சென்னையில் தமிழக அரசு நடத்திய குடியரசு நாள் விழாவில் சாதனை விளக்க வண்டிகளின் முகப்பில் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் படம் வைக்கப் பட்டுச் சென்றது சரியல்ல என்று கருத்துகள் வந்துள்ளன. அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

அரசு விழா அணிவகுப்பு வண்டிகளில், செயலலிதா படம் வைக்கப்பட்டது தவறு. அவர் இப்பொழுது முதலமைச்சராக இல்லை என்பது ஒரு காரணம். இன்னொரு முகாமையான காரணம் அவர் சொத்துக் குவிப்புக் குற்றத்தின் கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேல் முறை யீட்டுப் பிணையில் வெளியில் உள்ளார். அவரின் தண்டனை நீக்கப்படவில்லை.

இந்நிலையில் எந்தத் தகுதி அடிப்படையில் செயலலி தாவின் படத்தை குடியரசு நாள் அரசு விழா அணிவகுப்பில் காட்சிப்படுத்தினார்கள்?

ஆளுங்கட்சித் தலைவி என்ற அடிப்படையில் அவரது படத்தை அணிவகுப்பு வண்டியில் வைத்திட சட்டப்படி உரிமை கிடையாது.

அடுத்து இப்பொழுதுள்ள முதலமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வத்தை சிறுமைப்படுத்தும் நிகழ்வாகவும் அச்செயல் உள்ளது. ஏனெனில், முதல்வராகிய அவர் படம் உரியவாறு வைக்கப்படவில்லை. இப்படி யெல் லாம் செயலலிதாவை இந்த நேரத்தில் முன்னிலைப் படுத்துவது அநாகரிகம் என்றோ - கட்சி சாராப் பொது மக்களிடம் அவருக்கு அனுதாபத்தை உண்டாக்காது என்றோ, அ.இ.அ.தி.மு.க. தலைமை உணரும் நிலையில் இல்லை. அற்பக் களியாட்டக் கூட்டத்தை வேண்டு மானால் இச்செயல் குதூகலப்படுத்தலாம்!

தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ ஏதிலிகளை இலங்கைக் குத் திருப்பி அனுப்பும் ஏற்பாட்டில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. ஏதிலியர் முகாம்களில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு விரும்புவோர் விண்ணப்பத்தை நிரப்பித் தருமாறு கோரியுள்ளனர். இது சரியா?

பொதுவாகப் பார்த்தால் விரும்புவோர் இலங்கைக் குத் திரும்பலாம் தானே என்று தோன்றும். ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே அங்கு வாழும் மக்களே, குடியியல் உரிமையற்று இராணுவ முகாம்களுக்கிடையே பணயக் கைதிகள் போல் உள்ளனர்.

வடக்கு கிழக்கு மாநிலங்களிலிருந்து இராணு வத்தை வெளியேற்றிவிட்டு, சிங்கள இராணுவம் வன்கவர்தல் செய்துள்ள தமிழர் நிலங்களை மீட்டு விட்டு, பெருகிவரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து விட்டு, தமிழர்கள் வாழ்வதற்கான வாழ்வுரி மைகளை உறுதிப்படுத்திவிட்டு, இந்திய அரசு ஈழ ஏதிலியரை விரும்பினால் இலங்கை செல்லுங்கள் என்று கூறினால், அதில் பொருள் இருக்கும்; பொறுப்புணர்வு இருக்கும்.

கழற்றிவிட்டால் சரி என்று எண்ணத்தில் ஈழத் தமிழர் களை வெளியேறும்படித் தூண்டக் கூடாதல்லவா?

பல வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளன. உடனடி யாகத் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்.

அடுத்து, வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன், குடியியில் வாழ்வுரிமையுடன் வாழும் நிலையை உருவாக்கிவிட்டு விரும்புவோர் இலங்கை செல்லலாம் என்று இந்திய அரசு அறிவிக் கலாம்.

விருப்பப்படிதான் இலங்கை திரும்புகிறார்கள் என்பதாக வெளியில் சொல்லிவிட்டு, வெளியேறுவதற்கான மறைமுக நெருக்குதல்களை ஈழத்தமிழர்களுக்கு அரசு கொடுக்கக் கூடாது.

