தோழர்களே! பேரவை நாள் குறித்த கட்டுரை எழுத முனைந்தபோது, சட்டென்று நெஞ்சம் நினைவுபடுத்திய தலைப்பு இதுதான் – ‘இன்ப நாளிது! இதயம் பாடுது!’. ஆம்! பேரறிஞர் அண்ணா அவர்கள் தமது தம்பிகளுக்குத் ‘திராவிட நாடு’ ஏட்டில் பொங்கல் நாளுக்காக எழுதிய மடலின் தலைப்புதான் அது!

ஒன்றிய அரசோ ஒன்றுக்கும் உதவாத தனது கொள்கைகளைத் திணிக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது; நாடு முழுவதும் மதத்தின் பேரால் நாச வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;  மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகள் மள மளவெனப் பெருகிக் கொண்டிருக்கின்றன; இந்த நேரத்தில் இன்ப நாள் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்!

உண்மைதான்! நீங்கள் சொல்வது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை!

முன்னெப்போதையும் விட இப்போதுதான் கடுமையாகப் போராட வேண்டிய சூழல் இருக்கிறது. பார்ப்பனியப் பேராபத்து படுமோசமாகச் சூழ்ந்து நிற்கிறது.

ஆனாலும் இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடும் களத்தில் நமது பேரவை சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. நமது பேரவையில் இணைந்து வருகின்ற இளைஞர் கூட்டம் பேரவைக்கு வலிமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமன்று!

“தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ னுக்குத்

தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்!”

என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளில் (ஏப்ரல் 29) பேரவை நாளைக் கொண்டாடுகிறோம் நாம்.

இதோ.....! 90 வயதிலும் தமிழர் தலைவர், நமது ஆசிரியர் அவர்கள், தமிழர் உரிமை மீட்க நெடும்பயணம் மேற்கொள்கிறார். நெடுங்குன்றம் என்ன, இமயமலையே தடையாக வரினும் ஆசிரியரின் போர்ப்பரணி நிற்காது. தமிழருக்காக ஒரு தலைவர் இந்த வயதிலும் இயங்கி வருகிறார் என்ற நம்பிக்கை நமக்கு!

இன்னொரு பக்கம், நமது அருமை முதல்வரோ பெரியாரை, பெரியாரின் கொள்கைகளைக் கொண்டு செல்வதில் அருமைத் தலைவர் கலைஞரோடு போட்டியிடுகிறார். மூச்சுக்கு முன்னூறு முறை “திராவிடம்! திராவிடம்” என்று முழங்குகிறார். ஆரியம் அச்சம் கொள்கிறது. நமக்கோ

”நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!”

என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. நாம் இன்பம் கொள்ள, நமது இதயம் அகமகிழ இவை மட்டுமா இருக்கின்றன?

‘முதல்வரின் அருகமர்ந்து நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டாரே பேராசிரியர்’ என்று தோழமை அமைப்புகள் நம்மிடம் பேசும்போது, பெருமை மேலிடுகிறது. இதழோரம் சிறு புன்னகைகூட வருகின்றது, இல்லையா?  ஆனால் அதனால் மட்டுமா நமக்குப் பெருமை? நாளுக்கு நாள் நமது பேரவை ஆற்றி வரும் பணிகள் அல்லவா நமது உழைப்புக்கும் நமது கொள்கைக்கும் பெருமை!

ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியைச் செய்யும் நமது திராவிடப்பள்ளி.

பகுத்தறிவைப் பரவலாக்க நமது கருஞ்சட்டைப் பதிப்பகம்.

புத்தக வாசிப்பை ஓர் இயக்கமாக்கிட நமது இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டம்.

நடப்பு அரசியலை வாரம் ஒரு முறை அலசும் நமது கருஞ்சட்டைத் தமிழர் மின்னிதழ்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித் திட்டம்.

இப்படி அடுக்கடுக்கான செயல்பாடுகளால் பேரவை தனது கிளைகளை விரித்துக் கொண்டே செல்கிறதே! இவ்வளவையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக வழிநடத்திச் செல்கிறாரே, நமது பொதுச் செயலாளர்! இவையெல்லாம்தான் நாம் பெருமை கொள்வதற்கும், பேரானந்தம் அடைவதற்குமான காரணங்கள்!

என்றாலும்… நாம் கவனத்துடன் இருக்க வேண்டிய காலமிது.

‘ஆட்சி அறியாத ஆரியர்கள் ஆளவந்தால்

பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ?

மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்தி விட்டால்

தக்க முஸ்லிமைத் தாக்கா திருப்பாரோ?”

என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள் இன்றைக்கும் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்துகின்றன.

அதனால்தானோ என்னவோ, திராவிட இயக்கக் கவியரசரான பாரதிதாசன் சிலை ஆளுநர் மாளிகையில் வைக்கப்படுவதில்லை! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் அல்லவா? ஆனால், இந்த இக்கட்டான சூழலில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பாரதிதாசன் சொல்கிறார், அடுத்த வரிகளில்…!

“உங்கள் கடமை உணர்வீர்கள் ஒன்றுபட்டால்

இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை!

சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால்

தோதுதெரிந்து ஆரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார்!”

  ஆம்! நாம் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய நேரமிது. ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய நேரமிது. நம்மைப் பிரிக்க ஆரியம் மேற்கொள்ளும் அத்தனை வழிமுறைகளையும், தமிழராக ஒன்றுபட்டுத் தோற்கடிப்போம். திராவிடம் எனும் சமூக நீதிச் சித்தாந்தத்தைப் பாதுகாப்போம். நமது பேரவை நாளில் நாம் கொள்ள வேண்டிய உணர்வு இதுவே…….!

- வெற்றிச்செல்வன்

Pin It