Peopleஏழை பணக்காரரெல்லாம்
எழுத படிக்க ஒரேப் பள்ளி
இருந்த நிலை மெதுவாக
இல்லாமல் போகுது.

பொட்டல் தரிசு காடு மேடு
எல்லாநிலமும் இப்போது
கட்டடமாய் எழுந்து நின்று
கல்லூரி பள்ளி ஆகுது.

தனியாரு கைகளில் அது
தராளமாய்ப் போகுது
கல்விக்கான கட்டணந்தான்
செவ்வாய் கிரகம் தாண்டுது.

ஏழையாகப் பிறந்தவர்கள்
இதில் படிக்க முடியாது
காசுல்லவர் கைப் பிடியில்
கல்வி சுருண்டு கிடக்குது.

திறமை கையில் காசில்லாமல்
தீய்ந்து கருகி உதிருது.
அரசாங்க வேலைகளும்
அடையா கனவாகுது.

காசில்லாத காரணத்தால்
மேலே படிக்க வழியில்லே
கடனை வாங்கிப் படித்தாலும்
வேலை கிடைக்க வாய்ப்பில்லே.

கல்வி, வேலை நாட்டினிலே
கடைச் சரக்காய்ப் போனதனால்
வசதி உள்ளவர் வாசலில் அது
வந்து வளைந்து நிற்குது.

இளைஞர்களைக் கூப்பிட்டு
எழுச்சி பெறச் செய்வதாய்
கனவு காணச் சொல்வதோட
காரணம் இப்போது புரியுது!

சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It