குடியுரிமைத் திருத்தச் சட்டம் - குடியுரிமை பதிவேடு - தேசிய மக்கள் தொகைப் பதிவேடுகளில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து:

நாட்டில் இப்போது பெரிய விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிற பிரச்சனை, குடியுரிமைத் திருத்தச் சட்டப் பிரச்சனை. இந்தப் பிரச்சனை குறித்து, இந்த திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள், "இந்த சட்ட திருத்தத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாமலே, இதனால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஆபத்து வரப் போகிறது என்ற பொய்யான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்று பாரதிய ஜனதா தரப்பில் வாதாடப் படுகிறது.

viduthalai rajendranமற்றொரு பக்கம் இந்த சட்டம் மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துகிற மிகப்பெரிய ஆபத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது என்று வெகுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் போராடுகிறார்கள். உண்மையிலேயே இந்தப் பிரச்சனைகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தான் இந்தப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறதா? என்பது ஒரு அடிப்படையான கேள்வி. இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறவர்கள் மிகச் சிறந்த ஆய்வாளர்கள், மிகச் சிறந்த சிந்தனையாளர்கள், முன்னாள் நீதிபதிகள், சட்ட நிபுணர்கள். இவர்கள் அத்தனை பேரும் இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்று சொன்னால், அவர்களும் இந்தப் பிரச்சனையைப் பற்றி புரிந்து கொள்ளாத மடையர்களாக இருக்கிறார்களா? இது ஒரு கேள்வி.

இரண்டாவது இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஜப்பான் நாட்டு பிரதமர், இந்திய நாட்டு பிரதமருடனான சந்திப்பு இரத்து செய்யப்பட்டிருக்கிறது. வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வருகை தர இருந்த இரண்டு அமைச்சர்களின் வருகை இரத்து செய்யப்பட்டிருக்கிறது. அய்க்கிய நாடுகளின் சபைகளில் மனித உரிமையைப் பற்றி பேசவல்ல அதிகாரி ஒருவர், "இது மிக மோசமான, நாட்டை கூறு போடுகிற சட்டம்" என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். 16 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இந்த சட்டம் கொண்டு வருவது இந்தியாவினுடைய வளர்ச்சிக்கு, மேன்மைக்கு உகந்தது அல்ல, இந்தியா மதத்தினூடான ஆட்சிக்கு சென்று கொண்டிருக்கிறது என்று தங்களுடைய எதிர்ப்பை இந்திய தூதரகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் இருக்கிற வெகு மக்களைத் தாண்டி சர்வதேச அளவிலும் இந்த சட்டம் எதிர்க்கப்பட வேண்டிய சட்டம், ஒழிக்கப்பட வேண்டிய சட்டம் என்ற கருத்து மேலோங்கியிருக்கிற இந்த நேரத்தில், இந்த சட்டத்தைப் புரியாமல் எதிர்க்கிறார்கள், புரியாமல் பேசுகிறார்கள் என்று சொல்லி இந்த சட்டத்திற்கு ஆதரவாக நாங்கள் பேரணி நடத்துகிறோம், இந்த சட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவோம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்வினைகளை ஆற்றிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக சில நிமிடங்களில் இந்தப் பிரச்சனையினுடைய மய்யக் கருத்து என்ன என்பதை நான் சுருக்கமாக கூற ஆசைப்படுகின்றேன். மூன்று சொல்லாடல்கள் இதில் சொல்லப்பட்டு வருகின்றன, ஒன்று குடியுரிமை திருத்தச் சட்டம், இரண்டு குடியுரிமைப் பதிவேடு, மூன்றாவது மக்கள் தொகைப் பதிவேடு. இந்த மூன்றும் தான் இந்தப் பிரச்சனைகளில் மய்யமாக பேசப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சனை எதிலிருந்து தொடங்குகிறது?

