குற்றங்கள் தொடர்பான தண்டனைகள் நடைமுறைக்கு வருவது குறித்து பல்வேறு கருத்துமாறுபாடுகள் உள்ளன. மரண தண்டனை உலகின் பல்வேறு நாடுகளில் எதிர்ப்புக்குள்ளாகி இன்று பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதில்லை. இத்தகைய சூழலில் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அம்மூவருக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலான போராட்டங்கள் தமிழகமெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையட்டி பல்வேறு கூட்டங்களும் நிகழ்வுகளும் உண்ணாவிரதங்களும் நடந்தேறி வருகின்றன.

நிகழ்வு : 1

 21 செப்டம்பர் 2011 அன்று சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் செயல்படும் திரைவெளி என்னும் அமைப்பில் மரண தண்டனைக்கு எதிரான ஆவண மற்றும் குறும்பட விழா ஒன்று நடத்தப்பட்டது. போலந்து, ஜப்பான், ஜெர்மனி, இந்தியா (மலையாளம்) ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் திரையிடப்பட்டு அது குறித்த விவாதமும் நிகழ்த்தப்பட்டது. அரசு நீதியின் பெயரால் நிகழ்த்தும் கொலை குற்றவாளிகள் செய்யும் கொலைகளைவிட வன்மமானது என்றும் மரண தண்டனை குற்றங்களுக்குத் தீர்வாகாது என்றும் குற்றமற்றவர் மரண தண்டனையை அடையும்போது அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்று பல்வேறு கருத்தியல்கள் அப்படங்களின் மூலம் முன்வைக்கப்பட்டன.

நிகழ்வு : 2

 29 செப்டம்பர் 2011 அன்று சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை, அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, இதழியல் மற்றும் தொடர்பியல் துறை ஆகிய மூன்று துறைகள் ஒருங்கிணைந்து மரண தண்டனைக்கு எதிரான கலை நிகழ்வுகளைப் புத்தர் கலைக்குழு வாயிலாக நிகழ்த்தின. பறையாட்டமும் உயிர், மரண கயிறு, கொலைவெறி தண்டனை ஆகிய மூன்று நாடகங்களும் நிகழ்த்தப்பட்டன. இவை மரண தண்டனை குறித்த விவாதங்களையும் உணர்வுகளையும் பதிவுசெய்தன. தமிழ் இலக்கியத்துறையின் ‘திரைவெளி’ மூலம் மரண தண்டனைக்கு எதிரான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

நிகழ்வு : 3

 2 அக்டோபர் 2011 அன்று சென்னையில் இலயோலா கல்லூரியில் மரண தண்டனைக்கு எதிரான கூட்டம் ஒன்றினைச் சென்னை அரசியல் பள்ளி நடத்தியது. அதில் வ.கீதா தலைமையில் கவிஞர் இன்குலாப் மற்றும் எஸ்.வி.ராஜதுரை ஆகியோர் உரையாடினர். அவற்றில் முன்வைக்கப்பட்டவை :

- நிரபராதிகளைத் தூக்கிலிடலாமா என்னும் நிலைப்பாடு, தமிழ்த் தேசிய உணர்வு நிலையிலிருந்து மட்டுமே கிளம்பும் ஒரு நிலைப்பாடு, ஒட்டு மொத்தமாக மரண தண்டனை கூடாது எனப் பல்வேறு நிலைப்பாடுகளில் மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்பது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

- மரண தண்டனை தொடர்பான இயக்கங்கள் பல்வேறு நிலைப்பாடுகளிலிருந்து தனித்தனியாக செயல்பட்டுவருகின்றன. இவை பரவலாக்கத்திற்கு உதவும் என்றாலுமேகூட பொது அரசியல் புரிதல், குறைந்த பட்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது ஆகியவற்றை நம் கவனத்தில் கொள்ள அனுமதிப்பதில்லை.

