தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாரதிக்கு புனித பிம்பத்தைக் கட்டமைக்கும் வேலையை அவரது பக்தகோடிகள் செய்து வருகின்றார்கள். தற்போது அந்தப் பணியில் பாசிச பிஜேபியும் தீவிரமாக கரம் கோர்த்திருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பல் ஒருவரை ஆதரிக்கின்றது என்றால் அவர்களின் சித்தாந்தங்களுக்கு ஏற்ற ஏதோ ஒன்றை அவர் செய்திருக்கின்றார் என்றுதான் அர்த்தம்.

பெரியார் சிலையை உடைப்போம் எனச் சொல்லும் கும்பல்கள் ஏன் பாரதியாருக்கு சிலை வைக்கின்றார்கள் என்பதையும், ஏன் விழா எடுக்கின்றார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொண்டால் ஏன் பாரதி பார்ப்பன பாசிச கும்பல்களுக்கு உவப்பானவராக இருக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பாரதியாரின் சாதிவெறியும், ஆரிய மேலாதிக்க வெறியும், போலியான தேசபக்தியும், அவரது பிரிட்டிஷாருக்கு எதிரான 'வீரமும்' சாதாரணமானது கிடையாது. அனைத்திலும் போலித்தனத்தை கடைபிடித்ததோடு அதை மறைக்காமல் தன்னுடைய எழுத்துகளிலும் வெளிப்படுத்தியவர்.bjp celebrates bharathi birthday'சமூகம்' என்ற தலைப்பில் சாதித் தொழிலை ஆதரித்து எழுதுவதோடு சாதிரீதியான வேலைப்பிரிவினையில் சீர்கேடு ஏற்பட்டால் மானுட சாதியே வீழ்ந்துவிடும் என மனுவைப்போல பதட்டப்படுகின்றார். அதே வேளையில் தன்னுடைய பார்ப்பன பெருமையையும் தூக்கி வைத்துப் பேசுகின்றார்

“வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
நாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி”

'கண்ணன் என் தந்தை' என்ற பாடலிலும் அதே போல சாதிய சனாதனத்தை ஆதரித்து எழுதுகின்றார்.

“நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்” என்கிறார்.

மேலும் “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக தமிழ்மொழிக்கு இலக்கணம் செய்து கொடுத்ததே அகத்தியன் என்ற பார்ப்பான்தான் என உறுதியாகச் சொல்லும் பாரதி, மூன்று குலத்தமிழ் மன்னர்கள் தமிழ் வளர்த்தார்கள் என்று பச்சைப் பொய்யை சொல்கின்றார். உண்மை என்னவென்றால் எந்தத் தமிழ் மன்னனும் தமிழை வளர்க்கவில்லை என்பதும், அவர்கள் சமஸ்கிருதத்தைத் தான் வளர்த்தார்கள் என்பதும், அதற்கு சாமானிய உழைக்கும் தமிழ் மக்களை ஒட்டச் சுரண்டி பார்ப்பனர்களை கொழுக்க வைத்தார்கள் என்பதும்தான் உண்மை. இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இறுதியில் செத்துப்போன சமஸ்கிருதத்துக்கு நிகராக வளர்ந்தேன் என தமிழைச் சொல்வதன் மூலம் தன் பார்ப்பன விசுவாசத்தையும் சாதித் திமிரையும் அப்பட்டமாகக் காட்டுகின்றார்.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”

சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசியதற்கு எதிர்வினையாக எழுதிய பாரதி,

“சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.”

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?”

என்று கதறியிருந்தார். இன்று எப்படி பார்ப்பன சங்கிகளுக்கு எதிராகப் பேசினால் இந்துக்களுக்கு எதிராகப் பேசுகின்றார்கள் என்று இந்து முன்னணியில் இருந்து ஆர்.எஸ்எஸ் சங்கிகள் வரை நச்சுப் பரப்புரையை செய்கின்றார்களோ அதே வேலையைத்தான் பாரதியும் அன்று செய்தான். சொல்லப் போனால் இவர்களுக்கு எல்லாம் அரசியல் குருவே பாரதிதான்.

