மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் 24.01.2015 காரி(சனி)க் கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை “கோட்சே சிலை எதிர்ப்பு மாநாடு” நடைபெற்றது. காந்தியடிகளைக் கொலை செய்த இந்துத்துவா வெறியன், சித்பவன பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சேவிற்கு இந்தியாவெங்கும் சிலை எழுப்பப் போவதாக ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் அறிவித்துள்ளன. ஈரோட் டில் கோட்சேக்கு சிலை எழுப்பப் போவதாக அகில பாரத இந்து மகா சபா கட்சி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இச்சுவரொட்டி கண்டு வெகுண்டெழுந்த மதச் சார்பற்ற ஆற்றல்கள் ஈரோட்டில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பை உருவாக்கினர். அக்கூட்டமைப்பின் முடிவுப்படி “மகாத்மா காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே சிலை எதிர்ப்பு மாநாடு” இரு அரங்குகளாக நடந்தது.

முதல் அமர்வு, தமிழக பசுமை அமைப்புத் தலைவர் மருத்துவர் வெ. சீவானந்தம் அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழினப் பாதுகாப்பு அமைப்புத் தலைவர் தோழர் கி.வே. பொன்னையன் தொடக்கவுரை ஆற்றினார். சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கரைஞர் ஆர். காந்தி, தமிழ்நாடு தாழ்த்தப்பட் டோர் வாழ்வுரிமை இயக்கத் தமிழக சட்ட மதியுரைஞர் மூத்த வழக்குரைஞர் பா.ப. மோகன், சமூக நீதி வழக்கு ரைஞர் நடுவ ஒருங்கிணைப்பாளர் மூத்த வழக்கறிஞர் இரத்தினம், காந்தி கிராமப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் மார்க்கண்டன், தமிழ்த் தேச நடுவம் ஒருங்கிணைப்புக் குழுத் தோழர் நிலவன், திராவிடர் கழகப் பேராசிரியர் முனைவர் ப. காளிமுத்து, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் மதிவண்ணன், ஈரோடு கிறிஸ்துவ லீக் தலைவர் டி. விசயக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

தேனீர் இடைவேளைக்குப் பின் இரண்டாம் அமர்வுக்கு மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் மூத்த வழக்குரைஞர் பி.திருமலைராசன் தலைமை தாங்கினார். மக்கள் குடியியல் உரிமைக் கழக - பியுசிஎல் - தமிழகத் துணைத் தலைவர் தோழர். கண. குறிஞ்சி தொடக்க உரையாற்றினார்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழகப் பொதுச்செயலாளர் தோழர். தா. பாண்டியன், மதிமுக பொதுச் செயலாளர் தோழர் மல்லை சத்தியா, திவிக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், த.பெ.தி.க பொதுச் செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன், ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் தோழர் இரா. அதியமான், தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அப்துல் சமது, எஸ்.டி.பி.ஐ பொதுச் செயலாளர் தோழர் நெல்லை முபாரக், தமிழக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பொழிலன், காங்கிரசுக் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு. ஈ.பி.இரவி, ஆதித் தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் கு.சாக்கையன், ஆகியோர் உரையாற்றினர். மதவெறி எதிர்ப்பு ஒருங்கிணப்புக் குழு தோழர் ப. இரெத்தினசாமி நன்றியுரை ஆற்றினார்.

ஈரோடு பேருந்துநிலையப் பகுதியில் உள்ள மல்லிகை அரங்கம் நிரம்பிடும் வகையில் நிலையில் இம்மாநாட்டிற்கு மக்கள் திரண்டிருந்தனர்.

தீர்மானங்கள்

1. காந்தியடிகளைக் கொலை செய்த இந்துத்துவா கொலைவெறியன் கோட்சேக்கு இந்தியாவில் எங்கேயும் சிலை வைக்கக் கூடாது. சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது. கொலைகாரன் கோட்சேக்கு சிலை வைக்க முயலும் ஆர். எஸ். எஸ் பரிவாரங்களை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

2. கொலைகாரான் கோட்சேக்கு சிலை வைப்பதை எதிர்க்கும் இம்மாநாட்டிற்கு சுவரெழுத்து, சுவரொட்டிகள் பரப்புரை, என எந்த வடிவத்திலும் மக்களுக்கு, விளக்கம் சொல்லத் தடை போட்ட ஈரோடு மாவட்டக் காவல் துறையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு தலையிட்டு, ஈரோடு மாவட்டக் காவல் துறையின் மேற்படிச் சட்டவிரோதச் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இம்மாநாடு கோருகிறது.

3. தமிழக மதச் சார்பற்ற, சனநாயக ஆற்றல்கள் ஒருங்கிணைந்து மதவெறிச் செயல்களுக்கு எதிராகக் களமிறங்கிப் போராட முன்வருமாறு இம்மாநாடு அன்புடன் அழைக்கிறது.

Pin It