“கன்னான் வார்த்துக் கொடுத்த செப்புப் பொம்மைகளைச் சுவாமிகள் என்று சொல்லி, அதை வண்டியில் வைத்து வாத்தியத்துடன் இழுப்பதும், அதற்குக் கல்யாணம் காரியாதி செய்வதும், பிள்ளை குட்டிகள் இருப்பதாகக் காட்டுவதும், சோறு பலகாரம் படைப்பதுமான முட்டாள்தனமான காரியங்கள்...” - தந்தை பெரியார் (குடிஅரசு, 17.11.1945)

modi and stalinகடந்த 13.12.2021 அன்று உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில், காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ரூ 600 கோடி செலவில் நடைபெற்ற மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் கோயில் கட்டுமானம் தொடர்பான பல்வேறு பணிகளை மோடி செய்துள்ளதாக இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது (15.12.2021). குஜராத்திலுள்ள சோமநாதர் கோயிலில் 80 கோடி செலவிலும், உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோவிலில் 130 கோடி செலவிலும் பணிகள் நடைபெற்றுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தொடர்ந்து கோயில் கட்டுமானப் பணிகளை ஒன்றியப் பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாகவும் பெருமையுடன்(!) செய்தி வெளியிட்டுள்ளது இந்து நாளிதழ்.

வளர்ச்சியைக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் பாஜகவின் ஆட்சியில் வளர்ந்து வருகிறது என்னவோ கோயில் கட்டுவதற்காகச் செலவிடப்படும் தொகைதான். அதுமட்டுமன்று. கோயில்கள் கட்டப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் பிரதமரே நேரடியாகக் கலந்து கொண்டு பூஜை, புனஸ்காரங்களைச் செய்வதிலும் ஈடுபட்டு வருவது முகம் சுளிக்கத்தக்கதாக உள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

 சோமநாதர் கோயில் புனரமைக்கப்பட்டபோது அதில் அப்போதைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் கலந்து கொள்வதை அறிந்த அப்போதைய பிரதமர் நேரு, அந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொண்டார். என்றாலும் அதை மீறி இராஜேந்திர பிரசாத் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது நேரு தான் எழுதிய கடிதத்தில் பயன்படுத்திய வரிகள் முக்கியமானவை. (Nehru wrote to Prasad advising him “not to participate in the spectacular opening of Somnath temple [which]……. unfortunately has a number of implications. Personally, I thought this was no time to lay stress on large-scale building operations at Somnath. This could have been done gradually and more effectively later. However, this has been done. I feel that it would be better if you did not preside over this function” – India after Gandhi – Ramachandra Guha, page no.131, 132).

தொழிற்சாலைகள், அணைகள் என்று தனது ஒவ்வொரு செயலிலும் வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு செயல்பட்ட நேருவை, வெறும் வார்த்தைகளால் ஏமாற்றும் வாய்ச்சொல் வீரர்கள் இன்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதோ நிலைமை தலைகீழாக உள்ளது. ஒன்றியத்தின் பிரதமர் ஒவ்வொரு கோவில் திறப்பு நிகழ்ச்சியிலும் ஓடி ஓடிக் கலந்து கொள்கிறார். இது இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லப்படுவதை கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு பக்கம் இவ்வாறு நடந்து கொண்டிருக்க தமிழ்நாட்டிலோ முதலமைச்சர் ஸ்டாலின், கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் எல்லாம் கல்லூரிகளை அமைத்துக் கொண்டிருக்கிறார். அது குறித்த அறிவிப்புகள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. கோயில் தலமனைத்தும் பள்ளிகள் செய்யும் தமிழக அரசின் செயல் பாராட்டுதலுக்குரியது.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்தப் பணிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். வெள்ள நிவாரணமாகட்டும், கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் ஆகட்டும் உடனுக்குடன் விரைந்து செயல்படும் முதலமைச்சரின் போக்கு நம்மை வியக்கவைக்கிறது. அதற்கு மிக அண்மைய எடுத்துக்காட்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதில் ஒரு பிரச்சினை வருகிறபோது உடனடியாக அதனை மாநிலப் பாடலாக அங்கீகரித்து அரசாணை வெளியிட்டுள்ளர் தமிழ்நாடு முதல்வர்.

கோயில்களோடு ஒன்றிப் போயிருக்கிறார் வாரணாசியில் பிரதமர் மோடி. மக்களுக்கான பணிகளைச் செய்வதில் விரைவு காட்டுகிறார் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின்.

காவிக்கும், கருப்புக்கும் உள்ள வேறுபாடு, இதுதான்.

- வெற்றிச்செல்வன்

Pin It