jayalalithaa rosaiah

ஒருவழியாக ஜனநாயக திருவிழா நடந்து முடிந்து விட்டது. தேர்தல் ஆணையம் கூப்பாடு போட்டு தள்ளியும் இன்னும் 75% ஓட்டுக்கு கூட வக்கில்லாமல்தான் தேர்தல் நடந்திருக்கிறது. அதற்கு காரணம் வாக்காளர் பட்டியலில் தவறுகள் (சிலருக்கு இரண்டு வாக்குகள்), அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கையின்மை, வலுவற்ற நோட்டா சட்டம் என்று எத்தனையோ காரணங்கள் சொல்லலாம். சரி பதிவான வாக்குகளில் 41% மட்டும் பெற்ற ஜெயலலிதாவின் “எனது தலைமையிலான” அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது உண்மையில் தகுதி பெற்ற வாக்காளர்களில் 30%. ஆக கிட்டத்தட்ட 70% மக்களின் ஆதரவைப் பெறாத கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. இதுதான் நம் ஜனநாயகம்.

சரி இப்போது தேர்தல் நிலவரங்களைப் பார்ப்போம்.

அதிமுக ஜெயித்தது எப்படி?

எதிர்க்கட்சிகள் சொல்லுவதுபோல பணத்தால் மட்டுமோ அல்லது இலவசங்களுக்கு மயங்கியோ அதிமுகவுக்கு மக்கள் ஓட்டளிக்கவில்லை. ஏனெனில் என்னதான் பணம் கொடுத்தாலும், மக்கள் பணத்துக்கு உண்மையாக ஓட்டளிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. பிறகு எந்த அடிப்படையில் அதிமுக ஜெயித்தது?

20 வருட தமிழக தேர்தல்களை குறைந்தபட்சம் நோக்கியவர்களுக்கு இந்தத் தேர்தலின் முடிவில் எந்த ஒரு ஆச்சர்யமும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. ஏனென்றால் இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எந்த அலையும் இல்லை. இதற்கு முன்பு கடந்த காலத் தேர்தல்களை ஆராய்வோம்.

1996: ஆடம்பர வளர்ப்பு மகன் திருமணம், மன்னார்குடி மாபியா அடித்த கொள்ளைகளை வெளிக்காட்டி, ரஜினி ஆதரவு அலையில் திமுக-தமாக கூட்டணி வெற்றி பெற்றது.

2001: திமுக ஊழல்கள், மெகா கூட்டணி மூலம் ஆட்சி அமைத்தது அதிமுக. இந்தமுறை தமாக, அதிமுக பக்கம் இருந்தது.

2006: விலைவாசி உயர்வு, அரசு ஊழியர்கள் மீது ஒடுக்குமுறை, மதமாற்ற தடைச் சட்டம், கோவிலில் பலி கொடுக்கத் தடை என எல்லா வகையிலும் அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதைப் பயன்படுத்தி திமுக வென்றது.

2011: இந்தமுறை 2ஜி ஊழல், மின்தடை போன்ற காரணங்களால் அதிருப்தியில் இருந்த மக்கள் அதிமுகவைத் தேர்ந்தெடுத்தனர். திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கொடுக்கவில்லை.

இப்போது சொல்லுங்கள்... இந்த முறை அதிமுக மீது என்ன அதிருப்தி? தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றி தமிழகத்தை கடனில் தள்ளிவிட்டார். டாஸ்மாக்கைத் திறந்து குடிமக்களை பார்த்துக் கொண்டார்(போலிஸ் பாதுகாப்போடு). அம்மா ஆடு, அம்மா மாடு, அம்மா உணவகம், அம்மா சிமென்ட், அம்மா உப்பு என எல்லாவற்றையும் மலிவு விலையில் கொடுத்தார். ஆக சாமானிய மக்கள் பால் விலை, பேருந்து கட்டண உயர்வுகளை மறக்கடிக்க அம்மா திட்டங்களை அறிவித்துத் தள்ளிவிட்டார்.

இந்த ஆட்சியில் பிரச்சினையே இல்லையா என்கிறீர்களா? ஆம் இருந்தது. ஆனால் அது விளைவு தரும் வகையில் இல்லை. பிரச்சினைகளின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை. உணர விடாமல் சாராயமும், இலவசங்களும் பார்த்துக் கொண்டன.

