மின்சார சட்டத்திருத்த மசோதாவை 08-08-2022 அன்று நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். அப்போதே தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர்.

இது நடைமுறைக்கு வருமானால் ஏழை மக்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கும்.

மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டுள்ள மின் ஒழுங்குமுறை ஆணையங்கள் எவ்வித அதிகாரமும் இன்றி, ஒன்றிய ஒழுங்கு முறை ஆணையத்தால் அதிகாரங்கள் பறிக்கப்படும்.

ஒன்றிய ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசுகள் கடைப்பிடிக்கவில்லை என்றால் அபராதமாக ஒரு கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும்.

நாட்டுடைமை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று வருவதைப் போல இந்தத் திருத்த மசோதாவும், மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்க எடுக்கும் முயற்சியாக இருக்கிறது.

மாநில அரசால் கட்டப்பட்ட மின்துறை கட்டமைப்புகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்பட அனைத்தும் அப்படியே பறிபோய்விடும். அதற்கான எவ்விதக் கட்டணமும் மாநில அரசுக்குக் கிடைக்காது.

தனியார்மயமாக ஆக்கப்பட்டு விட்டால், இன்று தமிழக அரசு தரும் இலவச மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டிவரும். அதுவும் தனியார் நிர்ணயித்த விலையில்.

இப்படிப்பட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு நிறைவேற்றி வருவது கவலை அளிப்பதாக இருக்கிறது.

இப்பொழுது நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவில் இருக்கும் இம்மசோதா, முழுமையாகவே மக்கள் நலன் கருதி ரத்து செய்யப்பட வேண்டும்

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது.

Pin It