தமிழ்நாட்டை உ.பி., இராஜஸ்தான், உத்தரகாண்ட் போல வடநாட்டு மாநிலங்களின் வரிசையில் நாம் சேர்க்கப் போகிறோமா? அல்லது நமது தனித்தன்மையைக் காப்பாற்றப் போகிறோமா? - இதுதான் தேர்தல் களத்தில் நம்முன் உள்ள கேள்வி!
• நம் தமிழ்நாட்டில் வங்கி அலுவலகங்களில், தொடர்வண்டித் துறையில் மத்திய அரசு அலுவலகங்களில் திருவெறும்பூர், நெய்வேலி, ஆவடி பகுதிகளில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் அண்மைக்காலமாக தமிழர்களைவிட வடநாட்டுக்காரர்களுக்கே வேலை வாய்ப்புகள், போதாக்குறைக்கு தமிழ்நாட்டு அரசு வேலைகளிலும் தமிழ் தெரியாத பிற மாநிலத்தவரும் சேரலாம் என்று உத்தரவு போட்டுவிட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி.
• உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற மாநில உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை ஏற்க மறுத்தார் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் இருக்கும்போதே ஒப்புதல் தந்துவிட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி.
இதற்கு முற்றுப் புள்ளி வைக்க தமிழகத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் 75 சதவீத வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்குவோம் என்று கூறுகிறது, தி.மு.க. தேர்தல் அறிக்கை.
• மறக்க முடியுமா? கிராமத்து குடிசையில் கழிப்பறை வசதிகூட இல்லாத வீட்டில் படித்து 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற நம் அன்புத் தங்கை பாசத்துக்குரிய மகள் அனிதாவை நாம் மறக்க முடியுமா? ‘நீட்’ தேர்வு, அவர் மருத்துவக் கனவை சிதைத்தது. உச்சநீதிமன்றம் வரை போராடினார். உயிரை மாய்த்தார்.
தொடர்ந்து 15 இளம் சகோதரிகளின் உயிரை ‘நீட்’ தேர்வு பலி வாங்கியது. தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தரமாட்டோம் என்று இறுமாப்புடன் மறுத்தது மோடி ஆட்சி. இப்போது பல் மருத்துவம், பி.எஸ்.சி. ‘நர்சிங்’, சித்த மருத்துவம் என்று மேலும் மேலும் நுழைவுத் தேர்வைத் திணிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்த பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து வருகிறது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி!
முதல்வராக இருக்கும் வரை ‘நீட்’ தேர்வை தடுத்தார் ஜெயலலிதா. ஆனால் எடப்பாடி ஆட்சியோ டெல்லிக்கு பணிந்தது.
தி.மு.க. வெற்றி பெற்றால் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் தீர்மானம் வரும் என்று உறுதி கூறுகிறது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை!
• உலகம் முழுதும் கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்த போதே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை மோடி ஆட்சி. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் அதற்கு துணை போனது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரி மட்டும் ரூ.32. மாநில அரசு விதிப்பது ரூ.15.35 காசு. உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல்-டீசலுக்கு 69 சதவீதம் வரி விதித்து மக்களை மூச்சுத் திணற வைக்கிறார்கள். விலை உயர்வு நியாயமானதுதான் என்று தொலைக் காட்சிகளில் ஈவிரக்கமின்றி திமிருடன் பேசிய பா.ஜ.க.வினரையும் அவர்களுக்கு பக்கமேளம் வாசித்த அ.இ.அ.தி.மு.க.வினரையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள்.
இப்போது ஆறுதலான செய்தி வந்திருக்கிறது. பெட்ரோலுக்கு ரூ.5 ரூபாய், டீசலுக்கு ரூ.4 ரூபாய் வரியைக் குறைக்கும் அறிவிப்பை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறுகிறது!
• சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பிப்ரவரியில் மட்டும் 3 முறை உயர்த்தியது மோடி ஆட்சி. அடுத்த மார்ச் மாதமே மீண்டும் ஏற்றியது. எடப்பாடி ஆட்சியோ ஒரு வார்த்தை கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. இப்போது ஆட்சி முடியப் போகும் கட்டத்தில் 6 சிலிண்டர் இலவசம் என்று நாடகம் போடுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஏன் இது பற்றி கவலைப்படவில்லை என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் உண்டா?
இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கை - சிலிண்டருக்கு ரூ.100 மான்யம் தருவதாக அறிவித்திருக்கிறது. ஒரு நிம்மதிப் பெருமூச்சு!
• ‘கொரானா’ காலத்தில் தமிழ்நாடு தவித்தது; வறுமையிலும் பசியிலும் மக்கள் வாடினார்கள்; ரூ.5000/- நிதி வழங்கி இந்த மக்களைக் காப்பாற்றுங்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன் வைத்த கோரிக்கையை எடப்பாடி ஆட்சி ஏற்க மறுத்தது. வெறும் ஆயிரம் ரூபாய் உதவியுடன் முடித்துக் கொண்டது. “பணத்தைக் கவரில் போட்டுத் தர மாட்டோம்; வேண்டுமானால் கடனை திருப்பித் தர கால நீட்டிப்பு தருகிறோம்” என்று இறுமாப்புடன் தமிழக பா.ஜ.க. பேச்சாளர்கள் பேசினார்கள். நிர்மலாவும் நீட்டி முழங்கினார்.
