”ஒட்டுமொத்தமாகவும் வரலாற்று ரீதியாகவும் பார்க்குமிடத்து, பாரதிதாசனுடைய சமூகக் கவிமரபிலே நமது கவிஞர் ஈரோடு தமிழன்பன் நடந்து வந்திருக்கிறார்” என்கிறார் ஆய்வாளர் கைலாசபதி. பாரதிதாசன் உருவாக்கிய பாட்டுப் பரம்பரையில் வானம்பாடியாய் வந்தவர்தான் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

சமகால பண்பாட்டு, அரசியல், சமூகச் சூழலைத் தனது கவிதைகள் மூலம் உயிர்ப்பித்தவர் தமிழன்பன். ஈரோடு சென்னிமலையில் பிறந்த தமிழன்பன், மாணவப் பருவத்திலேயே ‘சுயசிந்தனை’ என்னும் பெயரிலான கையெழுத்து இதழை நடத்தியவர். அவரது முதல் நூலான ‘நெஞ்சின் நிழல்’ நாவலை பாரி நிலையம் மூலம் வெளியிடுவதற்குத் துணைநின்றவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவான குரலை ஒலித்து வந்தவர் தன்னுடைய குரலைக் கடந்த நவம்பர் 29 அன்று நிறுத்திக் கொண்டார். தமிழ், தமிழர், திருக்குறள், பெரியார், ஈழம் தொடங்கி உலக நாடுகள் நடத்துகிற போர்கள் வரை தனது பாடுபொருள்களில் அமைத்துக் கொண்டவர் தமிழன்பன். தமிழர் உயர வேண்டுமென்பது அவர்தம் உள்ளக்கிடக்கை. “நம் அஞ்சாம் வகுப்பு அய்யாசமிகள் ஐன்ஸ்டீன்களாக வேண்டாமா?” என்பது தமிழர் முன்னேற்றம் விரும்புகின்ற அவரது வரிகள்.

"ஊரை உலகை உழைப்பு உயர்த்தும், உழைப்பவனை அது உயர்த்துகிறதா?" என்றவர், தாயின் மணிக்கொடி தயாரிப்பதற்காக, இடுப்புத் துணியும் இவர்கள் இழந்தனர் என்றார். இந்திய தேசத்தின் ஆதிக்கத்தை நோக்கித் தொடர்ந்து தனது கவிதைகளில் கேள்வி எழுப்பியவர் தமிழன்பன். ஆகஸ்ட் 15, பவுர்ணமிகளை ஒரு சிலருக்கே பட்டா போட்டுக் கொடுத்த நாளா? என்று கேட்கும் கவிஞர் இந்தியனிடமிருந்து இந்தியாவை விடுதலை செய்ய எழட்டும் இன்னொரு சுதந்திரப் போர் என்கிறார்.

போலியான ஜனநாயகத்தை பொசுக்கவல்ல கவிதைகளை இயற்றுவதில் சளைத்தவர்களல்லர், திராவிட இயக்கக் கவிஞர்கள். சாலை இளந்திரையன், அப்துல் ரகுமான் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். ”புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில் போலி நளன்களின் கூட்டம், கையில் மாலையுடன் குருட்டுத் தமயந்தி” என்று வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் உருவகப்படுத்தி எழுதியவர் கவிக்கோ. “கள்ள வாக்குகளால் ஜனநாயகத்தைக் கற்பழிக்கும் பதவிக் காமம்தான் தேசபக்தி என்றால் ஒப்புக் கொள்கிறேன் – அந்தத் தேச பக்தியில்லாக் குற்றவாளி நான்” என்கிறார் தமிழன்பன்.

கடவுள் / மத மறுப்பைத் தனது கவிதைகள் நெடுக வலியுறுத்தியவர் தமிழன்பன். சாதிக் கலவரங்களில் எரியும் மானுடம் என்று சாதியைச் சாடுவதிலும் சரி, இறைவனைத் தேட மார்க்கங்கள் என்றால், மனிதனைத் தேட என்ன மார்க்கம் என்றபோதிலும் சரி, தமிழன்பனின் கவிதைகளில் திராவிட இயக்கக் கொள்கைகள் மிளிறும்.

ஈழத்தில் நடைபெற்ற கொடூரங்களை தனது என் அருமை ஈழமே என்னும் நூலில் உள்ள கவிதைகளின் வழியாகக் காட்சிப்படுத்தியவர் கவிஞர் தமிழன்பன். யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் குறித்துப் பாடும்போது, ”தை மாதத்தை இழந்திருந்த தமிழாண்டு போலவும், தமிழாண்டு இழந்திருந்த தமிழரைப் போலவும் இருந்தது யாழ்ப்பாணம்” என்கிறார். உலக நாடுகள் ஈழப் படுகொலைகளைக் கண்டு மெளனித்து இருந்ததை, ”பார்வை செத்த உலகுக்கும் ஏழை நாடுகளுக்குப் பாடைகள் தயாரிக்கும் ஐ. நா. சபைக்கும், ஈழமே! உனது பூமியில் என்ன நடக்கிறது என்பது தெரியவே தெரியாதா? என்கிறார். அதே நேரம், “கொலைவெறிச் சிங்களர்களால் வெலிக்கடைச் சிறையில் பிடுங்கப்பட்ட குட்டிமணி ஜெகன் கண்கள், ஈழமே! உனது வெற்றி முகத்தில் பூப்பது நியாய நிச்சயம்; அந்தக் கண்களிலிருந்து உனக்குப் புதிய வாழ்க்கையைப் புதிய வசந்தத்தை நியமனம் செய்வது அறத்தின் நிச்சயம்” என்ற ஈழம் குறித்த நம்பிக்கையையும் தனது கவிதைகளில் விதைக்கிறார் கவிஞர்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைந்து விட்டாலும் அவரது கவிதைகள் மூலம் தமிழர் நெஞ்சில் நீங்கா நினைவுகளை அவர் பெற்றிருப்பார் என்பது உறுதி.

வெற்றிச்செல்வன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.