ஆக அதிமுகவை மக்கள் தோற்கடிக்க எந்த வலுவான காரணங்களும் இல்லை. எனவே அதிமுக சொல்வதுபோல் அம்மாவின் பொன்னான ஆட்சியோ, இல்லை திமுக சொல்வதுபோல் பணப் பட்டுவாடாவோ அல்லது சமூக வலைதளங்களில் புலம்புவதுபோல் கடைசி நேர இலவசங்களோ அதிமுக வெற்றிக்குக் காரணம் இல்லை. கடந்த இருபது வருடங்களில் எந்தவித சலனமும் இல்லாமல் நடந்த தேர்தல் என்ற ஒரே காரணம் போதும் அதிமுக வெல்ல. அதுமட்டுமில்லாமல் ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளில் அதிமுக வெல்லும் என்ற செய்தி பரவியதால் ஒருபுறம் “ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டும்” நம் மக்களின் மனப்போக்கும் அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது.

திமுக தோற்றது ஏன்?

உண்மையில் திமுக தோல்விக்கு மக்கள் நலக் கூட்டணியோ, வைகோவோ, விஜயகாந்தோ காரணமல்ல. மேலே சொன்ன காரணங்களோடு அவர்கள் தோல்விக்கு அவர்களின் பொறுப்பின்மையே காரணம். திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக செயல்படவில்லை (சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்). கருணாநிதி கூட்டத்துக்கே போவதில்லை. ஸ்டாலின் எப்போதும் வெளிநடப்பு செய்வதில் குறியாக இருந்தார். மேலும் இந்த ஆட்சியில் குறைகள் இருந்தபோதும் அதை சரிவர மக்களிடம் எடுத்துச் செல்லாததே திமுகவின் தோல்விக்கு முழுமுதற் காரணம்.

1996 தேர்தலை எடுத்துக் கொள்ளுங்கள்... வளர்ப்பு மகன் திருமணம், 66 கோடி சொத்து என்று அதிமுகவை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் சன் டிவி போன்ற ஊடகங்களுக்கு பங்குண்டு. 2001ல் ஜெயலலிதாவின் பாசிசப் போக்கினை, அரசு ஊழியர்கள் சந்தித்த அவலங்களை மக்களிடம் கொண்டு சென்றது திமுக. அறிவித்த இலவசங்களும் வெற்றிக்குக் காரணம் என்றாலும் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியை கிட்டத்தட்ட ஒரு வருடம் அம்பலப் படுத்தியதில் திமுக வென்றது.

ஆனால் இந்த முறை என்ன நடந்தது? திமுகவுக்கு சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவே நேரம் போதவில்லை. ஒருபுறம் கனிமொழியைக் காப்பாற்ற போராட்டம், மறுபுறம் KD சகோதரர்களின் மீதான ஏர்செல் மேக்சீஸ் வழக்கு. ஒருபுறம் அழகிரி குடைச்சல், மறுபுறம் ஸ்டாலின் ஏகாதிபத்தியம் என திமுக கடந்த ஐந்து வருடங்களில் கதிகலங்கிப் போய் இருந்தது. திமுக முன்னெடுத்த ஒரே ஆயுதம் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு. ஆனால் அதிலும் திமுகவுக்கு சாதகத்தை விட பாதகமே அதிகமானது. ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனதில் உண்டான அனுதாபம் ஒருபுறம், 66 கோடியை ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடியோடு ஒப்பிட்டது மறுபுறம் என்று ஒரு பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்தது அதிமுக.

