ஒரு நாடு, தன் நாட்டின் குடிமக்களாக யார் இருக்க முடியும் என்பதை வரையறுப்பதன் மூலம் தன்னை வரையறுத்துக் கொள்கிறது. ஏனென்றால் உண்மையில் குடியுரிமை தான் உரிமைகளைப் பெறுவதற்கான உரிமையாகும்.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்ட 1950 ஆம் ஆண்டிலேயே இது வரையறுக்கப்பட்டு விட்டது. அதாவது, குடியுரிமையைப் பற்றிய பிரிவு 2 இந்திய நிலப்பரப்பில் வசிப்பதன் அடிப்படையில் குடியுரிமை வழங்குகிறது.

amit shah 620உண்மையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 6ன் படி பாகிஸ்தானிலிருந்து இந்திய நிலப்பரப்பிற்கு குடிபெயர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப் பட்டது. மதம் குடியுரிமை வழங்குவதற்கான ஒரு காரணியாக இருக்காது என்பது இதில் பளிச்சென்று விளங்கும்.

அதே சமயம் அரசியல் சட்டம் குடியுரிமையை வழங்குவது மற்றும் குடியுரிமையைப் பறிப்பது குறித்த சட்டமியற்றி நாடாளுமன்ற உரிமையை அங்கீகரித்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்றம் குடியுரிமைச் சட்டம் 1955ஐ இயற்றியது. அதாவது, மதம் குடியுரிமை வழங்குவதற்கான ஒரு காரணியாக 1955 ஆம் ஆண்டு சட்டத்திலும் இல்லை. இந்த நிலையை குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா 2019 மாற்றுவதற்கு முயல்கிறது. அதேபோல, 1955 ஆம் ஆண்டு சட்டத்தில் சில பிரிவுகளையும் மாற்ற முயல்கிறது.

இதுகாறும் இந்தப் பிரச்சினையில் பெரும்பான்மையான கேள்விகளும், விவாதங்களும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பைக் கொண்ட இந்தியா போன்ற நாடு, மத அடிப்படையிலான சில குழுக்களை குடியுரிமை வழங்குவதற்கு தேர்ந்தெடுக்கலாமா என்பதைப் பற்றியே நடைபெறுகிறது.

மதச்சார்பின்மை அரசு அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று என்று பல்வேறு தீர்ப்புகளில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. அடிப்படையான இந்தக் கேள்வியைத் தவிர இந்த மசோதாவை நோக்கினால் அரசியல் சட்டத்திற்கு விரோதமான அம்சங்கள் விரவிக் கிடப்பதைக் காண முடியும்.

நாடுகள் மற்றும் குழுக்கள் சம்மந்தமான இந்த மசோதாவின் வகைப்பாடு சந்தேகத்திற்கு இடமானது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தை இணைப்பதற்கும், அதே போன்று மற்ற அண்டை நாடுகளை விட்டு விட்டதற்குமான அடிப்படை தெளிவற்றது.

அனைவருக்கும் ஒரே வரலாறு என்பது அடிப்படையாக இருக்க முடியாது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் ஒருபோதும் பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை. எப்போதும் தனி நாடாகவே இருந்திருக்கிறது. பூகோள ரீதியாக அண்டை நாடு என்றும் ஆப்கானிஸ்தானைச் சொல்ல முடியாது. ஏனெனில் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான எல்லைப் பகுதி கிடையாது. மிக முக்கியமாக நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய இந்தியாவுடன் எல்லைகளைக் கொண்ட நாடுகள் ஏன் இதிலிருந்து விலக்கப்பட்டன என்பது தெரியவில்லை.

நோக்கம் மற்றும் காரணங்கள் பற்றிய பகுதியில் இந்த மசோதாவிற்கு காரணமாகச் சொல்லப்படுவது மேற்கண்ட மூன்று நாடுகளிலும் அரசில் மதங்கள் இருப்பது என்பதும், எனவே, மதச் சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காகவும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இந்தக் காரணத்திற்கு எந்த வலுவும் இல்லை. பிறகு ஏன் பூடான் இந்தப் பட்டியலில் இல்லை. அது இந்தியாவின் அண்டை நாடு. வஜ்ராயனா புத்த மதத்தை தனது அதிகாரப் பூர்வ மதமாக ஏற்றுக் கொண்ட நாடு. இது ஏன் இந்தப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது?

