இந்திய ஒன்றியத்தில் ஒரு புரட்சி வரப் போகிறது. என்ன அதிர்கிறீர்களா? ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்படுகிற ஒரு விரல் புரட்சிதான் அது. பள்ளிகளில் தேர்வு நடைபெற்று முடிந்து, இடம் காலியானவுடன் நடைபெறப் போகிறது. அதற்கான ஆரம்ப கட்ட ஆரவாரங்கள் துவங்கி விட்டன.

AgapPuram 7"நேற்றிருந்தார் இன்றில்லை எனும் பெருமை மிகு இவ்வுலகு" என்பது உயிரிகளுக்குச் சொல்லப்பட்டதோ இல்லையோ... நிச்சயம் மாறி மாறி அமைக்கப்படுகிற கூட்டணிகளுக்கானது. "எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?" என்ற தமிழ்ப் பழமொழி யாருக்குச் சொல்லப்பட்டதோ இல்லையோ... நிச்சயம் இவர்களுக்குச் சொல்லப்பட்டதுதான். யார் யாரோடு போவார்? யார் யாரோடு சேருவார்? யார் மனசுல யாரு? என்றெல்லாம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் செய்தி ஊடகங்களுக்கான அமோக விளைச்சல்களின் அறுவடைக் காலம் இது. அவர்களும் இதற்குச் சற்றும் சளைத்தவர்களில்லை. தினம் ஒரு அவதாரமெடுக்கிறார்கள். செய்தி ஊடகங்களுத் தீனி போடுகின்றார்கள். இவர்களும் உடைப்புச் செய்தியாக அல்லது தகர்ப்புச் செய்தியாக... அதாங்க. பிரேக்கிங் நியூஸாக... முக்கியச் செய்தியாக... பரபரப்புச் செய்தியாக சின்னத்திரையை நிறைக்கிறார்கள். என்னதான் முக்கியச் செய்தியாக இருந்தாலும், பரபரப்புச் செய்தியாக இருந்தாலும், தலைபோகிற விஷயங்கள் என்றாலும்... விளம்பர இடைவேளைகள் விட மட்டும் மறப்பதில்லை இவர்கள். விளம்பரங்களின் மூலமாக வருமானங்களில் கொழிக்கிறார்கள்.

எமது பள்ளிக்காலங்களில், ஆரம்ப அரிச்சுவடிப் பொழுதுகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட அறநெறிப் பாடல்களில் ஒன்று. "ஒற்றுமை என்றும் பலமாம். ஓதும் செயலே நலமாம்" என்றெல்லாம் மனத்தில் அழுத்தமாகப் பதியும்படிச் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று அந்த "ஒற்றுமை என்றும் பலமாம்" என்கிற பதமே கேள்விக்குள்ளாகிப் போனது. ஒற்றுமை என்றும் பலமானதுதான். அதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால்... பிரச்சனை எங்கிருக்கிறது என்றால்?... என்ன ஒற்றுமை? எந்த ஒற்றுமை? யாருக்கான ஒற்றுமை? யார் நலன் நோக்கிய ஒற்றுமை? என்பதில்தான் இருக்கிறது.

நமது அன்பிற்குரிய மக்கள் விடுதலைச் சிந்தனையாளர்கள், மக்கள் நலச் செயல்பாட்டாளர்கள் இன்னும் பித்துக்குளிகளாகவே இருக்கிறார்கள். கொள்கைகளின் அடிப்படையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று இன்னமும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மற்ற சாதாரண குடிகளோ... இவர்களின் இந்தக் கூட்டணி ஒற்றுமையால் நாடு சுபிட்சம் பெற்றுவிடும் என்றோ அல்லது அந்த ஒருவிரல் புரட்சியால் நாடு பொன்னுலகமாகி விடுமென்று நம்புகிறார்களோ இல்லையோ நிச்சயம் ஓட்டுக்கு இரண்டாயிரம், நான்காயிரம் உறுதி என்று நம்புகிறார்கள்.