மறுபுறம் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் சுத்தமாக எடுபடவில்லை. நெட்டிசன்களுக்கு பலியானதுதான் மிச்சம். மேலும் “உங்கள் வாழ்வாதாரம் பாதித்தால் கோபப்படுங்கள்” என்று ஸ்டாலின் சொல்லும்போது மீத்தேன் திட்டத்துக்கு ஸ்டாலின் அனுமதி வழங்கிய படத்தைப் போட்டு, அவர் கோடிகளை செலவழித்து எடுத்த நமக்கு நாமே விளம்பரப்படத்தை நூறு ரூபாய்க்கு நெட் கார்டு போட்டு முடித்து வைத்தனர் நெட்டிசன்ஸ். ஸ்டாலின் முன்னின்று நடத்திய தேர்தல் மீம்ஸ் யுகத்தில் நடக்கிறது என்பதை தாமதமாகப் புரிந்துகொண்ட திமுக “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்று 18 கோடி செலவில் மீம்ஸ் போட்டாலும், அதற்கு பதில் மீம்ஸ் போட அதிமுக சளைக்கவில்லை. இப்படி இந்தத் தேர்தலில் திமுக வைத்த ஒவ்வொரு அடியும் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாக ஆனதுதான் திமுகவின் தோல்விக்கு காரணம்.

2006இல் திமுகவின் தேர்தல் கதாநாயகன் எனப்பட்ட தேர்தல் அறிக்கையும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திமுகவின் மதுவிலக்கு கோஷத்தை மக்கள் நம்பவில்லை (அது திமுகவுக்கு சாதகமா பாதகமா என்பது வேறு விஷயம்). கல்விக்கடன் தள்ளுபடி என்று அறிவித்தாலும் மாணவர்கள் மத்தியில் இருந்த திமுக வெறுப்பு அதன் வீச்சைக் குறைத்து விட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்தாலும் அது அந்த அளவுக்கு எடுபடவில்லை.

மேலும் ஒவ்வொரு தேர்தலையும் மெகா கூட்டணியோடு சந்திக்கும் திமுக, இந்தமுறை அதிலும் சறுக்கியது. கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளை வன்னியர் வாக்குகளுக்கு பயந்து ஸ்டாலின் ஒதுக்கினார். சரி வன்னியர் வாக்குகளுக்கு பாமகவை அணுகலாம் என்று யோசித்தால் அவர்கள் தனியாக “அன்புமணியாகிய நான்” என்று ஆரம்பித்து விட்டார்கள். வேல்முருகனையும் கடைசி வரை அதிமுக “வைத்து செய்த”தில் அவரையும் பிடிக்க முடியவில்லை. வைகோவை வசப்படுத்த முடியவில்லை. கடைசியில் கார்த்திக்கை கூடப் பிடிக்க முடியாமல் கூட்டணி விஷயத்தில் சோடை போனது திமுக. மேலும் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்ததும் அதற்குப் பெரிய பின்னடைவானது. ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணம் காட்டி பிரிந்தவர்கள், “கண்கள் பனித்து இதயம் இனித்த”தை பெரும்பாலான திமுகவினரே ரசிக்கவில்லை. மேலும் தனியாக நின்றால் தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு வாங்க முடியாத காங்கிரஸுக்கு நாற்பத்தொரு இடம் கொடுத்து ஒரு பத்து தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இதையெல்லாம் விட முக்கியமாக விஜயகாந்துக்காக காத்திருந்ததை தோல்வியின் தொடக்கமாகக் கருதலாம். மேலே சொன்ன ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய தருணங்களை “பழம் நழுவி பாலில் விழ” காத்திருந்ததால் வீணடித்ததோடு, தேமுதிக சேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை திமுக தொண்டர்களுக்கு மனதளவில் உருவாக்கிவிட்டது. கடைசியில் “பேரம்” படியாமல் விஜயகாந்த் வெளியேறியதும் தொண்டர்கள் தோல்விக்குத் தயாராகி விட்டனர். ஆக திமுகவின் தோல்விகளுக்கு வெளியே காரணம் தேடத் தேவை இல்லை.

இவ்வளவையும் மீறி திமுக பெற்ற ஓட்டுகளும் வென்ற தொகுதிகளும், திமுகவின் மீதான அபிமானத்திலோ, அவர்களின் சிறப்பான செயல்பாடுகளாலோ கிடைக்கவில்லை. மாறாக அதிருஷ்டவசமாக (தமிழக மக்களுக்கு அல்ல) இயற்கையாக வந்த வெள்ளமும், அதிமுகவினர் மாய்ந்து மாய்ந்து ஒட்டிய ஸ்டிக்கர்களும் திமுகவை காப்பாற்றி கட்டுமரத்தை கரை சேர்த்தது. ஒருவகையில் இத்தனை தொகுதிகள் வென்றது திமுகவின் வெற்றியாகக் கருதினாலும், அது திமுக அதிமுகவுக்கு மாற்று இல்லை என்ற நிலையை உருவாக்கியதால், அது திமுக - அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே கருத முடியும்.

