தமிழ், பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் பாரதியார் (1882 -1921), விக்தோர் ய்யூகோ (1802 -1885) இருவரும் மிக முக்கியமான கவிஞர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவர்கள்  நவீன படைப்பிலக்கியமான கவிதையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தனர். கற்றவர்கள் நாவில் மட்டும் பழகிவந்த படைப்புகளைப் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகப் படைத்தனர். இவ்விருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த வர்கள். இருப்பினும் இவ்விருவரின் படைப்பிலக்கியச் சிந்தனையினை நோக்குகையில் சில ஒற்றுமைகளுக்கான கூறுகள் இருப்பதை அறியமுடிகிறது என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். இக்கட்டுரையின் ஆய்வு எல்லையாக விக்தோர் ய்யூகோவின் ‘ஏழை படும் பாடு’ எனும் புதினமும் பாரதியாரின் Ôபாஞ்சாலி சபதமும்Õ அமைகின்றன. 

victoria yuka bharathiyar 600பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் முக்கியமான படைப்பாளியாக ‘விக்தோர் ய்யூகோ’ கருதப்படுகின்றார். 1802-ஆம் ஆண்டு பிறந்த இவர் இளம் வயதிலேயே (15) எழுதிய கவிதை பிரெஞ்சு அகாதெமியின் பாராட்டைப் பெற்றது. அதோடு மட்டுமில்லாமல் கீழை நாட்டுக் காட்சிகள் (les Orientales), ஒளிக் கதிர்களும் நிழல்களும் (les Raynos et les Ombres), கண்டனக் கணைகள் (les Châtiments), சிந்தனைகள் (les Contemplations), காலத்தின் காவியம் (la legend des Siècles), ஏழை படும் பாடு (les Misérables), கடலோடி உழைப்பவர்கள் (les travailleurs de la mer), இளிச்சவாயன் (l’Homme que rit) முதலிய படைப்புகளைப் படைத் துள்ளார். இதில் ‘ஏழை படும் பாடு’ எனும் புதினம் தமிழ் மொழியில் நான்கு மொழிபெயர்ப்புகளாகவும் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனது படைப்புகளின் வழிச் சமூகத்தில் நடந்த சீர்கேடுகளையும் சர்வாதிகார ஆட்சி முறையையும் எதிர்த்துக் குரல் எழுப்பிய இவர் 1885-ஆம் ஆண்டு மறைந்தார். இவர் இறந்த போது பாரதிக்கு மூன்று வயது. பாரதியார் தன் வாழ்நாளின் சில வருடங்களைப் புதுவையில் கழித்த காலகட்டத்தில் தான் சில முக்கிய படைப்புகளான பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலியவற்றைப் படைத்துள்ளார்.

அதோடு அக்காலகட்டத்தில் பாரதிக்கு பிரெஞ்சு மொழியின் அறிமுகமும் அம்மொழிப் படைப்பாளிகளின்  அறிமுகமும்  இருந்திருக்க வாய்ப்புகள் ஏற்பட்டன. பாரதியைப் பிறமொழிப் படைப்பாளர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டவர்களான க. கைலாசபதி, சுத்தானந்த பாரதியார், ரகுநாதன் முதலானோர் பைரன், கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், வோர்ட்ஸ்வோர்த், மில்டன், வால்ட்விட்மன், டென்னிசன், ராபர்ட் ப்ரோஸ்ட், மாயா கொவ்ஸ்கி முதலிய இலக்கியப் படைப்பாளிகளின் தாக்கம் இருப்பதைப் பாரதியின் படைப்பின் வழி ஆராய்ந்துள்ளனர். ‘பாரதியார் கவிதை நூல்கள் குறித்த ஆய்வுகள் ஒரு மதிப்பீடு’ எனும் நூலில் ஐசக் சாமுவேல் நாயகம் என்பவர் பாரதியாருக்கு மேற்குறிப்பிட்ட படைப்பாளிகளைத் தவிர்த்து இன்னும் பல மேலை நாட்டு இலக்கியப் படைப்பாளிகளின் தாக்கமும் இருந்துள்ளது. இதனைக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துக் களைக் குறித்தும் கட்டுரைகளில் சுட்டிக்காட்டி யுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். தொழில் என்னுங் கட்டுரையில், சீ இங் என்ற சீன ஞானி, தோல்ஸ்தோய் என்ற ருஷ்ய ஞானி, தோரோ என்ற அமெரிக்க ஆசிரியர், மோந்தாஞ் என்ற ஃபிரான்ஸ் தேசத்துப் பண்டிதர், மற்றும் பலரின் கூற்றுகளைச் சுட்டிக்காட்டுவதோடு, “விக்டர் ஹியூகோ என்ற பிரெஞ்சு ஞானியின் வசனங்கள்” என்னும் தனிக் கட்டுரையும் எழுதியுள்ளார் பாரதியார் (1992, பக். 383, 396). 

