கடந்த 18.09.11 அன்று மறைந்த தோழர் சி.எஸ். என்றழைக்கப்படும் சி.சுப்பிரமணியம் தென்னிந்திய இடதுசாரி இயக்க வரலாற்றை மிக விரிவாகக் கட்டமைத்த வரலாற்று அறிஞர் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி 1950கள் வரையிலான காலங்களில் தென்னிந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்கல்விக்காகச் சென்றவர்கள், தென்னிந்தியப் பகுதிகளில் இடது சாரி இயக்கப்பணிகளில் ஈடுபட்டவர்கள் ஆகிய பிறர் குறித்த விரிவான வரலாற்றுப்பதிவுகளைச் செய்தவர் தோழர் சி.எஸ். ஆவார். இவர் உருவாக்கிய வரலாற்று நூல்களைப் பின்வரும் வகையில் நாம் தொகுத்துக்கொள்ள முடியும்.

-      தென்னிந்தியாவிற்கு 1927இல் வருகை புரிந்த ஷப்பூர்ஜி சக்லத்வாலா என்ற பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் செயல்பட்ட ஒரே இந்திய கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலாறு குறித்தப் பதிவுகள்

-      1931-32 ஆம் ஆண்டுகளில் சென்னையில் கம்யூனிஸ்ட்கட்சி அமைப்பதற்கான அடித்தளங்களை உருவாக்கிய தோழர் தாதா அமீர் ஹைதர் தொடர்பான வரலாற்றுப் பதிவுகள்.

-      1936களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச்செயலாளராக செயல்பட்ட தோழர் எஸ்.வி.காட்டே தொடர்பான வரலாற்றுப் பதிவுகள்

-      ஐரோப்பாவில் புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்ட எம்.பி.டி.ஆச்சார்யா அவர்கள் குறித்த ஆங்கிலநூல்.

-      தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான தோழர் சிங்காரவேலு குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் : தோழர் சிங்காரவேலு அவர்களின் கட்டுரைகள் அடங்கிய நான்கு தொகுப்பு நூல்கள் மற்றும் சிங்கார வேலரின் கான்பூர் சதி வழக்கு குறித்த நூல்.

-      இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்த மிகச் சுருக்கமான ஆங்கில நூல்

-      பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்த பாரதி தரிசனம் இரண்டு தொகுதிகள்.

தோழர் சி.எஸ்.அவர்கள் 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்ந்து மறைந்தார். மாநிலக்கல்லூரியில் வரலாற்று மாணவனாகப் படித்த அவர் இலண்டன் நகரத்திற்கு மேல் படிப்பிற்காகச் சென்று ஒரு கம்யூனிஸ்டாக இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். 1930 தொடக்கம் அவர் மறையும் வரை சுமார் 80 ஆண்டுகள் இந்திய இடதுசாரி இயக்கத்திற்கெனவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தோழர் ஆவார். 1940களின் இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியோடு தோழர் சி.எஸ். அவர்களுக்கு அவரது காதல் திருமணம் தொடர்பான முரண்பாடு உருவானது. அந்தக் கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இவர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கியது; இருந்தாலும் கட்சியின் மீது தோழர் சி.எஸ். மிகுந்த ஈடுபாடு கொண்டு பிற்காலங்களில் கம்யூனிஸ்ட்கட்சியில் இணைந்து செயல்பட்டார். கம்யூனிஸ்டுகள் எந்த செய்தியையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தி சேகரிப்புக் குழு ஒன்று இவரது முயற்சியால் உருவாக்கப்பட்டது. இக்குழு பல்வேறு கோப்புக்களின் மூலம் அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்து வந்தது.

