பெண் என்பவள் ஆணைப் போலவே படைக்கப்பட்டிருக்கும் இன்னொரு படைப்பு, இருவருக்கும் இடையிலான உயிரியல் வேறுபாட்டை தவிர. ஆனால் ஆண்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பெறுவதற்கும், சமத்துவத்தை அடைவதற்கும் பெண்கள் எத்தனை நூறு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.... இன்னும் போராட வேண்டியிருக்கிறது. அவ்வாறாக உலக அளவிலும், இந்திய அளவிலும் பெண்ணுரிமைக்கான முழக்கங்களை எழுப்பிய பெண்மணிகளின் போராட்ட வரலாற்றையும், உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளையும் ஆவணப்படுத்தி இருக்கிறார் “பெண் எனும் போர்வாள்” நூலின் ஆசிரியர் பிருந்தா சீனிவாசன்.
பெண்ணின் உடல் ஒரு பண்டமாகவே ஆணாதிக்கச் சமூகத்தால் பார்க்கப்படுகிறது. உணர்ச்சியின் வடிகாலாக, வணிகச்சந்தையின் விற்பனைச் சரக்காகப் பெண்ணின் உடல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளதுஎன்ற கொடிய உண்மையை இந்நூலைப் படிப்பவர்களால் உணர முடியும். அதிகார வர்க்கமும் முதலாளித்துவமும் இதில் கைகோர்த்துச் செயல்பட்டன. “ஆறுதல் மகளிர்” என்ற போர்வையில் பெண்ணுடல் பொழுதுபோக்குப் பண்டமாக்கப்படுவதும், பாலியல் சுற்றுலா என்ற பெயரில் வணிகச் சரக்காக ஆக்கப்பட்டதும் கடந்த நூற்றாண்டின் கவனிக்கப்படாத காட்சிகள்.
கணவன் இறந்த பின்னர் மனைவியை உடன்கட்டை ஏறச் செய்யும் கொடூரமான சதி வழக்கம் சுதந்திரம் அடைந்த இந்தியாவிலும் தொடர்ந்தது, அவலத்தின் உச்சம். நாகரிகம் அடைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டிய இது போன்ற துயரமான நிகழ்வுகள் பல இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலின் பெரும்பாலான பக்கங்கள் பெண்கல்வியை வலியுறுத்திச் செல்கின்றன. கல்வி ஒன்று மட்டுமே பெண்களின் அடிமைத் தளைகளை உடைக்கும் கருவியாக இருக்க முடியும் என்பது நூலின் அடிநாதம். “பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கே” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரிகளே இதற்குச் சான்றாகும். அதேநேரம் பெண்கள் கல்வி கற்பதற்கு தடையாக இருந்த சி.வி. இராமன் போன்றவர்களின் இன்னொரு பக்கத்தையும் இந்நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
பெண்கள் வாக்குரிமைக்காக வெளிநாடுகளில் போராடிய வரலாறு உண்டு. ஆனால் 1920 ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சி அரசு தமிழ்நாட்டில் பெண்களுக்கான வாக்குரிமையைச் சாத்தியமாக்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
பெண்களின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்துகிற இந்த நூல் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படிக்க வேண்டிய நூல், வரலாறு படைக்க விருப்பம் உடைய அனைத்து மகளிரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது என்றால் அது மிகையாகாது.
நூல் : பெண் எனும் போர்வாள்
ஆசிரியர் : பிருந்தா சீனிவாசன்.
வெளியீடு : தமிழ் திசை
- வெற்றிச்செல்வன்