நடந்து முடிந்த தேர்தல் நமக்குச் சில உண்மைகளை உணர்த்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் இம்முறை காட்டிய கெடுபிடிகள் ஆய்வுக்கு உரியன. டி.என்.சே­ன் காலத்தில் தொடங்கிய இந்த நடைமுறை, மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைவிட, அதிகாரிகளே கூடுதல் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவதுதான் இதன் உள்நோக்கம். இதனைப் பார்ப்ப னர்களும், பார்ப்பனீய மனநிலை கொண்டவர்களும் வெகுவாக ஆதரிக்கவே செய்வார்கள். அவர்களால் மக்கள் செல்வாக்கைப் பெறமுடியாது. மாறாக அதிகாரிகளாகவும், கணக்குத் தணிக்கையாளர்களாகவும், நீதிபதிகளாகவும் அமர்ந்து மறைமுக ஆட்சி செலுத்துதல் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

ஆனால், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அதனை ஏற்க முடியாது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தின் வரம்புகளைத் தீர்மானிக்கும் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். கட்சிக் கொடிகளை அகற்றுதல், சின்னங்களை அழித்தல், பொதுக்கூட்டங்களுக்குத் தேவையற்ற தடைகளை விதித்தல் போன்ற ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, ஏறத்தாழ 80% தமிழக மக்கள், இத்தேர்தலில் வாக்களித்திருப்பது வியப்பான ஒன்றாகவே உள்ளது. ‘ ஓ ’ போடுங்கள், தேர்தலைப் புறக்கணியுங்கள் என்பன போன்ற முழக்கங்களை மக்கள் முற்றுமாகப் புறக்கணித்துவிட்டனர் என்பது தெளிவாகின்றது. ‘ புரட்சி வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை, விடியல் இங்கே தோன்றும் நாள் தூரமில்லை ’ என்னும் முழக்கங்கள் மக்களைச் சென்றடையவே இல்லை. அவற்றிற்கான அடிப்படைத் திட்டங்கள், பணிகள் எவையும் இல்லாமல், முழக்கங்களை மட்டுமே எழுப்பிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதையே, தேர்தலில் வாக்காளர்களின் பங்களிப்பு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

அதே வேளையில், கொள்கை சார்ந்த முரண்பாடுகள் எவற்றையும் உள்வாங்கிக் கொள்ளாமல், வெறும் கட்சி சார்ந்த முரண்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இந்நிலை வரவேற்கத்தக்கதன்று.

குறிப்பாக, புதிதாய் இத்தேர்தலில் வாக்களித்துள்ள இளைஞர்கள் பலர், திராவிட இயக்க வரலாறு, பொதுவுடைமைக் கோட்பாடுகள் போன்றன வற்றில் அக்கறை உள்ளவர்களாகக் காணப்படவில்லை. அரசியலற்ற இப்போக்கு ஆபத்தானது. எனினும் பிழை அவர்களுடையதன்று எனபதையும் நாம் உணர வேண்டும். அடுத்தத் தேர்தலுக்கு முன்பாவது, அவர்களை அரசியல்படுத்த வேண்டிய மிகப்பெரும் பணி நம்முன் உள்ளது.

நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் நமக்கு உணர்த்தியுள்ள இரு படிப்பினைகள் இவை.

 

Pin It