உண்மையில் பூடானிலுள்ள கிறித்தவர்கள் தங்கள் வீடுகளுக்குள் தனிமையில்தான் வழிபட முடியும். பூடானைச் சேர்ந்த பல கிறித்தவர்கள் இந்தியாவில் எல்லைப் பகுதியில் இருந்தால் ஒரு தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்காக இந்தியாவிற்கு வந்து செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு குடியுரிமைச் சட்ட மசோதாவின் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப் படவில்லை.

மேலும், மதச் சிறு பான்மையினர் அந்தக் காரணத்திற்காக துன்புறுத்தலுக்கு அண்டை நாடுகளில் உள்ளாகிறார்கள் என்றால் இலங்கை ஏன் இதில் சேர்க்கப்பட வில்லை. அது புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள நாடு. தமிழ் இந்துக்கள் துன்புறுத்தப்படுவது அந்த நாட்டின் வரலாறாக இருக்கும்போது அந்த நாடு ஏன் சேர்க்கப்பட வில்லை? மியான்மர் ஏன் சேர்க்கப்பட வில்லை. ரோகிங்கியாக முஸ்லீம்களுக்கு எதிராக அந்த நாடு கொடுமைகள் நிகழ்த்தியிருக்கிறது. அந்த மக்களில் பலர் இந்தியாவில் அகதியாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் சேர்க்கப் படவில்லை. குடியுரிமைச் சட்டத்தில் மூன்று நாடுகள் மட்டும் சேர்க்கப் பட்டிருப்பது நியாயமற்றது.

மதங்களின் வகைப்பாடு

தனிநபர்கள் பற்றிய வகைப்பாட்டில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கிறது. இதுவே, சந்தேகத்திற்கு இடமான வகைப்பாடாகும். உலகம் முழுவதும் மத ரீதியான துன்புறுத்தல்கள் நிலவுகின்றன. அதற்கு சற்றும் குறையாத வகையில் அரசியல் ரீதியான துன்புறுத்தல்களும் நிறைந்து கிடக்கின்றன. துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதுதான் நோக்கமெனில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களை மட்டும் பாதுகாப்பது எனும் கட்டுப்பாடு தர்க்க நியாயமற்றது.

இன்னும் கூடுதலாக ஒரே மதத்தில் உள்ளவர்கள் மத அடிப்படையிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதில்லை என்கிற எண்ணமும் தவறானது. வங்காள தேசத்தைச் சேர்ந்த தஸ்லீமா நஸ்ரின் பிரச்சினையே சரியான உதாரணமாகும். அவரோ அவரைப் போன்றவர்களோ இந்த சட்டத்தின் அடிப்படையில் இந்திய குடிமகளாகும் வாய்ப்பைப் பெற மாட்டார்கள். சொல்லப் போனால், வங்காள தேசத்தில் இருந்த இந்துக்களை விட மிக அதிகமாக தனிப்பட்ட முறையில் அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர் தஸ்லீமா நஸ்ரின்.

இதே போன்று பாகிஸ்தானில் உள்ள ஷியாப் பிரிவினர். ஒரே மதத்தில் உள்ள வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாகிஸ்தானில் மிகக் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.

இறை நம்பிக்கையற்றவர்கள் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் குடியுரிமை பெற தகுதி யற்றவர்கள் என்பது அதிர்ச்சி யளிக்கும் உண்மையாகும்.

இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய ஆறு மதப் பிரிவினருக்கு மட்டும் மதச் சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து அளித்து குடியுரிமை பெற வாய்ப்பளிப்பது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதாகும்.

