ஈழத்தமிழர், இலங்கைத் தமிழர், அயலகத் தமிழர், புகலிடத் தமிழர், தாயகத் தமிழர் என எடுத்தாளப்படும் எந்தவொரு சொற்பிரயோகமும் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. கோடிக்கணக்கான மனிதர்களை அல்லது லட்சக்கணக்கான மக்கள் தொகுதியை அடையாளப்படுத்தும் வலிமை இவ்வார்த்தைகளுக்கு இருப்பதால், அதே வன்மையோடு இச்சொற்களுக்குள் நாம் ஊடுறுவ விழைகிறோம். வன்மத்தோடு இச்சொற்களை உடைத்து நொறுக்க வேண்டுமென்பது எமது திட்டமோ, நோக்கமோ அல்ல. ஈழத் தமிழர்கள் குறித்தும், உலகத் தமிழினம் குறித்தும் அக்கறை சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், தமிழர்களின் வீழ்ச்சிக்கும், தமிழினத்தின் பின்னடைவுக்கும், தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் குணங்களாகப் புரையோடிப் போயிருக்கும் துரோகமும், ஊழலுமே முக்கியக் காரணிகளெனப் பரவலான குற்றச்சாட்டு இப்போதும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் துரோகமும் ஊழலும் எளிதில் நிகழ்ந்து விடும் வாய்ப்புள்ள, பதப்படுத்தப்பட்ட நிலமாக, தமிழ் மனம் பலநூறு ஆண்டுகள் நிலைப் பெற்றிருப்பதற்கான அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது பார்ப்பனிய மநு தர்மம். இதுவே, வர்ணங்களை உருவாக்கி, சாதிகளைத் தோற்றுவித்து, இனக்குழுப் பகைமைகளை ஊட்டி வளர்த்து, நவீன காலம் தொடங்கும் போது இந்துத்துவ அரசியலாக வடிவம் பெற்றது. இந்தியா-இந்து-இந்திய ஒற்றுமை என செயற்கையாகக் கட்டியமைக்க முயல்வது போலவே, "நாம் தமிழர்' என பாவனை செய்வதும் கூட, தனி நபர்களின் பிழைப்புவாதத்திற்கே மீண்டும் மீண்டும் இட்டுச் செல்லும். "ஈழத் தமிழர் வரலாறு' என வெகுசனப் பத்திரிகைகள் வணிகம் செய்யும் அரசியல் வரலாற்றைத் தாண்டி, எந்தவொரு நாட்டில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் அல்லது ஒட்டுமொத்த தமிழினத்தின் சமூக வரலாறே, நமது மீளாய்விற்கும் திறனாய்விற்கும் அவசியமாகிறது.
தமிழரின் அரசியல் வரலாறும் சமூக வரலாறும் பெருமிதங்களை மட்டுமல்ல; அவலங்களையும் கழிவுகளையும் உள்ளடக்கியவைதாம். பெருமைகளில் மூழ்கித் திளைப்பவர்கள், தங்கள் கழிவுகள் தம் வீட்டு முற்றத்திலேயே நாறிக் கிடப்பதை உணர வேண்டும். நாம் குப்பையைக் கிளறுவதாக அங்கலாய்ப்பவர்கள், அதை எரித்துச் சாம்பலாக்க முன்வர வேண்டும். மநுதர்மத்தின் விதிகளை நடைமுறைப்படுத்தும் "சாதி இந்துக்கள்' அழுகிப்போன தம் சமூக வரலாற்றின் கழிவுகளைத் தூய்மைப்படுத்தும் செயல்திட்டங்களை முன் நிபந்தனைகளாகக் கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாகவே, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசியத் தமிழர்கள் குறித்தான வாழ்வியல் சிக்கல்கள், அவர்களின் போராட்டங்கள் வழியே தமிழகத்தில் கவனப்படுத்தப்பட்ட நிலையில், செய்திகளின் மீதான உடனடி கவனம் என்பதைக் கடந்து சமூக ஆய்வுக் கண்ணோட்டம் என்ற அளவிலும், "தோட்டத் தொழிலாளர்கள்' என்ற வகையினத்துள் கூலி உயர்வுக்காகப் போராடிய போது, தாமிரபரணி ஆற்றில் அரசப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாஞ்சோலை மலையக மக்களின் நினைவை மீட்டெடுக்கும் நோக்கிலும் இக்கட்டுரை காலப்பொருத்தமாகவும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
மலேசியத் தமிழர்கள் மீது தாக்குதல்; இந்திய வம்சாவளியினர் மீது மலேசிய அரசாங்கத்தின் அடக்குமுறைகள்; மலேசியாவில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன... என்றெல்லாம் கடந்த 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. 2007 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று இந்திய-அய்ரோப்பிய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்துப் பேசுகின்ற அளவிற்கு செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. மலாய் தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவுக் குரல் தந்தனர். இப்பிரச்சினை குறித்த தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கைக்கு, மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர், "இது எங்கள் உள்நாட்டு விவகாரம். யாரும் தலையிட வேண்டிய அவசியமில்லை' என பதிலடி தருமளவுக்கு பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.
