ஆம்பூரில் பெரியார்:

சென்ற மார்ச்சு இதழில் வடஆர்க்காடு மாவட்ட இந்தி எதிர்ப்புப் படையைப் பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி சித்தக்காடு ராமையா அவர்களிடம் ஆலோச னைகள் வழங்குவதற்காக, பெரியார் ஈ.வெ.ரா. 30-8-1938 செவ்வாய் காலை சோலையார்பேட்டைக்கு வந்து அங்கிருந்து மிட்டாதாரர் பார்த்தசாரதி அவர் களுடன் காரில் ஆம்பூர் வந்து சேர்ந்தார். வடஆர்க்காடு மாவட்டத்திலிருந்து புறப்படப்போகும் தொண்டர் படை விவரத்தைத் தெரிந்து அதை அனுமதிப்பதற் காகப் படையை நடத்திச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தோழர் சித்தக்காடு கே. ராமை யாவைச் சந்தித்து அது விஷய மாகப் பேசினார்.

anti hindi 340தலைவர் அவர்கள் தோழர் கே. ராமையா ஜாகை முன் மோட்டாரை விட்டு இறங்கிய தும் அந்தச் சேதி விநாடி நேரத் தில் நகர் பூராவும் பரவி பத்து நிமிஷ நேரத்திற்குள் ஏராள மான பொது மக்கள் இந்து, முஸ்லீம், ஆதித்திராவிடர்கள் ஆகியவர்கள் தலைவர் அவர் களைச் சந்தித்துச் சூழ்ந்து கொண்டார்கள்.

ஆம்பூர் முஸ்லீம் லீக் அஞ்சு மனே முஹ்ஸினுல் இஸ்லாம், ஆதித்திராவிடர் முன்னேற்றச் சங்கத்தார் உள்ளிட்ட பொது மக்கள் “தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள்” அன்று மாலை கண்டிப்பாய்ப் பொதுக் கூட்டம் போட்டுப் பேசிவிட்டுத் தான் போகவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், தலை வர் ராமசாமியார் என்ன சொல் லியும் பொது மக்கள் கேட்க வில்லை, இறுதியாக இரவு 8.30 மணிக்குத் தன்னை அனுப்பிட வேண்டுமென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.

மாலை 5.45 மணிக்கு ஆம்பூர் நகரப் பொது மக்கள் ஏராளமாகத் தோழர் ஈ.வெ.ரா வை பேண்டு வாத்தியங்கள் முழங்க மாலை சூட்டி வரவேற்றார் கள். தோழர் சித்தக்காடு ராமையா அவர்கள் தங்கி யிருந்த இடத்திலிருந்து ஊர்வல மாகப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த மகமதலி சவுக்கில் ஊர்வலம் முடிவ டைந்தது. ஊர்வலத்தில் 1000 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள்.

ஆம்பூர் மகமதலி சவுக்கில் “அஞ்சுமனே முஹ்ஸி னுல் இஸ்லாம்” சார்பில் கூட்டப்பட்ட பொதுக் கூட்டத்திற்கு 5000-க்கும் அதிகமானோர் குழுமியிருந்தனர். ஜனாப் சி.எம். உசேன் சாயபு அவர்கள் தலைமை தாங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் முழு ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித் தார். பின்னர் பெரியார் அவர்கள் பேசும் போது,

“தலைவர் அவர்களே! சகோதரர்களே! நான் இன்று நண்பர் தோழர் சித்தக்காடு கே. ராமையாவைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற் காகவே இங்கு வந்தேன். நான் வந்ததைத் தெரிந்து கொண்டே நீங்கள் என்னைப் பேசிவிட்டுத்தான் போக வேண்டுமென்று கண்டிப்பாக இட்ட கட்டளையை என்னால் மீற முடியவில்லை. எனக்கு அவசரமான வேலைகள் இருக்கின்றன.

முடிவாகப் பேசுகையில் இந்த மாவட்டத்திலிருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்படுவதின் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அப்படைக்கு முஸ்லீம்கள் வேண்டிய ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இப்படையை நடத்த முன்வந்திருக்கும் நண்பர் சித்தக்காடு கே. ராமையாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், கூறியதாவது : தோழர் ராமைய் யாவை எனக்கு 15 வருடங்களுக்கு அதிகமாகப் பழக்கமுண்டு. நான் காங்கிரசில் இருக்கும்போது. அவர் காங்கிரஸ்காரர். பிறகு இன்றுவரை சுயமரியா தைக்காரராகவும் இருந்து வருகிறார். அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தி எதிர்ப்புப் படைக்கு வேண்டிய ஆதரவைக் கொடுத்து உதவி செய்ய வேணுமாய் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விடைபெற்றுப் புறப்பட்டுச் சென்றார். பிறகு திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் உட்படப் பலர் பேசியபிறகு 10.30 மணிக்குக் கூட்டம் முடிவுற்றது” (குடிஅரசு 4-9-38).