மேலும், பாரதியின் படைப்புகளை ஆராய்ந்து தொகுத்த ஆய்வாளர்களான ரா.அ. பத்மநாபன்,  ஆ. இரா. வேங்கடாசலபதி, சீனி. விசுவநாதன் ஆகியோர் களின் வழி சில குறிப்புகளையும் அறியமுடிகின்றது. அவை: ‘பாரதியார் சில பாடல்களை பிரெஞ்சில் மொழிபெயர்த்து பாரிஸில் உள்ள பத்திரிகைகளுக்கு அனுப்பி நூறு பவுன்ட் சன்மானம் கிடைத்ததாக  ரா. அ. பத்மநாபன் குறிப்பிடுகிறார்’ (2006, ப. 197). ‘பாரதியார் கவிதைகளை எழுதும் போது  பொருளுணர்ந்து சரியான இடத்தில் இலத்தீன், பிரெஞ்சு சொற்றொடர் களைப் பயன்படுத்தியுள்ளார்’ என்று ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார் (2008, பக். 21, 22). மேலும், பாரதி ‘தி ஹிந்து நாளிதழ் 2 செப்டம்பர்  1914 இல் பிரெஞ்சு மொழியில் லமார்த்தின் எழுதிய செர்வியாவின் வீரக் கதைப்பாடல் ஒன்றை மொழி பெயர்த்துள்ளார்’ என்று சீனி. விஸ்வநாதன் குறிப்பிடு கிறார் (1989, பக். 85 - 89).

கவிதையில் பல்வேறு குறியீடுகளின் வாயிலாகக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. குறியீட்டின் வாயிலாக இன்றைய புதுக்கவிதை எழுத்தாளர்கள் சமுதாய நடப்பியலை உணர்த்துகின்றனர். அவர்களுள் விக்தோர் ய்யூகோவும் பாரதியும் குறிப்பிடத்தக்கவர்கள்.  ‘பிரெஞ்சு மொழி நவீன இலக்கியத்தில் குறியீட்டுப் படைப்பாளிகளின் முன்னோடியாக விக்தோர் ய்யூகோ திகழ்கிறார். அதே போல் தமிழில் பாரதியும் குறியீட்டுக் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்கிறார்’. (வெ. ராஜ கோபாலன், 2006, ப. 72). எனவே, இருவரும் தங்கள் படைப்புகளில் குறியீட்டு உத்தி முறையைக் கையாண்டு உள்ளனர் என்பது தெளிவு. மக்கள் இயல்பாகப் பேசும் போதே குறிப்பால் ஒன்றை உணர்த்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். Ôசாடை பேசுதல்’ என்னும் வழக்கமும் சிலரிடையே உண்டு. இதுவும் ஒரு வகைக் குறியீடே. கவிதையிலும் இம்மரபு தொடர்கிறது. பறவை என்பதை சுதந்திரத்திற்கும் வெண்மை என்பதை அமைதிக்கும் குறியீடாகப் பயன்படுத்துவர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான குறியீடு உள்ளது. குறியீடுகளைக் கையாள்வதில் கை தேர்ந்தவர்கள் கவிஞர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் இலக்கியத்தில் குறியீட்டைப் பயன்படுத்துவது பற்றிய சிந்தனை ஏற்பட்டுள்ளது. எனினும் குறியீடு பயன் படுத்துவது காலங்காலமாகவே இருந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டில் குறியீடு களைப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் பாரதி. அவர் தன் காலத்துக்கு ஏற்ப சுதந்திர உணர்வை ஏற்படுத்தும் வகையில் தொன்மக் குறியீடுகளைக் கையாண்டுள்ளார். காளி, கண்ணன், குயில், பாஞ்சாலி, பாரதமாதா என்பவையெல்லாம் பாரதி பயன்படுத்திய குறியீடுகள் எனலாம்.

