மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கிறது அ.தி.மு.க. அரசு. அடிப்படைத் தேவையான ஆவின் பால் விற்பனை விலை கூட்டப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணமும் பல மடங்கு மிகுதியாக்கப் பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு வாக்களித்த மக்கள், காலம் கடந்து தாங்கள் செய்த பிழையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 6 மாதங்களாக மத்திய அரசோ, மத்திய திட்டக் குழுவோ  தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் வழங்கவில்லை என்றும், பலமுறை கேட்டும் பயனேதும் இல்லை என்றும் கூறியுள்ள முதலமைச்சர், அதன் விளைவாகவே விலையேற்றம் தவிர்க்க இயலாததாக ஆகியுள்ளது என விளக்கமும் தந்திருக்கிறார். அம்மையாரின் விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக தினமணி நாளேடு தலையங்கம் வடித்துள்ளது. நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

ஆனால் உண்மையோ வேறுவிதமாக உள்ளது. கடந்த 6 மாதங்களாக எந்த நிதியும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என்று இப்போது கூறும் ஜெயலலிதா, நான்கு மாதங்களுக்கு முன்பு, தில்லியில் இருந்து தி.மு.க. அரசு வாங்கி வந்ததைவிடக் கூடுதல் நிதி நான் வாங்கிக் கொண்டுவந்துள்ளேன் என்று பெருமை பேசினார். அந்த அறிக்கை எல்லா நாளேடுகளிலும் வெளியாகி இருந்தது. 07.07.2011 ஆம் நாளிட்ட , அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாகிய நமது எம்.ஜி.ஆரிலும் அந்த அறிக்கை வெளிவந்துள்ளது. அவ்வறிக்கையில், மத்திய அரசின் திட்டக் குழுவிடம் தான் 23,000 கோடி ரூபாய் மட்டுமே கேட்டதாகவும், அவர்களோ 23,535 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இத்தொகை முந்தைய தி.மு.க. அரசு பெற்றுவந்த நிதியைக் காட்டிலும் 3,467 கோடி ரூபாய் கூடுதல் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

பல்லாயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசிடம் இருந்துப் பெற்றுவந்ததாகக் கூறிய ஜெயலலிதாவும், மத்திய அரசு நிதியே தரவில்லை என்று கூறும் ஜெயலலிதாவும் ஒருவர்தானா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வாங்கிய நிதியை இல்லை என்று ஜெயலலிதா மறுப்பதைவிட, வியப்புக்குரிய செய்தி இன்னொன்று இருக்கிறது. கொடுத்தவர்களும் மெளனமாய் இருப்பதுதான் அது. மத்திய அரசோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினரோ வாய் மூடி இருப்பதற்கு என்ன காரணம் என்று விளங்கவில்லை. ஒருவேளை அவர்களுக்குள் ரகசிய உடன்பாடு ஏதும் இருக்குமோ என்னும் ஐயம் எழுகிறது.

எரிபொருள் விலை கூட்டப்பட்டுள்ள காரணத்தால், போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்த நேர்ந்தது என்கிறார் முதலமைச்சர். தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை பலமுறை ஏறியிருக்கிறது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒரு முறை கூடப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதில்லை. அதனால்தானோ என்னவோ, மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியில் ஆவின் பால் விலை உயர்த்தப்படவே செய்தது. ஆனாலும் அதில் இரண்டு முக்கியமான செய்திகள் உள்ளன. ஒன்று, விலையேற்றம் படிப்படியானதாக இருந்தது. இரண்டு, விற்பனை விலையை விடக் கொள்முதல் விலை கூடுதலாக உயர்த்தப்பட்டது. 2007 மார்ச் மாதம் 1.25 ரூபாயும், 2008 மார்ச் மாதம் 2 ரூபாயும், 2009 செப்டம்பர் மாதம் 2 ரூபாயும், ஆக மொத்தம் ஐந்தாண்டுகளில் 5.25 ரூபாய் விலை கூட்டப்பட்டது. அதே நேரம், கொள்முதல் விலையில், பசும் பாலுக்கு 7 ரூபாய் 96 காசுகளும், எருமைப் பாலுக்கு 13 ரூபாய் 50 காசுகளும் கூட்டப்பட்டன. அதற்கே அந்த அம்மையார் அன்று பொரிந்து தள்ளினார். அறிக்கை மேல் அறிக்கை விட்டார்.

