும் சமூகத்தினருக்கு எந்தப் பயனும் உண்டாகப் போவதில்லை. நீங்கள் 10 ஆயிரம் கழிவறைகளைக் கட்டுவீர்கள்.

யார் அந்த 10 ஆயிரம் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்? அவர்களுக்கு கவுரவமான சம்பளத்தை நீங்கள் வழங்குவீர்களா? நிச்சயம் இல்லை.எல்லோரும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள்.  எனது கேள்வி இதுதான்: நமது கழிவை நாம் எப்படி அகற்றப் போகிறோம்? அக்கொடூரத்தை சற்றேனும் நாம் குறைக்கப் போகிறோமா?துடைப்பத்தைக் கொண்டு மோடியும் அவரது அமைச்சர்களும் நாடகமாடுவது இந்த மக்களை கேலி செய்வதாக இருக்கிறது.

துப்புரவுத் தொழில் என்பது 100 சதவிகிதம் சாதி அடிப்படையிலான தொழில். இதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனில்  நம்மால் எதையும் மாற்ற முடியாது. என்னைப் பொருத்தவரை தாங்க இயலாததாக இருக்கும் உண்மை குறித்த பரிகாசமே "தூய்மை இந்தியா'திட்டம். அது துப்புரவு சமூகத்தினரையும் தலித்துகளையும் மிக மோசமாக பரிகாசம் செய்கிறது.

– அடுத்த இதழில் நிறைவடையும்

Pin It