manmozhi_logo_500

தொடர்பு முகவரி: மண்மொழி வெளியீட்டகம், காந்தி நகர், மயிலம் - 604 304
திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம். செல்பேசி: 94432 12761
ஓராண்டு நன்கொடை: ரூ.100. மூன்றாண்டு நன்கொடை ரூ.250 வாழ்நாள் நன்கொடை ரூ.1000

இது மண்மொழி 34வது இதழ். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அடுத்தது கொண்டு வரப்பட்ட 32, 33ஆவது இதழ்களை அடுத்து நீண்ட இடைவெளிக்குப்பின் வெளி வரும் இதழ்.

இந்த இதழ் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த கையோடு கொண்டு வரத் திட்டமிட்டு அப்போதே அதற்கான பணிகளைத் தொடங்கியது.

ஆனால் தொடங்கிய சூட்டோடு முடிக்க இயலாமல் பல்வேறு சூழ்நிலைகளில், ராஜபக்ஷே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோருதல், மூன்று தமிழர் உயிர்காப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, எனப் பல்வேறு பிரச்சினைகளையட்டிய வெளியூர்ப் பயணங்கள், வழக்கமாக உள்ள பொருளியல் நெருக்கடிகள் இதழை இதோ முடிப்போம், அதோ முடிப்போம் என்று காலதாமதமாகி உள்ளாட்சித் தேர்தல்களும் நடந்து முடிந்தபிறகு வெளிவருகிறது.

முந்தைய இதழுக்கு இந்த இதழ் மிகுந்த காலதாமதமானதில் இடைக்காலத்தில் நிகழ்ந்த செய்திகள் பெருகி, இதழில் இடம் பெற்றிருந்த கட்டுரைகளும் சில காலாவதியானது போல் தோன்ற அவற்றை நீக்கிவிட்டு, புதியதாக நடப்புச் செய்திகளை முன்வைத்து வேறு கட்டுரைகளை எழுத நேர்ந்தது.

இருந்தாலும் சமச்சீர் கல்வி, ஐ.நா. அறிக்கை, சட்டமன்றத் தீர்மானம், ஆகியன பதிவே இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக அவற்றை மட்டும் சற்று சுருக்கி அப்படியே வைத்து, புதியதாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து சிலவற்றை, இவற்றைப் பற்றி விரிவாக இல்லாவிடினும், சுருக்கமாக இச்சிக்கலில் மண்மொழியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேனும் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

 இதனால், இடப்பற்றாக்குறை காரணமாக வழக்கமாக இடம் பெறும் போராட்ட செய்திகள், நூல் அறிமுகங்கள் முதலான பலவற்றை இந்த இதழில் இடம்பெற வைக்க இயலாமல் அடுத்த இதழில் போட்டுக் கொள்ளலாம் என்று அப்படியே நிறுத்தி வைத்தாயிற்று. இவையனைத்தும் அடுத்த இதழில் இடம்பெறும்.

மண்மொழியை எங்கெங்கோ வாங்கிப் படிக்கும் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்கள். சந்தா அனுப்ப விருப்பம் தெரிவிக்கிறார்கள். எனில் இவர்களது விருப்பத்தை ஈடேற்ற முடியுமா, மாதந்தோறும் இதழ் கொண்டு வரமுடியுமா என்பதுதான் தொடர் கவலையாக இருக்கிறது.

இந்நிலையில் மண்மொழியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த தில திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை நிறைவேறினால் எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்களிலிருந்து மாதாமாதம் இல்லையானாலும் இரு மாதத்திற்கொரு முறையாவது இழைக் கொண்டு வரலாம் என்று திட்டம்.

பார்ப்போம். இது எந்த அளவு கைகூடுகிறது. புறநிலை எந்த அளவு இதை அனுமதிக்கிறது என்று. என்னவானாலும் முயற்சியைத் தொடர்வோம்என்று மட்டும் நம்பலாம்.

தோழமையுடன்

ஆசிரியர்

Pin It

ஒடுக்கப்பெற்ற, தாழ்த்தப்பட்ட சமூகங்கள் புதிய விழிப்புப் பெற்று உரிமைகளைப் பெறக் கொள்கைகளையும் இயக்கங்களையும் உருவாக்கும் முயற்சிகள் இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிரப் பிரதேசத்தில் தோன்றின. இதற்காக அரும்பாடுபட்ட போராளிகளில் மகாத்மா சோதிராவ் கோவிந்தராவ் பூலே (1827-1890) ஈடுயிணையற்ற முன்னோடி யாவர். இவரைப் பற்றிச் சுருக்கமாக இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் என்னுடைய நூலில் (1973) எழுதியுள்ளேன். மேலும் சற்று விரிவாக்கம் செய்து மூன்றாம் பதிப்பில் (2002) எழுதியுள்ளேன்.

பிராமணரல்லாதவர் இயக்க வரலாற்றில் பூலேவிற்கு உரிய முதலிடத்தை அறிந்து கொள்ள வேண்டும். மராட்டியப் பிரதேசத்தில் சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்த காலத்தில் மகாத்மா பூலேதான் முதல் பிராமணரல்லாத சமூக சீர்திருத்தத் தலைவராக விளங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பிரம்ம சமாஜம்(1818)ஆர்யசமாஜம் (1875), இராதாகிருஷ்ணா மிஷன் (1886), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் 1865) தியோசாபிகல் சொஸைட்டி எனப்படும் பிரம்ம ஞான சபை (1875 ல் நியூயார்க்கில் நிறுவப் பெற்று 1879ல் தலைமையிடம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது) முதலானவையெல்லாம் சில, பல சமூக சீர்திருத்தங்களுக்குப் பாடுபட்டாலும் ஓடுக்கப்பெற்ற, தாழ்த்தப் பட்ட மக்களை மையப்படுத்தி முதன்மைப்படுத்தி போராடவில்லை என்பது வரலாற்றுண்மை

இந்தச் சூழலில் மகாத்மா பூலே பிற்படுத்தப்பட்ட ‘மாலி’ சாதியில் (தோட்ட வேலை செய்பவர்கள்)தோன்றி பிராமணரல்லாத மக்களுக்காகவும் கொள்கைகளையும் போராட்ட முறைகளையும் வகுத்துப் பாடுபட்டார்.

பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு புரோகித வர்க்க எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, முதலானவற்றையெல்லாம் பிராமணரல்லாதவர் இயக்க அடையாளச் சின்னங்களாக அமைத்தார் மகாத்மா பூலே. 1873ல் அவர் நிறுவிய சத்யஹோதக் சமாஜ் புரட்சிப் பாசறையாகச் செயலாற்றியது.

தமிழக பிராமணலரல்லாத இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு 1870லேயே வாழிகாட்டியவர், பதினாறு கொள்கை விளக்க நூல்களை மராத்திய மொழியில் எழுதியவர் மகாத்மாபூலே.

