எப்படியோ இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி அடைந்து மாற்றான் எதிரி ஆட்சியாகவே ஏற்பட்டுவிட்டது; அந்தப்படியே எதிரிகளும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்; நானும் நினைத்துக் கவலைப்பட்டேன் ; துக்கப்பட்டேன்; என்னமோ நமது நல்ல வாய்ப்பின் காரணமாய், எதிரியின், புத்தி இல்லாத தன்மையின் காரணமாய்ப் பெரிதும் தங்களால், தங்கள் முயற்சியால் ஏற்பட்ட ஆட்சியை அனுபவிக்க வாய்ப்பு பெறாமல் ஒரே முழுக்கில் மண்ணெடுக்க ஆசைப்பட்டு ஆட்சியாளர்களை சங்கடமான நிலைக்குத் கொண்டுவர ஆசைப்பட்டதால் ஆட்சியாளர் நேர்மையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததும், ஆட்சியாளர்களை ஒழிக்கத் திட்டம் போட்டு விட்டார்கள். இது நமக்கு ஒரு நல்வாய்ப்பாய் வாய்த்தது என்று கருதி இந்த ஆட்சியை விழாமல் செய்து அது உள்ளவரையிலாவது மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படும்படி செய்ய முடியுமா? என்று சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
பெரிதும் பார்ப்பனர் முயற்சியால் ஆட்சி தி.மு.க.வுக்குக் கிடைக்கும் வாய்ப்பு வந்தது என்றாலும் தி.மு.க. பார்ப்பனர் அல்லாதார் என்பதையும், அதிலும் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்பதையும், இவர்கள் பதவிக்காக பாப்பனர் ஆதரவைத் தேடினார்களே ஒழிய பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருக்க அல்ல என்பதையும் பார்ப்பனர் மறந்து தடபுடலாக அடிமை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். தி.மு.க. பார்ப்பனர்களை வாழவைக்க என்று பதவியை விரும்பினவர்கள் அல்லவே! அவர்களுக்குப் பதவி வேண்டும். அதுவும் நிலைக்க வேண்டும்; தொல்லை இல்லாமலும் நடைபெற வேண்டும் என்கின்ற எண்ணமுடையவர்கள்!
அதோடு தி.மு.க.வுக்கு நாட்டில் பார்ப்பனர் செல்வாக்கு எவ்வளவு பார்ப்பனரல்லாதார் செல்வாக்கு சக்தி எவ்வளவு என்பதும் தெரியும். பார்ப்பனருக்குப் பத்திரிகைகள் அனுகூலம்; கோர்ட்டுகள் அனுகூலம்; அயோக்கியத்தன்மை பொருந்திய வக்கீல் கூட்டம் அனுகூலம் உண்டு. ஆனால் பார்ப்பனரல்லாதவர்களுக்கு இவற்றைப் பற்றிக் கவலைப்படாத மக்கள் ஏராளமானபேர் இருக்கிறார்கள்; கிளர்ச்சிக்காரர்கள் இருக்கிறார்கள்! பார்ப்பனர்களுக்குக் கிளர்ச்சிக்கு ஆட்கள் வேண்டுமானால் பார்ப்பனரல்லாத ஆட்களைக் கொண்டுதானே கிளர்ச்சி செய்ய வேண்டும்? இந்த நிலையில் மோதல் ஏற்பட்டால் யார் வெற்றி அடைய முடியும்? இதை ஆட்சியாளர்கள் சிந்திக்கமாட்டார்களா?
1927-சுயேச்சை(காங்கிரஸ்) மந்திரி சபை ஏன் கவிழ்ந்து சுயமரியாதை மந்திரி சபை ஆயிற்று? 1937-ல் புயல்போல் வெற்றி பெற்ற காங்கிரஸ் மந்திரிசபை கவிழ்ந்து ஏன் 'பெரியார்' சொல்லுகிறபடி நடக்கிற (ஜஸ்டிஸ்) அட்வைசர் மந்திரிசபை ஆயிற்று? 1947-ல் காங்கிரஸ் (பிரகாசம்) மந்திரிசபை மாறி இராமசாமி ரெட்டியார் மந்திரி சபை ஆயிற்று? பிறகு 1954-ல் இராஜாஜி மந்திரிசபை மாறி காமராஜர் மந்திரிசபை ஆயிற்று?