மதுரை மாவட்ட இந்தி எதிர்ப்புப் படை :

மதுரையிலிருந்து ஜனாப் பி. அப்துல் லத்திப்கான் அவர்கள் தலைமையின்கீழ் 100 முஸ்லீம்கள் கொண்ட படை ஒன்று இந்தி எதிர்ப்புக்காக இம்மாதம் 25ஆம் தேதி புறப்பட்டுத் திண்டுக்கல் போய்ச் சேரும். திண்டுக்கல்லிலிருந்து ஜனாப் எம்.வி.ஜே. தங்கமீரான் சாகிப் அவர்கள் தலைமையின்கீழ் 100 பேர் கொண்ட தமிழர் படை புறப்படும். இவ்விரு படைகளும் ஒன்று கூடிச் சென்னை செல்லும். முஸ்லிம் படை முஸ்லிம் கொடிகளுடனும், பச்சை வண்ண உடையுடனும், தமிழ்ப் படை மூவேந்தர் கொடிதாங்கி வெள்ளை சிவப்பு உடைதரித்து அணிவகுத்துச் செல்லும். வேண்டிய சகல ஏற்பாடுகளும் செய்தாய்விட்டது. செல்லும் வழி யும் தங்கும் இடமும் பின்னர் தெரிவிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 20.8.1938-க்குள் திண்டுக்கல் ஜனாப் எம்.வி.கே. தங்கமீரான் சாகிப், திண்டுக்கல் என்னும் முகவரிக்குத் தெரியப் படுத்திக் கொள்ள வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம் (குடிஅரசு 14.8.1938).

சென்னையில் இந்தி எதிர்ப்புப் போர் : நீதிபதியின் ஒழுங்கற்ற நடவடிக்கை

ஆகஸ்டு 26 : இன்று காலை 10 மணிமுதல் 10.30 மணிவரையில் பள்ளிக்கூடத்தின் முன் மறியல் செய்த தூத்துக்குடி தொண்டர்களான தோழர்கள் எ. அருணாசலமும், டி. குருசாமியும் பள்ளி மாணவர் களை நோக்கித் “தோழர்களே இந்த லம்பாடி பாஷை யைப் படிப்பது சரியல்ல”வென்று சொல்லித், தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! மஞ்சள் பெட்டியின் ஆட்சி ஒழிக! என்று கோஷமிட்டவர்களைப் போலீசார் கைது செய்து, ஜார்ஜ் டவுன் 2ஆவது நீதிபதி பி. மாதவராவ் முன் ஆஜர் செய்தனர். நீதிபதி தொண்டர்களை நோக்கி நீங்கள் ஏன் இம்மாதிரி செய்கிறீர்கள் என்றும், உங்களை யார் இம்மாதிரியெல்லாம் போய் மறியல் செய்யும்படிக் கூறி அனுப்பினார்கள் என்றும், அய்க் கோர்டில் சி.டி. நாயகம், அண்ணாதுரை, ஷண்முகா னந்த சாமிகள் முதலியவர்களின் வழக்குகள் நடக் கிறது என்றும், நீங்கள் பொது வழியில் நின்று கொண்டு இம்மாதிரி “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று கூச்சல் போட்டுப் போக்குவரத்துக்குப் பெரும் தடை செய்வதால் இனிமேல் வேறு சட்டம் போட்டு உங்களைத் தண்டிப்போம் என்றும், பணம் கொடுத் தால் ஊருக்குப் போய் விடுகிறீர்களா? என்றும், ஒன் றும் தெரியாத உங்களையெல்லாம் சிறைக்குப் போகும் படித் தூண்டிவிட்டுத் தலைவர்கள் சிலர் ஜாமீனிலும், சிலர் வெளியிலும் வராமல் இருந்து கொண்டு இப்படிச் செய்கிறார்களே, நீங்கள் ஏன் சிறை செல்ல வேண் டும் என்று கேட்டதற்கு-எங்களை யாரும் அனுப்ப வில்லை, நாங்கள் மாதம் 15, 20 ரூபாய் சம்பாதிப் பவர்கள்தான். எங்கள் கைப்பணம் செலவு செய்து வந்தோமே தவிரப் பிறர் வார்த்தையைக் கேட்டோ அல்லது அவர்களால் அனுப்பப்பட்டோ நாங்கள் வர வில்லை, எங்களை எந்தச் சட்டத்தின்கீழ் தண்டித் தாலும் சரி, தமிழரில் தமிழ்ப் பற்று உள்ள ஒவ்வொரு வரும் கட்டாய இந்தி ஒழியும் வரை மறியல் செய்தே தீருவோம். தலைவர்கள் வராமல் இருக்கமாட்டார்கள். வரும்போது வருவார்கள் என்று பதில் சொன்னார்கள். தலா நாலு மாதம் கடினக் காவல் தண்டனை விதிக் கப்பட்டது. தொண்டர்கள் சிரித்துக் கொண்டும் உற்சாகத் துடனும் சிறைக்கூடம் ஏகினர்.