அன்புமணி வெற்றியா தோல்வியா?

'இந்த முறை திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை, அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் கூட்டணிக்கு வரட்டும்' என்று கார்ப்பரேட் உதவியுடன் களமிறங்கினாலும் உண்மையில் அன்புமணிக்கு முதல்வர் பதவி இலக்கல்ல. 2006 மற்றும் 2009 இல் விஜயகாந்த் செய்ததுபோல் தனியாக நின்று தனது வாக்கு வங்கியைக் காட்டி தனது பேரம் பேசும் திறனை வளர்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அதில் தனியாக நின்று 5.3 சதவீத ஓட்டு வாங்கி ஓரளவு ஜெயித்தாலும் அவர் எதிர்பார்த்த 8 முதல் 10 சதவீத ஓட்டு வாங்காதது அவருக்குத் தோல்வியே. மேலும் மோடியைப் பின்பற்றி கார்ப்பரேட் விளம்பர நிறுவனங்கள் மூலம் செய்த பிரச்சாரம், படித்தவர்கள் குறைவாக உள்ள வட மாவட்டங்களில் வாக்கு வங்கி வைத்திருந்து பேஸ்புக் பிரசாரங்களை நம்பியது, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் கட்சியில் மூத்தவர்களை கழற்றிவிட்டது, மேலும் மேடையில் கூட தன்னை மட்டுமே முன்னிறுத்தி(மோடியைப் பின்பற்றி) பிரச்சாரங்களை செய்தது, என வன்னியர் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் செல்வாக்கை இழந்தது.

பாமகவின் காதல் எதிர்ப்பு கோஷங்களை, ஜீன்ஸ் – கூலிங் கிளாஸ் போட்டால் பெண்களை மயக்கலாம் போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களை, வன்னியர் பெண்களே பெரும்பாலும் ரசிக்கவில்லை. பென்னகரத்தில் அன்புமணியின் தோல்வி எதிர்பார்த்ததுதான். என்னதான் முதல்வர் வேட்பாளராக நின்றாலும். முதல்வராக வாய்ப்பு இல்லை என்பது தெரிந்ததும், ஏற்கனவே எம்பியாக இருப்பதால், ஜெயித்தாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வரும் என்பதை மக்கள் உணர்ந்திருந்ததால் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால் பல இடங்களில் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தது அவர்களுக்கு வெற்றியே. ஆனால் “வன்னியர் ஓட்டு அன்னியருக்கல்ல” என்பதுபோன்ற ஜாதி கோஷங்களோ, தலித் அல்லாதோர் கூட்டமைப்பு போன்ற பிரித்தாளும் சூழ்ச்சியோ வேலை செய்யவில்லை என்பதோடு ஜாதிய சங்கங்களாலேயே பாமக தனித்துவிடப் பட்டது அவர்களின் தோல்வியே. மேலும் தேர்தலுக்கு முன்பே இரண்டு வேட்பாளர்கள் அதிமுகவுக்கு தாவிய கொடுமையும் கண்டது மாம்பழம்.

நாம் தமிழர்:

இந்தத் தேர்தலில் எல்லோருக்கும் முன்னால் வாக்காளர்களை அறிவித்து, களம் கண்டது சீமானின் நாம் தமிழர் கட்சி. இந்தத் தேர்தலை முயற்சி, பயிற்சி என்றெல்லாம் அயர்ச்சியின்றி சொன்னாலும் சீமானின் நோக்கமும் கிட்டத்தட்ட பாமகவின் நோக்கம்தான். தமிழ் இனவெறியை உறவுகளுக்கு ஊட்டி வளர்த்தாலும், அது பெரிய அளவுக்கு எடுபடவில்லை என்பதாக பொதுவான கருத்து நிலவினாலும் உண்மையில் நாம் தமிழர் வாங்கிய 1.1% ஓட்டு அவர்களுக்கு பெரிய வெற்றியே. ஏனென்றால் அவர்கள் தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு வாங்குவது பெரிய விஷயம் என்றே அரசியல் நோக்கர்களால் கருதப்பட்டது. ஆனால் தொகுதிக்கு இரண்டாயிரம் என்ற விகிதத்தில் அவர்கள் ஓட்டு வாங்கியிருப்பதை வெறும் இனவெறிக்கு கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. சீமானின் “விவசாயம் அரசுடைமை, ஆடு மேய்ப்பது அரசு வேலை” என்பது போன்ற அசாத்திய வாக்குறுதிகளாலும், கல்வி, மருத்துவம் இலவசம் போன்ற நியாயமான வாக்குறுதிகளாலும் கவரப்பட்டு ஆதரவளித்தவர்களே அதிகம். எனவே நாம் தமிழர் மெழுகுவர்த்தி உருகினாலும் பிரகாசமாக எரிந்திருக்கிறது என்பதே உண்மை.

