தமிழ் மொழிப் புலமையாளர், ஆய்வாளர், ஆய்வுக்கட்டுரையாளர், திறனாய்வாளர்,  மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வழக்கறிஞர், கதையாசிரியர், கவிஞர் போன்ற பன்முகப் பெருமைகளுக்கு உரியவர் பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை அவர்கள்.

ilagovan 450திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் சிக்கநர சையன் பேட்டை. இவரின் தாயார் பாப்பம்மாள். தந்தை சரவணபெருமாள். 1891ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12ஆம் நாள் இவர் பிறந்தார்.

பாளையங்கோட்டைப் புனித சவேரிய பள்ளியில் இவரின் தொடக்கநிலைக் கல்வி. பின்னர் திருநெல்வேலி இந்து கல்லூரியிலும், சென்னைக் கிருத்துவக் கல்லூரியிலும் பயின்றார்.

கிருத்துவக் கல்லூரியில் தமிழில் மாநில முதல் மாணவனாக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றமைக்காக இவர் ‘சேதுபதி தங்க விருது’ பெற்றார்.

இளமைக்காலத்தில் இவர் பல இலக்கிய, ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவே இவரை தமிழுலகிற்கு அறிமுகம் செய்த நிகழ்வாகும்.

1926ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த ‘தமிழ்ப் பேரகராதி’ ஆய்வுக்குழுத் தலைவராகவும், அதன் பொறுப்பாளராகவும் இவர் பொறுப்பேற்றார்.

உலக மொழிகளின் பேரகராதியாக உலகப் புகழ் பெற்ற அகராதி ‘ஆக்ஸ்போர்டு பேரகராதி’.

பேராசிரியர் மர்ரே தலைமையில் பெரும் ஆய்வுக்குழு இதைத் தொகுத்தது.

1857ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி 1928இல் 10 தொகுதிகளாக வெளிவந்தன.

அதன் இரண்டாம் கட்டப் பணியில் 1928இல் தொடங்கி 1933இல் 12 தொகுதிகளாக வெளிவந்தன.

இந்தப் பேரகராதிக்கு இணையாகத் தெற்காசிய மொழிகளுள் மிகச் சிறந்ததாகப் பேசப்படும் அகராதி, சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதிதான்.

7 தொகுதிகள், 4,351 பக்கங்கள் 1,17,764 சொற்களைக் கொண்டு தமிழ் & தமிழ் & ஆங்கிலம் என்ற வடிவில் இப்பேரகராதி தொகுக்கப்பட்டுள்ளது.

1926 தொடக்கம் 1939ஆம் ஆண்டு வரை தயாரிக்கப் பெற்ற இப் பேரகராதிக்காகத் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள், வானியல், சோதிடம், கணிதம், சித்த மருத்துவம் போன்ற நூல்கள் ஓலைச்சுவடிகள் இவைபோன்று பல்வேறு நூல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பேராசிரியர் வையாபுரியின் அரும்பெரும் பணிகளுள் இப்பணியைத் தமிழுலகம் மறக்காது.

அதுபோல, திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் 4 ஆண்டுகள் தமிழ் துறைத் தலைவராக இருந்தபோது இவர் ‘மலையாள மொழிச் சொற்களஞ்சியம்‘ ஒன்றை அதன் உறுப்பினராக இருந்து பதிப்பித்துள்ளார்.

1936ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித் துறை தலைவராகப் பொறுப்பேற்றார்.