ய்யூகோவும் பாரதியாரும் வெவ்வேறு சூழலில் வாழ்ந்தாலும் இவர்களின் சமூகச் சிந்தனை என்பது விடுதலையை நோக்கியதாகவே உள்ளது. ய்யூகோ வாழ்ந்த சமூகச் சூழல் என்பது ‘மாறி மாறி நிகழ்ந்த இரு சர்வாதிகார ஆட்சி, இரு மன்னராட்சி, இரு புரட்சிகள், இரு குடியரசு’ எனப் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது (வெ.ராஜகோபாலன், 2006, ப. 62). இச்சூழலில் மன்னனை நேரடியாகவும் சில சமயங்களில் மறைமுகமாகவும் சாடுகிறார். இவருடைய படைப்பு களில் குறியீடாக ஒளி, கடல், கல்லறை, மலர், பறவை, ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

காதல், கல்லறை, புகழ், இல்வாழ்க்கை

ஒன்றன்பின் ஒன்றாய் இடைவிடாது

எழும்பி அடங்கும் அலைகள்,

காற்றின் அசைவு, ஒளிக்கதிர் ஆகிய

இவையனைத்தும் உயிர்ப்பினை உணர்த்தும் போது

பளிங்கு போன்ற என் ஆன்மாவில் பட்டு

அதில் அதிர்வை உண்டாக்கி

ஒளிரச் செய்கின்றன.

(வெ.ராஜகோபாலன், 2006, ப. 51)

காலப்போக்கில்

கல்லறை அவர்கள் கண்களையும் மூடியபின்

உங்கள் பெயர் சொல்ல எதுவுமே இராது

எங்கள் குரல் எதிரொலிக்கும் சிறு இடுகாட்டில்

எந்தவொரு மூலைமுடுக்கிலும்

ஒரு நடுகல் கூட இல்லையே,

உங்களை நினைவு கூர!. les rayons et les Ombres, Oceano Nox, (2006, ப. 86).

மேலும், ய்யூகோ சர்வாதிகாரத்தை எதிர்ப்ப வராகவும் தனிமனித சுதந்திரத்தைப் போற்றுபவராகவும் இருந்துள்ளார். அந்த வகையில் இவருடைய படைப் பான ‘லெ மிஸ்ரெஃப்’ எனும் படைப்புச் சமூக விடுதலையையும் தனிமனித விடுதலையையும் போற்றுகிறது. இப்படைப்பில் வரும் ‘ழான் வால் ழான்’ எனும் பாத்திரம் சர்வாதிகாரத்தை எதிர்த்துத் தனி மனிதனின் விடுதலையை உணர்த்துகிறது. இப்புதினம் பற்றி வெ. ராஜகோபாலன், பின்வருமாறு குறிப்பிடு கிறார் : ‘இந்த நீண்ட புதினத்தில் ய்யூகோ, சமுதாயத்தில் பரவிவிட்ட அநீதிகளைச் சாடுகிறார். பேராசையால் மனிதனை மனிதன் சுரண்டுவது, பசியும் பட்டினியும் பெண்களை இழிநிலைக்குத் தள்ளுவது, பள்ளியில் படிக்க வேண்டிய பருவத்தில் பிஞ்சுக் குழந்தைகளைக் கடின கொடிய வேலை செய்ய வைத்து அவர்கள் உழைப்பை உறிஞ்சுவது போன்ற பல சமூகக் கொடுமை களை எடுத்துக்காட்டும் சம்பவங்களைப் பின்னிப் பிணைத்து ஓர் உருக்கமான, உன்னதமான படைப்பைத் தந்துள்ளார்’ (2006, ப. 67).