தமிழர்கள் மலேசியாவில் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவதைக் கண்டித்தே, இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்துவதாக செய்திகள் அறிவிக்கின்றன. இதுபோல இன ரீதியிலான உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம்தான் இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமாகப் பரிணமித்து, இரண்டு லட்சம் தமிழர்களை யுத்த சவக்குழியில் புதைத்தது. 10 லட்சம் ஈழ மக்களை உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறும் ஏதிலிகளாக புலம்பெயர வைத்தது. இலங்கையின் வரலாற்றை, துன்பியல் அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமிருப்பதால், இந்நேரத்தில் இøதப்பற்றி இங்கு குறிப்பிட நேர்கிறது. இந்திய வம்சாவளியினராக தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குடியேறிவிட்ட மலேசியா மட்டுமல்ல, மாலத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் இன்னும் சில நாடுகளில்கூட, இந்திய வம்சாவளியினரின் குடியுரிமைகள் குறித்த அக்கறையும் இந்திய அரசுக்கு இருக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. ஆனாலும் இன அடிப்படையின் உணர்ச்சி வழி கூட்டு மன அரசியல் தொகுதியாய், திராவிட இயக்கத்தினரால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் தாயக தமிழ்ச் சமூகத்தில் இந்திய வம்சாவளியினரின் வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து அணுகப்படும் வழமையான கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பார்வையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
மலேசிய இந்தியன் காங்கிரசின் தலைவரும் மலேசிய அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவருமான டத்தோ சாமிவேலு, "எங்கள் நாட்டில் மூன்று இனங்கள் இருக்கின்றனர். இதில் அறுபத்தாறு சதவிகிதத்தினர் மலாய்க்காரர்கள். இருபத்தாறு சதவிகிதத்தினர் சீனர்கள். 7.8 சதவிகிதத்தினர் இந்தியர்கள். இவர்களைத் தவிர பழங்குடியின மக்களும் இருக்கின்றனர். மலாய், சீனர்கள், இந்தியர்கள் என மூன்று இனங்களுக்குள்ளே செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின்படி, இந்தியர்களுக்கு முழு குடியுரிமை வழங்க முடிவானது' என்கிறார். ஏறத்தாழ 8 சதவிகித இந்திய வம்சாவளியினரில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், பஞ்சாபிகள் ஆகியோரும் மதம் என்ற வகைப்பாட்டில் 90 சதவிகிதத்தினர் இந்து மதத்திலும் ஏனையோர் கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம் போன்ற மதங்களிலும் உள்ளனர். ஆனாலும் இந்திய வம்சாவளியினரில் மத-இன பெரும்பான்மையினராக வாழும் இந்து தமிழர்களையே மலேசியத் தமிழர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என பெரிதும் குறிப்பிடும் சூழல் நிலவுகிறது. இக்கட்டுரையின் பேசு பொருளாக "இந்து தமிழர்'களையே நாமும் கவனப்படுத்த எண்ணுகிறோம். ஆக, மலேசிய மக்கள் தொகையில் இவர்கள் சற்றேறக்குறைய 7 சதவிகிதத்தினர் எனக் கொள்வோம்.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியரிடமிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் அங்கிருந்த இந்திய வம்சாவளியினரைவிட, மக்கள் தொகையில் பத்து மடங்கு அதிகமிருந்த மலாய் இன மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ந்து கிடந்தது எனவும், மண்ணின் மைந்தர்களான அவர்களுக்குத் தம் வாழ்வின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வெகுகாலம் ஆனது எனவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியர்களோடு ஒப்பிடுகையில், கல்வியறிவு பெற்ற மலாய்காரர்களின் விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில்தான் மலாய்காரர்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் முன்னேறி உள்ளனர். ஆனாலும் மலேசிய நாட்டின் வளர்ச்சியிலும் மலாய் மக்களின் முன்னேற்றத்திலும் இந்திய வம்சாவளியினரான தமிழர்களின் உழைப்பைக் குறைத்து மதிப்பிட்டு விடலாகாது.
மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்களைத் திரட்டிப் போராடி வரும் "இந்து உரிமை நடவடிக்கைக் குழு' என்ற அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி குறிப்பிடுவது போல ("குமுதம் ரிப்போர்ட்டர்', 13.12.07) "பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசியாவை மேம்படுத்த-அங்கு தோட்ட வேலை உட்பட பல்வேறு வேலைகளைச் செய்வதற்காக-இந்திய மக்களை அழைத்துச் சென்றது. மலேசியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்றியதில் இந்திய மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அடிமை வேலைகளைச் செய்ததற்காக, நமது மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு பல மில்லியன் டாலர்கள் இழப்பீடு தர வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளோம்' என்ற சொற்களில் வரலாற்று ரத்தம் தோய்ந்து கிடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வரலாறு குறித்து ஒரு மீளாய்வுக் கண்ணோட்டத்துடன் நாம் தொடர்ந்து செல்லலாம் என நினைக்கிறேன்.
தமிழர்கள் "இந்துக்கள்' என வேதமூர்த்தி போன்றவர்களால் குறிக்கப்படுவதும், மலேசிய நாட்டை வளப்படுத்த அடிமை உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட "தமிழர்கள்' எவர் என்பதும் நாம் அறிய வேண்டிய முதற்கண் சமூக-அரசியல்-வரலாற்றுப் புலம். “காலங்காலமாக தங்களது குலதெய்வங்களாக வழிபட்டு வரும் கோவில்களை இடிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கின்ற வேலையில் அரசு செயல்படுகிறது. எங்களுக்குத் தெரிந்து பத்தாயிரம் இந்துக் கோயில்களை இடித்துள்ளனர். முருகன் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற அய்ந்தாயிரம் பேரை போலிசார் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்'' என்கிறார் "குமுதம் ரிப்போர்ட்டர்' நேர்காணலில் வேதமூர்த்தி. இதற்குப் பதிலளித்துப் பேசும் டத்தோ சாமிவேலு, அதே "குமுதம் ரிப்போர்ட்டர்' (6.1.2008) இதழில், “அங்குள்ள மக்களின் எண்ணிக்கையோ பதினெட்டு லட்சம். ஆனால் இருக்கும் கோயில்களோ இருபத்து நான்கு லட்சம். இதில் பதிவு செய்யப்பட்டவை மூன்றாயிரம் கோயில்கள்தான். தினமும் ஒரு கோயிலைக் கட்டுவது, ஒவ்வொருத்தரும் ஒரு கோயிலை வைத்துக் கொள்வோம் என்பது நியாயமா?'' என்று கேட்கிறார்.
ஆயிரத்து அறுநூறு ஆலயங்களையும் நூற்று எட்டு சமய அமைப்புகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு, இந்து மக்களின் பேராதரவோடு இயங்கி வரும் இயக்கமாக "இந்து சங்கம்' மலேசியாவில் செயல்பட்டு வருகிறது. இந்திய வம்சாவளியினர்-தமிழர்கள்-இந்துக்கள் என்ற வகைப்பாட்டில் இந்திய நாட்டிலோ அல்லது குடியேறிய நாட்டிலோ அல்லது புலம் பெயர்ந்த நாட்டிலோ "ஓர் இந்து' தன் உயிருக்கு நிகராகக் கொண்டாடும்/பாதுகாக்கும்/நிறுவும் முக்கிய அம்சமாக இருப்பது தன்னுடைய மத அடையாளமாகவே இருக்கிறது. இதுவே காலப்போக்கில் கிளை பரப்பி தனித்த சாதிக் குழுமங்களில் அவனை நிலைநிறுத்தி விடுகிறது. சாதி சங்கங்களை நிருவகிக்கும் தலைமைப் பீடமாகவே "இந்து சங்கம்' செயலாற்றி வருகிறது எனலாம்.
பிரிட்டிஷ் காலனிய காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட இன்றைய தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவில் கரும்பு, காபி, ரப்பர் ஆகிய தோட்டப் பயிர்களை பெருமளவில் உருவாக்கி வளர்க்க, வறுமையில் சிக்குண்டு தவித்த தமிழர்கள்-எவ்வித முன் நிபந்தனைகளும் இன்றி அழைத்துச் செல்லப்பட்டனர். வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், செங்கற்பட்டு, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்தே பெருமளவில் தமிழர்கள் மலேசியாவில் குடியமர்த்தப்பட்டனர்.