இவரின் பணியில் குறிப்பிடத்தக்கது பதிப்புப் பணி. இதோ பட்டியல் -

மனோன்மணியம் (1922), துகில்விடு தூது (1929), நாமதீப நிகண்டு (1930), அரும்பொருள் விளக்க நிகண்டு (1931), களவியற் காரிகை (1931), கம்பராமாயணம், யு-த்த காண்டம் & படலம் 1,3 (1932), குறுகூர் பள்ளு (1932),  திருக்குருங்குடி அழகிய நம்பி உலா (1932), தினகர வெண்பா (1932), நெல்விடு தூது (1933), தொல்காப்பியம், பொருளதிகாரம் & இளம்பூரணம் (1933), திருமந்திரம் (1933), திருமுருகாற்றுப்படை (1933), கம்பராமாயணம், பால காண்டம் & படலம் 1,7 (1933), பூகோள விலாசம் (1933), மூப்பந்தொட்டி உலா (1934), தொல்காப்பியம், பொருளதிகாரம் & நச்சினார்க்கினியம் (1934), இராமலிங்கேசர் மீது பணவிடு தூது (1934), மதுரைக்கோவை (1934), தெய்வச்சிலையார் விரல்விடு தூது (1936), புறத்திரட்டு (1938), கயாதரம் (1939), சங்க இலக்கியப் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் (1940), சீவகசிந்தாமணி (1941), சாத்தூர் நொண்டி நாடகம் (1941), நவநீதப் பாட்டியல் (1943), திருமுருகாற்றுப் படை, பழைய உரை (1943), நான்மணிக்கடிகை (1944), திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும் (1944), இன்னா நாற்பது (1949), இனியவை நாற்பது (1949), இராமபையன் அம்மானை (1950), முதலாயிரம் (1955), திருவாய் மொழி, கொண்டல் விடுதூது.

பேராசிரியர் வையாபுரியார் ஆராய்ச்சி உரைத் தொகுப்பு & சிறுகதை மஞ்சரி & இலக்கியச் சிந்தனைகள் & தமிழர் பண்பாடு & கம்பன் ஆராய்ச்சி & உரை மணிமாலை & இலக்கிய தீபம் & இலக்கிய உதயம் & இலக்கிய மணி மாலை & கம்பன் காவியம் & சொற்கலை விருந்து & காவியக் காலம் & இலக்கிய விளக்கம் & அகராதி நினைவுகள் & தமிழின் மறுமலர்ச்சி & திராவிட மொழிகளின் ஆராய்ச்சி & Research in Dravidian Language போன்ற நூல்களை 1930 தொடக்கம் 1960ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் எழுதியிருக்கிறார்.

நூலாசிரியர், பதிப்பாசிரியர் என்ற இரு நிலைகளில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன.

தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் முன்னால் துணை வேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் வையாபுரியாரின் ஆய்வு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பனின் கவிநயத்தில் சொக்கிப்போன வையாபுரியார், டி.கே.சி.உடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கினார்.

ஆனால் கம்பராமாயணத்திற்கு உரை எழுத வேண்டும் என்ற இவரின் எண்ணம் இறுதி வரை நிறைவேறாமலே போய்விட்டது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அரசியலில் வெறுப்புற்று ஒதுங்கிய கடைசிக் காலத்தில் தொல்காப்பிய இளம்பூரணாருடைய உரையை ஏடுகளில் இருந்து படியெடுத்தார். அதை வையாபுரியாரிடம் கொடுத்துச் செப்பம் செய்து பதிப்பிட வேண்டினார்.

வ.உ.சி. அவர்கள் தன்னுடன் பதிப்பாசிரியாராக இருக்க வேண்டும் என்று சொன்ன வையாபுரியரிடம், ‘‘நீங்களே பதிப்பாசிரியராக இருங்கள்’’ என்று சொல்லிச் சென்றுள்ளார் வ.உ.சி. இதை அவரே தன் நூலில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்திரனாரைப் போலத் தமிழ் இலக்கியங்கள், சங்ககாலம் போன்றவைகளின் காலக் கணிப்பில் ஏனைய அறிஞர்களுடன் பெரிதும் முரண்பட்டவர் வையாபுரியார்.

கி.மு.வைச் சேர்ந்த சங்க இலக்கியங்களைக் கி.பி.யைச் சேர்ந்தவை என்று வாதிட்டார். மூன்று தமிழ்ச் சங்கங்களின் காலம், அதன் புலவர்கள், மன்னர்களைக் கேள்விக்கு உள்ளாக்கினார்.

இவரைப் பாவாணர் கடுமையாக  மறுத்தார். திராவிட இயக்கங்கள் கண்டித்தன. ஆனாலும் அறிஞர்களின் ஆய்வு முரண், அடுத்த ஆய்வுக்குப் படி அல்லவா-!

தன்னிடமிருந்த 2494 நூல்கள், தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான ஏராளமான ஆய்வுக் குறிப்புகள், ஓலைச்சுவடிகள் எல்லாவற்றையும் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு நன்கொடையாக கொடுத்த தமிழறிஞர் பேராசிரியர் ச.வையாபுரிபிள்ளை - 1956 பிப்ரவரி 17ஆம் நாள் தன் 65ஆம் வயதில் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.   

Pin It