1873ல் வெளிவந்த அவருடைய ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்), சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் எவ்வாறு பிராமணியத்தால் அடிமைப்படுத்தப்பட்டனர் என்பதை ஆய்துள்ளது. 1869ல் வெளிவந்த ‘பிராம்மன் சே கஸப்’ (புரோகித வர்க்கம் அம்பலப் படுத்தப்படு கின்றது)எனும் நூல் மராட்டிய உழவர்கள், மாலி சாதியினர், தாழ்த்தப்பட்ட மாஸ், மகர் மக்களுக்கு காணிக்கையாக் கப்பட்டது. 1883ல் வெளிவந்த சேட்கார்யா அஸீத்’ (உழவர்களின் சாட்டை) ‘சூத்திர’ சமூகத்தினருக்கு அர்ப் பணிக்கப்பட்டது. இந்நூலில் உழவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர், உழவுத் தொழிலில் விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது முதலானவை எழுதப் பெற்றுள்ளன.

பூலே 1889ல் பம்பாயில் ஐந்தாவது காங்கிரஸ் மகா சபை நடை பெற்ற பொழுது உழவர் பிரச்சினைகளை முன்வைத்து உழவர் பேரணி நடத்தினார், உழவனாகவே உடை உடுத்திச் சென்றார். பேரணியில் பின்வருமாறு உழவர் எழுச்சிப் பாடல் இசைக்கப் பெற்றது.

“உழவர் அரசனே விழித்தெழு

ஒவ்வொருவரும் ஏமாற்றுகின்றனர்

அடக்குமுறையை, அநீதியை

ஒன்றுபட்டு எதிர்த்திடும்

உழவர் அரசனே விழித்தெழு”!

முற்கூறிய வரலாற்றுப் பின்னணியில் தலித் விடுதலை இயக்கத்தின் ஆதிமூலர்களுள் ஒருவரான பண்டிதர் க.அயோத்திதாசரின் வரலாற்றுப் பாத்திரம் குறிப்பிடத் தக்கது என்னுடைய ‘நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு’ எனும் நூலில் ஆதிமூலம் எனும் தலைப்பில் அயோத்தியதாசர், இரட்டைமலை சீனிவாசன் ,எம்.சி.ராஜா ஆகியோர் குறித்து எழுதியிருக்கிறேன்.

1986ல் வெளிவந்த என்னுடைய ‘கார்ல் மார்க்சின் இலக்கிய இதயம்’ எனும் நூலில் ‘பகுத்தறிவு இயக்கச் செம்மல் பண்டிதர் க.அயோத்திதாஸ் எனும் தலைப்பில் எழுதியுள்ளேன். இந்நூலிற்கு புகழ்பூத்த படைப்பிலக்கியக் கர்த்தாவும் மார்க்சிய விமர்சன அறிஞருமான தொ.மு.சி. ரகுநாதன் பின்வரும் கருத்தைச் சுட்டிக் காட்டினார்.

‘பெரியார் ஈ.வெ.ரா. வுக்கும் முன்பே பகுத்தறிவு இயக்க, நாத்திக இயக்கச் சிந்தனைகளைப் பரப்பிய, உண்மையில் பெரியாருக்கும் முன்னோடியாக விளங்கிய எனினும் அறிவுலகம் அவ்வளவாகச் கண்டுணராது போய் விட்ட பண்டிதர் அயோத்திதாசர் பற்றியும் இந்நூலில் ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது?”

மறந்துபோன மறைக்கப்பட்ட பண்டிதர் க. அயோத்தி தாசரை ‘அம்பேத்கர் ’ இதழ் மூலம் 1962முதல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மறைந்த சிந்தனை யாளர், வரலாற்றாய்வாளர் அன்பு பொன்னோவியம். அவர் சுட்டிக் காட்டிய பின்வரும் வரலாற்றுண்மை அயோத்தி தாசரின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர்த்தவல்லது.

‘ அவர் காலத்திலும் பல பண்டிதர், புலவர்,கவிஞர், நாவலர், அவதானிகள், பாகவதர் பேச்சாளர், எழுத்தாளர் ஆதி திராவிடர்களிடையே இருந்தார்கள். இருப்பினும் சமுதாய, சமயம், இலக்கியம், அரசியல், வரலாறு, தொழில், பகுத்தறிவு, சீர்திருத்தம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தொண்டாற்றி யதுதான் பண்டிதர் தனித்தன்மை கொண்ட மனிதராக எண்ணத் தூண்டியது எனலாம். அயோத்திதாசர் 1875 லிருந்து 1911வரை விதைத்த முன்னேற்ற சிந்தனைகளின் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா போன்ற தலைவர்களைப் படைத்து மக்களுக் ககாகப் பாடுபடவைத்தது என்று தயக்கமில்லாமல் குறிப்பிடலாம்.

பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு முதலானவற்றில் மகாத்மா பூலேவின் கருத்துகளுடன் ஒத்திசைவாகக் கொள்கைப் பிரச்சாரம் செய்தவர் பூலே. மத எதிர்ப்பாளராக இருந்தபோதிலும் கடவுள் மறுப்பாளாராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. பூலே பற்றி அயோதிதாசர் எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. அயோத்திதாசரின் முற்கூறிய எதிர்ப்புகள் எல்லாம் அவருடைய புத்தமதச் சார்பான அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டனவாகும். அக்கால ஆதிதிராவிடச் சிந்தனையாளர்களில் அயோத்தி தாசரே ஆதிதிராவிடர்களின் பூர்வீக மதம் பௌத்த மதமே என்று முழங்கியவர்.

1882’ல் மக்கட்தொகை கணக்கெடுப்பு நிகழ்ந்த பொழுது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை ‘பூர்வத்தமிழர்’ எனும் பெயரிலேயே குறிக்க வேண்டும் எனும் கோரிக்கையை விடுத்தவர் அயோத்திதாசர்

பௌத்த மதப் பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்டு 19-6-1907ல் சென்னையில் ‘ஒரு பைசாத் தமிழன் ’ எனும் பெயரில் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். பௌத்த சமயத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய விரிவான ஆய்வுகளையும் அவரே எழுதி வந்தார். முதல் இதழிலேயே புத்த பகவானின் போதனைகளை ‘பூர்வத் தமிழொளி ’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார். தமது காலத்திலேயே 1912ல் ‘பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம் எனும் நூலை வெளியிட்டார். கோலார் மாரிக்குப்பம் சாக்கிய பௌத்த சங்கம் சார்பில் வெளியிடப் பெற்ற இந்நூல் 303 பக்கங்களைக் கொண்டது எட்டு பக்கங்களில் அவரால் எழுதப் பெற்ற விரிவான பாயிரம் பரந்துபட்ட அவருடையபௌத்தம் தமிழ் இலக்கியப் புலமையை எடுத்துக்காட்டியுள்ளது.

26-08-1908லிருந்து ‘ஒருபைசாத் தமிழன்’ எனும் பெயர் ‘தமிழன்’ என மாற்றம் பெற்றது. அவர் பொறுப்பில் 15-4-1914 வரையில் வெளிவந்து பிறகு அவருடைய புதல்வர் பட்டாபிராமன், கோலார் தங்கவயல் பண்டிதமலை ஜி,அப்பா துரையார் ஆகியோர் பொறுப்பில் வெளிவந்து.