இப்படைப்பில் ய்யூகோ ஒரு தனிமனிதனைக் குறியீடாகப் படைத்து மன்னராட்சியைச் சாடுகிறார். அதே சமயம் சமூகப் பொருளாதாரத்தில் நளிவடைந்த ஒருவன் எவ்வாறு சர்வாதிகார ஆட்சியால் துன்புறுகின்றான் என்பதையும் சித்திரிக்கிறார். இவரைப் போன்று பாரதியாரும் சமூக விடுதலைக்காக அக்னி, பாரதமாதா, குழந்தை, பறவை, பாஞ்சாலி முதலிய வற்றைக் குறியீடாகப் பயன்படுத்துகிறார். பாரதியார் பாடல்களில் ‘பாரத மாதா’ எனும் குறியீடு இயல்பாகவே அவருடைய கவிதைகளில் புலப்படுகின்றது. ‘பாஞ்சாலி சபதம்’ எனும் படைப்பில் அவர் ஏன் பாஞ்சாலி எனும் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

யார் இந்தப் பாஞ்சாலி? என்கிற கேள்வி நம்மிடையே இயல்பாக எழுகின்றது. மகாபாரதம் இந்தியாவின் முக்கியமான தொன்மக் காவியமாய்த் திகழ்கின்றது. இதில் கூறப்படும் செய்தி மண்ணாசையால் ஏற்படும் ஒரு குடும்பச் சண்டையாகும். இதிலுள்ள ஒரு பாத்திரத்தை அவர் வாழ்ந்த சூழலுக்கேற்ப  ‘பாஞ்சாலி சபதம்’ என்று  படைத்துள்ளார். இவை எல்லாவற்றையும் ஒரு மையத்தில் வைத்து நோக்கும் போது ஏன் பாஞ்சாலி எனும் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்கிறார் பாரதியார். அதாவது, பாரதியார் ஆங்கில ஏகாதி பத்தியத்தை எதிர்க்க பாஞ்சாலி என்னும் பாத்திரத்தைப் பாரத மாதாவாகச் சித்திரிக்கிறார். பாஞ்சாலி சபதத்தை ஆய்வு செய்த வீ.சி. கந்தையா இதனைப் பின்வருமாறு  குறிப்பிடுகிறார்.

பாரதக் கதையை அடிப்படையாகவும் பெண் விடுதலை, தேசிய விடுதலை ஆகியவற்றை நோக்கமாகவும் கொண்டு, திருவருட்பெருமை, விதியின் வலிமை, தருமமே வெற்றிபெறும் என்னும் உண்மைகளை மக்கள் மனதில் பதியச் செய்யும் பொருட்டுப் பாஞ்சாலி சபதம் எழுதினார். (1992, ப. 532)

இக்கூற்றின் வழிப் பார்க்கும் போது பாஞ்சாலி சபதம் தேசிய விடுதலையின் பொருட்டுப் பாரதியால் படைக்கப்பட்டது மேலும் பாரதியார் பாரதத் தாயை மனதில் நினைத்துப் பாஞ்சாலியைக் குறியீடாகப் படைக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சியில் பாரதமாதா அடிமைப்பட்டுக் கிடப்பதும், அதே சமயம் ஆங்கிலேய ஆட்சியின் போது நம் நாட்டுப் பெண்கள் ஆங்கிலே யருக்கு அடிமைகளாகவும் ஆண்களின் இச்சையைப் போக்குபவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் இதற்கு நம்மவர்களே துணை போனதுதான் மாபெரும் பிழை என பாரதி கருதுகிறார் என்று வீ.சி கந்தையா குறிப்பிடுகிறார். இதே சூழல் மகாபாரதத்திலும் இருப்பதை உணர்ந்த பாரதி பிறர் பொருளின் மீது ஆசைப்பட்ட துரியோதனனாலேயே தரும இராஜ்ஜியம் இழக்கப்பட்டது. என்பதை உணர்த்தும் விதமாகப் பாஞ்சாலியைப் பாரத மாதாவுக்குக் குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

துச்சா தனன்எழுந்தே – அன்னை

துகிலினை மன்றிடை உரிதலுற்றான்

பொன்னொளி வாழ்த்திடுவார் – அந்தப்

பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல்

கண்ணபிரான் அருளால் – தம்பி

கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய்

வண்ணப்பொன் சேலைகளாம் – அவை

வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!