மலேசியாவில் இந்தியர்கள் குடியமர்த்தப்பட்டது (1786-1957) தொடர்பான ஓர் ஆய்வில் கேர்நைல் சிங் சாந்து என்பவர், இவ்வாறு அழைத்து வரப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை "விவசாயத் தொழில் சாதியினர்' என வகைப்படுத்தி எழுதுகிறார். தமிழகத்தில் பண்ணை அடிமை, பண்ணை வேலையாள், படியாள் என மூன்று வகை வேலைப் பிரிவினைகளில் இத்தகைய தொழிலாளர்கள் நடத்தப்பட்டதாகவும், இவ்வாறு நடத்தப்படுவதற்கு அவரவர்களின் சாதி அடையாளமாகப் பயன்பட்டதாகவும், இவர்கள் தமிழகத்திலிருந்து மலாயாவிற்குக் குடிபெயர்க்கப்பட்ட போதும், இதே அடையாளத்துடனும் சாதிப் பாகுபாட்டுடனும்தான் மலாயத் தோட்டங்களில் நடத்தப்பட்டதாகவும் இவர் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் விவசாய பண்ணைத் தொழிலை நிர்வாகம் செய்ய பயன்பாட்டிலிருந்த "கங்காணி' முறையே இங்கும் பின்பற்றப்பட்டது எனவும், இக்கங்காணி உரிமம் சாதி அடிப்படையிலேயே வழங்கப்பட்டது எனவும் இவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
1892 ஆம் ஆண்டின் சென்னை வருவாய்த் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களின்படி, விவசாயத் தொழிலாளருக்கான கூலி வேறுபாடுகள் சாதியின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன என அறிய முடிகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்த பள்ளர், பறையர் ஆகியோர் நியாயமற்ற அளவிலும், சமூக ரீதியாக ஒதுக்கப்படாமலும் விவசாயத் தொழிலாளர்களுமாக இருந்த ஏனைய சாதியினர், "நியாயமான' என்று சொல்லத்தக்க அளவிலும், கூலி பெற்றதன் விளைவாக, பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வு சாதி ரீதியான வேறுபாடுகளைத் தாங்கி நிற்கும் சமூகப் பின்புலமாக நிலவியது. இன்னும் சொல்வதானால், ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாலை முதல் இருள் கவியும் வரை என கொடூரமான வேலை நேர நிர்பந்தத்தின் கீழ் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். “ஏனைய சாதியினரைவிட அதிகமான வேலை நேரத்தை "மிராசுதாரர்கள்' என அழைக்கப்பட்ட பண்ணையார்களுக்காக செலவிட்டபோதும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலியானது, மிகவும் குறைவாக, நியாயமற்றதாக இருந்தது. கடுமையாக உழைக்க இயலாதவர்கள் பண்ணையார்கள் மற்றும் பண்ணை அடியாட்களால் கம்பு மற்றும் இரும்புத் தடிகள் கொண்டு தாக்கப்பட்டனர்'' என "இந்தியாவில் சாதிகள்' என்ற தன் நூலில் ஜே.எச். ஹட்டன் (ஒ.ஏ. ஏதttணிண) என்பவர் குறிப்பிடுகிறார்.
பொருளாதார ரீதியில் ஏழ்மையான குடிமை வாழ்க்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் உழன்றதால், தங்கள் மனம் போன போக்கில் அவர்களை மிரட்டி வேலை வாங்குவதும், எதிர்க்க முற்படும் நேரங்களில் அவர்கள் மீது வன்கொடுமைகளை ஏவுவதும் ஆதிக்க சாதியினருக்கு இலகுவாக இருந்தது. இப்படியான கொடுமைகளே, அம்மக்கள் தமிழகத்தின் விளை நிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து செல்லக் காரணமாகவும் இருந்தன. "நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்திற்கு செல்வதாக நினைத்துக் கொண்டுதான் மலாய தோட்டங்களுக்கு விவசாயக் கூலிகளாகக் குடிபெயர்ந்தனர்' என்கிறார் கே.எஸ். சாந்து. "சீனர்களை விட குறைவான கூலியையும், தரம் குறைந்த வாழ்நிலையையும் ஏற்றுக் கொண்ட திறமையான வேலையாட்கள்' என மலாய அரசாங்கமும் தோட்டப் பண்ணை முதலாளிகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழக விவசாயக் கூலிகளை மதிப்பிட்டு இருந்தனர். தமிழக விவசாய நிலங்களில் நிலவிய பண்ணையடிமைக் கொடுமைகளைக் கண்டு அஞ்சி, மலேசியத் தோட்டங்களுக்கு விவசாயக் கூலிகளாக குடிபெயர்ந்த ஒடுக்கப்பட்ட தமிழர்கள் மீது-அதே வகையான சாதிப் பாகுபாடுகளும், கூலி முறைமையும், சமூக ஏற்றத் தாழ்வுகளுமே மலாயாவிலும் சுமத்தப்பட்டு, சொல்லொணா துயரத்திற்கு ஆளாயினர்.