தோழர் அன்பு பொன்னோவியம் தம்மிடமிருந்த ‘தமிழன்’ இதழ்களையெல்லாம் ஆய்வாளர் ஞான அலாய் சியஸிடம் வழங்கினார். ஞான அலாய்சியஸ் அரும்பாடு பட்டு அவற்றை‘அயோத்தியதாசர் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் இருபெரும் தொகுதிகளாக 1999இல் வெளியிட்டார். வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற நானும் அழைக்கப் பெற்றேன். மிகச் சிறநத ஆவணக் களஞ்சியமான இவ்விரு தொகுப்புகளில் அயோத்திதாசரின் பன்முகப்பட்ட ஆளுமை பதிவு செய்யப் பட்டுள்ளது. முன்னுரையில் ஞான அலாசியஸ், அயோத்தி யதாசரின் வரலாற்றுப் பாத்திரத்தைப் பின்வருமாறு சாற்றியுள்ளார்.

‘நவீன இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர். காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டமாகிய பிந்திய பத்தொன்பதாம் முந்திய இருபதாம் நூற்றாண்டுகளில் வாழந்த இவர் பண்டைய இலக்கிய, சமூக, ,சமய,வரலாற்று, ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் நிர்மாணிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருந்தார் நவீன இந்தியாவில் பரவலாக நவீனத்துவம் முதலிய கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் தந்தை பெரியாருக்கும். இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கினார்.சமயம் சமுகம், வரலாறு, இலக்கியம், அரசியல், பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் ஒரு தனி மனிதனின் கருத்துகளாக மட்டும் அமையாமல் அகன்ற சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் சித்தாந்தங்களாகச் சிறந்தன ’

1986லேயே தலித் இயக்கச் சிந்தனையாளர்கள், அமைப்பாளர்கள் சிலரிடையே அயோத்திதாசர் குறித்த கருத்தரங்குகளை நடத்த பரிந்துரை செய்தேன். அப்பொழுது காலம் கனியவில்லை. பிறகு சமீப இருபது ஆண்டுகளாக அயோத்திதாசர் ஆய்வு மையங்கள் கொள்கைப் பரப்புரைகள் பெருகி வருகின்றன. ஆயினும் தலித் அல்லாத சமூகத்தினர் ஒத்துழைப்பும் புரிதலும் இயக்க அளவில் செயற்படவில்லை, அயோத்திதாசரை தாழ்த் தப்பட்ட சமூகத்தின் தலைவராக மட்டும் மதிப்பிடாமல் ஒடுக்கப் பெற்றவர்களின் போராளியாகவும் உலக மனித நேயப் பண்பாளராகவும் போற்றி தலித் அல்லாத சமூகச் சிந்தளையார்களும் ஒன்றுபட வேண்டும். அவர் பங்களிப்பு தமிழகத்தையும் தாண்டி இந்தியாவெங்கும் பரவவேண்டும் அண்ணல் அம்பேத்கர் இயக்கம் இந்தியா முழுவதிலும் இயங்குகின்றது. இதன் ஒரு பணியாக அய«த்திதாசரின் புகழ்பரப்பும் பணியும் இணைய வேண்டும். பல்கலைக் கழகங்களில் அயோத்திதாசர் பெயரில் இருக்கைகள் எற்படுத்த வேண்டும். கல்லூரி மற்றும் பிறகல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் அயோத்திதாசர் பற்றிய வரலாறு சேர்க்கப்பட வேண்டும்.

அவர் தமது மரணப் படுக்கையில் பௌத்தம் மேன்மேலும் பரவவேண்டும் எனவும் திருக்குறள் சிந்தனைகளை முழுமையாக எழுத முடியாமல் போயிற்றே எனவும் வருந்தினார்.

தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனர்களில் ஒருவரான ஹென்றி ஸ்டீவ் ஆல்காட்டின் துணை கொண்டு இலங்கை சென்று பௌத்த மத தீட்சை பெற்ற அயோத்திதாசர், 1898ல் சென்னை, ராயப்பேட்டையில் நிறுவிய தென்னிந்திய பௌத்த சாக்கிய சங்கம் அவருடைய இயக்க ஆற்றலுக்கு ஒரு சான்று. தோழர் சிங்காரவேலர் , பேராசிரியர் லட்சுமிநாதனுடன் இணைந்து தமிழகத்தில் பௌத்த சமயப் பிரச்சாரம் செய்ததையெல்லாம் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தமது வாழக்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அயோத்தியதாசர் மீது. திரு.வி.க. இயற்றிய இரங்கற்பா ஒரு வரலாற்று ஆவணமாகும் இதை முதன் முதலில் கண்டெடுத்து வெளியிட்டுள்ளேன்.

 [நன்றி: ஜனசக்தி நாளேடு 02.06.2011]

இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் -  அரசு விழாவாக ஜெ அறிவிப்பு

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற் காகவும், விடுதலைக்காகவும் குரல் எழுப்பிய, பாடுபட்ட முன் னோடிச் சிந்தனையாளர், அயோத்தி தாசருக்கு சமகாலத்த வராகவும், அவருக்குப் பிறகாகவும் பாடுபட்டவர், உழைததவர் இரட்டை மலை சீனிவாசன் (1859 - 1945) .

இவருடைய பணியைப் பாராட்டும் முகமாக இவருக்கு மணி மண்டபமும், முழு உருவச் சிலையும் அமைக்கப்படும் என தன் கடந்த ஆட்சிக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு மார்ச்சு 9 இல் அறிவித்திருந்தார் ஜெ தற்போது அவரது பிறந்த நாளான ஜூலை 7ஐயும் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார். அறிவித்த ஜெ அரசுக்கு நன்றி.

தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கும் விடுதலைக்கும் பாடுபட்டவர்களைப் பாராட்டுவது மதிப்பது என்பது சரி. எனில் இதோடு மட்டும் நின்று விடாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைக் களையவும், இம் மக்களின் கல்வி, சமூக நிலைகளில் முன்னேற்றம் ஏற்படவும் அரசு உரிய திட்டங்கள் தீட்டி தொடர்ந்து செயல்பட வேண்டும்.

சாதி வாரிக் கணக்கெடுப்பு - தில்லி அமைச்சரவை ஒப்புதல்

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, இந்த ஆண்டு சாதி வாரியாகவும் எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து, அது சர்ச்சைக்குள்ளானதை யட்டி இதுபற்றி ஆராய குழுவும் நியமிக்கப்பட்டு அது பரிந்துரை வழங்க தற்போது ஒருவாறு அச்சிக்கலுக்குத் தீர்வு காணப் பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டு ஜூன் மற்றும் திசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பில் ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்கிற பிரிவோடு சாதிவாரியாகவும் கணக்கெடுக்க வேண்டுமென கடந்த 16-05-2011 அன்று நடைபெற்ற தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புதுவையிலும் ஜூலை 18முதல் 40 நாட்களுக்குள் இக்கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது 1931இல் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகான இந்த எண்பது ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி 7 முறை நடைபெற்றபோதும் ஒரு முறைகூட சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 தற்போது எடுக்கப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தமிழ்ச் சமூகத்தின் சாதிய இருப்புகளின் தன்மைகளையும் அவற்றின் நிலைகளையும் அறியவும், அதனடிப்படையில் பின்தங்கிய கடைநிலை மக்களுக்கான திட்டங்களைத் தீட்டவும் பயன்படுவதாய் அமையும். அமையவேண்டும் என்பதே இதன நோக்கம்.

