பேராசிரியர் அ. மங்கை அவர்களால் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டக் கட்டுரைகளின் தொகுப்பாக 2025 மே மாதத்தில் நியுசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ள நூல் “ஒரு கோப்பைத் தண்ணீர் – பெண்ணியம் குறித்த கட்டுரைகள்” என்னும் நூல்.
பேராசிரியர் அ. மங்கை அவர்கள் குறித்த அறிமுகம் தமிழ்ச் சமூக வாசிப்பாளர்களுக்கு வேண்டப்படாதுதான். ஆனாலும் அவரின் தொடர்ச்சியான செயல்பாடுகளை இளம் ஆய்வாளர்கள் அறிந்துகொள்வதும் இன்றியமையாதது. இந்நிலையில், பேராசிரியர் அ. மங்கை அவர்கள் பெண்ணியம், நாடகவியல் சார்ந்த களங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். படித்ததும் பணியாற்றிய துறையும் ஆங்கிலத் துறையாக இருப்பினும் தமிழ் இலக்கியம் சார்ந்த வாசிப்பிலும் ஆழங்கால் பட்டவர். தமிழில் தொடர்ச்சியாக உரையாற்றியும் எழுதியும் வரக்கூடியவர். இத்தகைய முற்போக்கு நிலையிலான செயல்பாட்டின் தொடர்ச்சிக்கு இடதுசாரிய சிந்தனையாளர்கள் குழுமிய சூழலில் வளர்ந்ததும்/வாழ்ந்து வருவதும் மிக முக்கியக் காரணம் எனலாம்.
தமிழ்ச் சமூகம் குறித்த அடையாளங்களை மீட்டெடுத்தலுக்கான முறையியலாக: யூகங்களை முன்வைத்த கற்பனாவாத கருத்தியலைத் தவிர்த்து மக்களின் வாழ்வியல் அடிப்படையில் யதார்த்தவாத பின்புலத்தோடு அணுகுதல் என்பது பேராசிரியரின் ஆய்வு அணுகுமுறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் அவர்கள் பெண்ணியம், நாடகவியல் சார்ந்த அணுகுமுறையிலான நூல்களை வெளியிட்டு, தமிழ்ச் சமூக அடையாள மீட்டுருவாக்கத்திலும், புதிய தலைமுறையினர் முன்னெடுக்க வேண்டிய ஆய்வு முறைக்கான வழிகாட்டியாகவும் தம் ஆய்வு நூல்களை கொண்டுவருவதில் சிரத்தையான செயல்பாட்டை மேற்கொண்டு செயல்படக்கூடிய செயல்பாட்டாளர்.
பேராசிரியர் அ. மங்கை அவர்களின் “ஒரு கோப்பைத் தண்ணீர் – பெண்ணியம் குறித்த கட்டுரைகள்” என்னும் இந்நூல் சமகாலத்திற்கு பன்முக முக்கியத்துவத்திற்கு உரியதாக உள்ளது. குறிப்பாகத் தமிழ்ப் பெண்ணிய சிந்தனையைப் புரிந்துகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும். பெண் உடல் சார்ந்த தாக்குதல்களும் பெண்ணிய கருத்தியல் சார்ந்த விமர்சனங்களும், பெண் அரசியல் மீதான விவாதங்களும் தற்போது தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில் இந்நூல் உணர்த்தும் பால்/பாலினம், பெண் – பெண்ணியம் – பெண்ணிய அரசியல் குறித்த கருத்துகள் காலத்திற்கு வேண்டிய வினையாற்றும் என்பதில் ஐயமில்லை.
இந்நூல் பெண் – பெண்ணியம் சார்ந்த உரையாடலை முன்வைப்பதற்கான இருபது கட்டுரைகளைத் தாங்கியுள்ளது. இக்கட்டுரைகள் பல்வேறு சூழலில் பல நோக்கங்களுக்காக எழுதப்பட்டக் கட்டுரைகளைகளாக இருந்தாலும் இக்கட்டுரைகளை அனைத்தையும் தொகுத்து வாசிக்கும்போது கிடைக்கக்கூடிய புரிதல் இதுவரை போதிக்கும் கருத்துகளிலிருந்து வேறுபட்ட புரிதலையும் உணர்வையும் அளிக்கக் கூடியதாக உள்ளது. பெண் எனும் பாலினம் சார்ந்த மதிப்பீடுகள் காலந்தோறும் தொடர்ந்து கொண்டே வருவதை வரலாற்றுச் சான்றுகளாக நாம் கொள்ளும் அனைத்திலும் படிந்துள்ளதைக் காண முடியும். இந்நிலையில்தான் இந்நூலாசிரியர் ஒரு குறிப்பிட்ட இலக்கியங்களையோ, ஒரு குறிப்பிட்ட இயக்கங்களையோ, ஒரு குறிப்பிட்ட கருத்தியலையோ மட்டும் எடுத்துக்கொண்டு பெண்ணிய அரசியல் குறித்து தன் உரையாடலை நிகழ்த்தவில்லை. பல நூற்றாண்டு கால வெளியின் பதிவுகளில் குறுக்கும் நெடுக்குமான பார்வையினால் பெண்ணியம் குறித்து உரையாடுவது ஒரு பெண்ணிய ஆய்வாளருக்கான நேர்மையையும், நோக்கத்தையும் உணரச் செய்கிறது. மேலும், இந்நூலின் எழுத்துகள் பேராசிரியரின் வாசிப்பு, பேச்சு, எழுத்து ஆகியவற்றில் இருந்த எல்லைகள், விரிவுகள் ஆகியவற்றையும் உணர்த்துகின்றன.