- எத்தனையோ பேர் தூக்கிலிடப்படுகின்றனர். இந்த மூவரையும் தூக்கிலிட்டால் என்ன என்ற கேள்வி எழக்கூடும். இது ஒரு பிம்பம் தான். இந்திய அரசு தன்னுடைய தேசியத்தை நிலைநிறுத்திக் கொள்ள குறியீட்டளவிலான சட்டரீதியாகச் செய்யப்படும் கொலை இது என்கிற அடிப்படையில் இம்மூவர் தண்டனை குறித்த கருத்தாடல் முக்கியத்துவம் பெறுகிறது. நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அப்சல் குரு மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்று கூறிய அதே உச்ச நீதிமன்றம்தான் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளை அமைதிப்படுத்த அப்சல் குருவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இது போன்ற தீர்ப்புகளால் இந்திய அரசு யாரைத் திருப்திப்படுத்துகின்றது? இந்திய சமுதாயம் என்கிற எல்லைக்குள் யாரெல்லாம் இடம்பெறுகின்றனர் என்பது முக்கியம். எனவே, மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய அரசினுடைய பாதுகாப்பு வெறியைப் பற்றிய விமர்சனமாக நீள வேண்டும்.

- சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கான மரண தண்டனையைக் குறைப்பதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டப்பிரிவு 161, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 54, குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 433 ஆகியன வழங்குகின்றன. அரசியல் சட்டப்பிரிவு 161 மாநில அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரம் பிரயோகிக்கப்படக்கூடிய விடயத்தோடு தொடர்புடைய எந்தவொரு சட்டத்துக்கும் எதிராகக் குற்றம் இழைத்ததாகத் தண்டிக்கப்பட்டுள்ள எந்த ஒரு நபருக்கும் தண்டனைக் குறைப்போ தண்டனை நீக்கமோ வழங்கலாம். தண்டனை பெறுவதற்கான குற்றம், தண்டிக்கப்பட்ட இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அதிகார எல்லைக்குள் வருபவையே இந்த மூவரின் கருணை மனுக்கள் என்பது தெளிவு.

- ராஜீவ் காந்தி கொலை வன்முறை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசின் வன்முறைகள் இந்திய அமைதிப்படைகளின் வன் முறைகள், சிங்கள இராணுவ வன்முறைகள், காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தியப் பாதுகாப்புப் படைகள் நடத்தும் வன் முறைகள், பல்லாயிரக் கணக்கான குடியானவர்களின் தற்கொலை கள், காவல்துறை மரணங்கள், போலி மோதல்களில் நடக்கும் கொலை கள், பழங்குடி மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள் முதலியன கொலைகளாகவோ, குற்றங்களாகவோ ஏன் பார்க்கப் படுவதில்லை?

- மக்கள் சக்தியைச் சரியான வழியில் ஆற்றுப்படுத்தி ஜனநாயக உரிமைகளையும் வாழ்வாதார உரிமைகளையும் பெறுவதற்கான திசையில் செலுத்துவதற்குப் பதிலாக, ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தவும் குறுகிய அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு சமூக அக்கறை கொண்ட இளம் தலைமுறையினர் இரையாகிவிடக் கூடாது.

- நம் நாட்டில் கல்வியறிவு இல்லை, பெருந்தன்மை இல்லை, கலாச்சார அறிவு இல்லை, குற்றங்கள் மிகுதி என்று பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. ஆனால் இத்தகைய பண்புகள் குறை வாக இருந்தும்கூட நம்மைவிட அதிகமான வன்முறைகள் நடக்கக் கூடியதும் மிக நீண்டகாலமாக வெள்ளையின ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் நடத்தியதுமான தென்னாப்பிரிக்க நாட்டில் சுதந்திரம் பெற்ற ஆண்டிலேயே அரசியல் சட்டத்தை உருவாக்கும் போது மரண தண்டனை தேவையில்லை என்று 11 நீதிபதிகள் முன்வந்து கூறினர். இது போன்று பல்வேறு நாடுகள் மரண தண்ட னையை அங்கீகரிப்பதில்லை. எனவே, மரண தண்டனை கூடாது என்பது உலகம் தழுவிய போராட்டமாக விரிவடையும்போதுதான் குறிப்பிட்ட சில நபர்களுக்காக நடத்தப்படும் போராட்டத்திற்கான நேர்மை முழுமையாக வெளிப்படும்.

Pin It