எண்ணத்தில் அடங்காவே அவை

எத்தனை எத்தனை நிறத்தனவே! – துகிலுரிதல் – 201

என்னும் பாடல் வரிகளுக்கு விளக்கம் தரும் பி. ஸ்ரீ. ‘பாரதியும் தாகூரும்’ எனும் நூலில் இதனை இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘பாஞ்சாலி சபதம் பாரத மாதாவின் அடிமை நிலையை மனத்திற் கொண்டு பாரதக் கதையின் ஒரு நிகழ்ச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு புது உருவம் கொடுக்கப்பட்ட படைப்பு எனப் பல திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர். உரிமைகளையும் உடைமைகளையும் இழந்து அடிமையாய் நின்ற பாரத மாதாவின் நிலை தான் பாஞ்சாலி சபதத்தில் ஆடை குலைவுற்று நின்ற பாஞ்சாலியின் நிலையெனப் பாரதியார் கூறுகிறார். பின்னர் கண்ணன் அருளால் பாஞ்சாலியின் ஆடை மென்மேலும் வளர்வதுபோல முழுச்சுதந்திரம் அடையப் போகும் பிற்கால நிலையை இக்காவியத்தில் உள்ளுறுத்தப் பட்டுள்ளது’. (1970, ப. 49) இக்கூற்றுச் சரியானதுதான் என்றும் தேச விடுதலையே பாஞ்சாலி சபதத்தில் விஞ்சி நிற்கின்றது என்றும் சி.கனகசபாபதி, கு.ப.ராஜ கோபாலன், பிரேமா நந்தகுமார், ரா.அ.பத்மநாபன், க.கைலாசபதி, வீ.சி.கந்தையா முதலானோரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர்.

மேற்காணும் ஆதாரங்களின் வழியும் கிடைத்தத் தரவுகளின் அடிப்படையிலும் நோக்கும் போது காலத்தால் முற்பட்ட ய்யூகோவின் லெ மிஸெரபல் எனும் புதினத்தில் வரும் ழான் வால் ழானும், பாஞ்சாலி சபதத்தில் வரும் பாஞ்சாலியும் நாட்டு விடுதலைக்காகக் கவிஞர்களால் குறியீடுகளாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை விளங்கமுடிகின்றன. பாரதிக்கு விக்தோர் ய்யூகோவிடமிருந்தும் தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதை இக்குறியீட்டு உத்தியை வைத்து அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், இதனை வலுசேர்க்கும் விதமாக 1909-ஆம் ஆண்டு இந்தியா நாளிதழில் வெளிவந்த ஓவியமும் சுதந்திரம் மக்களை வழி நடத்திச் செல்கிறது எனும் பிரெஞ்சு தேசத்து ஓவியமும் பெண்ணை ஒரு சுதந்திர தேவியின் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.

பயன்பாட்டு நூல்கள்

1) ஐசக் சாமுவேல் நாயகம், டி. எச். (1992). பாரதியாரின் கவிதை நூல்கள் குறித்த ஆய்வுகள் ஒரு மதிப்பீடு. மார்த்தாண்டம், கிரிஸ்டல் அச்சகம்.

2) பத்மநாபன், ரா.அ. (2006). சித்திர பாரதி. நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.

3) ராஜகோபாலன், வெ. (2000). ஃபிரெஞ்சு இலக்கிய வரலாறு முதல் பாகம். புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு புத்தகச் சங்கம்.

4) ... (2003). ஃபிரெஞ்சு இலக்கிய வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டு. சென்னை: காவ்யா பதிப்பகம்.

5) ---. (2006). ஃபிரெஞ்சு இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு. சென்னை: காவ்யா பதிப்பகம்.

6) விசுவநாதன், சீனி. (1989). பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு. சென்னை: மாருதி பிரஸ்.

7) வேங்கடாசலபதி, ஆ. இரா. (2008). பாரதி கருவூலம். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.

Pin It