ஆண்ட அல்லது ஆளத் துடிக்கிற பிழைப்புவாத அரசியற் கட்சிகள், முன்பு மக்களை ஈர்ப்பதற்கு இலவசக் கவர்ச்சி அறிவிப்புகளைச் செய்வார்கள். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு, விலையில்லா மிக்சி, விலையில்லா கிரைண்டர், (கவனம்... இதில் நாம் கல்விக்காகச் செய்கிற விலையில்லா மடிக்கணிணி, விலையில்லா சைக்கிள் போன்றவற்றை இலவசமாக அல்லது விலையில்லா என்பதாகப் பார்க்கவில்லை. அது ஓர் அரசின் கடமை. அடிப்படையில் கல்வியையே இலவசமாகத் தர வேண்டும்தான். ஆனால் இவர்கள் உபகரணங்களை மட்டுமே தருகிறார்கள். அந்த அளவில் இதை நாம் விமர்சிப்பதில்லை.) இன்னபிற ஏராளமான பொருட்களும்... என யாரும் யாருக்கும் சளைத்தவர்களில்லை.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதின் உச்சம். இப்போது ஆளும் அரசாங்கமே, அது மாநிலம், மத்தி எனப் பேதமில்லை. மாநிலம் இரண்டாயிரம், மத்தி ஆறாயிரம் என்று ஊழலை உறுதிப்படுத்துகிறார்கள், நிறுவனப்படுத்துகிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அல்லது அமரத் துடிக்கிற கட்சிகள், ஆளுகிற கட்சியின் இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளை அம்பலப்படுத்துவதும், குற்றஞ்சாட்டுவதும், பதிலுக்கு ஆளுகிற கட்சி, எதிர்க்கட்சிகளைப் பார்த்து “நீங்கள் மட்டும் யோக்கியமா?”, "ஒழுங்கா? நல்லகுடி நாணயமா?" என மாறி மாறி வசை பாடிக் கொள்கிறார்கள், மாறி மாறிக் குரைத்துக் கொள்கிறார்கள். "உங்களுக்கு வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?" என நியாயப்படுத்திக் கொண்டு, "நீ அவனோடு போனாய்", "நீ இவனோடு போனாய்", "மானமில்லை வெட்கமில்லை சூடு சுரணையில்லை" என்று மாற்றி மாற்றி வசை பாடிக் கொள்கிறார்கள். தேர்தல் அரசியல் என்றாலே "இதெல்லாம் சகஜமப்பா" என்று பொது வெளிகளில் கூச்ச நாச்சமற்றுப் பேசுகிறார்கள், நியாயப்படுத்துகிறார்கள், நிலைநிறுத்துகிறார்கள்.

தமிழ் அகராதிகளுக்கெல்லாம் மேலாக, வார்த்தைகளுக்கு வியாக்யானம் தரப்படுகிறது. நட்பு அணி என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கூட்டணிக்கு யாரும் வரலாம், யாரும் போகலாம்; தடைஇல்லை. கொள்கை இல்லை. கோட்பாடு இல்லை. மாறாக, வாக்கு வங்கியை மட்டும் வைத்திருந்தால் போதும். இப்போது தேர்தல் கூட்டணிகளை அமைப்பது என்பது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கியின் ஆதரவு சதவீதம், அதன் மீதான கூட்டல் கழித்தல் என்ற எண்ணிக்கை கணக்காகிவிட்டது. சகலமும் எண்ணிக்கையே தர்மமாக ஆக்கப்பட்டுவிட்டது, நிலைநிறுத்தப்பட்டுவிட்டது.

இங்கு எல்லாவிதமான கூட்டணிகளும் உண்டு. இயற்கையான கூட்டணி, செயற்கையான கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, முற்போக்குக் கூட்டணி, மெகா கூட்டணி, மதவாதக் கூட்டணி, மதச் சார்பற்ற கூட்டணி என எத்தனை எத்தனை கூட்டணிகள் அமைக்கப்பட்டாலும்... இங்கு சாதிச் சார்பற்ற கூட்டணிகள் மட்டும் அமைவதேயில்லை, அமைக்கப்படுவதேயில்லை.

