anna_hazare

 

ஊடகங்கள் நினைத்தால், ஒரே வாரத்தில் ஒருவரை மகாத்மா ஆக்கிவிட முடியும் எனபதற்கான சான்றுதான், அன்னா ஹசாரே !

அடேயப்பா... 4 நாள் உண்ணாவிரதம், ஒரு சட்ட முன்வடிவம்... இவை போதும் நாட்டை விட்டே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு! இப்படித்தான் ஊடகங்கள் நம்மை நம்ப வைக்க முயல்கின்றன. நடுத்தட்டு வர்க்கத்தினர் பலர் இதனை நம்பவும் செய்கின்றனர்.

70 வயதுக்காரரான அன்னா ஹசாரே, மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர். காந்தி குல்லாய் வைத்திருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளில் ஈடுபாடுடையவர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து உடையவர். ஊடகங்கள் ஒருவரைத் தோளில் வைத்துத் தூக்கி ஆடுவதற்கு இவை போதாவா?

‘ ராலேகான் சித்தி ’ என்னும் ஊரில், நிலத்தடி நீரை உயர்த்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றுள்ளன என்னும் செய்தியை இணையத்தளம் தெரிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழை கொட்டித் தீர்த்துவிடும் அந்த ஊரில், தேவையான குளங்களையும், குட்டைகளையும், மக்களைக் கொண்டே உருவாக்கி, நீரைத் தேக்கி வைப்பதற்கான வழியை ஹசாரே செய்துள்ளார். அதனால் நிலத்தடி நீர்மட்டம் கூடியுள்ளது. பிறகு, ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கும்படி அந்தக் கிராம மக்களைத் தூண்டியுள்ளார். அவர்களின் பொருளாதார நிலையை அந்தக் கருத்துரை உயர்த்தியுள்ளது.

இவைகளெல்லாம் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்தாம். இதிலிருந்து அவர் புகழ் பரவத் தொடங்கியிருக்கிறது. இப்போது,

‘லோக்பால் ’ சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏப்ரல் 4ஆம் தேதி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அவ்வளவுதான்... ஆங்கிலத் தொலைக்காட்சிகள், இந்தியா முழுவதும் உள்ள பன்மொழி நாளேடுகள் அனைத்தும், ஒரே நாளில், ‘ இதோ காந்தி மறுபடியும் பிறந்து வந்துவிட்டார் ’ என அறிவிக்காத குறையாய், அச்செய்திக்கு அவ்வளவு பெரிய விளம்பரம் கொடுத்தன. லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான இறுதிப்போர் தொடங்கிவிட்டது போன்ற ஒரு மாயை, அனைத்து மக்களின் ஆழ் மனங்களிலும் விதைக்கப்பட்டது.

மேதா பட்கர், கிரண்பேடி, பாலிவுட் நடிகர் அமீர்கான், ரஜினிகாந்த் என்று பிரபலங்கள் பலர் வரிசையாய்த் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சோனியா காந்தி ஆதரித்தார். ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள ஹசாரேக்கு, நம் ஊர் ஜெயலலிதாவும் ஆதரவு தெரிவித்துவிட்டார்.

(ஊழலை ஒழிக்க ஜெயலலிதாவும், போதையை ஒழிக்க விஜயகாந்தும் தனி இயக்கமே கூடத் தொடங்கலாம்). தமிழ்நாட்டில் உள்ள தமிழருவி மணியன் போன்ற வறட்டுக் காந்தியவாதிகளும் கூடத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இவ்வளவு பேர் ஆதரிக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா என்று கருதி, கொலை வழக்கு ஒன்றில் வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும், பீகாரைச் சேர்ந்த பப்பு யாதவும், தன் ஆதரவை வழங்கினார். ஆதரவுகளில் எல்லாம் சிறந்த மணிமகுடமாய் அது ஆகிவிட்டது.

இனிமேல் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவந்து, ஊழலை ஒழிக்க வேண்டியது ஒன்று மட்டும்தான் மீதமுள்ளது.

அந்த லோக்பால் சட்ட முன்வடிவம், அப்படியயான்றும் புத்தம் புதிதன்று. 1969ஆம் ஆண்டு, முதன் முதலாக அது அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் ஏற்கப்படவில்லை. மீண்டும் மீண்டும், சில திருத்தங்களுடன் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை, 10 முறை அதே சட்ட முன்வடிவம், நாடாளுமன்றத்திற்கு வந்து போய்விட்டது. இப்போது 11ஆவது முறை கொண்டுவரப்பட்டவுடன், அனைத்து ஊழல்களும் ஓடி ஒளிந்து விடும் என்பது போல, ஊடகங்கள் நமக்குப் படம் காட்டுகின்றன.

