இந்திய அரசு பழங்குடி மக்கள் மீது தொடுத்து வரும் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தை விளக்கும் வகையிலான இயக்குனர் கோபால மேனனின் குறும்படத் திரையிடலைக் காண்பதற்காக இம்மாதம் 5ம் தேதியன்று எழும்பூரிலுள்ள இக்சா அரங்கிற்கு சென்றிருந்தேன். குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கோபால மேனன் அவர்களின் உரையை மொழிபெயர்க்கவும் உரை ஆற்றவும் அவசியம் ஏற்பட்டது. மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்ட அரங்கத்திற்குள் தோழர் கோவிந்த சாமியை கைத்தாங்கலாக அழைத்துவந்து நாற்காலியில் அமரவைத்ததைப் பார்த்தேன். அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் சில நிமிடங்கள் அரங்கில் இருந்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

கூட்டம் முடிந்து வீடு திரும்பியதும் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டேன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) செங் கொடியின் மையக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கேரளத்துக்குச் செல்வதற்காக தொடர் வண்டியில் அமர்ந்திருப்பதாகக் கூறினார். “உங்களது உடல்நிலை நலிவுற்றுள்ள நிலையில் நீங்கள் இந்தப் பயணத்தை தொடரவேண்டாம். உடனே வீடு திரும்புங்கள்” என வேண்டினேன். அவரோ பிடிவாதமாக, “சென்றுதான் ஆக வேண்டும்; 7ஆம் தேதியே சென்னை வந்து விடுவேன். உங்களை அன்று வந்து பார்க்கிறேன்” எனக் கூறிவிட்டார். அன்றுதான் அவரை நான் இறுதியாகப் பார்த்தேன். ஆனால் தொடர் வண்டியில் வரும்போது மாரடைப்பால் மாண்டு விட்டார் என்ற செய்தியை 7ஆம் தேதி காலைப் பொழுதில் தோழர்கள் தெரிவித்தபோது வேதனையால் துடிதுடித்துப் போனேன்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தத் தோழருடன் இணைந்து புரட்சிகர அரசியல் களத்திலும் தொழிற்சங்க அரங்கிலும் பத்திரிகைகளிலும் பணியாற்றினேனோ அந்தத் தோழரின் இழப்பால் ஏற்பட்ட வேதனையிலிருந்து எளிதில் விடுபட முடியவில்லை.

1964ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பை முடித்து, 65இல் ஐ.டி.ஐ. யில் டர்னர் படிப்பை முடித்த அவர் திருவொற்றியூர் கடற்கரை ஓரமாகக் கட்டப்பட்டிருந்த சுந்தரம் எஸ்டேட்டிலுள்ள ஒரு தொழிலகத்தில் லேத் ஓட்டும் தொழிலாளியாக தன் வாழ்வைத் தொடங்குகிறார். மூடப் பட்டு விட்ட இந்தத் தொழிற்சாலையில் அவர் 9 ஆண்டுகள் ஒரு தொழிலாளியாகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் வெறிபிடித்த எம்.ஜி.ஆர் பக்தராக இருந்த அவர், எம்.ஜி.ஆரின் படங்கள், குறிப்பாக சோவியத் புரட்சியின் மேன்மை, பாசிச இட்லர் எதிர்ப்பு போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய சர்வாதிகாரி போன்ற படங்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்த தன்னை பின்னாளில் விஞ்ஞான பூர்வமான கம்யூனிஸ்ட் தத்துவத்தை யும் இயக்கத்தையும் பற்றுவதற்கு உதவியாக இருந்தது என்றும் அந்த வகையில் எம்.ஜி.ஆர் தனது குருக்களில் ஒருவர் எனவும் அவர் கூறுவது வழக்கம். அவர் தொழிலாளி யாக பணிபுரிந்த காலத்தில, 1970இல் அவருக்குத் திருமண மாயிற்று. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தமகள் மஞ்சுளா, இன்றைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். மற்ற இரண்டு பெண்களுக்கு செம்மலர், கீதா என்று பெயர்.

