எப்பொழுதெல்லாம் இந்திய நாடாளுமன்றம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அங்கே கூச்சல், குழப்பம், அவை ஸ்தம்பித்தது, இரண்டு முறை ஒத்திவைப்பு, மூன்று முறை ஒத்திவைப்பு, நாள் முழுவதும் ஒத்திவைப்பு - இப்படித்தான் நாளேடுகளில் செய்திகளைப் பார்க்கிறோம்.

laluprasadyadav_244அவைத் தலைவரின் அமைதிப்படுத்தும் ஆணைக்குக் கட்டுப்படாதவர்கள், அவரவர் இருக்கைகளைவிட்டு விட்டு, நாடாளுமன்ற மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டு, கையில் இருக்கும் தாள்களை வீசி எறிபவர்கள், அவைத் தலைவரின் ஆணையினால் குண்டுக்கட்டாகத் தூக்கிவெளியேற்றப்படுவதை பெருமையாக நினைப்பவர்கள் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற பார்வை மக்களிடம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இருந்தாலும் கூட நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேறுவதற்கும் இவர்கள்தான் காரணம் என்பதையும் ஒதுக்குவதற்கு இல்லை.

எப்படியோ! இந்திய நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநதிகளாக வீற்றிருப்பவர்கள் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

அண்மையில் இவர்களின் சம்பளம் போதவில்லை என்றும், அதை உயர்த்த வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்தனர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் எவ்வளவு? மாதச் சம்பளம் 16,000 ரூபாய். நாடாளுமன்றம் நடைபெறும் காலங்களிலும், நிலைக்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் தினப்படி 1000 ரூபாய். தொகுதிப் படியாக 20,000 ரூபாயும், அலுவலகச் செலவுக்கான படியாக 20,000 ரூபாயும் அரசால் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்ல, இலவச விமானப் பயணம், முதல் வகுப்பு குளிர்சாதன இரயில் பயணச் சலுகை, பதவிக் காலங்களில் வாடகை இல்லா வீடு போன்ற இதர சலுகைகளும் இவர்களுக்கு உண்டு.

ஆனாலும், இவர்களின் வாழ்க்கைக்கு இது போதாது என்று சம்பள உயர்வு கோரியிருக் கிறார்கள்.

இதனை ஆய்வு செய்ய அமைத்த சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சரண்தாஸ் மகந்த் தலைமையிலான நாடாளு மன்றக் குழு, மத்திய அரசின் செயலாளர்களுக்கு 80,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களை விட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகமாக சம்பளம் தரப்படவேண்டும். குறைந்தது ஒரு ரூபாயாவது கூடுதலாக, அதாவது 80,001 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

ஆனால் மத்திய அரசு இப்போதைய உறுப்பினர்களின் சம்பளத்தை 30,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்தது.

அவ்வளவுதான்! ராஷ்ட்ரிய ஜனதளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் போன்ற உறுப்பினர்கள் அதை ஏற்க முடியாது என்று பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால், இதற்கான மசோதா மீதான முடிவு நிறைவேற முடியாமல் தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய அமைச்சர வையிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

mulayamsingh_252மீண்டும் மத்திய அரசு பரிசீலனை செய்ததை அடுத்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் 50,000 ரூபாய் என சம்பளத்தை உயர்த்தலாம் என்று தெரிவித்தது. இதையும் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பணவீக்கம் உயர்ந்து விலைவாசி அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் எம்.பிக்களின் சம்பளத்தை உயர்த்த சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், வறுமையால் விவசாயிகள் தற்கொலை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற பிரச்சினைகள் நிலவும் இந்த நேரத்தில் எம்.பிக்களின் சம்பளத்தை உயர்த்துவது மக்களிடம் அரசைப் பற்றிய அதிருப்தியான கருத்தையே உருவாக்கும் என்று பெயர் வெளியிடப்படாத சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்ததாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டும் நாளிதழ் செய்திகளையும் பார்க்கிறோம்.

காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் எப்போதுமே நேர் எதிர் கட்சிகளாக அரசியல் நடத்தும் கட்சிகள்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜுவ் சுக்லா, உலகிலேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம்தான் மிகவும் குறைவாக இருக்கிறது, அரசு குமாஸ்தாவின் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவுதான். அதனால் சம்பளத்தை உயர்த்த வேணடும் என்று கூறுகிறார்.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அலுவாலியா, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரே விலைவாசிதான். அதனால்அவர்களது சம்பளத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்கிறார்.

ஒருவேளை, சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றால் கூட இப்படியா? 80,001 ரூபாயா?

காங்கிரசும், பா.ஜ.க.வும் இந்த ஒரு விசயத்தில் இணைந்த கைகளாக இருக்கிறது என்பது கருதத்தக்கது. 80,001 ரூபாய் சம்பளத்துக்காகப் போட்டி நாடாளுமன்றக் கூட்டத்தையே நடத்தியிருக்கிறார்கள் லாலுவும், முலாயம் சிங்கும். மக்கள் பிரச்சினைக்கு இவர்கள் இப்படி நடத்தி யிருக்கிறார்களா?

இதே பிரச்சினைபற்றி கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சீத்தாராம் யயச்சூரி வேறுவிதமாகக் கருத்து கூறுகிறார்.

இந்தியாவில் 70 விழுக்காடு மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 ரூபாய்தான் சம்பளம் பெறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு 80,001 ரூபாய் சம்பளம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் யயச்சூரி.

மக்களாட்சியின் பிரதிநிதிகளாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை மக்களின் சேவகர் என்கிறார்கள். மக்களுக்குப் பணி செய்யவே பிறவி எடுத்ததாகச் சொல்கிறார்கள். மக்கள் பணி மகேசன் பணி என்கிறார்கள். மக்களுக்காகத் தான் தம் வாழ்வையே அர்ப்பணித்துத் தியாகம் செய்பவர்களாகச் சொல்கிறார்கள்.

மக்கள் பணியாளர் - மக்கள் சேவகர் - மக்களுக்காக வாழ்வையே அர்ப்பணிக்கும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குக் கேட்குப்போது கும்பிடு போடும், கைகளால், நியாயமான சம்பளம் வாங்குவது தானே நியாயம்.

ஒரு உறுப்பினர் 80,001 ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால், அவரின் இதர படிகளுடன் சேர்த்து அவர் மாதம் ஒன்றுக்கு பெறும் தொகை 1 லட்சத்து 50,000 ரூபாய்.

நாடாளுமன்ற மக்களவையில் 545 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இரு அவை களின் உறுப்பினர்கள் 790 பேர்கள்.

சராசரியாக இவர்களின் ஒருமாத வருமானம் 11 கோடியே 85 லட்சம் ரூபாய். ஓர் ஆண்டு வருமானம் 35 கோடியே 55 லட்சம் ரூபாய்.

ஏழை எளிய மக்களுக்காக உழைத்து ஓடாய்ப்போகும் நம் நாடாளுமன்ற உறுப்பி னர்களின் 10 ஆண்டு கால சம்பளத்தை வைத்துப் பக்கத்து நாட்டையே விலைக்கு வாங்கிவிடலாம் போல் தெரிகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை.

அவர்களின் சம்பளப் பேராசையை மதிக்கவும் முடியவில்லை.

காரணம் அவர்கள் கேட்கும் பணம் ; மக்களின் வரிப்பணம்!

Pin It