Pin It

மக்கள், பிற உயிரினங்கள் அனைத் தினது வாழ்வாதாரங்களுக்கும் நீர் மிக மிக இன்றியமையாததாக இருக்கிறது. இதற்கு பருவ மழையையும் நீர் நிலைகளையுமே நம்பி வாழ வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டின் புவியியல் இருப்பு இரண்டு வழிகளில் நீர் பெறும் நிலையில் உள்ளது. 1. பருவ மழை மூலம் பெறப் படும் நீர் 2. அண்டை மாநிலங்களில் உற் பத்தியாகி தமிழகத்தின் ஊடே பாய்ந்து கடலில் கடக்கும் ஆறுகளின் வழி பெறப் படும் நீர்.

இந்த ஆற்று நீரைப் பொறுத்த மட்டில் தமிழ் நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரைத் தராமல், அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து தமிழகத் தைத் தங்கள் வடிகால் பகுதியாகவே பயன்படுத்தி வருவதால் ஆற்று நீர் என்பது நிச்சயமற்றதாகவே இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான நிலை யில் தமிழகத்தைப் பாதுகாக்கின்ற இரட்ச கனாக இருப்பது பருவ மழை ஒன்று மட் டுமே. ஆனால் இப்பருவ மழையும் பருவத்திற்கு ஏற்றார்போல் சரியான காலத்தில் பெய்வதில்லை. இவை பெரும் பாலும் பருவம் தப்பியே பெய்கிறது. தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை சரியான அளவில் பெய்தாலும், தென் மேற்கு பருவ மழை சராசரி அளவில் 30 விழுக்காட்டிற்கும் குறை வாகப் பெய்கிறது.

இக்காரணங் களாலேயே தமிழகம் நீர்த் தட்டுப்பாட்டுக் குள்ளாகி வருகிறது எனவும், இதே நிலை நீடித்தால் இன்னும் 25 ஆண்டுகளுக்குள் நிலைமை மோசமாகி மக்கள் வாழ்வதற்கே கூட நீர் கிடைக்கா மல் போவதற்கு வாய்ப்பு உண்டு எனவும் எச்சரிக்கின்றனர் நீரியல் நிபுணர்கள் .

இந்நிலையில் தமிழகத்தின் நீர் ஆதாரங்களையும், நீர்த் தேவைகளையும் நாம் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதே தற்போது நம்முன் உள்ள கேள்வி.

 பண்டைத் தமிழர்கள் பல துறையில் சிறந்து விளங்கியது போலவே நீர் வளத்துறையிலும் சிறந்து விளங்கி வந்துள்ளனர். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த நமது முன்னோர்கள் நீர் ஆதாரங்களை ஏற்படுத்தி, நீர்வளத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்தி வந்ததற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

ஆனால் இன்றைய நிலையில் இவ் நீராதாரங்கள் இருந்த சுவடுகள் கூட தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டன. இவ் விடங்களில் அரசுத் துறை சார்ந்த நிறுவ னங்கள், போக்குவரத்துப் பணிமனைகள், வணிக வளாகங்கங்கள், தொழிற்சாலைகள், அடுக்கு மாடி கட்டடங்கள், பேருந்து, தொடர்வண்டி நிலையங்கள் அமைக்கப் பட்டு அனைத்தும் கான்கிரிட் தளங் களாக மாற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஏரிகள், கால்வாய்கள் வீட்டுமனைகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டை வளப்படுத்திய ஆறுகள் எல்லாம் இன்று கழிவோடைகளாகவும், சிற்றோடைகளா கவும் உருமாறிக் கொண்டு இருக்கின்றன. கடலைப் போல் பரவிக் கிடந்த ஏரிகள் எல்லாம் குட்டைகளாக குறுகிப் போய் இருக்கின்றன. தவிர, ஆற்றுப்படுகைளில் அளவுக்கு அதிகமான மணல் எடுக்கப் படுவதால் நிலத்தடி நீர் வெகு ஆழத்திற்கு போய் கிணற்று நீர்ப் பாசனம் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் கிணற்று நீர் பாசனம் முக்கிய நீர்ப்பாசன முறையாக உள்ளது. தமிழ் நாட்டின் மொத்த நீர்ப் பாசனப் பரப்பில் 44 விழுக்காடு கிணற்று நீரப் பாசனமாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஆழ் குழாய் கிணறுகள், திறந்த வெளிக் கிணறுகள் உள் ளிட்டு சுமார் 18 இலட்சம் பாசனக் கிணறுகள் உள்ளன. இதில் இதில் சுமார் 1.60 இலட்சம் கிணறுகள் எதற்கும் பயனின்றி பாழுங் கிணறாக உள்ளது.

இதில் கிணற்று நீரைக் கொண்டு சுமார் 14 இலட்சம் ஏக்கரில் பாசனம் செய்யப்படுகிறது. கிணற்று நீர்ப் பாச னத்தின் தொடக்க காலத்தில் 20 அடி ஆழத்தில் நீர் கிடைத்தது. கமலை, இறை வெட்டி, ஏற்றம் போன்ற பாரம்பரிய முறைகளைக் கைக்கொண்டு நீரைப் பாச னத்திற்கு பயன்படுத்தினர். அதன் பின்பு டீசல் எஞ்சினைக் கொண்டு நீர் இறைத் தனர். 1963ம் ஆண்டுக்குப் பின் மின் மோட்டார் பயன்பாட்டிற்கு வர, அது பயன்படுத்தப்பட்ட இடங்களில் இறைப்பு அதிகரிக்க இதனால் கிணற்று நீர் 50, 60 அடி ஆழத்திற்கு கீழே போய்விட்டது. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க 7 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார் கள் பயன்படுத்தப்பட்டன. விளைவு கிணற்று நீர் வெகு ஆழத்திற்குச் சென்று விட்டது.

 1991-2004 ஆண்டுகளில் தமிழ கத்தின் பெரும்பாலான திறந்த வெளிக் கிணறுகளின் நீர்மட்டம் வெகு ஆழத் திற்கு சென்று விட்டதால், இக் கிணறுகள் விவசாயத்திற்குப் பயனற்றதாகப் போய் விட்டன என ஒரு புள்ளி விவரம் குறிப் பிடுகிறது.

இதனால் பல மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது 1000 அடி ஆழ முடைய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீர் எடுத்து உழவுத் தொழிலை மேற் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட பகுதிகளில் திறந்த வெளிக் கிணறுகள் வறண்டு போய்விட் டன. இது போன்ற ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வசதியற்ற விவசாயிகள், விளை நிலங்களைத் தரிசாகப் போட்டு விட்டு, வேறு தொழிலுக்கு பிழைப்பு தேடி நகரத்தை நோக்கி நகர்ந்தனர்.

நாடு விடுதலை அடைந்த பிறகு நம்மை ஆளும் மைய, மாநில அரசுகள் குடிநீர் பிரச்சனையைப் போர்க்கால அடிப் படையில் தீர்ப்பதாக பறைசாற்றி பல் வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின் றன. ஆனால் நாளுக்கு நாள் பிரச்சனை கூடிக் கொண்டே போகிறதே தவிர, குறை வதற்கான அறிகுறி தென்பட வில்லை.

நாட்டின் பல கிராமங்களில் பெண்கள் பல மைல் தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்து கொண்டு வரும் அவல நிலை இன்றும் உள்ளது. கோடைக் காலங்களில் நீண்ட வரிசையில் குடங்கள் அணி வகுக்கின்றன. நகர்ப்புறம் மட்டு மின்றி கிராமப்புறங்களிலும் குடிநீர் கோரி திடீர் திடீர் என சாலை மறியல் மற்றும் தேர்தல் காலங்களில் புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்துவது சாதாரண நிகழ்வுகளாகிப் போய்விட்டன.