இந்தக் கட்டத்தில் தி.மு.க. அனுதாபியாக இருந்த அவர் மார்க்சியத்தை நோக்கி கவரப்படுகின்றார். தமிழில் கிடைத்த மார்க்சிய நூல்களை எல்லாம் படிக்கிறார். மார்க்சியவாதி யாக மலர்ந்த அவர் சி.பி.எம். கட்சியில் இணைகிறார். அந்த நேரத்தில் “பிரச்சினை”, “உதயம்” போன்ற சிற்றிதழ்களை பிற தோழர்களோடு இணைந்து வெளிக்கொண்டுவருகிறார். இவைகள் சில இதழ்களே வெளிவந்தன. திரிபுவாதம், பொரு ளாதாரவாதம், பாராளுமன்றவாதம் ஆகிய நோய்களால் பீடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மீதான பிடிப்பு அவருக்குத் தளரத் தொடங்கியது. அதே நேரத்தில் நக்சல்பாரி இயக்கத்தினரின் அடித்தட்டு மக்களின் மீதான அர்ப்பணிப்பில் அவருக்கு அனுதாபம் இருப்பினும் அவ்வியக்கம் தனிநபர் பயங்கரவாத இயக்கம் என்ற கருத்தே அவர் சிந்தனையில் மேலோங்கியிருந்தது. இந்நிலையில் பாட்டாளிவர்க்க விடுதலைக்கு முழுமையாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் முழுநேரப் புரட்சியாளராக முடிவெடுத்த அவர் 1974ஆம் ஆண்டு உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் முழுநேர ஊழியர் ஆகிறார். நான்காண்டு காலம் உழைக்கும் மக்கள் மாமன்றத்தில் முழுநேர ஊழியராகச் செயல்படுகிறார்.

அவசர நிலைக் காலத்திற்குப் பின்னர் 1976இல் சிறையி லிருந்து வெளிவந்த தோழர் ஏ.எம். கோதண்டராமன் சில காலம் உழைக்கும் மக்கள் மாமன்றத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் உழைக்கும் மக்கள் மாமன்றத்திலிருந்த தொழிற்சங்க முன்னணியினர் சிலரை நக்சல்பாரி இயக்கத் திற்கு வென்றெடுத்தார். அவ்வாறு வென்றெடுக்கப் பட்டவர்களில் ஒருவர்தான் இல. கோவிந்தசாமி. பின்னர் ஏறத்தாழ 15 ஆண்டுகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் யுத்தம் மற்றும் போல்ஷ்விக் கட்சிகளில் முழுநேர ஊழியராக அரும்பணியாற்றினார்.

இந்த நேரத்தில் இவர் ஆற்றிய புரட்சிகரப் பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் யுத்தக் கட்சியின் தத்துவ அரசியல் ஏடான “சமரன்” பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்று அரும்பணியாற்றினார். சமரன் பத்திரிகை யின் மீதான காவற்துறையின் கெடுபிடிகளும் அச்சுறுத் தலும் மிகுந்திருந்த நேரத்தில் துணிச்சலுடன் அப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தினார்.

1978 - 80களில் தர்மபுரி, வடாற்காடு மாவட்டங்களில் காவற்துறையின் கொடிய அடக்கு முறை தலைவிரித்தாடிய போது, மோதல் என்ற பெயரால் அருமைத் தோழர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, முழுநேர தலைமறைவு கட்சித் தோழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை கொஞ்சமும் தயக்கமின்றி அஞ்சாது செயல்படுத்தினார்.

மக்கள் யுத்தக் கட்சியின் பண்பாட்டு அமைப்பான புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்து அவ்வமைப்பின் செயல்பாடுகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டார். இவ்வியக்கத்தை உயிரோட்டத்துடன் செயல்படுத்தியதில் தோழர் பேராசிரியர் கல்யாணியின் (தற்போது கல்விமணி) பங்கு முதன்மையானது என்ற போதிலும் இவ்வியக்கத்தின் செயல்பாட்டில் பங்கேற்ற அ.மார்க்ஸ், கோ.சடை, பழமலை, நீண்ட பயணம் சுந்தரம் மற்றும் என்னையும் உள்ளடக்கி பலர் செயல்பட்டபோதிலும் இவ்வியக்கத்தில் தோழர் கோவிந்தசாமி ஆற்றிய அளவற்ற பணிகள் என்றும் போற்றிப் புகழத்தக்கவையாகும். அதேபோல இவ்வியக்கத்தின் புரட்சிகர பண்பாட்டு இதழான “செந்தாரகை” இதழின் ஆசிரியர் குழுவிலும் இவரது பங்களிப்பு மகத்தானதாகும்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தொழிற்சங்க இயக்கத்தை புரட்சிமிக்க திசைவழியில் கட்டியமைக்கும் நோக்குடன் முயற்சிகளை மக்கள் யுத்தக்கட்சி மேற் கொண்டபோது, ஆட்கோ தொழிற்சாலையில் தலைவராக நானும் துணைத்தலைவராக கோவிந்தசாமியும் தேர்ந் தெடுக்கப்பட்டு ஓராண்டுகாலம் செயல்பட்டோம். அதே போல எம்.எப்.எல். தொழிற்சாலையில் வீறுகொண்டு எழுந்த தொழிலாளர் போராட்டத்திற்கு கட்சியின் சார்பில் வழிகாட்டும் பாத்திரத்தையும் அவர் செவ்வனே செயல்படுத்தினார். அவரது கடந்தகால தொழிற்சங்க அனுபவம் அவரது சிறப்பான தொழிற்சங்கப் பணிகளுக்கு கை கொடுத்தது.