ஆனால் இன்றோ கொள்முதல் விலையை வெறும் இரண்டு ரூபாய் உயர்த்திவிட்டு, விற்பனை விலையை ஒரேயடியாக 6 ரூபாய் 25 காசுகள் உயர்த்தியுள்ளார். என்ன நியாயம் இது?

ஓர் அரசு ' மெஜாரிட்டி ' அரசாக இருந்தால் மட்டும் போதாது, மக்கள் நல  அரசாகவும் இருக்க வேண்டும்.

சென்ற தி.மு.கழக அரசைத் தொடர்ந்து விமர்சனம் செய்து எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதில் ஊடகங்கள் பல குறியாய் இருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய விலை ஏற்றத்திற்குப் பிறகு அந்த ஊடகங்கள் இன்று அடக்கி வாசிக்கின்றன.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் தலைப்பில் தலையங்கம் எழுதிய தினமணி, அமைச்சர்களின் தவறான வழிகாட்டுதலால்தான் அம்மையார் இப்படி விலை ஏற்றிவிட்டதைப் போல எழுதுகின்றது. திருக்குறளில் அமைச்சு என்னும் அதிகாரத்தில் இருந்து, ' பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடிஉறும் ' என்னும் குறளை எடுத்துக் காட்டி, இந்த அமைச்சர்கள் எல்லாம் 70 கோடிப் பகைவர்களுக்குச் சமம் என்கிறது.

பாவம் நம் ' சூத்திர ' அமைச்சர்கள். அமைச்சரவைக் கூட்டத்தில் வாய்திறந்து கூட அவர்கள் பேசியதில்லை. புத்தம் புதிதாய், எழில் சூழக் கட்டப்பட்டிருக்கும் புதிய தலைமைச் செயலகத்தில் போய் அமர ஆசை இருந்தும், வேறு வழியின்றி பழைய கோட்டையில், அதிலும் சிலர் அந்த மாடிப்படிகளுக்குக் கீழே மறைவாக அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் போய்த் தினமணி 70 கோடிப் பகைவர்கள் என்கிறது. வேறொன்றுமில்லை, புகழ் வந்தால் போயஸ் தோட்டத்திற்குப் போய்ச் சேரும், பழி வந்தால் அதனை வைத்தியநாத அய்யர்கள் சூத்திர அமைச்சர்களின் தோள்களில் சுமத்தி விடுவார்கள்.

விலை ஏற்றத்தை மரபுக்கு மாறாகத் தன் சொந்தத் தொலைக்காட்சியில் அறிவித்தார் ஜெயலலிதா. சட்டமன்றத்திலோ, அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலோ கூறியிருக்க வேண்டிய அறிவிப்பை, ஜெயா தொலைக்காட்சியில் விளக்கிவிட்டுப் பிறகு ஊடகங்களுக்கு அவர் செய்தி அனுப்பினார். இதனையும் பத்திரிகைகள் கண்டிக்கவில்லை. மாறாக இந்து போன்ற ஆங்கில நாளேடுகள் அம்மையாரின் நிர்வாகத் திறனை வியந்து எழுதின.

" ...the manner in which the announcement was made was itself a novelty " என்பது இந்து ஏட்டின் பாராட்டு. முறைதவறி வெளியிட்ட அறிவிப்பைக் கண்டிக்காமல், புதுமை என்று பாராட்டு வதுதான் நமக்குப் புதுமையாகத் தெரிகிறது.

 

Pin It