அண்மையில் பாரதியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.எஸ்.எஸ். சார்புடைய விஜில் அமைப்பின் மேடையில் பேசியது சமூக ஊடகங்களில் மிகுந்த பேசுபொருளானது. பாரதியார் குறித்த நேர்மறையான, எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பாரதியாரை மட்டும் முன்னிலைப்படுத்திப் பெரியாரைப் புறக்கணித்த பொதுவுடைமை இயக்கங்களும் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. இவற்றைத் தாண்டி, பாரதியாரை சநாதன பாரதி என்றழைப்பது மட்டுமின்றி, வேறு சில அநாகரிகமான விமர்சனங்களும் இணையத்தில் நிகழ்ந்தன. பெரியாரையும் பாரதியாரையும் எதிர்நிலையில் நிறுத்தி யார் பெரியவர்? என்று விவாதிக்கும் போக்கும் நடைபெற்றது.
விமர்சனங்களுக்கு யாரும் அப்பாற்பட்டவர்களில்லை. பாரதியாரின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகத் திராவிட இயக்கம் விமர்சித்து வந்துள்ளது. “திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்?” என்ற தலைப்பில் தோழர் வாலாசா வல்லவன் எழுதியுள்ள நூல் சான்றுகளுடன் எழுதப்பட்ட முக்கியமான நூலாகும்.
சமஸ்கிருதத்தை பொதுமொழியாகக் கொள்ளலாம் என்ற கட்சியை ஆதரித்து எழுதியவர் பாரதியார் (பாரதி புதையல் பெருந்திரட்டு, ரா. அ. பத்மநாபன், ப. 274). பள்ளிகளில் தெய்வபக்தி, தேசபக்தி முதலியவற்றைக் கற்பிக்க வேண்டும். மதநூல்களைக் கற்பிக்க வேண்டும் என்றவர் பாரதி (இந்தியா தலையங்கம், 31.07.1909). கீதையைப் போற்றியவர்; பார்ப்பனரல்லாதார் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுத்தவர்; ”வேதம், சாஸ்திரம், பாஷைகள் தொடங்கி திருக்குறள், ஆண்டாள் திருமொழி வரைக்கும் அனைத்தையும் ஆர்ய சம்பத்து” என்று கூறியவர் பாரதி. இவற்றையெல்லாம் திராவிட இயக்கம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.
அதே நேரம், எப்படிப்பட்ட பாரதியாரை மறைத்து விட்டார்கள்; எந்த பாரதியாரை நாம் வெளிக்கொணர வேண்டும் என்பதை அறிஞர் அண்ணா நமக்குத் தெளிவுபடுத்துகிறார் (திராவிட நாடு, 19.10.1947). ’பேராசைக்காரனடா பார்ப்பான், பொய்மைப் பார்ப்பார்’ என்று பார்ப்பனரின் பித்தலாட்டங்களை, பார்ப்பன சமூகத்திலேயே பிறந்து பேசியவர் பாரதியார். அச்சமூகத்தின் வெறுப்பிற்கு ஆளானவர். பாரதி விழா மேடைகளில் இத்தகைய குரல் கேட்டதுண்டா என்கிறார் அண்ணா. மேலும், பாரதியாரின் காலம் வேறு; இக்காலம் வேறு. எனவே இன்றுள்ள எண்ணங்களையெல்லாம் அவர் அன்றே ஆய்ந்தறிந்து கூறியிருக்க வேண்டுமென்றோ, வரலாற்று உண்மையான ஆரிய-திராவிடர் பிரச்சினையை அவர் கூறியிருக்க வேண்டுமென்றோ நாம் எதிர்பாப்பதற்கில்லை என்று அண்ணா அறிவுறுத்துகிறார்.
பாரதியின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர் புரட்சிக்கவிஞர். அவர் பாரதியார் மீதும், அவருடைய முற்போக்கான கருத்துகள் மீதும் நம்பிக்கையும், மதிப்பும் கொண்டிருந்தார். அதே நேரம் பாரதியாரின் கடவுள், மதம் சார்ந்த கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டவரல்லர் பாரதிதாசன். தெய்வம் நமக்குத் துணை பாப்பா என்றார் பாரதியார். ஆனால், தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலம் என்றார் பாரதிதாசன்.
ஆணும் பெண்ணும் நிகரெனச் சொன்னவர்; சாதிக் கொடுமைகளைச் சாடியவர்; குழந்தைத் திருமணம் போன்ற சமூகக் கொடுமைகளைச் சாடியவர். அவர் வாழ்ந்தது மொத்தம் 39 ஆண்டுகள் மட்டுமே; அவர் வாழ்ந்த காலம், காலகட்டம், அவர் பிறந்த சமூகம் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு பாரதியாரைப் பார்க்க வேண்டுமே தவிர அவரது கவிதைகளில் சிலவற்றை மட்டுமே எடுத்துக் கோண்டு அவரை ’இப்படிப்பட்டவர்தான் பாரதியார்’ என்று முற்றுமுழுதாக நிறுவ முயற்சிப்பது, அல்லது நிராகரிப்பது அறிவுடையார் செயல் ஆகாது.
அது மட்டுமல்ல, பெரியாரையும் பாரதியாரையும் ஒப்பிடுவதே சரியாக இருக்காது. பெரியார் சமூக இயக்கம் கண்டவர்; சமரசமில்லாத போராளி; பொது நன்மைக்காகச் சிறையில் துன்பங்களை அனுபவித்தவர்; மிக நீண்ட நெடிய பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அவருடைய செயல்பாடுகளை பாரதியாருக்கு அருகிலேயே கொண்டு செல்ல முடியாது. மேலும், பாரதியாரோடு பெரியாரை ஒப்பிட்ட சீமானின் பேதைமையை நாம் தோலுரிக்க வேண்டுமே அல்லாது, இந்த நேரத்தில் நாம் சீமானுக்காக பாரதியின் பிற்போக்குத்தனங்களை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதே உண்மை.
- வெற்றிச்செல்வன்