இந்திய ஒன்றியத்தில் 2014ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் சிக்கலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்துத் தங்கள் ஆட்சிக் கட்டிலைக் காப்பாற்றி வந்த பழனிச்சாமி - பன்னீர்செல்வம் காலத்தில், அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். மாநில சுயாட்சிக்கு எதிரான இச்செயலை வன்மையாகக் கண்டித்த தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இனியும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் அவர் செல்லும் இடமெல்லாம் தி.மு.க கருப்புக்கொடி காட்டும் என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் தனது பதவிக் காலம் முடியும் வரை ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை.
ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் பரப்பிடும் பணியைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கினார். பல்கலைக்கழகங்களில் இணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் மாநில உயர்கல்வி அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்காமல் ஊட்டியில் இரண்டு நாட்கள் (25.04.2022 & 26.04.2022) துணைவேந்தர்கள் மாநாடு நடத்தினார். அதில் ஆர்.எஸ்.எஸ் பிண்ணனி கொண்ட தொழிலதிபரைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கச் செய்தார். அதற்கான எதிர்வினையாக அவர் துணைவேந்தர்கள் மாநாடு கூட்டிய அதே நாளில், 25.04.2022 அன்று தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டமுன்வடிவைச் சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிமுகம் செய்தார்.
அத்துடன் ஆளுநர் தான் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களின் விழாக்களில் உரையாற்றும் போது போகிற போக்கில் ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் வேலையைச் செய்து வருகிறார். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ரவி “சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கியதாகவும், அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம் என்றும், ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டார்.
வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தின நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ரவி “விந்திய மலையை அடிப்படையாக வைத்துத்தான் வட இந்தியா- தென் இந்தியா எனப் பிரித்தார்கள். அப்போதுதான் விந்திய மலைக்குத் தென் பக்கம் இருப்பவர்களைத் திராவிடர்கள் என அடையாளப்படுத்தினர். அதாவது ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தினார்கள்” என்று குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கை, நீட் போன்றவற்றை ஆதரித்து ஒன்றிய அரசின் குரலை அவர் தமிழ்நாட்டில் எதிரொலித்து வருகிறார்.
இந்நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54ஆவது பட்டமளிப்பு விழா 13.07.2022 அன்று நடைபெற்றது. இது குறித்து மாநில உயர்கல்வித் துறை அமைச்சரிடமோ, அதிகாரிகளிடமோ ஆலோசிக்காமல் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டார். இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விழாவைப் புறக்கணித்தார். அத்துடன் விழாவுக்கான முறையான அழைப்பு மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை என மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான கோ.தளபதி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் தெரிவித்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் தனது உரையில் “திராவிடம், ஆரியம் என்பது நிலம் சார்ந்த இனப்பிரிவுதான்” என்று மீண்டும் குறிப்பிட்டுள்ளார். விழாவில் பேசிய ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் “புதிய தேசியக் கல்விக் கொள்கை தமிழ் மொழியை ஊக்குவிப்பதாக” குறிப்பிட்டார். அத்துடன் அவரது உரை முழுவதும் மோடி புராணம்தான். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு மேடையா அல்லது பா.ஜ.கவின் பரப்புரை மேடையா என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டது.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பல்கலைக்கழக நுழைவுவாயில் அருகே சமூகநீதி மாணவர் இயக்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படும் போது அவர் “1976 ஐ.பி.எஸ் பேட்ஜ்” என்று சொல்லி மாநில அரசுக்குப் பெரும் சவாலாக இருப்பார் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் அவரை “1976 மிசா பேட்ஜ்” முதல்வர் மு.க.ஸ்டாலின் கையாளும் விதம் நேர்த்தியானது. அதனால்தான் திராவிட மாடல் கண்டு அச்சமுற்று ஆளுநர் இப்படிப் போகும் இடமெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார். இனியாவது தனது தவறுகளை உணர்ந்து ஒன்றிய - மாநிலக் கூட்டாட்சித் தத்துவத்தின் படி மாநில சுயாட்சியை மதித்து ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழக மக்களால் அவர் விரட்டியடிக்கப்படும் நிலை ஏற்படும்.