பரபரப்பான இன்றைய உலகில், எந்த ஒரு செய்தியும் மறுநாளே பழையதாகி விடுகிறது. கடந்த 9 ஆம் தேதி, 20க்கு 20 கிரிக்கெட் போட்டி பார்ப்பது போல அனைவரும் விறுவிறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த வேலூர் தேர்தல் முடிவு இன்று  ஒரு சாதாரணச்  செய்தி ஆகி விட்டது. இருப்பினும், அந்தத் தேர்தல் முடிவு சில செய்திகளை இன்னமும் நமக்குச்  சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது. 
 
மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருந்தால் அதனைப் பெரிதாகப் பலரும் பேசியிருப்பார்கள். ஆனால் திமுக பெற்றுள்ள வெற்றியைக் கூடச் சிலர் ஒரு குறையுடன்தான் பார்க்கின்றனர்.  வாக்குகள் வித்தியாசம் குறைந்துபோய் விட்டது என்பதுதான் அவர்கள் சுட்டிக்காட்டும் குறை. 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு ஒப்பிட்டு, இந்த முறை வாக்குகள் குறைவு என்று சொல்லவில்லை. அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த முறை மூன்று மடங்கு கூடுதலான வாக்குகளை அங்கு திமுக பெற்றுள்ளது. கடந்த மே மாதம் மற்ற தொகுதிகளில் நடந்த தேர்தலோடு ஒப்பிட்டு, அங்கெல்லாம் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற  திமுக இப்போது ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்கின்றனர். 
 
மே மாதத்திற்கும் இன்றைய நிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா? அப்போது மத்தியில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்றே தெரியாது. இன்று மாநிலத்த்திலும், மத்தியிலும் ஆட்சியில் உள்ள கட்சிகள் ஒருபுறமும், எதிர்க்கட்சி இன்னொரு புறமுமாகப்  போட்டியிட்டன. எப்போதும் இடைத்தேர்தல் என்பது ஆளும்கட்சிகளுக்கே வாய்ப்பாக இருக்கும் என்பது வெளிப்படையான உண்மை. அப்படிப்பட்ட சூழலில், திமுக வேலூரில் பெற்றுள்ள வெற்றி மகத்தானதுதான். 
 
என்றாலும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை மறுக்கத்  தேவையில்லை. மக்களோடு மக்களாய் இணைந்து நிற்கும் திமுகவிற்கும், செயல்பாடே இல்லாமல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் அதிமுகவிற்கும் இடையில் இன்னும் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசம் இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான், அதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் திமுக பணியாற்றட்டும்.
 
வேலூர் வெற்றியைக் கொண்டாடுவோம் - மகிழ்வோடும், எச்சரிக்கையோடும்! . 
Pin It