பாஜக:

பாஜகவைப் பொருத்தவரை, இந்த தேர்தல் தோல்வியாக கருத முடியாது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தேமுதிகவுக்காக காத்திருந்து 14 சீட்டு கொடுத்து தேர்தலை சந்தித்தார்களோ, அந்த தேமுதிகவை விட அதிக ஓட்டுகள் வாங்கி இருக்கிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை பாஜக தனித்து நின்று (கூட்டணிக் கட்சிகளெல்லாம் பிரபலமில்லாதவை) இத்தனை ஓட்டு வாங்கியதே அவர்களுக்கு வெற்றிதான். மதவாதிகளை மக்கள் புறக்கணித்துவிட்டதாக நடுநிலைமையாளர்கள் கருதினாலும், கோவை போன்ற கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த மாவட்டங்களில் அவர்களை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடம் பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட நான்கு மடங்கு (கம்யூனிஸ்ட் 7000+ பாஜக 33000+) வாக்குகள் வாங்கி இருப்பது உண்மையில் கவலைப்பட வேண்டிய விஷயம். அதற்கு தொகுதிப் பங்கீடு, வலுவற்ற தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் நின்றது என காரணங்கள் சொன்னாலும், ஊழலற்ற ஆட்சியை தருவது போன்ற பிம்பத்தை மோடி அரசு காட்டுவதும் வளர்ச்சி கோஷங்களை முன்வைப்பதும் பல வேட்பாளர்களை கவர்கிறது என்றே கொள்ள முடியும். எவ்வாறாயினும், பாஜக வாங்கிய வோட்டுக்கள் கம்யூனிஸ்ட்கள், ஜனநாயகவாதிகளின் செயல்பாடின்மையைக் காட்டுகிறது. மேலும் தமிழ்நாட்டில் பாஜகவின் வேலையை பாஜகவை விட சிறப்பாக செய்ய ஜெயலலிதா இருப்பதால் பாஜகவின் வோட்டுகளெல்லாம் இலைக்கே போய் தாமரை கருகி விடுகிறது. ஆனால் இந்த முறை வாங்கிய 2.8% தமிழகத்தில் பாஜகவின் சுயேட்சையான செயல்பாடுகளின் தொடக்கப் புள்ளியாகத்தான் கருத முடியும்.

மக்கள் நலக் கூட்டணி என்ற கேப்டன் அணி என்ற தேமுதிக – மநகூ – தமாக:

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. மெகா கூட்டணி, மாற்று சக்தி, கூட்டணி ஆட்சி என்ற எல்லா கோஷங்களையும் மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் மக்கள் பணத்துக்கும் இலவசங்களுக்கும் விலைபோய் விட்டதாகக் கருதினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இல்லை. முதலில் ஆறு கட்சிகளின் வரலாறைப் பார்ப்போம். சிபிஐ, சிபிஎம் இரண்டும் “அம்மாவை பிரதமராக்குவோம்” என்ற கோஷத்துடன் 2014 தேர்தலை சந்திக்க ஆர்வத்துடன் இருந்தபோதும் ஜெயலலிதாவால் கழற்றி விடப்பட்டவர்கள். ஆனாலும் 2011 வைகோபோல் மனம் தளராமல் தனியாக 22 தொகுதிகளில் நின்று தோற்றார்கள்.