இக்கோப்புக்களின் துணைகொண்டே 1937 முதல் வெளிவந்த ஜனசக்தி இதழின் பல கட்டுரைகள் எழுதப்பட்டன. ஜனசக்தி இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்து அவ்விதழ் தரத்துடன் வெளிவருவதற்கு சி.எஸ். அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. 1970களில் தென்னிந்திய ஆராய்ச்சி மையம் என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு ஆய்வுகளைச் செய்வதற்கும் அவர் திட்டமிட்டார். பல்வேறு கொடுமையான அடக்குமுறைகளுக்கும் தலைமறைவு வாழ்க்கைக்கும் ஆளான கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஆவணங்களைப் பாதுகாப்பது என்பது மிகுந்த சிக்கலான ஒன்றாகும்; இருந்தாலும் தோழர் சி.எஸ்., தோழர் கே.முருகேசன் அவர்களோடு இணைந்து பல அரிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தென்னிந்திய இடதுசாரி இயக்க வரலாற்றை ஆதார பூர்வமாகக் கட்டமைத்ததன் அடையாளமே மேலே நாம் குறிப்பிட்டுள்ள நூல்களாகும்.

       மும்பையில் பிறந்த டாடா குடும்பத்தைச் சேர்ந்த தோழர் சக்லத்வாலா லண்டனுக்குச் சென்று வாழத் தொடங்கினார். பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்குப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். அந்தப் பாராளுமன்றத்தில் இந்தியாவில் இருந்து சென்ற ஒரே கம்யூனிஸ்டாக அவர் செயல்பட்டார். அதன்மூலம் இந்தியாவில் பிரித்தானியர்கள் செய்யும் சுரண்டல்களை அம்பலப்படுத்தினார். அவர் 1927 இல் இந்தியாவிற்கு வருகை புரிந்து இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் சொற்பொழிவாற்றினார். தோழர் சி.எஸ்., சக்லத்வாலாவின் இந்திய வருகை தொடர்பான வரலாற்றுப்பதிவை தமது நூலில் செய்துள்ளார். சென்னை நகரத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அன்றைய செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவற்றையெல்லாம் தொகுத்து மொழியாக்கம் செய்து இந்நூலை உருவாக்கியுள்ளார். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவினுடைய சிக்கல்களை இந்தியாவில் பிறந்த கம்யூனிஸ்ட் எவ்வகையில் பதிவு செய்தார் என்பதற்கான அரிய ஆவணமாக தோழர் சி.எஸ்.சின் இந்த நூல் அமைந்துள்ளது.

       ‘தென்னிந்தியாவைக் கண்டேன்’ என்ற நூலைப் பதிப்பித்த தோழர் சி.எஸ்., தோழர் அமீர்ஹைதர் சென்னையில் கம்யுனிஸ்ட் கட்சியை எப்படி வளர்த்தெடுத்தார் என்பதற்கான விரிவான பதிவுகளை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. உலகம் முழுவதும் கப்பல் பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்ற அமீர் ஹைதர் சென்னையில் தங்கியிருந்த காலங்களில் தமிழக கம்யூனிஸ்ட் இயக்க உருவாக்கத்திற்கு மிக முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார் என்பதை இந்நூல் வழி அறிகிறோம். தோழர் ஜி.அதிகாரி ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று நூலை தோழர் ஆர்.பார்த்தசாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார். அந்நூலைப் பதிப்பித்த சி.எஸ். பல்வேறு இணைப்புக்களை அந்நூலில் கொடுத்துள்ளார். அதன் மூலம் தென்னிந்திய இடதுசாரி இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

       இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச்செயலாளரான தோழர் எஸ்.வி.காட்டே குறித்துப் பலரின் நினைவுக்கட்டுரைகள் அடங்கிய நூலை சி.எஸ் பதிப்பித்துள்ளார். எஸ்.ஏ.டாங்கே, சி.ராஜேஸ்வரராவ், ஜி. அதிகாரி, எம்.பி. ராவ், ஏ.எஸ்.கே, கே.முருகேசன், சி.எஸ்., இராதாகிருஷ்ண மூர்த்தி, கே.இராமநாதன் ஆகியோர் காட்டே குறித்து எழுதிய கட்டுரைகள் தோழர் ஜமதக்கினி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகளைப் பதிப்பித்த சி.எஸ். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை ஆவணமாகப் பதிவாக்கியுள்ளார். துரதிருஷ்டவசமாக கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை எழுதுபவர்கள் இவ் ஆவணங்களை உரிய முறையில் பயன்படுத்துகிறார்களா என்பது ஐயத்திற்குரியது. எம்.பி.டி ஆச்சார்யா லண்டனுக்குப் படிக்கச்சென்று இந்திய தீவிரவாத விடுதலை இயக்கத்தில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். அவர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் சென்று இந்தியாவில் பிரித்தானியர்களுக்கெதிரான போராட்டத்தை வலுவாகக் கட்டமைத்தவர். மாஸ்கோவிற்குச் சென்று லெனினை சந்தித்தவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியன்றை கிரம்ளின் நகரத்தில் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். இவ்வகைல் ஒரு இந்தியர் ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்ட மிக அரிய தரவுகளை எம்.பி.டி ஆச்சார்யா குறித்த நூலில் தோழர் சி.எஸ். பதிவு செய்துள்ளார். இந்நூல் பல்வேறு அரிய தகவல்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய முக்கியமான நூலும் கூட.