பெண்களைப் பற்றி பேசுபவர்கள் பெண்ணியவாதிகள் என்ற வரையறையில் உள்ளவர்களிலிருந்து இவரின் எழுத்தும் உரையாடலும் வேறுபடுவதை இந்நூலின் எழுத்துகள் நுட்பமாக உணர்த்துகின்றன. இந்நூலுக்கான அணிந்துரையில் பேராசிரியர் மங்கை அவர்களின் எழுத்துகள் குறித்து பொன்னி அரசு அவர்கள் குறிப்பிடும்போது “அறிவுருவாக்கம் மட்டுமே தமது வேலையாக செய்பவரின் எழுத்து முறைக்கும், சமூக மாற்றச் செயல்பாட்டாளராக இருந்து பலவகை மனிதர்களை தினமும் சந்தித்து வரும் நபர்கள் செய்யும் அறிவுருவாக்க எழுத்திற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. மங்கையின் எழுத்துக்கள் மனக் கிளர்ச்சியை உருவாக்குபவையாக இருப்பதற்கு முக்கியக் காரணம், பலரும் புரிந்துகொள்ளும் வரைகயில் விளங்கும் அவரது எழுத்து நடை, இத்தகைய எழுத்துமுறை சமூக மாற்றம் சார் அறிவுருவாக்கத்தில் ஒரு முக்கிய விழுமியமாக விளங்குவது அவசியம். இலகுவாக உள்ளதனால் கூறும் விடயங்கள் ஆழமற்றவையோ, நுணுக்கமற்றவையோ அல்ல. மிகவும் சிக்கலான சிந்தனைகளை, உலகளாவிய சூழலிலிருந்து தமிழில் இலகுவாக வெளிப்படுத்த, முற்போக்குவாத சமூக மாற்றப் பணி, குறிப்பாக பெண்ணியப் பணி எம்மை பழக்குகிறது. இந்தப் பயிற்சி மங்கையின் எழுத்துகளில் தெளிவாகின்றது” என்று விளக்குவதன் மூலம் பேராசிரியரின் இந்நூல் எழுத்துகள் வெறும் அறிவுருக்கத்தோடு மட்டும் நின்றுவிடாமல் கலையுருவாக்கமாகவும் சமூக மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவுமான காத்திரக் குரலையும் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்நூலின் எழுத்து சார்ந்த மொழி, நடை உள்ளிட்ட புறச் சிறப்புகளோடு, எழுத்தின் உள்ளடக்க அக உரையாடைல் என்பது பெண்ணிய கருத்தியலை விளக்குவதோடு, பெண்ணிய வாதிகள் குறித்த வரையறையையும் விளக்கத்தையும் உணர்த்துகிறது. இவற்றை பொன்னி அரசு தன் தாயின் ஆளுமைப் பண்மை விளக்க முற்படும்போது, “பெண்ணியவாதிகள் என்று நான் கூறுவது, ஆணாதிக்க சிந்தனை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வினை புறக்கணிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு, அவ்வடித்தளத்திலிருந்து பேசி, எழுதி, வாழ்ந்து வருபவரைத்தான். இந்த ஏற்றத்தாழ்வுகளை வாயால் மட்டும் எதிர்த்து, மனதால் ஏற்று, பெண்கள் பற்றிப் பேசினால் அது பெண்ணியம் என்று எண்ணும் நபர்களை அல்ல! இப்படியான பெண்ணிய வரலாற்றினுள் 1980களில் கற்று வளர்ந்தவருள் ஒரு முக்கிய ஆளுமையே எனது தாயான மங்கை” என்று குறிப்பிடும் தன்மை இந்த நூல் முழுவதும் பிரிதிபலிக்கிறது. அவற்றிற்குச் சான்றாக பெண்ணியம் ‘பெண்’ பற்றியதோ ‘பெண்’ணிடம் பேசுவதோ, ‘பெண்’ களால் பேசப்படுவதோ அல்ல. பெண்ணியம் பாலின அடிப்படையில் தொழிற்படும் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியது என்ற பேராசிரியர் மங்கை அவர்களின் கருத்து சமூகத்தின் மீதான அவரின் பிரக்ஞையை வெளிப்படுத்துகின்றது.
