இறந்து போன சட்டங்களுக்கு 

சமாதிகள் கட்டுவதில்லை. 

விபத்தில் இறந்துபோன நீதிகளுக்கு 

நினைவாலயங்கள் எழுப்புவதில்லை. 

தவறானவர்களின் கையில் கிடைத்த 

உரிமைச் சட்டங்கள் ஊனப்படுத்தப்பட்டு 

நீதிமன்ற வாசலில் பிச்சை 

எடுக்க வைத்துவிடுகிறார்கள் 

சில சட்டங்கள் பெரிய 

எலும்புக் கூடுகளாய் பயமுறுத்தும் 

அதில் யாணைகள் வெகுசாதாரணமாக 

நூழைந்து வெளியேறிட முடியும். 

சிலருக்கு சட்டங்கள் 

பூனைக்குட்டிகள் போல விளையாடும் 

நாய்களைப்போல காவலிருக்கும்,

எஜமானர்களை கடிக்காது. 

சட்டத்தின் உறுமல் சத்தம் கேட்கும் 

அதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் 

பாசாங்குகள் 

அவ்வப்போது விழித்துப் பார்க்கும். 

நேற்றொருவன் பேட்டியளித்துக் கொண்டிருந்தான். 

தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயுமென்று. 

சட்டங்கள் ஏவுகணைகளாகவிட்டன. 

குறிபார்த்துக் கொண்டிருக்கின்றன 

இராணுவ பீரங்கிகளைப் போல 

எல்லாக் காலத்திலும் 

சாமான்ய மக்களின் மீதே பாய்கின்றன 

மகள் கேட்டாள் 

மக்களை நோக்கி ஏன் சட்டம் பாய வேண்டும்

சொன்னேன். 

தேசத்தை பாதுகாக்க

மக்கள் என்பது தேசமில்லையா.

Pin It