தமிழ்நாட்டின் கடந்தகால அரசியல் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல் சில காங்கிரஸ்காரர்கள், அரசியல் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள். இன்று திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது, மறுக்கவில்லை. 1967ஆம் ஆண்டில் காங்கிரஸ் என்னவாக இருந்தது தமிழ்நாட்டில்?
பெருந்தலைவர் காமராசர் தன் 'கே' பிளான் அடிப்படையில் முதல்வர் பதவியில் இருந்து விலகியவுடன், 1963 ஆம் ஆண்டில் பக்தவச்சலம் முதலமைச்சரானார் தமிழ்நாட்டில். அப்போது ஏற்பட்ட பஞ்சத்தில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதை விடுத்து 'எலிக்கறி'யைச் சாப்பிடச் சொன்னார் அவர், மக்களிடம். 1964ஆம் ஆண்டு வரிந்து கட்டிக் கொண்டு அன்றைய மத்திய காங்கிரஸ் ஆட்சி இந்தியை ஆட்சிமொழியாக வலுக்கட்டாயமாகத் திணித்ததன் விளைவாக எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள், கொந்தளித்தது தமிழ்நாடு.
1967ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைச் சுத்தமாகத் துடைத்து எறிந்தனர் தமிழக மக்களும், திராவிட முன்னேற்றக் கழகமும். இன்றுவரை திமுக தயவில் லாமல் அதனால் வலிமை பெற்று எழமுடியவில்லை, தமிழ்நாட்டில்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்ற கொள்கை வழியில் நிற்கும் திமுகவிடம், ஆட்சியில் பங்கு கேட்டுச் சில காங்கிரசார் குறுக்குச் சால் ஓட்டத் தொடங்கியுள்ளனர். தேர்ந்த அரசியல் ஆளுமையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,"தமிழ்நாட்டில் அதுவெல்லாம் ஒத்து வராது" என்று சொல்லி விட்டார், கதை முடிந்தது.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களும் இந்த விசயத்தை, நிதானமாகவும், அரசியல் முதிர்ச்சியோடும் கையாளுகின்றார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணியின் ஒற்றுமை, அதன் தேவை அறிந்து இவர்களால் நகர்த்தப் படும் தேர்ந்த அரசியல் நகர்வு, "திமுக, காங்கிரஸ் கூட்டணி உடையும்" என்ற பாஜக-அதிமுகவின் ஆசையைக் கசக்கிப் பிழிந்து போட்டு விட்டது. மாறாக பலமாகவே அது தொடர்கிறது. அதேசமயம் ஒன்றுக்கும் உதவாத உதிரியாய் துக்ளக் மேடைகளிலும், பொதுவெளியிலும் உளறித் திரியும் திருச்சி வேலுச்சாமி போன்றவர்களை நாம் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
அதிகாரப்பூர்வமாகக் காங்கிரஸ் தலைமை ஆட்சியில் பங்கு கேட்கவில்லை, இதுவரை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு என்பதை டில்லி தலைமையும், திமுக தலைமையும் பேசிக் கொள்வார்கள் என்று நழுவிக் கொண்டார். ஆசைப்படுவதில் தவறில்லை, அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டாமா? அதுசரி, டில்லியில் ஆட்சி என்னாயிற்று? ஆணிவேரை விட்டுவிட்டு, சிம்பு வேரை அசைக்கப் பார்க்கின்றனர், காங்கிரசார்.
ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தின்போது கொண்டு வரப்பட்ட, மக்களுக்கான அரசு பொதுத்துறை நிறுவனங்களை இன்று தனியாருக்கு விற்றுக் கொண்டு இருக்கிறது பாஜக ஒன்றிய ஆட்சி. மகத்தான நேருவின் திட்டங்களை, சிந்தனைகளைச் சிதைத்து, அவரின் மீது களங்கம் கற்பித்துக் கொண்டு இருக்கிறது. காந்தியடிகளின் பெயரில் இருந்த 100 நாள் வேலைத்திட்டத்தைச் சிதைத்து, காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறது பாஜக. டிரம்ப்பின் விரலசைவில் ஆடும் மோடியின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக ராகுல்காந்தி போராடிக் கொண்டு இருக்கிறார்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்துமதவெறி அரசியலை முன்வைத்து நாட்டு மக்களிடையே பிரிவினையை, வேற்றுமையை வளர்த்து, 'ஒரே ராஜ்யம் - ராமராஜ்யம்' என்று வளர்ந்து வருகிறது பாஜக ஒன்றியம்.
நாட்டில், மக்கள் மீது கவிழ்ந்து கொண்டு இருக்கும் மதவாதப் பேரபாயத்தைப் பற்றிச் சிந்திக்காமல், ராகுல்காந்திக்குத் துணை நிற்காமல், தமிழ்நாட்டிற்கு ஒத்துவராத 'பங்கு' களைப் பற்றிப் பேசி வரும் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர், காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா போன்றவர்களைப் பார்த்தாவது, அரசியல் பேச வேண்டும்.
கடைசியாக "மக்கள் பணிசெய்ய தோழமையிடம் பங்கு கேட்கிறோம்" என்று சுதியை மாற்றி விட்டார் மாணிக்கம் தாகூர். இதில் என்ன லாஜிக் இருக்கிறது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
"ஒன்றியத்தில் கூட்டாட்சி!
தமிழ்நாட்டில் சுயாட்சி" முதல்வர் ஸ்டாலின் சொல்வதுதான் சரி!
- எழில்.இளங்கோவன்