அடுத்து விடுதலை சிறுத்தைகள் திமுகவால் வன்னியர் ஓட்டுகளைக் கவர கழற்றிவிடப்பட்டது. வைகோ திமுகவுக்கு நெருக்கமாக இருந்து தனியாக வந்தவர். அவர் சேராத கோபத்தில் மதிமுகவை திமுக உடைக்க அது பெரிய பகையானது. விஜயகாந்த் பேரம் படியாமல் வந்தவர், வாசன் “சின்ன” பிரச்சினையில் வந்தவர். ஆக முதல் கோணல் மூன்றாவது அணி அமைந்ததில்லை, அமைக்கப்பட்டது. அனைவரும் எதோ ஒரு வகையில் வெளியேற்றப்பட்டவர்கள்.

தொடக்கத்தில் இந்த கூட்டணியின் மீது நம்பிக்கை இருந்தது, இந்த கூட்டணிக்கு தொடக்கம் செய்தது திருமாவளவன். இருப்பினும் வைகோ வந்ததும் அவரை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தனர். தலைமைப் பண்பு சிறிதுகூட அமையப்பெறாத வைகோவை ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது பெரும் தவறு என்பதை அவர் விரைவில் நிரூபித்தார். தொடக்கம் முதலே வைகோவின் நடவடிக்கைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. உணர்ச்சிவசப்படுவது, பத்திரிக்கையாளர்களிடம் “சின்னக் கவுண்டராக” மாறுவது என்று, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு சிறிது கூட நியாயம் செய்யவில்லை. அதுபோக கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியான வைகோ வந்ததும் மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவாக அமைந்தது என்பதே உண்மை. இருப்பினும் மக்கள் நலக்கூட்டணியின் நடவடிக்கைகள் நம்பிக்கை தரக்கூடியதாகத் தான் இருந்தது. மக்கள் நலக்கூட்டணி மீதான நம்பிக்கை வளர்ந்தாலும் ஒரு பெரிய பிரச்சினையை அது சந்தித்தது.

யார் முதல்வர் வேட்பாளர்?

முதல்வர் வேட்பாளராக நிறுத்த தகுதி உள்ள ஆள் இல்லை என்று மக்கள் கருதவில்லை, மக்கள் நலக்கூட்டணி தலைவர்களே கருதினார்கள் என்பதுதான் அந்த பிரச்சினை. தலித் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சு எழுந்தபோது வைகோ “ஜனநாயகத்தில் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்க கூடாது” என்று சமாளித்தார் ஆனால் இதே வைகோதான் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமராக்க முதல் ஆளாக துண்டு போட்டு கூட்டணியில் சேர்ந்தவர். ஆக வைகோவின் “ஜனநாயகத்துக்குப்” பின்னால் இருந்த அரசியல் என்னதான் அப்போதிருந்த கூட்டணியில் வலுவானவராக, தமிழகம் முழுவதும் கிளைகள் கொண்ட அமைப்பாக விசிக இருந்தாலும் தலித்தை முதல்வராக ஏற்க வைகோ மட்டுமல்ல பிற கட்சியினரும் தயாராக இல்லை என்ற யதார்த்தம்தான். வறட்டுத்தனமாக தலித் முதல்வரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற வாத்தின் மூலம் அவரை ஓரம் கட்டினார்கள். அது புரிந்ததால்தான் திருமாவும் பட்டும் படாமல் பேசிவிட்டு ஒதுங்கிவிட்டார். ஆனால் இவர்கள் அனைவரும் கருணாநிதி முதல்வரானபோது அவர் சமூக பின்னணியையும், அவரை ஏற்றுக்கொண்டவர்கள் இதே தமிழக மக்கள்தான் என்பதையும் வசதியாக மறந்துவிட்டனர். சரி அவரை விடுத்தாலும் நல்லக்கண்ணு, சங்கரய்யா போன்றவர்கள் சிபிஐ தலைவர்கள் கண்ணுக்குக் கூட தெரியவில்லை. எப்படியும் முதல்வர் வேட்பாளராக நல்லக்கண்ணுவை அறிவித்தால் மக்கள் நலக்கூட்டணியின் நம்பிக்கை கூடும் என்ற வாதத்தை அவர்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் திமுகவுடனும் பாஜகவுடனும் மாற்றி மாற்றி பேரம் பேசிய “கிங்” விஜயகாந்தை ம.ந.கூவுக்கு கொண்டு வர வைகோ “கிங் மேக்கர்” ஆக ஆனார். இங்குதான் ம.ந.கூவை மண்ணில் புதைத்த சம்பவம் நடந்தது. மாற்று அணியாக மக்கள் நினைத்த கூட்டணியை மற்றுமொரு கூட்டணியாக மாற்றிய பெருமை வைகோவுக்கே சேரும்.