1947. ஆட்சி அதிகாரம் கை மாறிய பிறகு நடந்த முதல் தேர்தலில்... (இங்கு நாம் இந்திய ஒன்றியத்தினுள் விரும்பியோ விரும்பாமலோ அடைக்கப்பட்டிருந்தாலும் நமது பேசுபொருள் என்பது... விரிந்த இந்திய ஒன்றியத் தேர்தல் பற்றியோ... அதில் வலம்வரும் பிழைப்புவாத ஓட்டுக் கட்சிகள் குறித்தோ... நமது அகப்புறம் பேசவில்லை. மாறாக, நாம் வாழ்கிற இந்தத் தமிழ்த் தேசத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுகிறோம். அவலமான கூட்டணிக் கதையினை மட்டுமே பேசுகிறோம்.)

1947 ஆட்சி அதிகாரம் கை மாறிய பிறகு நடந்த முதல் தேர்தல் 1952ல் நடந்தது. அது பலமுனைப் போட்டிகள் கொண்டதாக அமைந்திருந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375. இதில் 367 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 131 தொகுதிகளில் போட்டியிட்ட அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி 62 தொகுதிகளை வென்று பலமான எதிர்க்கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. கிஸான் மஸ்தூர் பிரஜா, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, கிரிஷிகார் லோக், சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இரட்டை எண்ணிக்கையில் வென்றிருந்தன.

இப்போது அரசியற் சூழ்ச்சி வெளிகளில் பெரிதும் பேசப்படுகிற, குதிரை பேரம்... குதிரை பேரம் என்ற அழைக்கப்படுகிறதே... அது எப்போது வந்தது தெரியுமா? அது இந்த நாட்டின் முதல் தேர்தலிலேயே ஆரம்பமாகி விட்டது. அது மட்டுமல்ல. இன்றைய கூட்டணி அரசியற் களங்களில் சொல்லப்படுகிறதே. பிரிபெய்டு அலையன்ஸ், போஸ்ட்பெய்டு அலையன்ஸ், தேர்தலுக்கு முன்பான கூட்டணி, தேர்தலுக்குப் பின்பான கூட்டணி என்று. அப்படியான கூட்டணிக் கதையும் அப்போதுதான் ஆரம்பித்தது. அதையும் பார்ப்போம்.

ஆக, தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பிறகு பார்த்தால்... ஆட்சியமைக்க போதிய மெஜாரிட்டி இல்லை. என்ன செய்யலாம்? அரசியல் சாணக்கியர், மதியூக மந்திரி என்று அழைக்கப்பட்ட குறிப்பாக... குல்லூகப் பட்டர் என்று திமுகவினரால் விமர்சிக்கப்பட்ட ராஜாஜி என்ன செய்தார் தெரியுமா? 'ஆட்சியில் பங்கு' என்ற ஆசையினைக் காட்டிச் சில கட்சிகளை வளைத்துப் போட... கடைசியில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.

ஆக, விடுதலையடைந்ததாகச் சொல்லப்படும் இந்திய ஒன்றியத்தின் முதல் தேர்தலிலேயே 'குதிரை பேரம்' தமிழகத்துக்கு அறிமுகமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக் கதையும் அப்போதுதான் ஆரம்பித்தது. இது குதிரை பேரத்தின் கதையென்றால்... கூட்டணி என்கிற தேர்தலுக்கு முன்பான கூட்டணிக் கதை எப்போது ஆரம்பித்தது? அதை திமுகதான் துவக்கி வைத்தது.

1967 தேர்தல். தொடர்ந்து ஆட்சியில் இருந்தவந்த காங்கிரஸ் அரசை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்று முடிவு செய்தனர் திமுகவினர். என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்று யோசித்த திரு. அண்ணாதுரை அவர்கள், அதுவரை தனித்தே களம் கண்டு கொண்டிருந்த அரசியல் கட்சிகளிடையே புதிய உத்தி ஒன்றினைக் கண்டார், அறிமுகப்படுத்தினார்.