பழைய லோக்பால் சட்டமுன்வடிவம், சில மாற்றங்களுடன், ‘ ஜன லோக்பால் ’ என்னும் பெயரில் வரைவு (Draft) செய்யப்பட்டுள்ளது. இதனை, மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் யஹக்டே உருவாக்கியுள்ளார். இந்த ஜனலோக்பால் திட்டத்தைச் சட்டமாக ஆக்கவேண்டும் என்பதற்குத்தான் ஹசாரேயின் உண்ணாவிரதம்.

ஜனலோக்பால் சட்டம் நடைமுறைக்கு வருமானால், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசாரிக்கும் உரிமை லோக்பால் குழுவிற்கு உண்டு. அக்குழுவின் பரிந்துரையையயாட்டி, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து, ஓராண்டிற்குள் தீர்ப்பு சொல்ல வேண்டும். குற்றவாளிகள் என மெய்ப்பிக்கப்பட்டால், அவர்களின் தண்டனைக் காலத்தில், அவர்களிடமிருந்து நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தொகை திரும்பப் பெறப்படும். இவைகளே அச்சட்ட முன் வடிவின் அடிப்படைச் செய்திகள். இதற்காக, மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், மாநிலங்களில் லோகாயுக்தா என்ற அமைப்பும் நிறுவப்படும்.

அன்னா ஹசாரேயின் கோரிக்கையை மத்திய அரசும் உடனே உள்வாங்கிக் கொண்டு, அதற்கான 10 பேர் கொண்ட குழுவை உடனடியாக நியமித்துவிட்டது. ஊழலை ஒழிப்பதில், அரசு உட்பட, அனைவரும் காட்டும் விரைவு நடவடிக்கைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. அதனாலேயே அது குறித்த ஐயங்களும் நமக்கு எழுகின்றன.

ஜனலோக்பால் வரைவு அறிக்கையை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த 10 பேர் கொண்ட குழுவில், ஐவர் அரசு சார்ந்தவர்கள் ; ஐவர் பொதுநல விரும்பிகள். பொதுநல விரும்பிகளில் ஹசாரேயும் ஒருவர். போகட்டும், உண்ணாவிரதம் இருந்ததற்கு ஏதேனும் பலன் வேண்டாமா? பிறகு, தந்தையும், மகனுமான சாந்தி பூ­ன், பிரசாந்த் பூ­ன் ஆகியோரும் உறுப்பினர்கள்.

இங்கெல்லாம் வாரிசுச் சிக்கல் எழவில்லை என்றாலும், ஏன் ஒரே குடும்பத்திலிருந்து இருவர் என்ற கேள்வி சிலரிடம் எழுந்த போது, “ அவர்களைத் தனி மனிதர்களாகவும், அவர்களிடையே என்ன உறவு என்ற அடிப்படையிலும் பார்க்கக்கூடாது. அவர்களின் தகுதி, திறமையை மட்டுமே பார்க்க வேண்டும்” என்று ஹசாரே கூற, அதனைக் கிரண்பேடி வழிமொழிய, அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. அடடா, எவ்வளவு எளிய விளக்கம் ! 120 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில், தகுதி, திறமை உடைய வேறு யாரும், வேறு குடும்பங்களில் இல்லாமல் போய்விட்டார்கள் !

இனிமேல் அந்த வரைவு அறிக்கை, சட்டமுன் வடிவமாக மக்களவையிலும் மேலவையிலும் வைக்கப்படும். ஆயிரம் விவாதங்களுக்குப் பிறகு அவை ஏற்கப்பட்டுச் சட்டமாகலாம். அல்லது, வேறு சில திருத்தங்களுக்காக வழக்கம்போலத் திருப்பி அனுப்பப்படலாம். சட்டமாகவே ஆனாலும், அதில் உள்ள ஓட்டைகளைத் தகுதி, திறமை உள்ள வழக்கறிஞர்கள கண்டுபிடித்துக் கொள்வார்கள். கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். இதற்குத்தான் இவ்வளவு தடபுடல் !

ஒரு சமூகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, ஊழலை மட்டும் எப்படி ஒழித்து விட முடியும்? ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்கங்கள், சுரண்டல்கள், உலகமயமாதல் என்னும் பெயரில் பன்னாட்டு நிறுனங்கள் நடத்தும் பகற்கொள்ளைகள் எல்லாம் அப்படியே இருக்குமாம். ஊழலை மட்டும் ஒழித்துவிடுவார்களாம்.

தோலிருக்கச் சுளைவிழுங்கும் இந்தக் கனவு நாடகத்தின், கற்பனா வாதத்திற்குத்தான் எவ்வளவு வரவேற்பு!

Pin It