சென்னையில் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன், பெரியாரின் குடந்தை உரையை ஒளிப்பதிவு நாடாக வெளியிட்டார். பெரியார் வேடம் தரித்து, பெரியார் மொழியிலேயே பேசும் அந்த ஒளி நாடா வெளியீட்டு நிகழ்ச்சியில் - சென்னையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையிலிருந்து:

பெரியார் மிகப் பெரிய சிந்தனையாளர். மக்களுக்காக உழைத்தவர். மக்களுக்கான கருத்துகளை விட்டுச் சென்றவர் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அந்தக் கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதில் தான் இப்போது பிரச்சினை. எல்லோரும் சொல்வார்கள், பெரியார் அன்றைக்கு சொன்னது இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்று.

அது பெரியாருக்கு பெருமை யல்ல. 75, 80 ஆண்டுகளுக்கு முன்னாள் பேசிய செய்தியை இன்னும் பேச வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பது ஒரு கேவலமான, இழிவான, வருந்தத்தக்க ஒரு செய்தி. ஏனென்றால், பேசிய தலைவர் காலத்திலிருந்த ஒரு எழுச்சி, பிறகு இல்லாமல் போய்விட்டது என்பதுதானே இதற்கு அர்த்தம்; மாற்றங்கள் வரவில்லை என்பதுதான்.

நாங்கள் இந்த அமைப்பை தொடங்கியபோது வைத்த முழக்கத்தில் ஒன்று, ‘பெரியார் காலத்திய தமிழகத்தை உருவாக்குவோம்’ என்பது. அதற்கும் மேலான முழக்கத்தை முன் வைக்க முடியாத நிலையில் தான் நம் தமிழ்நாடு இருக்கின்றது. தலைவர் விட்டுச் சென்ற பணியை நாம் வளர்த்துக் காட்ட வேண்டும்.

ஒரு குழந்தையை ஒருவனிடம் விட்டு விட்டு பார்த்துக் கொள் என்று சொல்லி 10 ஆண்டுகள் கழித்துப் போய் பார்க்கிறபோது குழந்தையை நாம் எப்படி விட்டுச் சென்றோமோ, வளர்ச்சி அடையாமல் அப்படியே இருந்தால் அவன் சோறே போடவில்லை என்று அர்த்தம். ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளவில்லை என்று பொருள். நாம் அடுத்தக் கட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்றால் பெரியார் என்ன சொன்னார் என்பதே முழுமையாக இந்த சமுதாயத்திற்கு நாம் கொண்டு செல்லவில்லை. அதை எடுத்துச் செல்ல வேண்டிய பணியை, கடமையை நாம் முறையாக செய்யவில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்ள வேண்டும்.

பெரியார் என்பவர் ஆரியத்திற்கு எதிராக பார்ப்பனர்களுக்கு எதிராக போர் நடத்தியவர். பார்ப்பானுக்கு எதிராக பெரியார் ஏன் நின்றார். அறிவை தனிப்பட்ட சிலருக்கு மட்டுமே உரிமை என்று சொன்னது ஆரியம். பார்ப்பனியம் மக்களுக்கு போகக் கூடாது நாங்கள் மட்டுமே படிப்போம் என்றது ஆரியம். (வெளிநாட்டில் இருந்து வந்த சீனப் பயணிகள் எல்லாம் குறிப்பெழுதியிருக்கிறார்கள். இத்தனை கல்லூரிகள் இங்கெல்லாம் இருந்தது.

10000 பேர் படிக்கிறார்கள் என்று. என்ன படித்தான்? வேதம் படித்தான். பார்ப்பான் மட்டுமே படித்தான்.) அவர்கள் மட்டுமே படிக்கிற கல்வி முறைதான் அன்று இருந்தது. அறிவு என்பது ஒரு கூட்டத்திற்கு மட்டும் சொந்தம் என்று சொன்னதை உடைத்து, அது மக்களுக்கு என்று சொல்லி உழைத்தவர் பெரியார். பெரியாரின் கருத்துகள் எங்களுக்கு மட்டும் தான் என்று சொல்வது முட்டாள்தனம்.