இப்படிப்பட்ட பாரதிதான் சுயசாதி மறுப்பாளனாக கட்டமைக்கப்படுகின்றான். பாரதியின் சுயசாதிவெறியையும் அவனது போலி ஏகாதிபத்திய எதிர்ப்பையும் ஒருசேரத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எழுதிய மன்னிப்பு கடிதமே பெரிய சான்று.

தன்னை விடுதலை செய்யும்படி கெஞ்சி, கடிதம் எழுதிய பாரதி, ஒருகட்டத்தில் தன்னுடைய பிறப்பையும், அந்தஸ்த்தையும் காரணம் காட்டி வெட்கக்கேடான முறையில் மன்னிப்பு கேட்கின்றார். அதாவது அந்நியன் பட விக்ரம்போல “தயிர்சோறு தின்கின்ற தன்னால் இந்த அடியைத் தாங்க முடியாது” எனச் சொல்கின்றார்.

“இந்தச் சிறை நிலைமைகள் என்னைப் போன்ற பிறப்பும், அந்தஸ்தும் உடைய ஒருவரால் ஏற்றுக் கொள்ள முடியாதவை மட்டுமல்ல, என் உடல் நலனுக்கு அபாயத்தை விளைவிக்கும் சாத்தியங்களையும் கொண்டுள்ளவையும்கூட” என்கின்றார்.

அதே போல “மாட்சிமை தாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகி விட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும்" என்கின்றார்.

பாரதி பார்ப்பனர் என்பதால் மிக இயல்பாகவே பிரிட்டிசாரிடம் மன்னிப்பை எந்தக் கூச்சமும் இல்லாமல் பிச்சையாகக் கேட்கின்றார். அத்தோடு “மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்க வேண்டுமென யாசிக்கிறேன்’ எனச் சொல்வதன் மூலம் பிரிட்டிசாரின் கால்களிலேயே இறுதியில் விழுந்து விடுகின்றார். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாரதியின் மன்னிப்புக் கடிதத்தை படித்தீர்கள் என்றாலே, அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிய பாரதியிடம் பிரிட்டிசார் மீதான அச்சம் எவ்வளவு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஓம் சக்தி

28 நவம்பர் 1918

பெறுநர்,

மாட்சிமைதாங்கிய பெண்ட்லன்ட் பிரபு,
கவர்னர்,
புனித ஜார்ஜ் கோட்டை,

சி.சுப்ரமணிய பாரதியின் பணிவான விண்ணப்பம்.

மாட்சிமை தாங்கிய பிரபுவுக்கு இது இனிதாக இருக்கட்டும்.

புதுச்சேரியில் இருந்து என் சொந்த மாவட்டமான திருநெல்வேலி செல்லும் வழியில் கடலூரில் நான் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.

எனது விஸ்வாசத்தைத் தெரிவித்து பல வாக்குறுதிகள் அளித்த பிறகு என்னை நேரில் சந்தித்து உரையாட மாட்சிமை தாங்கிய பிரபுவின் அரசு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்-டி.ஜ.ஜி. (சி.ஐ.டி.) அவர்களைப் புதுவைக்கு அனுப்பியது மாட்சிமைதாங்கிய தங்களுக்கு நினைவிருக்கும்.

அந்த உரையாடலின்போது அரசாங்கம் தொடர்பான எனது அணுகுமுறையில் முழுவதும் திருப்தி அடைந்த டி.ஐ.ஜி. அவர்கள், முற்றிலும் போர்க்காலத்தைக் கணக்கில் கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தின் ஏதாவது இரண்டு மாவட்டத்தில் காவலில் இருக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார்.

அந்த யோசனைக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.

ஏனெனில், அரசியலை முற்றிலும் விட்டொழிப்பதாக நான் அறிவித்த பிறகு, போர் நடந்து கொண்டிருக்கும்போதுகூட, என் நகர்வுகளைத் தடுப்பதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இப்போதோ போர் முடிந்துவிட்டது. அதிலும் நேச அணியினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் அமைதியான ஒரு குடிமகனாக பிரிட்டிஷ் இந்தியாவில் குடியமர்ந்து வாழ்வதற்கு எனக்கு எந்த சங்கடங்களும் நேராது என்று முழுவதும் நம்பி புதுச்சேரியில் இருந்து கிளம்பி வந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நான் கைது செய்யப்பட்டு கடலூர் மாவட்டச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளேன். இந்தச் சிறை நிலைமையை நீளமாக விவரித்து மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு சோர்வை ஏற்படுத்த விரும்பவில்லை.

