வள்ளல்கள் தேவைப்படாத நாடுதான் மேன்மையான நாடு. உணவு, உடை, உறைவிடம் மட்டுமின்றி, கல்வி, பொது நலம் ஆகியனவும் அரசின் பொறுப்பாகவே இருக்க வேண்டும். நாட்டில் எந்த ஒரு குடிமகனும் இந்த ஐந்தில் ஒன்றிற்கும் குறைவின்றி வாழும்நிலை உடையவனாக அமைந்திருத்தலே நாட்டிற்கு அழகு.

அந்நிலையை இன்னும் நாம் எய்தி விடவில்லை. கல்விக்கும், உடல்நலம் காத்துக் கொள்ளுவதற்கும், பல கோடி மக்களுக்கு வள்ளல்கள் இன்னும் தேவைப்படுகின்றனர்.

surya_331வள்ளல்களுக்கும் குறைவில்லை. ஆனால் அவர்கள் செய்யும் உதவிகள், உரிவர்களுக்குப் போய்ச் சேருகின்றதா, உரிய நேரத்தில் போய்ச் சேருகின்றதா எனும் இரண்டு வினாக்கள் முதன்மையானவை. கடந்த 15 ஆம் தேதி (15.08.2010) விஜய் தொலைக்காட்சியில் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி பார்த்தவர்களை எல்லாம் கண்கலங்க வைத்தது. திரைப்பட நாயகன் சூர்யா அந்த நிகழ்ச்சியிலும் உண்மையான நாயகனாய் ஒளிர்ந்தார். 150க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ள அகரம் என்னும் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றிய நிகழ்ச்சி அது.

கடந்த தை முதல்நாள் அன்று, சூர்யா உட்பட பத்துப்பேர் ஆளுக்குப் பத்துலட்சம் ரூபாய் கொடுத்து அகரம் என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். அது ஒரு கோடி ரூபாயில் ஒரு தொடக்கம். அந்த அறக்கட்டளைதான் இப்போது மேலும் வளர்ந்து இத்தனை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது.

ஒரு கலை உலகக் கதாநாயகன், சமூக அக்கறை உள்ள உயர்ந்த மனிதனாகவும் வளர்ந்து நிற்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் மூன்று செய்திகள் நம் கவனத்தை ஈர்த்தன.

தனி ஒரு மனிதனாக அல்லாமல் பலரோடும் இணைந்து ஒரு குழுவாக இந்தச் செயலைத் தொடங்கியிருப்பது முதல் பாராட்டிற்குரியது. தான் மட்டும் கொடுக்கிறோம் என்று இல்லாமல் அந்த எண்ணம் உடைய மற்றவர்களுக்கும் ஒரு தளம் அமைத்துக்கொடுப்பது, இன்னும் பலரையும் இந்தத் திசையில் ஈர்ப்பது என்பன வரவேற்கத்தக்கக் கூறுகள். உரியவர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தைக் கொடுத்திருப்பது அடுத்த பாராட் டிற்குரியது. தமிழகம் முழுவதும் வலை போட்டுத் தேடி சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கி உள்ளவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவியிருப்பது எண்ணிப் போற்றத்தக்கது.

பேரா.பிரபாகல்விமணி, எழுத்தாளர் பவா சமத்துவன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான சமூக அக்கறை உள்ள ஆர்வலர்கள் இந்தப் பணிக்குப் பேருதவி செய்திருக்கின்றனர். அவர்களும் தமிழ்ச் சமூகத்தின் வணக்கத்திற் குரியவர்களாக ஆகின்றனர். அவர்களின் உழைப்பால்தான் கூலித்தொழிலா ளர்கள், சமூக விளிம்புநிலை மக்கள் ஆகியோரின் பிள்ளை களுக்கும் அறக்கட்டளையால் உதவ முடிந்தி ருக்கிறது. உள்ளங்கை எல்லாம் காயமாய் இருக்கிற ஒரு கல்லுடைக்கும் தாயின் பிள்ளையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடிந்துள்ளது என்னும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது, கலங்காத கண்கள் இருந்திருக்க முடியாது.

இயன்றதைச் செய்தோம், ஏதோ நல்லது நடக்கிறது என்று இருந்து விடாமல், உதவிபெறும் ஒவ்வொரு பிள்ளையைப் பற்றியும், அவர்களின் குடும்பச் சூழல் பற்றியும் நடிகர் சூர்யா அறிந்து வைத்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. அதற்காகவே தனி ஒரு பாராட்டு அவருக்குச் சேர்கிறது.

இந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட அடுத்தடுத்த ஆண்டுகளில், கல்விபெறும் மாணவர்களின் எண்ணிக்கைப் பன்மடங்காய் உயரும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

தலைவணங்கி உங்களைப் பாராட்டுகிறோம் சூர்யா.

Pin It