அப்படிப் போல்தானே 1967-லும் பார்ப்பனர் வெற்றிபெற்ற மந்திரிசபை லேபிள் மாற்றியதுபோல் பார்ப்பனரல்லாதார் மந்திரி சபை ஆகிறது.
இவ்வளவுக்கும் நான் பங்காளியாக சம்பந்தப்பட்டவனுக்கு, பாடுபட்டவனுக்கு இருந்து வந்திருக்கிறேன். என்னாலாயிற்றா? இயற்கையாக ஆயிற்றா? என்பது வேறு வேறு விஷயம், ஆனால் இவற்றிற்கு என் பங்கு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த நிலையில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்னை தி.மு.க. மதித்தாலும் சரி, மதிக்காவிட்டாலும் சரி.
காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் மந்திரிசபை என்னை மதித்ததா? அழைத்ததா? புன்முறுவலாவது காட்டிற்றா? `பட்டுச்சேலையை இரவல் கொடுத்து விட்டு ஜமக்காளம் எடுத்துக் கொண்டே இரவல் வாங்கியவளின் பின்னால் திரிந்து தொடர்ந்தது'போல், அதாவது பட்டுச்சேலை, அதை இரவல் கேட்டார்கள்; கொடுத்து விட்டோம்; அதை வாங்கிக் கட்டிக் கொண்டவள் நினைத்த பக்கத்தில் போய் உட்கார்ந்தாளேயானால் சேலை அழுக்குப் பட்டுப் போகும்; கறைப்பட்டுப் போகும்; எண்ணெய் பட்டுப் போகும்; கட்டிக்கொண்டவளுக்கு கவலை இல்லை; ஊரார் வீட்டு சேலைதானே என்று அலட்சியமாய் உட்காருவாள். கவலை சேலைக்காரிக்குத்தானே இருக்கும், ஆதலால் வாங்கிக்கொண்டவளின் பின்னாலேயே சொந்தக்காரி ஒரு ஜமக்காளம் எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போய் அவள் உட்கார ஆரம்பித்தால் உடைமைக்காரி உடனே ஜமக்காளத்தை விரிப்பாள் அதுபோலவே நமது கதி; மந்திரி பதவி தி.மு.க.வுக்கு கவுரவம், அதன் பலம் நமக்கு! நம்முடையது! அது கறைபடாமல் அழுக்குப்படாமல் பாதுகாக்க வேண்டிய காரியம் நமக்கு இருக்கிறது; அது எல்லோருக்கும் இருக்காது. உடைமைக்காரி ஆகிய நமக்கு தி.க. காரர்களுக்குத்தான் இருக்க முடியும்.
மற்றவர்களோ அது நமக்கு வராதோ என்கிற கவலைக்காரர்கள் ஆகத்தானே இருக்கிறார்கள், பார்ப்பனர் கம்யூனிஸ்ட், பார்ப்பனர் சுதந்திரா மற்றும் பல பார்ப்பனர் பல கட்சிப்பேரால் இருக்கிறார்கள். கடைசியாக யாராலாவது கவிழ்ந்து மறுபடியும் நம்ம கைக்கு வராதா என்கிற கருத்தில் காங்கிரசு உள்ளது! நாம் அப்படிப்பட்டவர்கள் அல்லவே! தி.மு.க. கவிழ்வதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அதுவரையில் மற்றும் அப்புறம் என்ன ஆகும். இது இரண்டையும் பற்றி பட்டுச்சேலைக்காரியான நாம்தானே பாடுபட வேண்டும், ஆட்சி நமக்குத்தானே சொந்தம்? மற்றவன் சுரண்டினவரை லாபம் என்பவன்தானே? காங்கிரசும் அப்படித்தானே? அது பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் அல்லவே;
காமராசர்தானே நம்முடையவர், நம்மவர். இதே தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கு பக்தவத்சலனார் வரலாம். சுப்பிரமணியம் வரலாம்; காங்கிரசில் டிக்கெட் இல்லை என்ற உடன் சுதந்திரா டிக்கெட் கேட்பவனே வரலாம்; இப்படியானவர்கள் யாருக்காவது நமது இலட்சியத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டால் நாம் யாராவோம் என்பது எனது நண்பர்களுக்கும் பொது மக்களுக்கும் கண்டிப்பாய்த் சொல்லுகிறேன். வழமைபோல் எப்படிப்பட்ட ஆட்சியானாலும் எதிர்த்தே தீருவோம்!
- பெரியார்
(விடுதலை-89-ம் பிறந்தநாள் விழா மலர் -17.09.1967)