1844-1941 காலகட்டத்தில் மலாயாவிற்குக் குடியேறிய இந்தியத் தொழிலாளர்களின் (அரசு புள்ளி விவரப்படி) எண்ணிக்கை 2,725,917 ஆகும். கோலாலம்பூர் தொழிலாளர் துறையின் 1923-1935 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இக்காலகட்டங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 55,804 பேரும், வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1,45,844 நபர்களும், ராமநாதபுரத்திலிருந்து 19,366 பேரும், தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 59,593 பேரும், திருச்சியிலிருந்து 93,698 நபர்களும், தஞ்சை மாவட்டத்திலிருந்து 66,937 நபர்களும் மலாயாவிற்குக் குடியேறியிருந்தனர். மிக அதிக எண்ணிக்கையில் 1926 இல் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து மட்டும் 38,360 பேர் மலாயாவிற்குக் குடியேறினர். வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலும் குடியேறிய சாதிகளாக வன்னியர்களும் பறையர்களும் இருந்தனர். தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து பள்ளர், பறையர், மறவர், கள்ளர், அகமுடையார் போன்ற சாதிகள் குடியேறினர்.
விரைந்து வளர்ந்து வந்த மலாயா மாநிலங்களின் நிர்வாகத் துறைகளுக்கு எழுத்தர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட படித்த வர்க்கத்தினர் தேவைப்பட்டபோது, மலையாளிகளும் இலங்கை ஆதிக்க சாதித் தமிழர்களுமே 1920களிலிருந்து பெருமளவில் குடியேறத் தொடங்கினர். சாதி ரீதியாகக் கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இத்தகைய வேலைவாய்ப்புகளைப் பெறுவது என்பது, கனவிலும் நடக்காத ஒன்றாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் மிகவும் படித்த சாதியினராக இருந்த பார்ப்பனர்களுக்கு ஆங்கிலேய அரசாங்கத்திலும் இந்திய மன்னர்களின் அரண்மனைகளிலும் போதுமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதால், அவர்கள் அக்கால கட்டங்களில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் நேரவில்லை. அதனால் தென்னிந்திய பிரிட்டிஷ் நிர்வாகங்களில் பார்ப்பனர்களோடு போட்டியிட்டு பதவிக்கு வர இயலாத, "சாதி இந்துக்கள்' என்று அழைக்கப்பட்ட ஏனைய சாதி இந்துக்கள் மலாயா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறி நிர்வாகத் துறை போன்ற பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
1921 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரப்படி, பார்ப்பன ஆண்களில் 71.5 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 28.21 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தனர். செட்டியார்களில் 39.5 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 2.34 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும், நாடார்களில் 20 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 0.75 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும், வெள்ளாளர் (பிள்ளை, முதலியார்) களில் 24.2 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 2.37 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
மலாயா போன்ற நாடுகளுக்குக் குடியேறி நிர்வாகப் பணியிடங்களை ஆக்கிரமித்த சாதியினராக, செட்டியார்களும் வெள்ளாளர்களும் இருந்தனர். இலங்கையிலிருந்து மலாயாவிற்கு இதுபோன்ற பணிகளுக்கு வந்தவர்களும் வெள்ளாளர்களே. இவர்களே தென் இந்தியாவிலிருந்து மலாயாவிற்கு விவசாயக் கூலிகளாக, உழைக்கும் மக்களை "நைச்சியம்' பேசி அழைத்துச் (கடத்தி) சென்ற முகவர்களாக செயல்பட்டுள்ளனர். காலப் போக்கில் இவர்களில் சிலரே, மலாய தோட்டப் பண்ணைகள் சிலவற்றின் உரிமையாளர்களாகவும் வளர்ந்து, உழைக்கும் மக்களைச் சுரண்டி தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.
- அடுத்த இதழிலும்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தலித் முரசு - ஜூலை 2009
தமிழரைப் பிணைக்கும் முள்வேலி
- விவரங்கள்
- கா.இளம்பரிதி
- பிரிவு: தலித் முரசு - ஜூலை 2009