இதுபோன்ற புரட்சிகரப் பணிகளால் அவரது செல்வாக்கு தமிழகமெங்கும் பரவியதோடு தமிழகம் முழுவதுமுள்ள புரட்சிகர சக்திகளின் அன்பைப் பெற்ற அருமைத்தோழராக அவர் ஒளி வீசினார். அவர் கடைப்பிடித்த பாட்டாளி வர்க்கப் பண்பாடு மார்க்சிய சிந்தனையாளர்களிடையில் மட்டுமின்றி, பகுத்தறிவாளர்கள், தேசிய இனப் போராளிகள், ஜனநாயகவாதிகள் ஆகியோரிடையேயும் அவரது செல்வாக்கை விரிந்து பரவச் செய்தது.

இத்தகைய சூழலில்தான் மக்கள் யுத்தக் கட்சியின் தலைமைக்கும், இவரை உள்ளடக்கிய சென்னை மாவட்டக்குழுவிற்கும் இடையில் கருத்தியல்ரீதியான வேறுபாடுகள் தோன்றத் தொடங்குகின்றன. 1988 சிறப்புக் கூட்ட முடிவுப்படி கட்சித் திட்டத்தை எழுதிவைப்பது, பின்னர் பிளீனத்தை நடத்துவது, உட்கட்சிப் பத்திரிகை போல்ஷ்விக்கை நடத்துவது, தொழிற்சங்க இயக்கங்களில் மீண்டும் தலையீடு செய்து தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு தலைமை கொடுப்பது, கட்சியை ஜனநாயகப் படுத்துவது போன்ற அம்சங்களில் தான் உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியதாகவும், தனக்கு உரிய பதில் எதுவும் கிடைக்காததால் தான் சோர்வுற்று மக்கள் யுத்தக் கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்ததாக பலமுறை அவர் தோழர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். எது எப்படியோ 1995 க்குப் பிறகு அவர் மக்கள் யுத்தக் கட்சியிலிருந்து வெளியேறுகிறார். இவ்வாறு வெளியேறிய அவர் மூன்று ஆண்டுகள் தனித்துச் செயல்படுகிறார். இக்காலக் கட்டத்தில் தத்துவப் பணியின் முக்கியத்துவத்தையும் விஞ்ஞானபூர்வமான திட்டத்தின் தேவையையும் உணர்ந்து பொதுவுடமைப் பத்திரிகையை கொண்டு வந்ததாகவும் அதன் ஆசிரியர் குழுவில் பேராசிரியர் தோழர் கோ.கேசவன் பங்களிப்புச் செய்ததாகவும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

ஆனால் தனது நிலையான விஞ்ஞானபூர்வமான திட்டத்தின் தேவையை நிறைவு செய்யும் முன்னரே கே.என். ராமச்சந்திரன் தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) செங்கொடியில் இணைகிறார். இணையும் போதே தேசிய இனச்சிக்கல், சாதியப் பிரச்சினை ஆகியவற்றில் அக்கட்சியுடனான தனது கருத்துவேறு பாட்டை பதிவு செய்து விட்டே இப்பிரச்சினைகள் மீதான உட்கட்சிப் போராட்டத்தை நடத்துவதற்கான உரிமை யுடனேயே அக்கட்சியில் இணைந்ததாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இக்கட்சியிலும் பிளவு ஏற்பட்டு தோழர் கே. என். ஆர். தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) என்றும் தோழர் ஜெயகுமார் தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ.) செங்கொடி என்றும் பிளவுபட்டபோது அவர், கே. என்.ஆர். பிரிவிலிருந்து வெளியேறி செங்கொடி அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார் இக்கட்சியின் மையக்குழு உறுப்பினராக இருந்துவந்தார். இந்நிலையில்தான் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட, பிடிவாதத்துடன் கேரளா சென்று மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும்போது தொடர் வண்டியிலேயே ஆவடிக்கு அருகில் மாரடைப்பால் மாண்டுவிட்டார். இது அவரது கடப்பாட்டு உணர்வை காட்டும் அரிய நிகழ்வும் நம்மையெல்லாம் பதைக்கச் செய்யும் சோக நிகழ்வுமாகும்.