ஆனால், இந்தச் சிறை நிலைமைகள் என்னைப் போன்ற பிறப்பும், அந்தஸ்தும் உடைய ஒருவரால் ஏற்றுக் கொள்ள முடியாதவை மட்டுமல்ல, என் உடல் நலனுக்கு அபாயத்தை விளைவிக்கும் சாத்தியங்களையும் கொண்டுள்ளவையும்கூட.

மாட்சிமை தாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகி விட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும்.

மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்க வேண்டுமென யாசிக்கிறேன்.

- சி.சுப்ரமணிய பாரதி

பாரதியாரின் இந்த மன்னிப்புக் கடித்தத்தை நாம் சாவர்கரின் மன்னிப்பு கடிதத்தோடு ஒப்பிட்டோம் என்றால், பார்ப்பனர்களின் வீரத்தைப் புரிந்து கொள்ள முடியும். அந்தமான் சிறையில் இருந்து 1913 ஆண்டு இந்திய அரசின் உள்துறை உறுப்பினருக்கு சாவர்கர் எழுதிய கடிதத்தில்

“… 1906-1907-ம் ஆண்டில் இந்தியாவின் நம்பிக்கையற்ற சூழல் எங்களை கரடுமுரடான பாதைகளுக்குத் தள்ளியது. ஆனால் இன்று இந்தியாவின் மீது அக்கறை கொண்ட மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் கண்மூடித்தனமாக அதில் அடியெடுத்து வைக்க மாட்டான்.

ஆங்கில அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவித்தால், அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு உறுதியாகப் பாடுபடுவதுடன் அரசாங்கத்திற்கும் நம்பகமாக நடந்து கொள்வேன்…” என்றும்,

“…அரசாங்கத்திற்கு உண்மையானவனாக நான் மாறியிருப்பதால் என்னை முன்பு வழிகாட்டியாக எண்ணி தவறான பாதைக்குச் சென்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் மாறிவிடுவார்கள். என்னுடைய மாற்றம் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதால் அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை சிறையிலேயே வைத்திருந்தால் எந்தப் பயனும் இல்லை.

மாட்சிமை தாங்கியவர் மட்டுமே கருணையுள்ளவராக இருக்க முடியும். இந்த ஊதாரிக்கு வேறு என்ன போக்கிடம் இருக்கிறது?...”

என்று எழுதியதன் மூலம் பாரதி பிரிட்டிசாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து எப்படி தப்பிப்பது என்று வழிகாட்டியதில் முன்னோடியாக சாவர்கர் இருக்கின்றார்.

இருவருக்கும் இருந்த ஒற்றுமை என்பது தங்களை வெளியே விட்டால் பிள்ளை பூச்சிகளைப் போல நடந்து கொள்வோம் என்பதும், கைதுசெய்து சிறையில் வைக்கும் அளவுக்கு தாங்கள் ஒர்த்தான ஆள் கிடையாது என்பதும்தான்.

சிறையில் இருந்து வெளியே வந்த பாரதி பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனார் என்பதும், சாவர்கர் இன்னும் ஒருபடி மேலே போய் பிரிட்டிசாரிடம் பென்சன் வாங்கி வயித்தைக் கழுவினார் என்பதுதான் இருவரைப் பற்றியும் கழுவி ஊற்றப்படும் வரலாறுகளாக உள்ளது.

தமிழக அரசு சார்பில் உத்திரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புனரமைப்பு செய்ததோடு அவருக்கு நினைவு இல்லத்தினையும் அமைத்து, அவரது மார்பளவுச் சிலையினையும் முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக கடந்த வாரம் திறந்து வைத்தார்.

ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் பாரதியைக் கொண்டாடுவதும், மற்றொரு பக்கம் திராவிட மாடல் அரசு பாரதியை அவரது தகுதிக்கு மீறி கொண்டாடுவதையும் பார்க்கும் போது தில்லான மோகனாம்பாள் சிவாஜி கணேசனையும், பத்மினியையும் பார்த்தது போலவே இருக்கின்றது என்று ஊருக்குள் பேசிக் கொள்கின்றார்கள்.

- செ.கார்கி

Pin It