முதன் மந்திரி வீட்டின் முன் மறியல் :

ஆகஸ்டு 27 : இன்று காலை 9 மணிமுதல் பகல் 11 மணிவரையில் முதல் மந்திரியாரின் வீட்டின் முன் மறியல் செய்த தூத்துக்குடி தொண்டர்களான கே. பழனிச்சாமியும், ஆர். மாரியப்பனும், தமிழ்மொழி வாழ்க! லம்பாடி இந்தி ஒழிக! பார்ப்பன ஆட்சி ஒழிக! ஹிட்லரிசம் ஒழிக! என்று சொல்லி மறியல் செய்து வந்த இரு தொண்டர்களையும் போலீசார் கைது செய்து எழும்பூர் முதன்மை நீதிபதி அப்பாஸ் அலி முன் ஆஜர் செய்தனர். நீதிபதி, உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டார். ஒருவர் பழக்கடையும் மற்றொருவர் சில்லறைக் கடையும் வைத்திருப்பதாய்க் கூறியதும் நீதிபதி தலா ஆறுமாதம் கடினக் காவல் போடுவோம்; கேப்பைக் களி போடுவோம்; ஊருக்குப் போகிறீர்களா என்றும், இரயில் சார்ஜ் கொடுத்தனுப்புவதாகச் சொல்லி யதற்கும் முடியாது என்றும், இந்த லாம்பாடி பாஷை யாகிய கட்டாய இந்தி ஒழிய வேண்டும்; இல்லையேல் மறுபடியும் மறியல் செய்வோம் என்றும் சொன்னார் கள். மேலும் எங்களுக்கு அரிசிச் சாப்பாடு போட வேண்டும் என்று கேட்டதற்கு, நீதிபதி முடியாது என்று கூறிக் கேப்பைக் களியும் ஆறு மாத கடினக்காவல் என்று தீர்ப்பளித்தார். தொண்டர்கள் உற்சாகமாகச் சிறை சென்றார்கள். கோர்ட்டிலிருந்த நூற்றுக்கணக் கான மக்கள் வேடிக்கை பார்ர்த்தனர். மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப்போட்ட மகிமை இதுதான் என்று சொல்லிச் சிறை சென்றனர். (குடிஅரசு 28-8-38)

சென்னை சிறையில் பல்லடம் பொன்னுசாமி உண்ணாவிரதம் :

ஆகஸ்டு 27 : இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு விசாரணைக் கைதியாக இருந்துவரும் பல்லடம் பொன்னுசாமி சிறையில் தண்டனை பெற்று வந்துள்ள இந்தி எதிர்ப்புத் தொண்டர்களைச் சிறை அதிகாரிகள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆட்படுத்துவதை, அவர்களை இழிவாக நடத்துவதைக் கண்டித்து, கடந்த ஒரு வாரமாக சிறையில் உண்ணாவிரதமிருந்து வருகிறார். அவரை ஜெயில் அதிகாரிகள் இருட்டு அறை யில் அடைத்தும், மூக்கின் வழியாகவும் உணவு செலுத்த முயன்றும் பயன் இல்லை. சூப்பிரண்டென்ட் நேரில் வந்து அவரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்தி எதிரிப்புக் கைதிகளை சிறை அதிகாரிகள் மிகவும் மட்டரகமாக நடத்துவதால் தாம் உண்ணாவிரத மிருப்பதாகக் கூறினார். சூப்பிரண்டென்ட் சிறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, அவரும் இந்தி எதிர்ப்புக் கைதிகளை நல்ல முறையில் மரியாதையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைக் கொண்டு வந்து காண்பித்த பின் 25.8.1938 முதல் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் (குடிஅரசு 28.8.1938).

கோவை மாவட்டத் தமிழர் படை :

கோவை மாவட்டத் தமிழர் படை இம்மாதம் 5ஆம் தேதி ஈரோட்டிலிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடு கள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படையை வெற்றிகரமாக நடத்தி, ஆங்காங்கு சொற்பொழிவாற்ற தோழர் என்.பி. காளியப்பன் அவர்கள் வந்திருப்பதுடன், திருநெல்வேலித் தோழர் எம்.கே. குப்தா அவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார். மற்றும் சென்னை தோழர் நாராயணி அம்மாள் அவர்களும் அழைக்கப்பட்டு அந்த அம்மையாரும் வர அன்புடன் இசைந்துள்ளார்கள். அந்தப்படி அவர்கள் 5ஆம் தேதிக்கு முன்னால் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.9.1938ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஈரோடு முக்கியமான தெருக்களில் படை ஊர்வலமாக வரும். 6 மணிக்குக் காரை வாய்க்கல் மைதானத்தில் படைக்கு வழியனுப்பு உபசாரக் கூட்டம் நடைபெறும் (குடிஅரசு 4.9.1938).

(தொடரும்)

Pin It