பாகிஸ்தானிலுள்ள அகமதியாக்கள் அந்த நாட்டில் முஸ்லீம்கள் என்று அங்கீகரிக்கப் படுவதில்லை. வேறு மதத்தைச் சார்ந்தவர்களாகவே நடத்தப் படுகிறார்கள். உண்மையில் இஸ்லாத்தின் அர்த்தங்களை மாற்றுவதற்கு முயல்கிற மதமாகப் பார்க்கப் படுவதால் பாகிஸ்தானில் இந்துக்களை விடவும், கிறித்தவர்களை விடவும் மிக அதிகமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் படுபவர்கள் அகமதியாக்கள். இந்தச் சட்டத்தில் அறிவிக்கப்பட்ட நோக்கம் மதத்தின் காரணமாக தான் பிறந்த நாட்டில் துன்புறுத்தப் படுபர்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான் எனில், அகமதியாக்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறாதது (உள்நோக்கத்தை) தெளிவு படுத்துகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு எந்தவொரு மனிதனுக்கும் (குடிமகனும் அல்ல) சட்டத்தின் முன் சமத்துவத்தையும் அல்லது சட்டத்தில் பாதுகாப்பையும் இந்திய மண்ணுக்குள் மறுப்பதைத் தடுக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மிகத் தீவிரமான பொருத்தமின்மைகளின் காரணமாக இந்தச் சட்டம் ஒரே மாதிரியான மனிதர்களுக்கு ஒரே மாதிரியான பாதுகாப்பு அளிப்பதிலிருந்து தவறுகிறது என்பதை யூகிப்பது கடினமல்ல.

சட்ட விரோத குடியேற்றக்காரர்களாக இந்தியாவிற்குள் வந்தவர்களில் உண்மையிலேயே மிக அதிகமாக தேவைப்படுகிறவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்குப் பதிலாக இந்தச் சட்டம் அதற்குக் குறைவான பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு குடியுரிமை வழங்க முனைகிறது.

தன்னை மியான்மர் அரசாங்கத்தின் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்திய எல்லைக்குள் வந்தவர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களாகவும், அதே சமயம் நேரடியான எந்த மதத் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகாமல் பொருளாதார காரணங்களுக்காக மட்டும் இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு மதத் துன்புறுத்தல் காரணமாக குடிபெயர்ந்தவர்களாகக் கருதி குடியுரிமை வழங்குவதை வேறெப்படி விளங்கிக் கொள்ள முடியும்?

இதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தோணிகள் மூலம் இலங்கையில் அட்டூழியங்களுக்குப் பயந்து வந்த தமிழர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத குடியேற்றக்காரர்களாகவும், ஒருபோதும் குடியுரிமை பெற வாய்ப்பில்லாதவர்களாக ஆக்கப் படுவதையும் எப்படிப் புரிந்து கொள்வது?

இதேபோன்று ஏராளமான உதாரணங்களைக் குறிப்பிட முடியும், இந்தச் சட்டம் எந்த அளவிற்கு தானடித்த மூப்பாக கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பதற்கு.

இதேபோன்று இந்திய குடியுரிமை பெறுவதற்கு இந்தியாவில் 11 ஆண்டுகள் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும் என்பது தற்போது 5 ஆண்டுகளாக குறைக்கப் பட்டிருக்கிறது. தானடித்த மூப்பானது என்பதற்கு மிகச் சரியான உதாரணமாக இதைக் கொள்ள முடியும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த அரசியலமைப்பு தர்க்கத்திற்கும் உட்படாதது. ஆனால், அதற்கு அரசியல் ரீதியான கெட்ட உள்நோக்கம் இருக்கிறது என்பது தர்க்க ரீதியாக பொருந்திப் போகிறது. சட்ட ரீதியாக இந்துக்களுக்கு முன்னுரிமை அளித்து (இஸ்லாமியர்களை விலக்கி) குடியுரிமை வழங்குவது இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்காக முயல்வதாகும். இதுதான் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கான பிள்ளையார் சுழியாகும்.

இந்தியர்களுக்கான நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்றால் அதாவது இந்து ஆப்கானியர்கள், இந்து பாகிஸ்தானியர்கள், இந்து வங்காள தேசிகள், இந்து ரஷ்யர்கள், இந்து அமெரிக்கர்கள் ஆகியோருக்கான நாடாக இந்தியா ஆகிவிடக் கூடாது என்றால், குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தை அப்பட்டமான அரசியல் சட்ட மீறல் என்று நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். இல்லையேல், இது ஆரம்பமாக மட்டுமே இருக்கப் போகிறது. இது முடிவாக இருக்காது. காலப் போக்கில் இதுபோன்ற சட்ட நகர்வுகள் இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கு முடிவு கட்டி விடும்.

(‘இந்து’ ஆங்கில நாளேட்டில் ஷதன் ஃப்ராஷத் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்)

Pin It