திமுக யாரை குல்லூகப் பட்டர் என்று விமர்சித்ததோ, அந்த ராஜாஜி அவர்களின் சுதந்திராக் கட்சி (அப்போது இரண்டாகப் பிரிந்திருந்தது), ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர், (இன்றைய சீமானின் நாம் தமிழர் அல்ல) மபொசியின் தமிழரசுக் கழகம், முஸ்லீம்லீக், பிரஜா சோஷலிஸ்ட், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளை இனணத்து திமுக தலைமையில், இன்று சொல்கிறார்களே மெகா கூட்டணி என்று, அதுமாதிரி ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொண்டது திமுக. விளைவு 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 137 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு வெறும் 51 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. அதுமட்டுமல்ல... அன்று அரசியல் வானில் உச்சத்தில் இருந்த திரு. காமராசர், பக்தவத்சலம், பூவராகவன், கக்கன் போன்ற பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் தோல்வியைத் தழுவிய அளவிற்கு அந்தக் கூட்டணியின் தாக்கம் இருந்தது. இதுதான் தேர்தலுக்கான முதன் முதற் கூட்டணியின் கதை.

Anna Rajaji Karunanidhi 650சரி. அடுத்த கதை? அது சந்தர்ப்பவாதக் கூட்டணியின் கதை. சந்தர்ப்பவாதக் கூட்டணி... சந்தர்ப்பவாதக் கூட்டணி... என்று அல்லோகல்லப்படுத்துகிறார்களே அந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் கதை.

முதன் முதல் உருவான சந்தர்ப்பவாதக் கூட்டணி... யாரால்? எப்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது? அந்தக் கதையினைக் காண்போம்.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகி, அதிமுக என்கிறதொரு புதிய கட்சியினை ஆரம்பித்த பிறகான 1977 தேர்தல். அதற்கு முன்னதாக 1974ல் இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடி நிலையினைக் கொண்டு வந்தார். அப்போது அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதே சமயம் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவோ, அந்த கொடும் நெருக்கடி நிலையினை ஆதரித்தது. அப்படியான தமது நிலைக்கு நேரெதிர் நிலைபாடுகள் கொண்ட அதிமுகவோடு கூட்டணி கண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இது கடைந்தெடுத்த பச்சை சந்தர்ப்பவாதம் என்று அரசியல் வரலாற்றில்... அரசியல் ஆய்வாளர்களால் இன்றுவரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அன்றைய நாளில் இது குறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்தன. என்ன சமாதானம் சொல்லியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி? "திமுக ஊழல் கட்சி. சர்க்காரியா கமிஷன் திமுகவின் ஊழல் புகாரை விசாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதோடு எப்படி கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்?" என்று சப்பைக் கட்டுக் கட்டியது. ஆனால், உண்மை என்ன தெரியுமா? அதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதே திமுகவோடுதான் கூட்டணி வைத்திருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதில் நகைமுரண் என்னவென்றால், அந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, ஏற்கெனவே விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது "திமுக ஊழல் கட்சி", "சர்க்காரியா கமிஷன் விசாரணை" என்றெல்லாம் சொல்லவில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் குறுகிய சில மாதங்களுக்குள்ளேயே திடீர் ஞானோதயம் எழுந்து, "எப்படி திமுகவோடு கூட்டணி வைக்க முடியும்?" என்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதிமுகவோடு கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது.

ஆக, ஓட்டுப் பொறுக்கும் கூட்டணிக் கதையில், முதன்முதல் சந்தர்ப்பவாதக் கூட்டணியைத் துவக்கி வைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். இப்படியான ஓட்டுப் பொறுக்கும் கூட்டணிக் கதை மெல்ல மெல்ல வளர்ந்து, மெல்ல மெல்ல வலுவேறி, இன்று சகிக்க முடியாதபடி நாறித் தொலைக்கிறது. நோய்களின் துவக்க வரலாறு இதுதான். அதன் நீட்சியில் புழுத்து நாறுகிற இன்றைய நிலையை நாம் விவரிக்கத் தேவையில்லை.

ஆனால் ஒன்று மட்டும் கால கால நிஜமாக இருக்கிறது. என்னவென்றால்... இந்த அடித்துப் பிடிக்கும் கூட்டணிகளைத் தீர்மானிப்பது ஓட்டுக் கட்சிகள் இல்லை. அதன் கரங்களில் ஒருபோதும் இல்லை. மாறாக, அவர்களுக்குப் படியளக்கும் கார்ப்பரேட் முதலாளிமார்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். காய்களை நகர்த்துகிறார்கள். வெட்டாட்டம் ஆடுகிறார்கள்.