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகால புரட்சிகர இயக்கத்தில் தனக்கேற்பட்ட அனுபவங்களை அவர் பதிவு செய்யவில்லை. இதற்கான காரணத்தை அவரே தனது நூலில் வருமாறு பதிவு செய்துள்ளார்.

“மீண்டும் பொதுவுடைமை இயக்கத்தின் மக்கள்திரள் இயக்கங்களில் ஒற்றுமையைச் சாதிக்க விரும்பும் ஒருவர், ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை கட்டும் நோக்கத்தை அடைய விரும்பும் ஒருவர் அந்தப் பிற்போக்கு காலத்தின் அனுபவங்களை எழுதாமல் இருப்பதே தொழிலாளிவர்க்க இயக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று எனது உள்ளுணர்வும் அறிவும் தெளிவுறுத்தியதால் அதை தற்சமயம் பதிவு செய்வதற்கில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன்.” இவ்வாறு தற்சமயம் பதிவு செய்வதற்கில்லை என்று குறிப்பிட்ட அவர் அவற்றைப் பதிவு செய்ய இன்று நம்மிடையே இல்லை. நிரந்தரமாகப் பதிவு செய்ய முடியாதபடி இயற்கை அவர் உயிரை பறித்துவிட்டது.

தம்மை கம்யூனிஸ்ட்டாக கருதும் ஒவ்வொருவரும் ஒன்றுபட்ட புரட்சிகர கட்சி, விஞ்ஞானபூர்வ திட்டம், நாடுதழுவிய மக்கள் இயக்கம் ஆகிய முப்பெரும் கனவுகளை நனவாக்க வேண்டும் என்பதே அவரது இறுதிக்கால கருத்தியலாக இருந்தது. பிளவுகளும், குழப்பங்களும், பகைமைகளும் மலிந்து காணப்படும் இந்தியச் சூழலில் இடைவிடாத தேடலுக்கு அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பரந்துபட்ட இடதுசாரிகள் ஐக்கியம் என்ற கோட்பாட்டையே அவர் முன்வைத்தார். 1960இல் ஏற்பட்ட பகைமையை மறந்து சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) உள்ளிட்ட திருத்தல்வாதக் கட்சிகளுடன் கூடிய இடதுசாரி ஒற்றுமையை அவர் வலியுறுத்தினார். ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில்தான் தோற்றமெடுத்தது. இன்றைய கட்டத்தில் திருத்தல்வாதத்திற்கும், மார்க்சியத்திற்கும் இடையில் தெளிவான எல்லைக்கோட்டை போட வேண்டும். திருத்தல்வாதப் பாதைக்கு மாறாக மார்க்சிய-லெனினிய-மாவோவிய சித்தாந்த வெளிச்சத்தில் வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுப்பதன் மூலமே புரட்சியாளர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியுமென்பது பெரும்பாலான மார்க்சிய-லெனினிய குழுக்களின் நிலையாக இருக்கிறது. இதன் காரணமாகப் பெரும்பாலான மார்க்சிய-லெனினிய குழுக்களுடன் முரண்பட்டு நின்றார்.

இருப்பினும் கம்யூனிசக் கொள்கையில் உறுதியுடனும் இலட்சியப் பிடிப்புடன் இறுதிமூச்சுவரை உறுதியாகப் போராடினார். குடும்ப வாழ்வில் வறுமையும் கஷ்டமும் சூழ்ந்திருந்த போதிலும், பல சிரமங்களையும் நெருக்கடிகளையும் எதிர்ப்பட்டபோதிலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோயினால் அவதிப்பட்டபோதும் அவர் இறுதிவரை கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தார். அந்த லட்சியத்திற்காகப் போராடினார்.

இறுதியாக மார்க்சியப் பேரறிஞர் கோ. கேசவன் குறித்து அவர் எழுதிய பின்வரும் வாசகங் களோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

“வரலாற்றின் சில சூழல்களில் தனி மனிதர்களின் பங்களிப்பை அவர் உயிருடன் உள்ள காலத்தில் உணர இயலாமல் போய்விடுவது நேரத்தான் செய்கிறது. மகாகவி பாரதி இல்லையா இப்படி.....?”

-        கோவை ஈஸ்வரன்

Pin It