இந்நிலையில் அண்டை மாநிலங் களால் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் தமிழக ஆற்று நீர் உரிமைக்காக நாம் போராடும் அதே வேளை இப்படிப்பட்ட தண்ணீர் பிரச்சினை யிலிருந்து தமிழ்நாடு மீள்வதற்கான யோசனைகளாக சில.

1. 2003-ஆம் ஆண்டு மழைநீர் சேமிப்பு திட்டத்தை கறாராக செயல் படுத்தியதின் பலனாக 2004-ஆம் ஆண்டு பரவலாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதை வைத்து மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் மேலும் விரிவாக்க வேண்டும். தமிழக அரசு மீண்டும் மழைநீர் சேமிப்பு திட்டத்தைச் செயல் படுத்த ஊக்கமளிக்க வேண்டும். இதற்கு வேண்டிய வல்லுநர்களின் ஆலோசனை களையும், மற்றும் கருவிகளையும் அரசு மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும்.

2. ஏரி, குளம், கண்மாய், ஆற்றுப் பாசனம் போன்ற பொது நீராதாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை முறையாக பராமரித்துப் பாதுகாக்க அந்தந்த பகுதி மக்களை குழுக்களாக அமைத்துப் பயனடையச் செய்ய வேண்டும்.

இவ் நீராதாரங்களின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதே நேரத்தில், இதனால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும்.

3. அடுத்து ஏரிகளின் சங்கிலித் தொடர் அமைப்பை மறுபடியும் கட்டி யமைக்க வேண்டும், எங்கெல்லாம் புதிய நீராதாரங்கள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய நீர்நிலைகளை உருவாக்கிப் பூங்காக்களை அமைத்துப் பராமரிக்க வேண்டும்.

4. பொது நீராதாரங்களின் மேலாண்மையை, அந்தந்த பகுதி பாசனதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் அரசு நேரடியாக தலையிடாமல், பக்க பலமாயிருந்து உதவி செய்யவேண்டும்.

5. நீர் நிலைகளின் ஊற்று கண்களை பாழ்படுத்தும், வேலிக் கருவேல மரங்கள் சமூகக் காடு திட்ட மர வகைகள் அகற்றப் படவேண்டும். நீர் நிலைகளின் கொள்ளவு குறையாமல் இருக்க வழி வகைகள் காணவேண்டும்.

6. ஆறு மற்றும் ஓடைகளில் மணல் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

7. நீராதரங்களில் கழிவுகள் கலப்பதை முற்றிலும் தடுக்கவேண்டும். தொடர்ந்து மாசுபடுத்தும் தொழிற் சாலைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

8. ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பது தொடர்பாக சில வரை முறைகளை உருவாக்க வேண்டும். தேவையை ஒட்டி ஒவ்வொரு ஆழ்குழாய் கிணற்றுக்கும் இடையே இருக்கவேண்டிய இடைவெளி, ஆழம் போன்ற விதி முறை களை கட்டாயப்படுத்த வேண்டும்.

9. குடிநீர் விநியோகம் செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாயக் கடமை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

10. தண்ணீரை வணிகமயமாக்கும் போக்கை உடனடியாக தடை செய்ய வேண்டும். “தவிக்கும் வாய்க்கு தண்ணீர்” என்ற தர்ம சிந்தனையை மீண்டும் உரு வாக்கும் நோக்குடன் பொது இடங்களில் மண் பானையில் தண்ணீர் என்ற பண் பாட்டை உருவாக்க வேண்டும். பாக் கெட், பாட்டில் தண்ணீர் கம்பெனி களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

11. வளர்ச்சிடையந்த நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளிலிருந்து தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். இத்தடையை மீறுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, உடமைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

12. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் போன்ற ஆதிக்க நிறுவ னங்களின் நிர்ப்பந்தமின்றி, மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் தெளிவான நீர் கொள்கையை உருவாக்க வேண்டும்.

13. முக்கியமாக தண்ணீர் பயன் படுத்தும் முறையில் திட்ட வட்டமான முன்னுரிமை இருக்க வேண்டும். நீர் பயன்படுத்தும் முறையில் குடிநீருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அடுத்து விவசாயம். அதிலும், சிறு நடுத்தர விவசாயிகள் பயன்படுத்த உறுதி செய்ய வேண்டும். இதற்கடுத்து கால் நடைகள், மிருகங்கள், வன விலங்கு, பறவைகள் போன்ற உயிரினங்களின் தண்ணீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கு அடுத்த நிலையில் மட்டுமே தொழிற் சாலைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதுவும் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத மக்களுக்கு உண்மையில் பயனளிக்க கூடிய தொழிற் சாலைகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க வேண்டும். குறிப்பாக மக்களின் அடிப்படை உணவுப் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

14. மிகவும் குறுகிய காலத்தில் ஒரே அடியாக மழை பெய்து விட்டு போகிறது. ஆண்டுதோறும் பெய்யும் மழையால் ஆயிரக் கணக்கான டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. எனவே ஆறு, கால்வாய் மற்றும் ஓடைகள் வழியாக செல்லும் வெள்ள நீரினைத் தடுத்து நிறுத்தி ஆங்காங்கே தடுப்பணை கள் கட்டி தேக்கி வைக்க வேண்டும். இந்நடவடிக்கையால் அந்தந்தப் பகுதி களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் போது, உழவுத் தொழில் வளர்ச்சியடை வதோடு அல்லாமல் குடிநீர் பிரச்சினை யும் தீர்க்கப்படும். மேற்கண்ட நட வடிக் கையினால் மெகா கூட்டுக் குடிநீர் திட் டங்களுக்கு செலவு செய்யும் நிதியினை வேறு வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன் படுத்தலாம்.

15.தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதில் தொண்டு நிறுவனங்கள், மக்கள் இயக் கங்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சி கள், மற்ற பிற அமைப்புகள் இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறான பரிந்துரைகைளை முன்வைப்பதால் இதன் மூலமே தமிழ கத்தின் தண்ணீர் பிரச்சனை முற்றாகத் தீர்ந்து விடும் அல்லது தீர்க்கப் பட்டு விடும் என்பதாகப் பொருள் கிடையாது.

இவை எல்லாவற்றுக்கு அப்பால் முதன்மையாகவும் அடிப்படையாகவும் நாம் செய்யவேண்டியது,அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் ஆற்று நீர் உரிமையை, காலம் காலமாக தமிழகத்தை வளப்படுத்தி வந்த முக்கிய நீர் ஆதாரங்களான தமிழக ஆறு களை மீட்கவும் பாதுகாக்கவும் தமிழக மக்களிடையே விழிப்பூட்டி அவர்களை இதற்காகப் போராட வைக்க வேண்டும்.

இதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் நாம் ஒன்று திரட்ட வேண்டும். இப்படியெல்லாம் நாம் இணைந்து செயல்பட்டால் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் பெருமளவு தீர வாய்ப்புண்டு.

