பீகாரில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.க 77 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும் வென்றன. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றார். நிதிஷ் குமார் அமைச்சரவையில் பா.ஜ.கவைச் சேர்ந்த 16 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றனர்.

பாஜகவுடன் தொடர்ச்சியாகக் கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்ததுடன் ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகக் கடிதம் அளித்தார்.

ஆளுநர் மாளிகையில் இருந்து நேராக லாலு பிரசாத் யாதவ் இல்லம் சென்று அவரது மகனும் இராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவை சந்தித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஐக்கிய ஜனதா தளத்திற்கு இராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது. 7 கட்சிகளைச் சேர்ந்த 164 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பீகார் முதல்வராக நிதிஷ் குமார், துணை முதல்வராக தேஜஸ்வி பதவி ஏற்றனர்.

“பா.ஜ.க சமூக வலைத்தளங்களில் டி.பியை (முகப்புப் படம்) மாற்றுமாறு கேட்டது. நாங்கள் அவர்களது அரசையே மாற்றி விட்டோம்” என்று தனது பாணியில் லாலு பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க ஐக்கிய ஜனதா தளத்தை அழிக்க முயற்சித்த காரணத்தால் கூட்டணியை விட்டு வெளியேறி இருப்பதாகக் கூறும் நிதிஷ் குமார் இதற்கு முன்பு ஒரே இரவில் இராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணியில் இருந்து மாறி பா.ஜ.கவுடன் அணி சேர்ந்தவர். நிதிஷ் குமாரின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாக இருப்பினும், அவரது கடந்த காலத் தவறுகளை மறந்து அவருக்கு ஆதரவளித்துள்ள தேஜஸ்வியின் முடிவு வரவேற்கத்தக்கது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள். நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைக் காக்கும் வகையில் காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சியாக மீண்டும் மகா கூட்டணி அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துக்குப் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி “நன்றி அண்ணா! இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். அவர்களுக்கு இன்று முதல் பின்னடைவு தொடங்குகிறது” என்று பதிலளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி “சமூக நீதி பற்றிய எங்கள் பார்வைக்குத் தமிழ்நாடே உந்து சக்தி. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் எங்களுக்கெல்லாம் முன்னோடி தலைவர்கள். சமூக நீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

பழைய கசப்புணர்வுகளைப் புறந்தள்ளி பா.ஜ.கவிற்கு எதிராக வலுவான அணியை கட்டமைத்துப் பெரும் வெற்றியை ஈட்டிய தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை முன்மாதிரியாக கொண்டுள்ள தேஜஸ்வியின் இந்த அணுகுமுறை எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவரது கூட்டணிக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தரும் என்பதால் இந்திய ஒன்றியத்தில் பா.ஜ.க அல்லாத அரசு அமைவதற்கான தொடக்கமாகவே பீகாரில் நிகழ்ந்துள்ள இந்த ஆட்சி மாற்றம் அமைகிறது.

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It