chennai flood 418கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பெய்திட்ட கனமழைகளில், மூன்றாவது பெரிய கனமழையைச் சென்னை சென்ற மாதம் கண்டது.

மழை வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து செய்திட்டதை அனைத்துத் தரப்பினருமே பாராட்டினர்.

நிவாரணப் பணிகளுக்காக, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இதுவரை 8,998 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இதுவரை எந்தத் தொகையும் தமிழகத்திற்கு விடுவிக்கப்படவில்லை.

மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு ஒரு குழுவை அனுப்பி வைத்தது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் நிதி ஆலோசகருமான திரு.ராஜீவ் சர்மா அவர்கள் தலைமையிலான இக்குழு நவம்பர் 22ஆம் தேதி மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை.

நாடளுமன்றத்தில் திமுகவும் விசிகவும் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர். இக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டவுடன்தான் ‘கடுமையான இயற்கைப் பேரிடர்’(severe nature) என்பதை உறுதி செய்ய முடியும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

“யானையைப் பார்க்க எதற்கு வெள்ளெழுத்து கண்ணாடி?” என்ற ஒரு சொல்லாடல் உண்டு. உலகறிந்த இயற்கைப் பேரிடருக்கு இப்படிப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி, ஆமை வேகத்தில் செயல்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகுதான் தேசியப் பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க முடியும் என்று சொல்வது, தமிழ்நாட்டு மக்கள் நலனில் பாஜக அரசு கொண்டிருக்கும் அக்கறையின் தன்மையை உணர்த்துகிறது.

2017இல் இதேபோல் குஜராத்தில் ஒரு பேரிடர் ஏற்பட்ட போது, மூன்றே நாட்களில் உடனடியாக 500 கோடியை மோடி தலைமையிலான பாஜக அரசு விடுவித்து இருக்கிறது என்பதை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் பேரிடருக்கு நிதியை விடுவிக்கக் கூறினால் விதிமுறைகளைப் பின்பற்றித்தான் செய்ய முடியும் என்று பதிலளிக்கும் மத்திய அமைச்சர்கள், குஜராத்துக்குக் கொடுக்கும் போது ஏன் எந்த விதி முறைகளையும் பின்பற்றுவது இல்லை? குஜராத் பேரிடருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி பொறுமையாகத்தான் நிதி ஒதுக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அதே அக்கறையை ஏன் தமிழ்நாட்டின் மீது அவர்கள் செலுத்துவதில்லை என்பதுதான் கேள்வி.

எதற்கெடுத்தாலும் “ஒரே நாடு” “ஒரே இந்தியா” என்று முழக்கமிடும் பாஜகவினர், ஒரே நாட்டிற்குள் இருக்கும் இரு வேறு மாநிலங்களுக்கு இடையில் பாரபட்சமற்ற அணுகுமுறையை ஏன் கடைபிடிப்பதில்லை?

இந்தியாவிற்கான வளம் சேர்க்கும் மாநிலங்களில் முதன்மையானதாக இருக்கும் தமிழ்நாடுதான், வஞ்சிக்கப்படுவதிலும் தொடர்ந்து முதன்மையான மாநிலமாகவே இருந்து வருகிறது.

‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்று அறிஞர் அண்ணா அன்று சொன்ன நிலை இன்றும் தொடர்கிறது. மக்கள் நல அரசாகவும் விரைந்து செயல்படும் அரசாகவும் திமுக அரசு இருப்பதால்தான், 2015இல் ஏற்பட்டது போன்ற பேரிழப்புகளைச் சந்திக்காமல் தமிழகம் தப்பித்து இருக்கிறது.

மாநில அரசு காத்து நிற்கிறது. ஒன்றிய அரசு காக்க வைக்கிறது.

- மா.உதயகுமார்

Pin It