திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் இன்றைக்கு 90 ஆவது அகவையைக் காணும் 'விடுதலை', 01/06/1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து முத்திரை பதித்திருக்கிறது .

ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் யார் இருந்தாலும் பார்ப்பனர்களின் கொட்டம் அளவு மீறிக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களின் தலையில் தட்டி மூலையில் உட்காரச் செய்யும் வகையில் அன்றைக்கு இரகசிய குறிப்பேடு முறையைக் கண்டித்து எழுதிய ஒரே ஒரு பத்திரிக்கை 'விடுதலை' மட்டும் தான். தலைவர் கலைஞர் இரகசிய குறிப்பேடு முறைக்கு முடிவுரை எழுதினார். இன்றைக்கும் ஆளும் ஆட்சியாளர்கள் விடுதலையில் என்ன அறிக்கை வந்து இருக்கிறது என்று கூர்ந்து கவனிக்கும் வகையில் விடுதலை திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

விடுதலை நாளிதழில் 26 ஆவது அகவை தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, "ஒழுக்கக் கேடானதும் மூட நம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும் தமிழ் மக்களுக்கு சமுதாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடளிக்ககூடியதுமான காரியங்களை வெளியாக்கி - அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிக்கை 'விடுதலை'. விடுதலை ஒன்றே ஆக இருப்பதால் அத்துறைகளில் அது செய்து வந்த பணி நல்ல அளவுக்கு பயன்பட்டு வந்திருப்பதோடு விடுதலை பத்திரிக்கை இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன்? என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும்.

முதலாவது விடுதலையில் வரும் செய்திகளை நமது தமிழ்நாடு அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளும் நல்லவண்ணம் கவனித்து ஒரு அளவுக்காவது பரிகாரம் செய்து வந்திருப்பதுடன் கவனம் செலுத்தும்படியான நிலையும் ஏற்பட்டு வந்திருக்கிறது" என்கிறார்.

அவர் கூறியதைப் போல எந்தவிதமான சமரசமும் இன்றி வருங்கால தலைமுறையின் நலனை மட்டும் மையமாகக் கொண்டு மலிவான விளம்பரங்களையும் செய்திகளையும் தவிர்த்து பார்ப்பனரல்லாத மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, அறிவியல், உலக செய்திகள் , பெண்ணுரிமை, அரசியல் நிகழ்வுகள், வேலைவாய்ப்பு மற்றும் பொது அறிவுச் செய்திகள் என மக்கள் வாழ்வியலுக்குத் தேவைப்படும் அனைத்தையும் ஒருங்கே திரட்டி அவர்கள் கைகளில் தரக்கூடிய ஏடாக விடுதலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த விஞ்ஞான யுகத்தில் 21ஆவது நூற்றாண்டில் பார்ப்பனப் பத்திரிகைகளும்,பார்ப்பன அடிவருடி பத்திரிகைகளும், ஆர்.எஸ்.எஸ்- பிஜேபி வகையறாக்களும் திட்டமிட்டு வரலாற்றைத் திரித்தும், திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், திராவிட ஆட்சிக்கு எதிராகவும், அறிவியல் உண்மைகளுக்கு மாறாகவும் தொடர்ந்து அவதூறுகளை, காழ்ப்புணர்ச்சிக் கருத்துகளை அள்ளி வீசிக்கொண்டு இருக்கக்கூடிய இந்த சூழலில் அவர்களுக்கு சரியான தரவுகளுடன் கூடிய பதிலடியை தரக்கூடிய நாளிதழாக விடுதலை தொடர்கிறது.

விடுதலை பணிமனையைத் திறந்து வைத்த மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார், "தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் அங்கே விடுதலை இருக்க வேண்டும்" என்று கூறியதைப் போல ஒரு இயக்கத்தின் இதழாக மட்டும் இல்லாமல் எல்லாத் தரப்பு மக்களும் வரவேற்கக் கூடிய வகையில் ஒரு இனத்தின் வரலாற்றைக் கூறும் களஞ்சியமாக விடுதலை வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

திருப்பூர் மகிழவன், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It