அசாம் மாநிலத்தில் முதன் முதலாக தங்களுக்கான ஒரு பதிவேடு வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்து அசாமில் உள்ள மாணவர்கள் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். ஏன் அவர்கள் அந்தப் போராட்டத்தை அசாமில் நடத்த வேண்டிய அவசியம் வந்தது? பங்களாதேஷ் யுத்தம் நடந்த நேரத்தில், பங்களாதேஷ் நாட்டிலிருந்து பக்கத்தில் உள்ள அசாமிற்கு ஒரு கோடி மக்கள் அகதிகளாக வந்தார்கள். ஒரு கோடி பேர் அகதிகளாக வந்த போது, அசாமில் மக்கள் பிரச்சனைகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின. அந்த ஒரு கோடி பேரில் பெரும்பாலானவர்கள் யுத்தம் முடிந்த பிறகு திரும்பிப் போய் விட்டார்கள். அப்படி இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு கூட அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி 'நாம் அவர்களை விட்டுவிடக் கூடாது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்' என்று அஞ்சல் தலையில் கூடுதலாக அய்ந்து காசுகள் ஒட்ட வைத்து, அதில் வருகிற வருவாயை அகதிகளாக வந்தவர்களுக்குப் பயன்படுத்தினார். பிறகு திரும்பிப் போய் விட்டார்கள். திரும்பிப் போன பிறகும் அசாமில் தங்கி விட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து கொண்டே வந்தது. ஆக அசாம் மக்கள், எங்கள் மாநிலத்தில் பங்களாதேஷிலிருந்து வந்த உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எங்களுடைய அசாம் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், எங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவே அவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற போராட்டம் அசாம் மாணவர் போராட்டம், 1979இல் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து போராடிய அனைத்து அசாம் மாணவர் சங்கத்துக்கும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையே 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு உடன்பாடு உருவானது. போராட்டத்தில் 855 பேர் உயிர்ப் பலியானார்கள். அசாம் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்காக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட அடுத்த ஆண்டு 1986இல், 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1971 ஆம் ஆண்டு மார்ச் 25க்குப் பிறகு அசாமில் குடியேறிய வங்க தேசத்தவரை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும் என்பது ஒப்பந்தம்.

இதற்கு மற்றொரு பின்னணியை நாம் கூற வேண்டுமானால், அசாம் மாநிலத்தைப் பொருத்தவரை, அம்மாநிலத்தில் தேயிலைத் தொழில், பெட்ரோல் எடுக்கும் தொழில் மற்றும் காட்டு விலங்குகளான யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அந்த பகுதிக்கான ‘கிழக்கு வங்காள பாதுகாப்புச் சட்டம்' என்ற ஒரு சட்டத்தை ஏற்படுத்தி அனுமதி இல்லாமல் அந்த மாநிலத்திற்குள் யாரும் நுழையக் கூடாது என்ற ஒரு பாதுகாப்பை அசாம் மாநிலத்திற்கு உருவாக்கினார்கள். அசாம் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வட கிழக்கு மாநிலங்களான, திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களிலும், அங்கே வாழ்கின்ற மக்களில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்கின்ற காரணத்தினால் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அந்த மாநிலத்தில் நுழைகிறவர்கள் அந்த மாநில அரசின் உரிய அனுமதி பெற்றுதான் நுழைய வேண்டும். Inner Line Passport என்ற முறையை பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பழங்குடியின பாதுகாப்பிற்காக சில சுயாட்சி பிரதேசங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எல்லைக்கோடு பகுதிகளாக இருக்கிற இந்த வடகிழக்கு மாநிலங்களில் பிற நாட்டினருடைய ஊடுறுவல் அதிகமாக இருக்கிறது என்ற நிலையில் அவர்களின் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு வந்தது.