பெரியாரை புரிந்துக் கொள்ளாதவர்கள். மக்களிடம் அதைக் கொண்டு போய் சேர்த்தால் தானே மாற்றம் வரும். செய்வது விளம்பரத்திற்கும், வருவாய்க்கும் என்று கூறுகிறார்கள். அந்த நோக்கம் நமக்கல்ல. வேண்டுமானால், வருமானத்தைக்கூட கொடுத்து விடலாம். அதுதான் நோக்கமாக இருப்பவர்களுக்கு. (கைதட்டல்) நம்முடைய நோக்கம் பெரியாரை கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும். எப்படியாவது, எந்த வழியிலாவது கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கொளத்தூர் மணி குறிப்பிட்டார்.

அறிவுசார் சொத்துடமை என்பதெல்லாம் இலாப வெறி கொண்ட அமெரிக்க முதலாளிகள் அந்த சொல்லை அக்கறையோடு பயன்படுத்து கிறார்கள். பெரியார் மக்களுக்காக வாழ்ந்த தலைவர். பெரியார் கருத்துக்களை மட்டும் மக்களுக்கு தரவில்லை. தன்னுடைய சொத்துக்களை, மக்கள் அன்பளிப்பாக கொடுத்தது மட்டுமல்ல, வழி வழியாக தனக்கு வந்த பரம்பரை சொத்துக்களையும் மக்களுக்கு ஆக்கிவிட்டுப் போன தலைவர்.

சொத்துக்களையே மக்களுக்கு விட்டுச் சென்ற தலைவருடைய கருத்துக்களை மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கக் கூடாது என்றால் (சிரிப்பு, கைதட்டல்) நமக்கு அதிசயமாக கேவலமாக இருக்கிறது. அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. பெரியார் தொண்டன் எப்போதும் எதைச் செய்தாலும் சட்ட விரோதமா என்று பார்ப்பதில்லை. ஆனால், நியாய விரோதமாகச் செய்ய மாட்டான். (கைதட்டல்)

1925 இல் சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கினார். காங்கிரசிலிருந்த போதே ‘குடிஅரசை’ தொடங்கியவர் பெரியார். ‘குடிஅரசை’ காங்கிரசிலிருந்தபோதே 6 மாதம் நடத்தினார். தொடங்கிய போதே பல நிலையில் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். காந்தியை மிகப் பெரிய தலைவராகப் போற்றியவர், பின்னர் இகழ்ந்திருக்கிறார்.

10-வது விடுதலை நாளை எப்படிக் கொண்டாட நினைத்தார்னா, காந்தி சிலையை உடைக்கப் போறேன். காந்திப் படத்தை எரிக்கப் போறேன், இந்த நாட்டை இப்படியெல்லாம் ஆக்கி வைச்சவர் அவர்தான் என்ற கோபம். கதரைப் பேசிய பெரியார் கதர் என்பது காதொடிந்த ஊசி அளவுக்கும் பயன்படாத திட்டம் என்று சொன்னார்.

பல விதத்திலும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் சமுதாய சமத்துவம் என்ற புள்ளியில் மட்டும் ஒரேபிடிவாதமாக நின்று சமுதாயத்தில் சமத்துவம் வரவேண்டும். எல்லா மனிதர்களும் சமமாக இருக்க வேண்டும். அதுதான் இந்த தமிழ்நாட்டில் இந்திய நாட்டிற்கும் முதல் தேவை. அதற்கான முயற்சிகளை நான் எடுப்பேன் என்பதில் அவர் இறுதி வரை உறுதியாகவே இருந்தார்.

பெரியார் பொதுவுடமை பேசினார். அரிச்சுவடி படித்து விட்டு பி.ஏ. படியுங்கள் என்று சொன்னார். பொதுவுடைமை வரனும்ன்னா மக்களை சமமாக்குவோம். சமத்துவமான சமுதாயத்தில் தான் பொதுவுரிமை கொண்ட சமுதாயத்தில்தான் பொதுவுடமை நிலை நிறுத்த முடியும். இல்லையென்றால் உரிமை மிகுந்தவன் கைக்கு எல்லாம் போய் சேர்ந்து விடும். எனவே சமத்துவமான சமுதாயத்தை உண்டாக்குவதில் பெரியார் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். அவரோடு ஒத்த கருத்துள்ள அம்பேத்கர் வட நாட்டிலே பேசினார். இரண்டு பேரும் ஒரே கருத்துகளை பேசினர்.