*

தேவை ஒரு தமிழ் ஐயப்பன்

முல்லைப் பெரியார் சிக்கல் ஐயப்ப பக்தர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டுப் பதிவு எண்ணோடு செல்லும் பேருந்து கள், பக்தர்கள் தாக்கப்பட, குமுளி வரை சென்ற பக்தர்கள் சபரிமலை செல்ல இயலாமல் திரும்பி வந்து அடையாறு ஐயப்பனை தரிசித்து தெம்போடு பேட்டியும் கொடுத்து செல்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழக அரசு ஐயப்ப பக்தர்கள், ஒரு நல்ல காரியத்தைச் செய்யலாம். தமிழ்நாட்டிலேயே ஒரு ஐயப்பன் கோயில் கட்டி, ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் இங்கேயே தரிசிக்கச் செய்யலாம்.

பக்தி மட்டும் போதாது, சபரிமலைப் பயண சாகசமும் வேண்டும் என்றால் இந்த ஐயப்பன் கோயிலைத் தமிழகத்திலேயே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் உள்புறம் எங்காவது கட்டலாம். இதன் மூலம் தமிழ்நாட்டுப் பணம் கணிசமாக அண்டை மாநிலம் போகாது. இத்துடன் ஐயப்பசாமி சார்ந்த வணிகம் நன்கு தழைக்கும். தமிழ் நாட்டு வணிகர்கள் பிழைப்பார்கள். இதன் மூலம் அரசுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும். ஆகவே தமிழக அரசு இதன் பல்நோக்குப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு விரைவிலேயே தமிழ்நாட்டில் ஒரு ஐயப்பன் கோயிலை - தமிழ் ஐயப்பன் கோயிலைக் கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதையொட்டி ஐயப்ப பக்தர்களுக்கு சில வேண்டுகோள்.

ஐயப்பன்மீது எவ்வளவுதான் பக்தியாக இருந்தாலும் எவ்வளவுதான் கடுமையான விரதங்கள் இருந்தாலும் தன்னை தரிசிக்க வரும் தமிழர்களை, தாக்க முனையும் மலையாளிகளிடமிருந்து அவர் காப்பாற்ற மாட்டார். காப்பாற்றவில்லை என்பதைத் தமிழக ஐயப்ப பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, இனியும் மலையாள ஐயப்பனை நம்பி ஏமாறாமல், தமிழ்நாட்டில் ஓர் தமிழ் ஐயப்பனை உருவாக்கி, அவர் தமழகத்தில் குடிகொண்டு, தமிழ் ஐயப்ப பக்தர்களுக்குக் காட்சி தரவும், தமிழர்கள் எந்த அச்சமுமின்றி பாதுகாப்பாக அவரைத் தரிசித்து திரும்ப, இதனால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் கருதியும் தமிழ்நாட்டிலேயே ஓர் ஐயப்பன் கோயில் கட்ட தமிழக அரசு களுக்கு கோரிக்கை வைத்து அதன் நிறைவேற்றத்திற்காகப் போராடவேண்டும்.

நிறைவாக பகுத்தறிவாளர்களுக்கும் ஓர் வேண்டுகோள். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பக்தர்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஐயப்ப பக்தர்களுக்கும் அதுவே. ஆகவே, அவர்களது உணர்வுகளைப் புரிந்து, தமிழ் இன மான உணர்வோடு அவர்களது கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு என்று ஒரு தமிழ் ஐயப்பனை உருவாக்கித் தர நீங்களும் தமிழக அரசை நோக்கி குரல் கொடுக்கவேண்டும். இக்கோரிக்கைக்கு ஆதரவாக போராடவேண்டும்.

Pin It

ஒரு சனநாயக அரசு கட்ட மைப்பின் அடிப்படைத் தூண்களாக மூன்று அமைப்புகள் சொல்லப்படு கின்றன. ஒன்று நாடாளுமன்றம், இரண்டு நிர்வாகம், மூன்று நீதித்துறை.

மக்கள் நலத்திட்டங்களை உரு வாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நடாளுமன்றமும், உருவாக்கப்பட்ட இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நிர்வாகமும், இவ்விரண்டும் அரச மைப்புச் சட்டப்படி அதில் உறுதிப் படுத்தப்பட்டுள்ள நெறிமுறைப் படி இயங்குகிறதா எனக் கண்காணிக்கவும் வழி காட்டுவதற்குமான அதிகாரமும் கொண்டதாக நீதிமன்றமும் இயங்க வழி வகுப்பதே இக்கட்டமைப்பின் நோக்கம்.

இதற்கு அப்பால் இம்மூன்று அமைப்புகளுமே முறைப்படி இயங்குகிறதா, மக்கள் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் செயல் படுகிறதா என நுண்நோக்கவும் கருத்து கூறவும் விமர்சிக்கவும் ஆன பத்திரிகைத் துறை நான்காவது தூணாகவும் சொல்லப்படுவது உண்டு. எனினும் இவை அனைத்திற்கும் மேலாக இவ்வனைத்து உரிமை களையும் நிலைநாட்டும் நோக்கில் மக்கள் திரள் பிரிவின் உரிமைகளைக் காப்பதில் முன்னோடிப் பாத்திரம் வகிக்கும் மனித உரிமைப் போராளிகளையும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.

ஆனால், ஆதிக்க சக்திகளும் அவற்றுக்குத் துணை போகும் அடிவருடி எடுபிடிக் கும்பல்களும். சனநாயக அமைப்பின் நான்காவது தூணாகச் செயல்படும் பத்திரிகை யாளர்களையும், மனித உரிமைப் போராளிகளையும் திட்டமிட்டுப் பழி வாங்கவும், தீர்த்துக் கட்டவுமான குரூர நடவடிக்கைகளில் இறங்கி யுள்ளன

மும்பையிலிருந்து வெளிவரும் ‘மிட் டே’ இதழின் புலனாய்வுப் பிரிவு ஆசிரியர் ‘ஜோதிந்திரடே’ (வயது 53) நிழல் உலக தாதாக்கள் பற்றியும், அவர்களுக்குத் துணைபோகும் காவல் அதிகாரிகள் பற்றியும் தொடர்ந்து எழுதி அச்சமூக விரோத சக்திகளின் தூக்கத்தைக் கெடுத்தவர். இளம் பத்திரிக்கையாளர்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருந்தவர். நம்பிக்கைக்கும் துணிச்சலுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். கடந்த 11.06.0211 அன்று சனிக்கிழமை நண்பகல் 2 மணிவாக்கில் மும்பை சூப்பர் மார்க்கெட் வழியாகத் தன் இரு சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இரண்டு வண்டிகளில் வந்த கூலிப் படையினர் ஜோதிந்தரைச் சுட்டு வீழ்த்திவிட்டுச் சென்று விடுகின்றனர். சுற்றி இருந்தவர்கள் அவரைத் தூக்கி போட்டுக் கொண்டு மருத்துவ மனைக்கு செல்ல, அங்கு உரிய கவனிப்பின்றி இறந்துபோகிறார். .