மக்கள் விஜயகாந்த் நடத்திய பேரங்களை கவனித்துக்கொண்டு இருந்தார்கள். விஜயகாந்த் வெளியே இல்லை என்று சொன்னாலும், நடந்தவை அனைத்தும் மக்கள் அறிந்தே இருந்தார்கள். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்தும், அதனை சரி வர பயன்படுத்தாதது பத்திரிக்கைகளிடம் அநாகரீகமாக நடந்தது, நிதானமில்லாத மேடைப்பேச்சு என்று அனைத்து வகையிலும் விஜயகாந்த் மீது மக்கள் வெறுப்பில் இருந்தனர். எந்த விஜயகாந்தை பத்து வருடங்கள் முன்பு திமுக அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நினைத்தார்களோ அதே விஜயகாந்த் தன் பொறுப்பற்ற நடவடிக்கைகளாலும் அரசியல் பேரங்களாலும் மக்கள் செல்வாக்கை முற்றிலும் இழந்திருந்தார். அப்பேற்பட்ட விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கூட்டணியில் இணைத்ததும், முதல்வர் வேட்பாளர் ஜனநாயக விரோதம் என்று கூறிய வாயால் கேப்டன்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று கூறியதும் மக்களின் மாற்று சக்தி மீதான நம்பிக்கை மண்ணைக் கவ்வியது. அதிலும் பஞ்ச பாண்டவர்கள் அணி என்று மேடையில் வைகோவும் முத்தரசனும் அடித்த கூத்துக்கள் நெட்டிசன்களின் மீம்சுக்கு விருந்தானது. தேமுதிக வராத கடுப்பில் திமுக, தேமுதிகவை உடைக்க மக்கள் தேமுதிக உதயமானது. அப்போது விஜயகாந்தையும், பிரேமலதாவையும் அண்ணன் சுதீசையும் விட கோபப்பட்ட வைகோ, கருணாநிதியை ஆதித் தொழில் செய்யப் போக சொன்னார். மேலும் அவரை ஜாதி வன்மத்துடன் திட்டினார். பெரியாரின் பேரனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் வைகோவின் இந்தப் பேச்சு மாற்றத்தை விரும்பியவர்களை மேலும் எரிச்சலடைய செய்தது.

இந்த நிலையில்தான் அதிமுகவுடன் பேரம் படியாமலும், இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற அதிமுகவின் நிர்பந்தத்தாலும் வெளியேறிய வாசனுக்கு திமுக கதவைத் தட்ட தான் ஆசை, ஆனால் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதால் திமுகவும் கதவை சாத்தி விட்டது. எனவே வேறு வழி இல்லாமல் கேப்டன் அணியாக மாறிய ம.ந.கூவை தேடி வந்தார். அவர்களும் அரவணைத்து இருபத்தாறு சீட்டு கொடுத்து தக்க வைத்துக் கொண்டனர்.

இவ்வாறு தனது பொறுப்பற்ற பேச்சு, ஆளுங்கட்சியை விட்டு திமுக மீது உள்ள தனது தனிப்பட்ட வஞ்சத்தை திட்டித் தீர்த்தது, பழைய பாணி மேடைப்பேச்சு, அதைக்கேட்டு தூங்கிய தலைவர்களை படம் பிடித்து போட்ட பத்திரிக்கையாளர்களை மிரட்டியது, கருத்துக்கணிப்பு சாதகமாக வெளியிடவில்லை என்று பத்திரிக்கைகளை சாடியது என தனது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைகோ எந்தவித நியாயமும் செய்யவில்லை. போதாக்குறைக்கு கோவில்பட்டியில் நிற்பதாக அறிவித்து பின்பு பத்துபேர் செய்த போராட்டத்துக்காக சாதிக்கலவரத்தை திமுக (அதற்கும் திமுகதான் கிடைத்தது) திட்டமிட்டிருப்பதாக கூறி தேர்தலில் நிற்கப் போவதில்லை என அறிவித்தார். தோல்வி பயத்தில்தான் வைகோ நிற்கவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவி அது ம.ந.கூவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.

