தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் தற்காலப் பணியாளர்கள் தொடர்பான குறிப்பு

தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘குட்டி இந்தியா’ என்று அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. சிங்கப்பூரில் இப்படி அழைக்கப்படும் பகுதி, குட்டி இந்தியா என்றாலும் அது முழுக்க ‘குட்டித் தமிழ்நாடு’ தான். குட்டித் தமிழ்நாட்டிலும் குட்டித் தஞ்சாவூர், குட்டி மன்னார்குடி - அதாவது அந்தப் பகுதியில் ஞாயிறு மாலை 2 முதல் இரவு இரண்டு மணிவரை ‘மன்னார்குடி - ஒரத்தநாடு’ வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடுமிடமாக அமைந்துள்ளது.

அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த ஞாயிறு மாலைப் பொழுதுக்காட்சியைப் பதிவு செய்வது சொற்களால் சாத்தியப்படுமா? என்று எனக்குத் தோன்றவில்லை. சுமார் இரண்டு கி.மீ. சுற்றுப் பகுதியில் சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நம்மூர் திருவிழாக் கூட்டம் என்பதைவிட மேலாகக் கூட்டம். யார் இவர்கள்? ஏன் இப்படி ஞாயிறு மாலையில் மட்டும் கூடுகிறார்கள்? வயது 20 தொடக்கம் 40க்குள் இருக்கிறது. வயதானவர்கள் இல்லை. 20-30 இடைப்பட்ட வயது இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அந்நிய மண்ணில், திருமணப் பருவத்தில் இருக்கும் இந்த இளைஞர்கள் இப்படிக் கூட்டமாக நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்! தமிழ்மொழிமட்டும் அறிந்தவர்கள் இவர்கள். இவர்கள் அனைவரும் ஒப்பந்தக் கூலிகள். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு வேலை செய்ய அனுமதி பெற்ற கூலிகள். இவர்கள் திறன் அற்ற (Unskilled Labour) வேலையாட்களாகக் கருதப்படுகின்றார்கள். அதாவது, சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கில் வந்து போகும் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி இறக்குபவர்கள்; ஏழாயிரத்திற்கு மேற்பட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் நடத்தும் தொழில்களில் ஒப்பந்தக் கூலிகளாக வேலைசெய்பவர்கள். பெரும்பகுதி கட்டட வேலையில் பணிபுரிவர்கள்.

கூட்டம் கூட்டமாக நிற்கும் இந்த இளைஞர்கள் பிறந்த பகுதியில் பிறந்த எனக்கு; இவர்கள் சொந்த ஊரில் எப்படி இருக்கிறார்கள் என்ற ஒப்பீடு மனதில் ஓடியது. இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா என்று பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழ்நாட்டிலிருந்து மனிதர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலும் மலேசிய இரப்பர் தோட்டங்களிலும் தென்னாப்பிரிக்கக் கரும்பு வயல்களிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை தொடர்பாக நம்மிடம் விரிவான பதிவுகள் உள்ளன. ஆனால் நவீன ஒப்பந்தக் கூலிகளாகச் சிங்கப்பூரில் குறுகிய காலம் வாழ்ந்து, மீண்டும் மீண்டும் அங்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வாழ்க்கையைப் பற்றி இதுவரை எந்தப் பதிவும் இல்லை. சிங்கப்பூரில் வசதியாக வாழும் குடியுரிமை பெற்ற தமிழர்கள், இவர்களை இழிந்த நிலையில் பார்ப்பது, இவர்களோடு தொடர்பு கொண்டால், தங்களுடைய சுயமரியாதைக்கு இழுக்கு நேர்ந்து விடுமோ என அஞ்சுவது; இவர்களும் அவர்களோடு உறவு கொள்வதைத் தவிர்ப்பது எனப் பல பரிமாணங்களில் செயல்படுவதைக் காண்கிறோம். வேலை செய்யும் காலம் முடிந்த பிறகு சட்டத்திற்குப் புறம்பாக, ஒளிந்து ஒளிந்து வாழும் தமிழ் இளைஞர் கூட்டமும் அங்குக் கணிசமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