தமிழ்நாட்டில் மனித உரிமை வழக்குகளைத் தொடர்ந்து நடத்தி வருபவரும் வழக்கறிஞர்களும், மனித உரிமைப் போராளிகளும் நன்கு அறிந்த வருமான சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு, இவரது மகனும் வழக்கறிஞர். தந்தையோடிருந்து தந்தைக்கு உதவியாக பணியாற்றி வந்தவர். கடந்த 07.06.2011 அன்று காணாமல் போய் விடுகிறார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் காவல் நிலையத்தில் புகார் தந்தும் பலனற்ற நிலையில் தந்தை சங்கரசுப்பு உயர்நீதி மன்றத்தில் ‘ஆள் கொணர்வு’ மனு தாக்குதல் செய்ய, கடந்த 13.06.2011 அன்று சென்னை ஐ.சி.எப். ஏரியில் அவரைப் பிண மாகக் கண்டெடுக்கிறது காவல்துறை. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்கறிஞர் சமூகமும் ஆதரவாளர் களும் ஆவேசமாகக் கிளர்ந்தெழுந்து போராட உரிய பாதுகாப்புடனும் கண்காணிப்புடனும் சடல ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு , மரணம் கொலைதான் என்பது உறுதி செய் யப்படுகிறது.. சந்தேகம் திருமுல்லை வாயில் காவல் ஆய்வாளர்கள் ரியாசுதின். கண்ணன் ஆகிய இருவர் மேலும் விழ, விசாரணைக்கு உத்திர விடப்பட்டுள்ளது.

அடுத்து கேரளத்தில் மாத்ருபூமி இதழின் கொல்லம் நிருபர் உன்னதன் காவல் துணை கண்கானிப்பாளர் ஒருவர் சாராய வியாபாரிகள் தந்த விருந்தில் கலந்து கொண்டதை, முறைகேடாக நிலங்கள் வாங்கிக் குவித்ததை, விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டியதை அம்பலப்படுத்தி பத்திரிக்கையில் எழுதினார் என்பதற்காக ஆதிக்க சக்திகள் இவர்மீது கூலிப்படையை ஏவ கடந்த 16.04.2011 அன்று இரவு தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார். பலத்த காயமுற்றாலும் நல்ல வேளையாகப் பிழைத்துவிடுகிறார். கேரள பத்திரிக்கை உலகம் கொந்தளிக்க தாக்குதலுக்கு காரணமான காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் நாயர் கைது செய்யப் படுகிறார்.

அதாவது ஒரே மாதத்தில் இரண்டு கொலைகள், அதற்கு இரண்டு மாதம் முந்தி ஒரு கொலை வெறித் தாக்குதல், இவை வெளியே தெரிய வந்து பரபரப் பானவை. இவை யன்றி வெளியே தெரியவராமல் எத்தனை நிகழ்வுகளோ. இப்படிப் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, ஏதுமறியா அப்பாவி மக்கள், சிறுவர் சிறுமிகள் ஒரு புறம் பாலுறவு வன்முறைக்கோ, வன் கொடுமை களுக்கோ, கௌரவக் கொலை களுக்கோ உள்ளாக்கப் படுவதும் ஒரு புறம் நிகழந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமென்ன? ஆதிக்க சக்திகள் - அது அரசியல் பொருளியல் ஆதிக்கச் சக்திகளோ அல்லது பண்பாட்டு ஆதிக்கச் சக்திகளோ எதுவானலும் சரி தங்கள் ஆதிக்கத்தை அதை விட்டுக்கொடுக்க விரும்பாத மிருகத்தனம். தாங்களும் பிற எல்லா சாமான்ய மனிதனையும் போல வாழ்ந்து விட்டுப் போக விரும்பாத மேலாதிக்க வெறி. இவையே இது போன்ற படுகொலைகள், பழி தீர்த்தல் களுக்குக் காரணமாகின்றன. அதாவது நாங்கள் எங்கள் விருப்பத்துக்கு எங்கள் தன்னலத்துக்கு எங்கள் பேராசைக்கு எதையும் செய்வோம். யாரும் இதைத் தட்டிக் கேட்கக்கூடாது. இது பற்றி வாய் திறக்கக்கூடாது. திறந்தால் உங்கள் கதி அதோ கதிதான் என்கிற அச்சுறுத்தல், பழி தீர்த்தல். இதுவே இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கின்றன.

சரி, இதுபோன்ற வெறிச்செயல் களைத் தடுத்து நிறுத்த முடியாதா? முடியும். ஆட்சியாளர்கள் நினைத்தால், இக்கொடுமைகளைக் களைய அக் கறையோடு இருந்தால் செய்யலாம். ஆனால் ஆட்சியாளர்களே இதன் பங்காளிகளாக, கூட்டுக் கொள்ளை யர்களாக இருப்பதுதான் இப்படிப் பட்ட கொடுமைகள் தொடர வழி வகுக்கிறது.

இது ஒருபுறமிருக்க, இதுபோன்ற தாக்குதல்கள், வன்முறைகள் நிகழும் போது, இதற்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களும் சேர்ந்து குரல் கொடுப்பதற்கு மாறாக, பாதிக்கப் பட்டவர்கள் அவர்கள்தான் இந்தப் பிரச்சனையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதானப் போக்கு நிலவுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

அதாவது பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டால் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டால் வழக்கறிஞர்கள் என அந்தந்தப் பிரிவு மக்களும் பாதிக்கப்படும்போது அவர்களாகவே போராடிக்கொள்ளவேண்டியதுதான் என்கிற நிலை நீடிக்கிறது. இதைப் போலவே அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பிற அமைப்புகள் சார்ந்த பிரச்சினைகளிலும் அந்தந்தப் பிரிவு பாதிக்கப்படும்போது அந்தந்தப் பிரிவினர் குரல் கொடுத்துக் கொள்வது என்கிற போக்கே தொடர்கிறது.

இந்த நிலை மாறவேண்டும். பாதிக்கப்படுவது, பழி தீர்க்கப்படுவது யாரனாலும், பிரச்சினையின் பொது அக்கறையை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் அதற்காகக் குரல் கொடுக்கவேண்டும். இந்த அடிப் படையில் மேற் குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை நீதி மன்றத்தின் முன் நிறுத்தி அவர்களை உரிய தண்டனைக்கு உட்படுத்த அனைவரும் குரலெழுப்ப வேண்டும். இதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு பத்திரிகை சுதந்திரத்தை மனித உரிமைகளைஉறுதியோடு பாதுகாக்கப் பாடுபடவேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை எழுதி முடிக்கப் பட்ட தருணத்தில் ஷீலா மசூட் என்னும் பெண் சமூக ஆர்வலர் ஆகஸ்ட் 16ஆம் நாள் நண்பகலில் போபால் நகரில் அவரது காருக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் 10 கொலைகள் உள்ளிட்டு 28 நடைபெற்றுள்ளன. 2011இல் இதுவரை 5 சம்பவங்கள் நடந்துள்ளன. ஷீலா மசூட்டின் சம்பவம் 6ஆவது ஆகும்

இதுபோன்ற தாக்குதல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லி தில்லி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு 9இல் கொண்டு வந்த சமூக நீதிப் போராளிகள் பாதுகாப்புச் சட்டம் 2010 நடப்பில் இருந்தும் இம்படிப்பட்ட தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பத்திரிகையாளர்களுக்கும் சமூக நீதிப் போராளிகளுக்கும் பாதுகாப்பற்றதாக உள்ள நாடுகளில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது.