அசாம் ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆகியோர் மட்டும் வெளியேற்றப்பட வேண்டும்; இந்துக்கள் குடியுரிமை பெறலாம் என்று எந்தப் பிரிவும் கிடையாது. மற்றபடி, அசாம் மாநில மக்கள் தங்களின் கலாச்சாரம், நில உரிமை, மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் போராடினார்கள். பங்களாதேஷ் நாட்டிலிருந்து வந்தவர்களில் இந்துக்களும் அதிகம் வந்தார்கள். ஆனால் அவர்கள் வங்காளம் பேசுகின்ற இந்துக்கள். அசாம் மக்களைப் பொறுத்தவரை, வந்தவர்கள் இந்துவாக இருந்தாலும் அவர்கள் பேசும் மொழி வேறு, எங்கள் அசாம் மொழி வேறு. மதத்தின் அடிப்படையில் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது. எனவே வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவரும் அன்னியர்கள் என்று கூறி அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பது தான் அசாம் மக்களின் கோரிக்கை.

ஒப்பந்தப்படி அதற்கான பட்டியல் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 16 இலட்சம் என்று கணக்கிடப் பட்டது. அந்த 16 இலட்சம் பேரில் 9 இலட்சம் பேர் இந்துக்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தார்கள். இவை, அசாம் மாநிலத்தில் ஏன் குடியுரிமை வேண்டும் என்று போராடினார்கள் என்பதற்கான பின்னணி. அந்த அடிப்படையில் இந்த அசாமில் யார் யார் குடிமக்கள், யார் யார் அன்னியர்கள் என்பதைக் கண்டறிவதற்காக அரசு செலவிட்ட தொகை 1600 கோடி ரூபாய். அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. அந்த குளறுபடிகளிலேகூட இந்தியாவினுடைய குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமதினுடைய சகோதரர்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்ல என்று சட்டவிரோத குடியேற்றப் பட்டியலில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். கார்கில் போராட்டத்தில் பங்கெடுத்து, அதற்காக குடியரசுத் தலைவரிடம் விருதைப் பெற்ற இஸ்லாமிய குடும்பம் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலில் சேர்த்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியல் தயாரிப்பதில் பல குளறுபடிகள் நடந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு உச்ச நீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் பட்டியல் தயாரிக்கப்பட்டு 16 இலட்சம் பேர் இன்றைக்கு சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று இறுதி செய்யப்பட்டது. சரி இந்த சட்ட விரோதமாக குடியேறியவர்களை என்ன செய்யலாம்? திரும்பவும் பங்களாதேஷிற்கு அனுப்பினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவர்களுக்காக நாங்கள் ஒரு தடுப்புக் காவல் முகாம்களை ஏற்படுத்தப் போகிறோம். (சிறைச் சாலை). அந்த சிறைச்சாலையில் கொண்டு போய் இவர்களை அடைத்து வைக்கப் போகிறோம் என்கிறார்கள். எத்தனை காலம் அடைத்து வைப்பீர்கள்? அவர்களின் பேரன், கொள்ளுப் பேரன் என்று தலைமுறை தலைமுறையாக வாழ்கிறவர்களை தடுப்புக் காவல் முகாம்களில் வைத்திருக்கப் போகிறார்களாம்.

அசாம் சட்டசபைக்கு தேர்தல் வந்தபோது பாரதிய ஜனதா கட்சியின் அமித்ஷா, ‘நாங்கள் அன்னியர்களை இங்கிருந்து விலக்கி வைத்து விட்டோம், உங்களுடைய அசாம் மக்களுடைய உரிமைகளைக் காப்பாற்றி விட்டோம். இது எங்களுடைய ஆட்சி உங்களுக்கு செய்திருக்கிற சேவை, எனவே உங்களுடைய வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள்’ என்று சொல்லி ஓட்டுகள் வாங்கி அசாம் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரிய வெற்றியைப் பெற்று விட்டது. அதன்பின் அமித்ஷா சொன்னார் 'இந்த தேசியக் குடியுரிமை பதிவேடு என்பது அசாம் மாநிலத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள ஒவ்வோரு மாநிலத்திலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதற்கான பதிவேடுகளை நாங்கள் தயாரிப்போம். ஒரு அன்னியனைக் கூட இந்தியாவில் ஊடுருவதை அனுமதிக்க முடியாது' என்ற உறுதிமொழியை அமித் ஷா அப்போது அங்கே கொடுத்தார்.

அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய குடியுரிமைப் பதிவேடுகளைத் தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். அதை ஒரு சாக்காக முன் வைத்து இந்தியா முழுமைக்கும் ஏன் குடியுரிமைப் பதிவேடுகளைத் தயாரிக்க வேண்டும்? அதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்? இதுதான் இப்போது நாடு முழுதும் போராடுகிற மக்களிடம் எழுந்துள்ள நியாயமான அச்சம். இந்த அச்சத்தை உறுதிப்படுத்துகிறது, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள ‘குடியுரிமை திருத்தச் சட்டம்.’

திருத்தச் சட்டம் என்ன சொல்ல வருகிறதென்றால், 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் இந்த மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அப்படி குடியுரிமை வழங்குவதற்கு உரிமை படைத்தவர்கள் யாரென்று சொன்னால் இந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், சமணர்கள், பவுத்தர்கள் என்று ஆறு பிரிவினர் மட்டும். இந்த சட்டத் திருத்தத்தில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவது சரியானதா? இது தான் முக்கிய கேள்வி. இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தின் 14ஆவது பிரிவு, ‘இந்தியாவில் வாழ்கிற எந்த மக்களையும் மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தக் கூடாது’ என்று அது திட்டவட்டமாக கூறுகிறது. எனவே திருத்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது.                                         

இஸ்லாமியருக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

பா.ஜ.க. நடுவண் ஆட்சி கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டங்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியக் கருத்தியல் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தத்துவத்தை உருவாக்கித் தந்தவரும் அந்த அமைப்புக்கு தலைமையேற்று வழி நடத்தியவருமான சித்பவன் பார்ப்பனர் வலியுறுத்திய கருத்து தான் இந்த சட்டங்களுக்கான பின்னணி.

“இந்துஸ்தானில் வாழக்கூடிய அனைவரும் இந்துக்கள். அவர்களுக்கான இனத்தின் அடையாளம் இந்தியர் அல்ல; இந்து என்பது தான். இந்து மதத்தைச் சாராத பிற மதத்தினர் அனைவரும் அன்னியர்கள். அவர்கள் இந்துஸ்தான் என்ற பாரத தேசத்தில் வாழ வேண்டுமானால் இந்து கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்; அதற்கு அடிபணிய வேண்டும். இந்துக்கள் அல்லாத பிற மத அன்னியர்கள் தங்களுக்கான தனித்த அடையாளங்களை இழந்துவிட வேண்டும். இந்துக்கள் பெருமையை மட்டுமே பேச வேண்டும். இதை ஏற்க மறுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு ‘குடியுரிமை’ கூட வழங்கக் கூடாது என்று கோல்வாக்கர் - “நாம் அல்லது நமக்கான தேசத்தின் வரையறை (We or Our Nationhood Defined) என்ற நூலில் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

“The foreign races of Hindustan must either adopt the Hindu Culture and language; must learn to respect and hold in reverance Hindu Religion” என்று எழுதியதோடு அவர்கள் தங்களுக்கான தனி அடையாள உரிமைகளை இழந்தே தீரவேண்டும் (They must lose their seperate existance) என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார். அவர்கள் தங்களுக்கான உரிமைகளையோ, முன்னுரிமையோ கோர முடியாது என்பதோடு குடியுரிமை கோரவும் உரிமை இல்லை. (They may stay in the country, wholly subordinated to the Hindu Nation, claiming nothing, deserving no privileges; far less any preferential treatment - not even citizen’s rights) (மேற்குறிப்பிட்ட நூலின் பக்கம் 47-48)

இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கூட வழங்கக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். பிதாமகர் கோல்வாக்கர் கருத்துக்கு தரப்பட்டுள்ள சட்ட வடிவம்தான் குடியுரிமை திருத்தச் சட்டம்.

(தொடரும்)

Pin It