அது மட்டுமா? பிழைப்புக்கு தமிழ்நாடு வந்த வடமாநிலத்துக்காரர்கள் கையில் காசின்றி, பல நூறு மைல் நடந்தே சுமைகளைத் தாங்கி குடும்பத்துடன் நடந்தே போனார்களே! சென்னை நகரங்களிலிருந்து அகதிகள் போல ஏழை எளிய மக்கள் கிராமங்களுக்கு திரும்பினார்களே! மறக்க முடியுமா? உதவிட முன் வந்ததா மத்திய மாநில ஆட்சிகள்! நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சிறப்பு இரயில் விட்டது மோடி ஆட்சி!
பசி-பட்டினியுடன் உயிர் திரும்பிய மக்களுக்கு ‘டிக்கட் கட்டணம்’ செலுத்தி விட்டு இரயிலில் ஏறச் சொன்ன கொடுமையாளர்கள் அல்லவா இவர்கள்? இவர்கள்தான் தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள்.
அந்த நேரத்தில் மக்களுக்கு பசிப்பிணி போக்கிட உதவிக்கரம் நீட்டியது யார்? சிறு சிறு இயக்கங்கள்; தொண்டு நிறுவனங்கள்; தி.மு.க. - தமிழ்நாடு முழுதும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் வழியாக மக்களைக் காப்பாற்ற முன் வந்தது.
• தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் பிரிக்க முடியாத கொள்கை இடஒதுக்கீடு. இது தான் தமிழ்நாட்டை வளர்த்தது; நமது மக்களின் முன்னேற்றப் பாதைக்கு வழி திறந்தது. மருத்துவக் கல்லூரி உயர்பட்டப் படிப்பில் - அண்ணா பல்கலைக்கழக எம்.டெக். வகுப்புகளில் - பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மறுக்கிறது மோடி ஆட்சி. அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடே இனி இருக்காது என்று ‘ஆய்வுக் குழு’ போட்டு முடிவு செய்து விட்டார்கள்.
இவற்றுக்கெல்லாம் ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது தி.மு.க. தேர்தல் அறிக்கை. மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களையும் மாநிலத் தொகுப்புக்கு மாற்றப்படும். முதல் தலைமுறை பட்டதாரிக்கு வேலை வய்ப்பில் முன்னுரிமை; பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 40 சதவீத ஒதுக்கீடு; என்று உறுதி தருகிறது தி.மு.க. தேர்தல் அறிக்கை.
• சமஸ்கிருதம் பேசும் மாநிலம் ஒன்றுகூட இந்தியாவில் இல்லை. 25,000 பேர் மட்டுமே பேசுவதாகக் கூறுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடி இந்த மொழிக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு. இதே காலத்தில் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்டது 22 கோடி மட்டுமே.
தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டதைவிட சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிகம். இந்த சமஸ்கிருதத் திணிப்பை தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்கள் எதிர்த்தன. எடப்பாடி ஆட்சி மவுனம் சாதித்தது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தியைத் திணித்தது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. எதிர்ப்புக்குப் பிறகு பணிந்தது.
• ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த ஊடக நெறியாளர்கள் மிரட்டப்பட்டனர். பலர் வேலையை விட்டே விலக நேரிட்டது. பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டன. வள்ளுவர் சிலைக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கும் காவி சாயம் பூசினார்கள்.
• வரி விதிப்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம், பல்கலைக்கழகங்கள் என மாநில அரசுகளின் உரிமைகளை மோடி ஆட்சி பறித்தது; எடப்பாடி ஆட்சி மவுனம் சாதித்தது.
• 2020-2021க்கு தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி.யில் வரவேண்டிய பங்கு எவ்வளவு தெரியுமா? ரூ.15,475 கோடி. இதற்கு பதிலாக சிறப்புக் கடன் வழங்கும் முறையில் ரூ.5,239.92 கோடி கடனாக தரப்பட்டுள்ளது என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா! தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வரியை வாரி சுருட்டிவிட்டு, மூன்றில் ஒரு பங்கை கடனாகப் பெற்றுக் கொள் என்கிறது மோடி ஆட்சி. ஆக, தமிழ்நாட்டு பங்குக்கு பட்டை நாமம்! தட்டிக் கேட்க தயாராக இல்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. நன்றாக உதவுவதாக ‘ஜால்ரா’ தட்டினார்கள்.
• வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களுக்கு தமிழகம் கேட்ட நிதியில் சொற்பத் தொகையே ‘பிச்சை’யாக போடப்பட்டது, மோடி ஆட்சி.
• இவை மட்டும் தானா? நாடாளுமன்றத்தில் காஷ்மீர் சிறப்பு உரிமையை பறித்த போதும், குடியுரிமை சட்டத்தில் மதத்தை திணித்து இஸ்லாமி யரையும், தமிழர் என்பதால் ஈழத் தமிழர்களையும் தனிமைப் படுத்தும் சட்டம் வந்தபோதும், மாநில உரிமைகளைப் பறிக்கும் வேளாண் சட்டங்கள் வந்த போதும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கண்களை மூடிக் கொண்டு மோடிக்கு ‘ஜே’ போட்டது; மாநில உரிமைகளைக் காவு கொடுத்தது. அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆமாம்; தமிழர்களே, இது வந்து போகிற தேர்தல் அல்ல; தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் தேர்தல்!
தமிழ்நாட்டின் வாழ்வுரிமையை சமூக நீதியை தமிழ்நாட்டின் அடையாளத்தை பாதுகாக்கப் போகிறோமோ, பறி கொடுக்கப் போகிறோமா? என்று முடிவு கட்டும் தேர்தல். தேர்தல் களம் தெளிவாக பிரிந்து நிற்கிறது.
நாம் தி.மு.க. அணியையே ஆதரிப்போம்!
அந்த அணியே இப்போது நமது ஒளிவிளக்கு!
- விடுதலை இராசேந்திரன்