‘குடிஅரசு’ ஏடு பதிப்பிக்கிறபோது 1926 இல் செப்டம்பரில் பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கென தனித் தொகுதிகள் வேண்டும் என்று பேசுகிறார். இது தேவை என்று சொல்கிறார் பெரியார். ஒவ்வொரு நிலையிலும் பல கருத்துகளை எடுத்து வைக்கிறார். அது மக்களிடம் போனால் தானே தெரியும். சமுதாய இழிவு ஒழிப்பு என்பதே தீண்டாமை ஒழிப்பில் ஒரு கூறு.

1926 ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல்லாதார் மாநாடு என்று டிசம்பரில் கூட்டுகிறார். அப்போது எல்லா பார்ப்பனரல்லாதாரையும் அழைக்கிறார். அழைப்பிலேதான் பெரியார் எழுதினார். கட்சியெல்லாம் பார்க்க வேண்டாம் வாருங்கள், எல்லோரும் பேசுவோம், சமுதாயம் மாறுவதற்கு என்ன செய்யலாம், பேசுவோம் என்று சொன்னபோது தான் பெரியார் சொன்னார்.

பார்ப்பனரல்லாதார் என்றால் நூற்றுக்கு 5 பேரான மிராசுதாரர்கள், மிட்டாதாரர்கள், வக்கீல்களை கொண்டதல்ல. 95 பேரை உள்ளடக்கிய சமுதாயம் தான் பார்ப்பனரல்லாத மக்கள் சமுதாயம். நீங்கள் 5 பேருக்காக பேசுகின்றீர்களா? 95 பேருக்காக பேசுகின்றீர்களா என்று மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் வாருங்கள் பேசுவோம் என்றார், பெரியார்.

அந்த மாநாட்டில் முன் மொழிந்த தீர்மானத்தில் ஒன்று தான் ‘இந்துக்கள் என்று சொல்லப்படுகிற எல்லோருக்கும் கோவில் பிரவேசத்தில், பூசையில், தொழுகையில் சம உரிமை வேண்டும்’ என்ற தீர்மானம். அதைத் தொடர்ந்து பேசி வந்த பெரியார், இறுதிப் போர் முழக்கத்தில் அதையே முன் மொழிந்தார்.

பெரியார் சொல்லுவார் பத்திரத்தைக் கொடுத்து படிக்காமலே கையெழுத்துப் போடு என்று சொன்னால் எவனாவது போடுவானா? வேதத்தை, சாஸ்திரத்தைப் படிக்காதே, இந்துவாக இரு என்றால் நான் எப்படி இந்துவாக இருப்பேன் என்று கேட்டவர் பெரியார். (கைதட்டல்) அதை உடைத்து விட்டு வெளியே வாருங்கள். நம்மை இழிவு படுத்துகிற மதத்தை விட்டு வெளியே வாருங்கள். இதை ஒரு கூறாக எடுத்துத்தான் இறுதி உரையில் தோழர் இயக்குனர் பிரபாகரன், இந்த ஒலி-ஒளி நாடாவைக் கொண்டு வந்துள்ளார்.

பெரியார் அறிஞர்களுக்காக எழுதியவர் அல்ல. பாமர மக்களுக்காக பேசியவர். மக்கள் எப்படி உள்வாங்குவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, மக்களிடம் எடுத்துச் சொன்னார். பெரியாரின் இந்தக் கருத்துகளை பெரியாரே பேசுவதுபோல் அவரது மொழியில் மக்கள் விரும்பி பார்க்கிற முறையில் இயக்குநர் பிரபாகரன் எடுத்திருக்கிற இந்த சீரிய முயற்சியை நாம் தொடர்ந்து ஆதரித்துப் பாராட்ட வேண்டும். நாம் வேலு பிரபாகரனை பாராட்டுவோம். இதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அவர் எழுதிய புத்தகங்களை 20 பேர் தான் படித்திருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். பெரியார் ‘குடிஅரசில்’ எழுதுகிறார், இப்பொழுது நம்மிடையே படித்தவர்கள் இந்தியாவில் 1927 இல் கல்வி பெற்றவர்கள் விழுக்காடு 7 சதவீதம் தான். 7 சதவீதம் பேர் மட்டுமே படித்தவர்களுக்கு ஏடு நடத்தி என்ன செய்ய முடியும் என்று பெரியார் அஞ்சவில்லை. பெரியார் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் ஏடு நடத்தினார். 1928 இல் ‘ரிவோல்ட்’ ஏட்டை தொடங்கி இரண்டு ஆண்டு நடத்தினார்.

