பெரியாரோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அய்யாவின் கருத்துகளை, அறிஞர் அண்ணா, தன் அரசின் வழியும், ஆசிரியர் வீரமணி சமூகத் தளத்தின் வழியும் கொண்டு சென்றார்கள். அண்ணாவின் வாழ்நாள் அறுபதுக்குள் முடிந்து விட்டது என்று அகமகிழ்ந்து சிலர் அதனைக் கொண்டாடினார்கள். அண்ணாவிற்குப் பின் தலைவர் கலைஞர் அதனை அதிரடியாக மக்களிடம் எடுத்துச் சென்றார்.

karunanidhi anna stalin periyarகலைஞருக்குப் பின் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். கலைந்து விட்டன திராவிடமும், சமூக நீதியும் என்று கணக்குப் போட்டார்கள். தளபதி சனாதனத்துக்குப் பணிந்து விடுவார் என்று தவறாக நம்பினார்கள். சமூக நீதியின் சரித்திரப் பயணம் தொடர்கிறது என்பதை இப்போது ஒவ்வொரு நாளும் நம் தளபதிதான் எதிரிகளின் நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பெரியார் வல்லினம், அண்ணா மெல்லினம் என்றுதான் நாமே கருதினோம். ஆனால், வல்லினத்தை வரலாற்றில் பதிய வைத்த மெல்லினமாக அண்ணா திகழ்ந்தார். அதே போலத்தான், கலைஞர் வல்லினம், தளபதி மெல்லினம் என்று பலரும் கருதினர். ஆடாமல், அசையாமல், ஆடம்பர அறிவிப்புகள் ஏதுமில்லாமல் தளபதி செய்துகொண்டுள்ள செயல்களைப் பார்க்கும்போது முன்னவர்களே பரவாயில்லை போலிருக்கிறதே என்று சிலர் முகம் சுருங்கி நிற்கின்றனர்.

ஒரு விதத்தில் தளபதியின் பாணி, அண்ணாவின் பாணியாகத்தான் இருக்கிறது. தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்தவுடன், திருமூலரின் சொல்லெடுத்து, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார் அண்ணா. எதிரிகள் ஏமாந்த இடம் அதுதான். அண்ணா, சாதி மறுப்பு, பகுத்தறிவுக் கொள்கைகளைக் கைகழுவி விட்டார் என்று எண்ணினர். அண்ணாவின் அறிவுத் திறன் அவர்களுக்குப் புரியவில்லை.

ஒன்றே குலம், எல்லோரும் ஒரே சாதி என்றால் என்ன பொருள்? சாதிகள் இல்லை, சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றுதான் பொருள். சாதி மறுப்பைத்தான் அண்ணா திருமூலரின் வரியின் மூலம் சொன்னார். “ஒருவனே தேவன்” என்றாரே, அது கடவுள் ஏற்புதானே என்றால், அதுவும்
இல்லை. முப்பத்து முக்கோடித் தேவர்களைச் சுருக்கி, ஒன்று என்னும் எண்ணிக்கையில் கொண்டுவந்து நிறுத்தினார். அது மட்டுமல்லாமல், அந்தத் தேவனை யார் என்றோ, அந்தத் தேவனை வணங்க வேண்டுமென்றோ எப்போதாவது அண்ணா பேசியிருக்கின்றாரா? இல்லை, எங்கும், எப்போதும் அவர் எந்தத் தேவன் குறித்தும் பேசியதே இல்லை. அதனைப் பற்றி மற்றவர்கள்தாம் பேசிக் கொண்டே இருந்தார்களே அல்லாமல், அண்ணா பேசவே இல்லை.

அதே உத்தியைத்தான் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தமிழகம் நம் தளபதியிடம் பார்க்கிறது. முதலமைச்சராகப் பதவி ஏற்றதும், தன்னைப் பற்றிய குறிப்பில் “we belong to dravidian stock” என்று பதிவேற்றினார். அதனை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் பேசினார்கள். முதல்வர் இன்றுவரையில் ஏதும் பேசவில்லை.

பதவியேற்றவுடன், முதல்வர் பெரியார் திடலுக்கு வந்தார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டத்தை நிறைவேற்றிவிட்டு, மீண்டும் திடலுக்கு வந்தார். எந்த இடத்தில், தலைவர் கலைஞர் தந்தை பெரியாருக்கு உறுதி அளித்தாரோ, அந்த இடத்தில் நம் முதல்வர் நேரில் வந்து நின்றார். அப்படித்தான், யாரும் எதிர்பார்க்காத வகையில், பெரியார் பிறந்த நாளைச் சமூக நீதி நாள் என்று அறிவித்தார்.

அறிவிப்போடு நின்றுவிடவில்லை. அந்த நாளில், அரசு அலுவலகங்களில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அந்த உறுதிமொழியில் திராவிடக் கருத்தியல், தமிழ் உணர்வு, சுயமரியாதை, பகுத்தறிவு, ஜனநாயகம், சகோதரத்துவம் எல்லாம் இருக்கின்றன. அதற்கான ஆணையையும் பிறப்பித்து விட்டார்.

சட்டமன்றத்திற்கு வெளியே சிலர் சத்தமில்லாமல் முனகினார்கள். ஆனால் அவர்களின் கட்சியும் கூட, சட்டமன்றத்தில் வரவேற்றுப் பேசியது. பாரதியாருக்கும், வ.உ.சி.க்கும் ஒன்றுமில்லையா என்று சில ‘தேஷபக்தாஸ்’ கேட்டனர். இதுவரையில் எந்த அரசும் செய்யாத சிறப்புகளை வ.உ.சி.க்கும், பாரதிக்கும் முதல்வர் வழங்கித் தீர்மானங்களை நிறைவேற்றினார். முனகல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்துவிட்டது.

சமூக நீதியின் சரித்திரம் தொடர்கிறது. பெரியாரின் திராவிடக் கருத்தியலை ஏந்தி, அறிஞர் அண்ணாவின் பாதையில், இன்று இன்னொரு கலைஞராய் எங்கள் தளபதி!

(நன்றி: முரசொலி)

- சுப.வீரபாண்டியன்

Pin It