ஆக திமுக குற்றம் சாட்டுவதுபோல வைகோ அதிமுகவுக்கு சாதகமாக மக்கள் நலக்கூட்டணியை நடத்தவில்லை, மாறாக மாற்றத்துக்கு கூட்டணி அமைத்த கம்யூனிஸ்ட்களையும் விசிகவையும், விஜயகாந்த் - வாசன் என கூட்டணி சேரவைத்து, மூன்றாவது அனிமேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சிதைத்து ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை திமுகவுக்கு திருப்பிவிட்டு திமுகவை பலமான எதிர்கட்சியாக மாற்றிய பெருமை வைகோவையே சாரும். எனவே திமுகவின் “பி” டீம் தான் வைகோ என்பதுதான் இந்த தேர்தல் முடிவில் நமக்கு தெரியும் உண்மை.

என்ன செய்யலாம் தோழர்களே?

இந்த தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம் கம்யூனிஸ்ட்களே இல்லாத முதல் சட்டசபையை தமிழகம் காண்கிறது. இந்த நிலைமையில் கடந்த தேர்தலை திரும்பிப் பார்த்து தோழர்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். இந்த தேர்தலில் சிபிஐ பெற்ற ஓட்டு சதவீதம் 0.8. சிபிஎம் 0.7. இரண்டும் சேர்த்தால் 1,5 வெறும் 50 தொகுதிகளில். ஆனால் நீங்கள் கிங் ஆக ஏற்றுக்கொண்ட தேமுதிக 101 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 2.4. ஐம்பது தொகுதிகளில் என்று கணக்கிட்டால் வெறும் 1.2. ஆக உங்களைவிட குறைவான வோட்டு சதவீதம் உள்ள ஒருவரை நீங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளீர்கள். இதுபோன்ற தவறுகளை சரிசெய்ய வேண்டும். தேர்தலில் தோற்றதால் கவலை இல்லை தோழர்களே! இனிதான் நாம் சுதந்திரமாக செயல்பட களம் இருக்கிறது.

தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுங்கள். விஜயகாந்தும் வாசனும் போராட்டம் என்றாலே ஓடிவிடுவார்கள். அவர்களுக்கு தேர்தல் மட்டுமே போராட்டம். தொடர்ந்து சாதி ஒழிப்புக்காக போராடுங்கள். வைகோவும் தேவர் பெருமைகளை சொல்லியபடி போய் விடுவார். பின்பு திருமாவளவனுடன் கைகோர்த்து உண்மையான மக்கள் நலக்கூட்டணியை உருவாக்குங்கள். இந்த தேர்தல் திருமாவளவனுக்குள் இருந்த சிறந்த தலைவரை வெளிக்கொணர்ந்திருக்கிறது. அவரை நெறிப்படுத்துங்கள். இது ஜனநாயகவாதிகள் ஒன்று சேர வேண்டிய நேரம்.

மதவெறியர்களும் இன வெறியர்களும், ஜாதி ஆதிக்க வெறியர்களும் பெற்றிருக்கும் வோட்டுக்கள் நமது கவனக் குறைவால் தவறியவை. அவர்களை முறியடிக்க இடதுசாரிகள் ஒன்றுசேர வேண்டும். அகில இந்திய அளவில் இடதுசாரி ஒற்றுமையை வலியுறுத்தி நடக்கும் இடதுசாரி கூட்டமைப்பை தமிழகத்துக்குள் நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மக்களை குறை கூறுவதை நிறுத்துங்கள், மக்களுக்காக இயங்குங்கள், மக்கள் பிரச்சினைகளில் உடனிருங்கள், மக்கள் உங்களுடன் இருப்பார்கள். ஆம் தேர்தலில் தோற்றுவிட்டோம் தோழர்களே, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை... பெறுவதற்கு ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது.

- சத்யா

Pin It