ஆனந்தியின் பொருட்டு
தாழப் பறந்துகொண்டிருக்கின்றன தட்டான்கள்

மணிப்புறாவின் லாகவத்தோடு எழும்பிப் பறக்கிற
என் நிலத்துக்கு ஆனந்தி என்று பெயர் சூட்டியிருந்தேன்
அதனால்தான் அது மேலெழும்பி மிதக்கும்
பாக்கியம் பெற்றதோ என்னவோ
அதனால்தான் அத்தனை வனப்போ செழிப்போ
தட்டான்கள் தாழப் பறந்தால் மழை வரும் தெரியுமா என்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன்முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது
தட்டான்கள் குறுக்கும்நெடுக்குமாகப் பறப்பது
காற்றின் பக்கங்களில் கோட்டோவியம்
வரைவதாகும்போல என்றால்
ஆமாம் அப்படித்தான் என்று
பார்வையாலே தட்டான்மாலை வரைவாள்
பறக்கும் தட்டான்பூச்சிகளுக்குச் சங்கடம் தராமல்
மிதந்துகொண்டிருக்கிறது நிலம்
ஆனந்தி பெயரைச் சொல்லி விதைப்பதும்
ஆனந்தி என்று சொல்லி அறுப்பதும்
மகசூலை அதிகரிக்கச் செய்யும்
விவசாய முறையாயிற்று
வெள்ளாமைக்கு நடுவே நட்டுவைக்கப்பட்டிருக்கும்
பொம்மையின் வாயிலிருந்து வைக்கோல் பிதுங்க
தலை தொங்கிக்கொண்டிருக்கிறது
காரணம் ஆனந்தியில் வாத்ஸல்யம்
அந்த நிலத்தின் மீதில்லை இப்போது
நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு அந்த நிலத்தின் மீது
தாழப் பறந்துகொண்டிருக்கின்றன
தட்டான்கள்
குரங்காய் இருப்பதற்கான சில வரைமுறைகள்

குரங்குக்கென்று சில வரைமுறைகள் உள்ளன
வித்தை நிகழ்த்துகையில் குட்டிக்கரணம் போட்டாக வேண்டும்
கைதட்டலுக்கேற்ப குட்டிக்கரணத்தின் எண்ணிக்கையைக்
கூட்டவோ குறைக்கவோ தெரிந்திருத்தல் முக்கியம்
அதைவிட நலம் குரங்காட்டி முன்பு சோம்பித் திரியாதிருத்தல்
உடல்நலமில்லையெனினும் வித்தையில் சுணக்கம் ஆகாது
வித்தையின் இறுதியில் உறுதியாக தட்டேந்தி வர வேண்டும்
திரையிலெனில் கதாநாயகியின் கற்பு சூறை போகாது
பாதுகாக்கும் பொறுப்புண்டு
க்ளைமாக்ஸில் ஏ.கே. 47 கொண்டு
வில்லனைச் சுட்டு வீழ்த்தினால்தான் குரங்கர்குலத் திலகம்
அல்லது அப்படியாவது லட்சியத்தை வரித்துக்கொள்வது நல்லது
காடுகளில் உலவுவதோ கிளைகளில் தொங்குவதோ கீழினும் கீழ்
பழங்களை உமிந்துவிட்டு பர்க்கர் பீட்ஸா உண்ணத் தெரிந்தால்
பாக்கியத்திலும் பாக்கியம்
மிகச் சரியான நேரத்துக்குள் கூண்டுக்குள் அடைந்துகொள்வதும்
தவிர, கூண்டையே உலகமென்று கொண்டாடுவதிலும்தான்
இருக்கிறது குரங்காய்ப் பிறந்ததன் பயன்
எங்கே ஒரு குட்டிக்கரணம் போட்டு
கூண்டுக்குள் அடைந்துகொள்ளுங்கள் பார்ப்போம்
ம்ம்ம்... சமர்த்து

சிறகுகளிலிருக்கும் நான்கைந்து ஓட்டைகளின் வழியே

மருத்துவமனையிலிருந்து துவண்ட நாற்றென
ஆயாவை வீட்டுக்கு ஏந்திவரும்
அந்தப் புளியமரத்து முடுக்குப்பாதையில்
தலைகுப்புற அசைவற்றுக் கிடந்த
வண்ணத்துப்பூச்சியை இழுத்துப்போகின்றன
கொலைக்கரம் வாய்த்த எறும்புக் கூட்டம்
காற்றுத் தொகுதி ஆராதித்துக்கிடந்த
அதன் வண்ணச் சிறகளிலிருக்கும்
நான்கைந்து ஓட்டைகளின் வழியே
வெளியேற முடிவு செய்துவிட்டது
ஆயாவின் உயிர்

Pin It