சமீபத்தில் மெக்சிகோ நாட்டில் அனா மர்சலா ஏர்ஸ்,ரோக்கியோ கன்ஸ்லோஸ் என்னும் இரு பெண் பத்திரிகையாளர்கள் அந்நாட்டின் தலைநகர் மெக்சிகோவின் இடுகாட்டுப் பகுதியில் கழுத்து நெரிக்கப் பட்டு கொல்லப்பட்டுள்ளனர்

இப்படி உலக முழுவதும் பத்திரிகையாளர்களும் சமூக நீதி ஆர்வலர்களும் வேட்டையாடப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது

இப்படிப்பட்ட வேட்டையாடல்களை எதிர்த்துப் போராட சமுகம் விழிப்புணர்வு பெற வேண்டும். அப்படிப்பட்ட விழிப்புணர்வை சமுக ஆர்வலர்கள் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

Pin It

ராஜிவ் மறைவு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரது கருணை மனுவையும் பதினோரு ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவர் நிராகரித்து, சிறைத்துறையும் அவர்களுக்கு நாள் குறிக்க, இது தமிழகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இயற்கை நீதி, சட்ட நீதி, சமூக நீதி என எந்த நீதிக்கும் உட்படாது, அரசியல் உள் நோக்கோடு இழைக்கப்படும் இந்த அநீதியை எதிர்த்து தமிழகமே கொந்தளித்து எழுந்தது. இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க தண்டனை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டு வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது பற்றி நம் புரிதலுக்காக சில.

ராஜிவ் மறைவு வழக்கில் நால்வருக்குமான மரண தண்டனை 1999இல் உச்சநீதி மன்றம் உறுதி செய்கிறது. இதை எதிர்த்த கருணை மனு அதே ஆண்டில் குடியரசுத் தலைவருக்கும் தமிழக ஆளுநருக்கும் அனுப்பப்படுகிறது. இதில் அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, இக்கருணை மனுவை தன் முடிவாக நிராகரித்துவிட, அவர் தமிழக அமைச்சரவையைக் கருத்து கேட்காது இப்படிச் செய்தது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்று அதனடிப்படையில் தண்டனையைக் குறைக்கக் கோரி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மனுவும் தந்தது. எனில் கருணாநிதி நளினிக்கு மட்டும் தண்டனையைக் குறைப்பு செய்து மூவர் பிரச்சினையையும் அப்படியே கிடப்பில் போட்டு, தில்லிக்கு அனுப்பிவிட்டார்.

இது இப்படியிருக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட மனுவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே கிடக்க, கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் திடீரென்று அதற்கு இறக்கை கட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மூவர் கருணை மனுமீது இந்திய உள்துறை அமைச்சகம் ஜுன் 2005 இல் தன் கருத்தைக் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கிறது. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆட்சியில் அது அப்படியே கிடப்பில் இருக்க, அடுத்து பிப்ரவரி 23, 2011 இல் அமைச்சகம் அதைத் திரும்பப் பெற்று, 2011 மார்ச் 8 இல் அதன் மீது மறு பரிந்துரை செய்து அனுப்புகிறது. இதன் பேரில்தான் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் ஆகஸ்ட் 12 இல் இக்கருணை மனுவை நிராகரித்து தண்டனையை உறுதி செய்துள்ளார்.

இதில் தமிழக மக்களும் ஜெ. அரசும் புரிந்து கொள்ள வேண்டியது, இச்சிக்கலைப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் வைத்திருந்த தில்லி ஆட்சியாளர்கள், தற்போது காட்டும் இந்த திடீர் சுறுசுறுப்புக்கும் அவசர முடிவிற்கும் காரணம் என்ன என்பதைத்தான்.

1. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13 இல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இதன் மீது இசகு பிசகாக ஏதும் நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விளைவாக தமிழக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து தோல்வியைத் தழுவவோ, தனக்கும் தன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவோ தில்லி காங்கிரஸ் விரும்பவில்லை.

2. ஆனால், காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி படுதோல்வியுற்று, ஜெயலலிதா தமிழக மக்களின் பேராதரவோடும், தனிப் பெரும் பான்மையோடும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் வழக்கமான தன் பாணியில் தி.மு.க வைக் கழற்றி விட்டு, அ.தி.மு.க வைத் தன் பக்கமாக இழுக்க முயற்சித்து. சோனியா காந்தி ஜெ.வுக்கு தேநீர் விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.

3. இந்த முயற்சி கனிந்து வராது, தி.மு.கவும் காங்கிரசோடு அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்க, ஜெ.வும் பிடி கொடுக்காமல் தனித்துவம் காக்க, ஜெ.வைப் பழி வாங்கும் நோக்குடனும், தமிழக மக்கள் மத்தியில் அவருக்கிருக்கும் மகத்தான செல்வாக்கைச் சிதைக்கும் எண்ணத்துடனுமே தற்போது தில்லி அரசு அவசர அவசரமாக இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

அதாவது போலித் தமிழினத் தலைவர்கள் தங்கள் அரிதாரம் கலையாமல் பார்த்துக் கொள்ளவும், தங்கள் ஆட்சியில் இந்த அநீதி அரங்கேறவில்லை, பார்ப்பன ஜெ, ஆட்சியில்தான் இது நடந்தது என இவர் மேல் பழியைப் போடவும். இதன் வழி ஜெவுக்கு வரலாற்றில் என்றென்றைக்கும் நீங்காத கறையைக், களங்கத்தைச் சுமத்தி, காலாகாலத்திற்கும் தமிழர்கள் அவரைத் தூற்றி, அவர் மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுக்கவுமான பன்முக நோக்கிலேயே தில்லி ஆட்சியாளர்கள் இந்த சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர்.

எனவே, ஜெ அரசு இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். தனது ஆட்சியில், தனது நிர்வாகத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்தது, நிறைவேற்றுப்பட்டது என்கிற பழிச்சொல் தன்மீது பாயாது காத்து இம்மரண தண்டனையை தடுத்து நிறுத்தி தனக்கு ஆதரவான தமிழக மக்களின் பேராதரவை, செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும்.

ஏற்கெனவே தமிழக மக்களின், உலகத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து இம்மூவர் மரண தண்டனையையும் தடுத்து நிறுத்தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உணர்வாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற ஜெ. திடீரென்று இம்மூவர் கருணை மனுவையும் நிராகரிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது, மனித உரிமை ஆர்வலர் அனைவர் நெஞ்சிலும் பேரிடியாய் இறங்கியது. தற்போது அதற்கான பரிகாரம் போல் மூவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கோரி தமிழக அரசு சார்பில் பதில் அளித்திருப்பது உலகத் தமிழர் அனைவர் நெஞ்சிலும் பால் வார்த்து பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கு தற்போது 2012 சனவரி 31க்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் உரிய நியாயம் கிடைக்கும் என்றாலும் அதற்காக வாளாயிராமலும், தமிழகத்தில் அவ்வப்போது தீவிரமடையும் பல்வேறு பிரச்சினைகளில் இம்மூவர் பிரச்சினையைப் பற்றியும் மறந்து போகாமலும் துடிப்போடும் விழிப்போடும் இருந்து இம்மூவர் உயிரையும் காக்க தொடர்ந்து போராடவேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெ. இப்போதைய முடிவில் உறுதியோடு இருந்து இந்திய அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இம்மூவர் உயிரையும் காத்து, அவர் உலகம் முழுவதுமுள்ள தமிழர் நெஞ்சங்களில், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளங்களில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்தவராக விளங்க, அவரைத் தொடர்ந்து வலியுறுத்தவும் வேண்டும்.

Pin It