பெண்ணியம் பேசுகிறோம் என்ற நிலையில் ஒரு வறட்டுத்தனமான மொழியில் வலிமையிழந்த மொழியில் பேசிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மாற்றம்பெற்று இந்நூல் வழியாக பேராசிரியர் மங்கை அவர்கள் பெண்ணியம் சார்ந்து முன்வைக்கும் வினாக்களும், விளக்கங்களும் இச்சமூகம் காலந்தோறும் பெண் – பெண்ணியம், பால் – பாலினம் மீது கொண்டிருக்கும் மதிப்பீடுகளை, கருத்தியல்களை கலைத்துப் போடுவதாக உள்ளது. பெண்ணியம் சார்ந்து எடுக்க வேண்டிய கருத்தியல் சார்ந்த முன்மொழிவுகளையும் எடுத்து வைப்பதாகவும் உள்ளது.
பெண் விடுதலையை முன்னிருத்தி பெண்ணியம் தொழிற்படுகிறது எனில், பெண் ஏன், எப்போது விடுதலையற்றுப் போனாள்? என்ற பேராசிரியர் அவர்களின் கேள்வியும், உடல் குறித்து நமது புரிதல் என்ன? உடலைக் குறித்து எப்படி பேசுகிறோம்? உடலைக் கட்டமைப்பதில் மொழியின் பங்கு என்ன? ஆகியவை பெண்ணிய அரசியலின் முக்கிய அடிப்படையாகிறது என்ற கருத்தும், மத நிறுவனங்கள் எல்லாக் காலத்திலும் தமது அடையாளங்களைப் பெண்ணின் இருப்பு மூலமே வலியுறுத்தி வந்துள்ளது என்பதும் பேராசிரியரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளாகும். இவைமட்டுமின்றி, தாய்மை என்பதை உணர்ச்சிப் பிழம்பாக்கிக் குமுறும் பிம்பங்கள் நம் மத்தியில் ஏராளம் உண்டு. தாய்மையைத் தனி மனித உணர்வாக மட்டுமே பார்ப்பது அன்னையர் தின வரலாற்றைத் திரிப்பதாகும். அன்னையர் தினம் என்பது போருக்கு எதிரான குரல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலம் – சுகாதாரம் குறித்த புரிந்துணர்வைக் கோருவது, மாற்று மதிப்பீடுகளை முன்வைப்பது என்பதும், பெண்ணினம் இன்று பெண்களாக அறியப்படுவது உடற்கூறு சார்ந்த விஷயமாக மட்டும் இல்லை. பெண் என்றால் அழகு, சுகம், மென்மை, வலிமையற்ற தன்மை, அடக்கம், பொறுமை, தியாகம் போன்ற பல சிந்தனைகள் மனதில் வேகமாகப் பரவுகின்றன. அதேபோல, ஆண் என்றால் வீரம், வலிமை, வேகம், சினம், தலைமை போன்றவை தோன்றுகின்றன என்பதும், அகலிகை, நளாயினி, சீதை என்று கற்பை முக்கியப்படுத்தும் புராணங்களுக்கு மாற்றாகப் பழையனூர் நீலி, மாரியம்மன், வண்டி மலைச்சி போன்ற சிறு தெய்வங்கள் சார்ந்த படிமங்கள் வாய்மொழி வடிவங்களில் காணக்கிடைக்கின்றன என்ற பல்வேறு கருத்துத் தெறிப்புகள் இந்நூலின் முக்கியத்துவத்தை வெளிப்படுகின்றது.
தமிழ்ச் சமூகத்தில் இந்நூல் வாசிப்பளவில் பரவலாக்கம் அடைந்தால் தமிழ்ப் பெண்ணிய சிந்தனையைப் புரிந்துகொள்வதோடு பெண் – பெண்ணியம் – பெண்ணிய அரசியல் சார்ந்த மீள்வரையறையும் கட்டமைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
ஒரு கோப்பைத் தண்ணீர் – பெண்ணியம் குறித்த கட்டுரைகள் | அ. மங்கை | நியு செஞ்சுரி புக் ஹவுஸ் | மே 2025 | விலை 230
- முனைவர் மு. ஏழுமலை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.