இதுநாள் வரை, இந்நாள் வரை ஆண்ட பார'தீ'ய சனதா கட்சி கார்ப்பரேட் வல்லாதிக்கங்களுக்கு இம்மியும் பிசகாது கைகட்டிச் சேவகம் புரிந்தது என்பது எவ்வளவு தூரம் உண்மையோ, அதேதான் நாளை யார் ஆட்சிக் கட்டிலில் ஏகினாலும். ஒருவேளை மீண்டும் காங்கிரஸ் வந்தால்... திமுக வந்தால்... நெடுவாசலும், ஹைட்ரோ கார்பனும், மீத்தேனும் மீளவராமல் டெல்டா காப்பாற்றப்பட்டுவிடும் என்றா நினைக்கிறீர்கள்? காவிரியும், மேக்கேதாட்டும், வேதாந்தாவும், ஸ்டெர்லைட்டும், சாகர்மாலாவும் இன்னபிற பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அது கார்ப்பரேட்டுகளின் நிகழ்ச்சி நிரல். அதைச் செவ்வனே செயல்படுத்திடத்தான் இங்கு அமைந்திடும், அமைக்கப்படும் அரசுகள்.

ஆக, என்னதான் தீர்வு? நம்முன் இரண்டுவிதமான தீர்வுகள் உள்ளன. ஒன்று நிலவும் இந்த அமைப்புக்குள்ளிருந்தே தேடுவது. அதுவும்கூட தோற்றத்தில், மேலோட்டமாகப் பார்க்கையில் சரியானதாகக் கூடத் தெரியும். ஆனால், அதையும் உள்ளிழுத்துக் கபளீகரம் செய்து, தனக்குத் தக தகவமைத்துக் கொள்ளும் சக்தி இந்த கார்ப்பரேட் முதலாளித்துவத்திற்கு உள்ளது. என்றாலும்... இப்போதைக்கு, இந்தத் தேர்தல் அரசியல் அமைப்பிற்குள்ளிருந்து நாம் தேடுகிற... மாற்றாக முன்மொழிகிற... விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம். இது நமக்குள் எஞ்சி நிற்கிற கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளின்பாற் விளைந்தது. இது நீண்டகாலத் தீர்வல்ல.

மாறாக, எது நீண்டகாலத் தீர்வு என்றால்... நாம் இந்த அமைப்பையே மாற்றியாக வேண்டும். ஒரு மக்கள் புரட்சியில்தான் அது சாத்தியப்படும். ஒரு புரட்சிகர மாற்றத்தினால்தான் அது சாத்தியப்படும். அதுவரை நாம் கைக் கொள்ள வேண்டியது எதுவென்றால்... என்னவென்றால்... நிலவும் உலகமயச் சூழலுக்கு எதிராக... பன்னாட்டு இந்நாட்டு கார்ப்பரேட்டுக்களின் ஆதிக்கங்களுக்கெதிராக... காவிப் பாசிச இந்துத்துவத்திற்கெதிராக... இந்து, இந்தி, இந்தியா என்கிற மென் பாசிச காங்கிரசுக்கெதிராக... ஒரு உண்மையான இறையாண்மையுள்ள தேசிய இன விடுதலை அரசுகளை அமைத்துக்கொள்ள... சமூக சமநீதிக்கெதிரான சக்திகளோடு சமர் செய்ய... மக்கள் விடுதலைக் கனியைப் பறித்தெடுக்க... தத்தமக்குள் சிற்சிலவாகவே உள்ள அம்பேத்கரியப் போதாமைகளை விலக்கி, பெரியாரியப் போதாமைகளை விலக்கி, மார்க்சியப் போதாமைகளை விலக்கி... ஏனென்றால், இதற்குள்ளாகத்தானே நாம் மயிர் பிளக்கும் வாதங்களைச் செய்கிறோம். முட்டி மோதிக் கொள்கிறோம். எனவே இதை விலக்கி... இம்மூன்றினுக்குள்ளிருக்கும் ஆகப் பெரிய ஆக்கபூர்வ அம்சங்களை ஒன்றிணைத்துக் கொண்ட புதியதொரு மக்கள் விடுதலைக் கூட்டணியில்தான் இருக்கிறது சாத்தியம். இருக்கிறது தீர்வு.

- பாட்டாளி

Pin It