மொழிப்போர் 50ஆம் ஆண்டு ஈகியர் வீரவணக்க நாளுக்கு அறிக்கை வெளியிட்ட கலைஞர் கருணாநிதி முன்னாள் தலைமை அமைச்சர்கள் இந்தியைத் திணிக்காததைப் போல் நரேந்திர மோடியும் இந்தியைத் திணிக்கக் கூடாது. மற்றவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்தி யைத் திணிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். அது பற்றி?

கலைஞர் கருணாநிதியின் மொழிப்போர் ஆண்டு - 50 அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான இரண்டு கூற்றுகள் இருக்கின்றன. ஏற்கெனவே, தலைமை அமைச்சர்களாக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாயி, நரசிம்மராவ் போன்றவர்கள் இந்தித் திணிப்பை எல்லா வழியிலும் தீவிரப்படுத்தியவர்களே! அவர்களை இந்தியைத் திணிக்காத தலைமை அமைச்சர்கள் என்று கருணாநிதி கூறுவது பொய்.

இரண்டாவதாக, நரேந்திர மோடி தன்னளவில் இந்தித் திணிப்பு விருப்பம் இல்லாதவர் போலவும், அவரைச் சுற்றியுள்ளவர்கள்தாம் அவ்வாறு தூண்டு கிறார்கள் என்பது கலைஞர் கருணாநிதி கூறுவது பம்மாத்து!

நரேந்திர மோடி இந்தித் திணிப்பில் தீவிரமாக உள்ளார். செயலலிதாவும் கருணாநிதியும் நரேந்திர மோடியின் அருளை எதிர்பார்த்துக் காத்திருக் கிறார்கள். முன்னவர், தான் தண்டனையிலிருந்து தப்ப வேண்டும் என்ற கணக்கிலும், பின்னவர் தம் குடும்ப உறுப்பினர்கள் ஊழல் வழக்குகளில் தண்டனைகள் கிடைக்காமல் தப்பிக்க வேண்டும் என்ற கணக்கிலும் நரேந்திர மோடியின் கருணைக்குக் காத்திருக்கிறார்கள். இரத்தத்தின் இரத்தங்களும் உடன்பிறப்புகளும் செயலலிதாவும் கருணாநிதியும் இலட்சியச் சண்டை போட்டுக் கொள்வது போல் பொது மக்களிடம் வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள்.

நடுவண் நிதியமைச்சர் அருண் சேட்லி செயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தது தவறு என்று கூறப்படுவது சரியா?

செயலலிதாவை அருண் சேட்லி சந்தித்தது சரியல்ல. ஊழல் வழக்கில் பல மாதங்கள் சிறையி லிருந்து விட்டு, மேல் முறையீட்டுப் பிணையில் வந் துள்ள லல்லு பிரசாத்துடன் கூட்டணி சேர காங்கிரசு துடிக்கிறது.

அதே போல், நான்காண்டு சிறைத் தண்டனை பெற்று 28 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வந்த செயலலிதாவுடன் கூட்டணி சேர பா.ச.க. துடிக்கிறது.
பா.ச.க. பேசும் ஆன்மிகம் ஒழுக்கம் அனைத்தும் போலியானவை. எப்படியாவது பதவி பெற வேண்டும், பணம் திரட்ட வேண்டும், அத்தேடலின் குறுக்கே எந்த ஒழுக்கமும் ஆன்மிகமும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் காங்கிரசும் பா.ச.கவும் இரட்டைப் பிள்ளைகள் போன்றவை!

தமிழக மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் செயலலிதாவுக்குக் கொடுத்த 37 மக்களவைத் தொகுதிகளை அடமானம் வைத்துத் தன்னைத் தண்டனையிலிருந்து மீட்டுக் கொள்ள செயலலிதா முயல்வார்.

இன்றைய தேர்தல் அரசியல் என்பது ஊழல் பெருச்சாளிகளின் பொந்துகள்தான்!

Pin It