சிங்கப்பூரார் வீடு, கண்டிக்காரர் வீடு என்னும் சொல்லாடல்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெகுகாலமாகப் புழக்கத்தில் இருந்து வருவது தான். சிங்கப்பூரில் சம்பாதித்துச் சொந்த ஊரில் வீடு கட்டுபவர்கள்; நிலம் வாங்குபவர்கள் என்று மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்பதும் உண்மை; ஆனால் இன்றைய சூழலில், காவிரியின் கிளை நதியான புது ஆறு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வறண்டு குறைந்த நீர்வரத்து உடையதாக மாறிவிட்டது. இரண்டு பருவம் பயிர் செய்தவர்கள்; ஒரு பருவத்தில் பயிர் செய்வது என்பதே சிக்கலாகிவிட்டது. மேலும் மன்னார்குடி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டைப் பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் பழக்கம் மரபு ரீதியாக இல்லாமல் உள்ளது. அண்மைக் காலங்களில் ஓரளவு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆற்றுப் பாசனம் பொய்த்துப் போனால், வாழ்க்கை பொய்த்துப் போவதாக அமைகிறது. இதனால் மட்டும்தான் இந்தப் பகுதி இளைஞர்கள் சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள் என்று கூற முடியுமா? இல்லை. இந்தப் பகுதியில் பெரும்பான்மைச் சாதியாக உள்ள கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்களே சிங்கப்பூர் செல்கிறார்கள். தலித் இளைஞர்கள் செல்வதற்கான வாய்ப்பு குறைவு. வேலை செய்ய அனுமதி வாங்குவதற்காகத் தேவைப்படும் முன்தொகை சுமார் ஒரு இலட்சம், தலித் இளைஞர்களால் கொடுக்க முடியாது. கள்ளர்கள் தங்களுடைய வயல்களை அடமானம் வைத்துவிட்டுச் செல்கிறார்கள். இரண்டு ஆண்டு உழைத்துத் திரும்பும் இளைஞர்கள், தாங்கள் செல்வதற்காகக் கடனாக வாங்கிச்சென்ற தொகையைத் திருப்ப அடைப்பதற்குப் பெருந்தொகையைக் கொடுத்துவிடுகிறார்கள். பெரிய அளவில் கையில் மிஞ்சுவது குறைவு. பின்னர் ஏன்? இப்பகுதி இளைஞர்கள் சிங்கப்பூர் செல்கிறார்கள்? வெளிநாடு செல்லும் ஒருவகையான வறட்டு கௌரவ மனநிலை இப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் காணப்படுகிறது! எப்படியாவது சென்றுவிடத் துடிக்கிறார்கள். அவ்விதம் இயலாதவர்கள் தற்கொலை செய்து கொள்ளவும் முயலுகிறார்கள். ஒரத்தநாடு வட்டாரப் பகுதியில் அண்மையில் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலே விவரித்த பின்புலம் ஒருபக்கம். ஆனால் சிங்கப்பூரில் மந்தைகளாக வாழும் அந்த இளைஞர்களின் உழைப்பைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் கம்பெனிகள் சுரண்டுகின்றன. இதற்கு தரவு வேலை செய்து, சிங்கப்பூர் அரசாங்கம் தனது பங்கிற்கு மிகுதியான பங்குத்தொகையையும் பெற்றுக் கொள்கிறது. முழுக்க முழுக்கத் தரகனாகச் செயல்படும் சிங்கப்பூர் இராணுவ அரசு, தமிழ்நாட்டு இளைஞர்களின் உழைப்பைச் சுரண்டுவதில் முன்னணியில் உள்ளது. இத்தன்மை குறித்த ஆய்வோ, பதிவோ எதுவும் இல்லை. ஐரோப்பியர் காலத்தில் தமிழர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களின் வரலாற்றைப் பதிவு செய்கிறோம். நவீனச் சுரண்டலாகச் சிங்கப்பூரில் நடைபெறும் கொடுமை குறித்து என்ன செய்யப் போகிறோம்? தமிழ் இளைஞர்களைப் போலவே கிழக்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் சுரண்டப்படுகிறார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் தொடக்கம், காலனிய ஆட்சியாளர்களால் தமிழர்கள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் மூலம் இலங்கையில் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. உலகத்தின் மிகச் சிறந்த தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் உழைத்தார்கள்; இன்றும் உழைத்து வருகிறார்கள். மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், இரப்பர் தோட்டங்களில் கூலிகளாக அமர்த்தப்பட்டனர். மிக மதிப்புவாய்ந்த ஏற்றுமதிப்பொருட்களில் ஒன்றாக இரப்பர் உருவானது. தேயிலை, இரப்பர் போன்றே காபி மற்றும் வாசனைப் பொருட்கள் தமிழர்களின் உழைப்பால் உருவானது. ஆசிய நாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா ஆகிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் வழிக் கிடைக்கும் அநிநியச் செலவாணி மிகுதி. இவ்விதம் ஆசியாவில் கூலிகளாக அதிக அளவில் வாழும் இனக்குழுக்களில் தமிழர்களும் அடங்குவர்.

காலனியத்தால் தமிழர்களின் உழைப்பு சுரண்டப்பட்ட மேற்குறித்த வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சுரண்டல்முறை சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ளது. பன்னாட்டு மூலதனக் கிடங்குகளில் ஒன்றான சிங்கர்பூரில் மனித உடலுழைப்பு அதிகமாகத் தேவைப்படுகின்றது. தரகர்களின் மூலமாகக் கடத்தப்படும் மனிதர்கள், அங்கு நவீனக் கட்டுமானப் பணிகளில் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுகிறார்கள். அதுவும் இளைஞர்கள் இளம் வயதில் தற்காலப் பணிப்புரியும் அவர்களது மனநிலை எவ்வகையில் செயல்படும்? உலக நிகழ்வுகளைப் பற்றி அறியும் தர்க்க மரபை அவர்களால் எவ்விதம் உள்வாங்கமுடியும்? நவீன அடிமைகளாக அவர்கள் எவ்விதம் கட்டமைக்கப்படுகிறார்கள்? போன்ற பிற உரையாடல்களை நிகழ்த்துவதற்குச் சிங்கபூரில் தற்காலப் பணிபுரியும் இளைஞர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொள்ள இயலும்.

Pin It