மண்மொழி, இது 29வது இதழ். அதாவது நான்காம் ஆண்டின் நான்காவது இதழ். இந்த இதழ் மிக நீண்ட - மூன்று மாத இடைவெளிக்குப் பின் வெளிவருகிறது. 

வழக்கமான தாமதத்துக்கு வழக்கமான பல காரணங்கள் இருந்தாலும் கூடுதல் தாமதத்துக்கு காரணம் தமிழீழ விடுதலை போராட்டம் எதிர்கொண்ட பின்னடைவுகள், விடுதலைப் போராளிகள் மற்றும் எண்ணற்ற அப்பாவி மக்களின் உயிரிழப்புகள், இந்த இனப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள அரசுக்கு இந்திய அரசின் வஞ்சகமான உதவிகள், இதை எந்த வகையிலேனும் தடுத்து நிறுத்த தீவிரமான அக்கறையோ முனைப்போ காட்டாத தமிழக அரசியல் கட்சிகள், இவை எல்லாமும் சேர்ந்து ஏற்படுத்திய மன உளைச்சல், ஆத்திரங்கள், கோபங்கள், விரக்திகள் எல்லா தமிழ் உணர்வாளர்களையும் கலங்கடித்துள்ளது போலவே மண்மொழியையும் கலங்கடித்து விட்டது. 

இந்த நூற்றாண்டில் நம் கண்ணெதிரில் இப்படி ஒரு கொடுமை நடைபெற இதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு என்னதான் அர்த்தம் என்கிற கேள்விகளை எழுப்பி எதன்மீதும் பிடிப்பற்ற ஒரு வெறுப்பை, சோர்வை உருவாக்கிவிட்டது. 

பிறகுதான் இவை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு, இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும், இனி இருப்பவர் களையாவது காக்க முயல்வோம், அதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என சோர்வை உதறி மீண்டும் புத்துணர்வு பெற்று எழுந்தது. 

ஏறக்குறைய எல்லா உணர்வாளர்களுக்குமே இந்த உணர்வு இருந்திருக்கும் என்று சந்திப்பில், நேர்ப் பேச்சில், தொலைபேசி உரையாடல்களில் தெரிகிறது. சரி, இருக்கட்டும். என்ன செய்வது? இப்படியே இருக்க முடியாதல்லவா, இனி எல்லோருமே சோர்வு நீங்கி, மீண்டும் முந்தைய சுறுசுறுப்போடு இயங்குவோம், செயல் படுவோம் என்று கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

சரி. அடுத்து முக்கியமான ஒன்று. மண்மொழி நிர்வாகம் மற்றும் நிதி நிலை பற்றியதுதான். மண்மொழி, பலருக்கு அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறது, இதைப் பெறுபவர்கள், என்ன இது? எங்கிருந்து வருகிறது? எப்படி தயாராகிறது? எப்படி வருகிறது? என்று சிந்திக்கிறார்களா என்பதும் அப்படியே சிந்தித்தாலும் மண்மொழிக்கு ஏதாவது உதவவேண்டும் என்று கருதுகிறார்களா என்பதும் எதுவுமே தெரியவில்லை. 

மண்மொழிக்கு இரண்டு பிரச்சினைகள். ஒன்று இதழ் தயாரிப்பு மற்றும் நிர்வாகப் பணி. மற்றொன்று அதன் நிதி நிலை. இதழ் தயாரிப்பு மற்றும் நிர்வாகப் பணியில் ஏற்படும் சுமையைக் குறைக்க யாராவது ஒரு உதவியாளரைப் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது. ஆனால் அவருக்கு சொற்ப ஊதியமேனும் தரவேண்டுமே என்கிற நிலையும் குறுக்கிடுகிறது. இதழ் நடத்துவதே நன்கொடையாளர்கள் தரும் ஆதரவில்தான் என்னும்போது பணியாளர் அமர்த்திக் கொள்ளுமளவுக்கு நிதிக்கு எங்கே போவது என்பதும் கேள்வியாகிறது. 

ஆகவே இவை இரண்டையும் கருத்தில் கொண்டு நாங்கள் கோருவதெல்லாம் மண்மொழி இதழ் விரும்பிகள், ஆதரவாளர்கள், உணர்வாளர்கள் அனைவரும் அன்பு கூர்ந்து மண்மொழிக்குள்ள இச்சிக்கலைத் தீர்க்க என்ன செய்யலாம/ எப்படி உதவலாம் என்பது குறித்து சிந்தியுங்கள். சென்னையில் இருந்து நேரடி உதவிகள் செய்ய வாய்ப்புள்ள தோழர்கள் செய்யுங்கள். இதற்கு வாய்ப்பில்லாதவர்களும், மற்றவர்களும் குறைந்தபட்சம் தங்களால் இயன்ற ஒரு தொகையையாவது உடனடியாக மண்மொழிக்கு அனுப்பி உதவுங்கள். அனுப்ப மனம் இருந்தும் அதற்காக மெனக்கெட அஞ்சலகம், வங்கி போகச் சுணங்கி உங்கள் கடமையிலிருந்து தவறிவிடாதீர்கள். தற்போதுள்ளது போன்ற சூழலில், இதுபோன்ற தமிழ்த் தேசிய இதழ்களும், இது சார்ந்த கருத்துகளும் மக்களைச் சென்றடைய நாமும் நம்மாலானதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வோடு அதற்கான உங்களின் உழைப்பை, பங்களிப்பைச் செலுத்த முயலுங்கள். மண்மொழி வாசகர்கள் அனைவருமே இதழைப் புரட்டியதும் நாலு வார்த்தையைப் படிப்பவர்கள்தான் என்பதால் யாருக்கும் தனித்தனியே நாங்கள் கடிதம் அனுப்பவில்லை. ஆகவே இதையே கடிதமாக ஏற்று உடன் உங்கள் அன்பளிப்பை இதழ் முகவரிக்கு அனுப்பி இதழ் வளர்ச்சிக்கு உதவுங்கள். 

நன்றி. பார்ப்போம்.  

தோழமையுடன் 

ஆசிரியர். 

Pin It