       தோழர்கள் தாதா அமீர் ஹைதர், சக்லத் வாலா, எஸ்.வி.காட்டே மற்றும் எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோர் வரலாறுகளை மிகவிரிவாகப் பதிவுசெய்தவர் தோழர் சி.எஸ். இவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றை தோழர் கே.முருகேசன் உதவியோடு ஆங்கிலத்தில் முதலில் எழுதினார் (1975). இதன்மூலம் தென்னிந்தியாவில் செயல்பட்ட சிங்காரவேலர் குறித்த அகில இந்திய அளவிலான புரிதல் உருவானது. இச்சிங்காரவேலர் குறித்த வரலாற்று நூலை எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சிங்காரவேலருடைய பல்வேறு சொற்பொழிவுகளையும் கட்டுரைகளையும் நான்கு தொகுதிகளாகத் தோழர்கள் சி.எஸ்.சும் முருகேசனும் வெளிக்கொண்டு வந்ததைக் கூறலாம். இத்தொகுதிகள் 1920 களின் இறுதி மற்றும் முப்பதுகளில் தமிழ் நாட்டில் சமதர்ம இயக்கம் உருப்பெற்று வளர்ந்து வந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளன. ஈ.வெ.ரா. பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம், சிங்காரவேலர் முன்னெடுத்த சமதர்ம இயக்கம் ஆகியவற்றின் தொடர்புகளை இக்கட்டுரைத் தொகுப்புகள் வழி நாம் புரிந்துகொள்ள முடியும். இக்கட்டுரைத் தொகுப்புகளின் தலைப்புகளே அப்பொருள்களில் அமைந்திருப்பதை அறிகிறோம். தோழர் சிங்காரவேலர் குறித்த கான்பூர் சதி வழக்கு எனும் நூல் சிங்கார வேலர் குறித்த தவறான தகவல்களை நேர் செய்துள்ளது. அதைப்போலவே தமிழில் எழுதப்பட்ட சிங்காரவேலர் குறித்த வாழ்க்கை வரலாறு, தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம், சமதர்ம இயக்கம் ஆகியவை தொடர்பான மிகவிரிவான வரலாற்று ஆவணங்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆங்கில நூலை விட மிக விரிவான பல்வேறு தகவல்கள் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.

       பாரதியார் எழுதிய பல்வேறு ஆக்கங்கள் ரா.அ.பத்மநாபன் மற்றும் பெ.தூரன் ஆகியோரால் அறுபதுகளில் தொகுக்கப்பட்டன. அம்மரபில் தோழர் சி.எஸ் பதிப்பித்த பாரதியாரின் இந்தியா பத்திரிகை கட்டுரைகள் குறித்த ‘பாரதி தரிசனம்’ இரு தொகுதிகள் மிக முக்கியமான பங்களிப்பு ஆகும். பாரதியியல் ஆய்வில் இத்தொகுதிகள் தனித்துக் கூறத்தக்கன.

       கம்யூனிஸ்டாக வாழ்ந்த தோழர் சி.எஸ். தம் வாழ்நாட்களில் செய்த வரலாற்று ஆய்வுகள் தமிழ்ச்சமூகத்தால் என்றும் நினைக்கப்படும்.

Pin It