ஏன் என்றால் பிற மாநிலங்களுக்கு அந்த செய்திகள் போக வேண்டும். இங்கு நடக்கும் செய்தி அங்கேயும் போக வேண்டும். அப்படிப்பட்ட எழுச்சியும், போராட் டங்களும் அங்கேயும் நிகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ரிவோல்ட்’ என்ற ஏட்டை ரஷ்யா புரட்சி நாளில் தொடங்கினார். இரண்டாம் ஆண்டில் பெரியார் ரிவோல்ட்டில் எழுதுகிறார், நாம் சென்ற ஆண்டு உலகம் முழுக்க வியப்போடு பாராட்டிக் கொண்டிருக்கிற ரஷ்யப் புரட்சி நாளில் இந்த ஏட்டை துவக்கினேன் என்று தலையங்கம் எழுதுகிறார்.

இப்படி எவ்வளவோ முயற்சிகள் செய்த பெரியாரை, எந்தெந்த வழிகளில் முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். பல பேர் முயன்றிருக்கிறார்கள். புரட்சிக் கவிஞர் கவிதைகளாகக் கொண்டு போனார். பேச்சின் வழியாக பட்டுக்கோட்டை அழகிரி போன்றவர்கள், எழுத்தின் வடிவாக குத்தூசி குருசாமி, கலை வடிவில் நடிகவேள் எம்.ஆர். ராதா என்று மக்களிடம் கொண்டு போனார்கள்.

பெரியாரை என்றால் தனி மனிதரைப் போற்றுவதல்ல; பெரியார் என்பவர் தனி மனிதரல்ல; பெரியாரை அவருடைய கருத்துகளுக்காக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். 100-க்கு 90 பேருக்கு உள்ள கடவுள் நம்பிக்கையை, மகாபாரத, இராமாயண நம்பிக்கையை பேசியவர்தான் ராஜாஜி, வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகன் என எழுதினார்.

இந்து மதத்தைப் பாராட்டி, கடவுள் நம்பிக்கையைப் பேசியவர். ஆனால், பெரியார் 100க்கு 98 பேருக்கு எதிராக நாத்திகம் பேசியவர். பெரியார் இராமனை செருப்பால் அடித்தார். தெருவில் பிள்ளையாரைப் போட்டு உடைத்தார். இதைப் பார்த்தப் பின்னாலும், இவர் எதைச் செய்தாலும் நமக்காகச் செய்கிறார் என்று எல்லா மக்களும், கடவுள் நம்பிக்கை உள்ள தமிழர்களும் உணர்ந்தே இருந்தார்கள்.

நமக்கு உடன்பாடான கடவுள், மதக் கருத்தைப் பேசினாலும் இராஜாஜி நமக்கு எதிரானவர்தான் என்று தமிழர்கள் புரிந்திருந்தார்கள். நாம் கொண்டிருக்கிற நம்பிக்கைக்கு எதிராக பேசினாலும், நடந்து கொண்டாலும் பெரியார் நமக்கான மனிதர் என்பதை தமிழர்கள் புரிந்திருந்தார்கள். அந்த புரிதலை விரிவாக்க இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிற அருமைத் தோழர் பிரபாகரன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

இப்படிப்பட்ட முயற்சிகளை அவர் தொடர வேண்டும். அதன் வழியே பெரியாரியலை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து ஒரு சமத்துவ சமுதாயத்தை உண்டாக்குவதில் தன்னுடைய கடமையை ஆற்ற வேண்டும் என்கின்ற என் ஆவலை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

Pin It