பொக்காலா லட்சுமி நரசு - இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் வாழ்ந்த பவுத்த முன்னோடிகளில் முக்கியமானவர். ஆசிய அறிஞர்களால் அக்காலத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வந்த பவுத்த மரபுகளில் இருந்து காலத்திற்கேற்ற, விடுதலை அளிக்கும் மதத்தை, மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அக்காலத்திய பிற பவுத்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்களான அயோத்திதாசர், எம். சிங்காரவேலு ஆகியோருடனான தொடர்ந்த கலந்தாய்வுகளோடு, நரசுவின் மத உருவாக்க முயற்சி, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நடைபெற்றது. மதம் என்பதற்கு இன்று அளிக்கப்படும் விளக்கத்தின் அடிப்படையில் மற்றொரு மதத்தை நிறுவுவது, அவர்களின் நோக்கமல்ல. மாறாக, காலத்திற்கேற்ப பகுத்தறிவு சார்ந்த, சுதந்திரமான உலகப் பார்வையும், ஒழுக்க நெறியும் கொண்டு நவீன காலத்திற்குள் நுழையும் ஆண் பெண்களுக்கிடையே சகோதர உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் வளர்க்கவும் வழங்கவுமான ஒரு நெறியை நிறுவுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

Lakshmi Narasu
நரசுவின் குடும்பப் பின்புலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நம்மிடம் இருக்கும் ஆதாரங்கள், அவருக்குப் பிறகு தென்னிந்திய பவுத்த சங்கத்தின் சென்னை பெரம்பூர் கிளைக்குப் பொறுப்பேற்றவரான மறைந்த என். ஜீனராஜு என்பவர் சேகரித்தவையே ஆகும். அவற்றில் பரவலாகப் பேசப்பட்டு, அறியப்பட்டு வந்த வாய்மொழித் தகவல்கள் மற்றும் அக்காலத்திய இதழ்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்த செய்திகள் ஆகியவையே இருந்தன. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்திலிருந்து தலைநகருக்கு குடி பெயர்ந்து, சென்னை நீதிமன்றங்களில் புகழ் பெற்ற வழக்கறிஞராக விளங்கிய பொக்காலா செல்லா நாயனம்காரு என்பவரின் மகனாக லட்சுமி நரசு பிறந்தார். அவருக்கு ஆண்டாள் அம்மாள் என்ற சகோதரியும், கிருஷ்ணசாமி, ராமானுஜம் மற்றும் பாஷ்யம் என்று மூன்று சகோதரர்களும் உண்டு.

1911இல் சென்னையில் நடந்த ரயில் தீ விபத்தில் ராமானுஜமும் பாஷ்யமும் மரணமடைந்தனர். லட்சுமி நரசு 1861இல் பிறந்து, அறிவியல் கற்று, சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெண்கள் நலச் சங்கத்தின் மூலம் பொது வாழ்வில் செயலாற்றி வந்த ருக்மணி அம்மாளை மணந்தார். அவர்களுக்குப் பிறந்த 10 குழந்தைகளில் வெங்கட் என்ற மகனும், வீரலட்சுமி என்ற மகளும் மட்டுமே பிழைத்தனர். வெங்கட் பாரிசில் படித்துக் கொண்டிருக்கையில், அகால மரணம் அடைந்தார். அவர் மறைந்த வேதனை தாங்க இயலாமல் ருக்மணி அம்மாளும் வெகு விரைவில் இறந்து விட்டார். 1925 இல் நரசு, ராம ரத்தினம் அம்மாள் என்றொரு ‘விதவை'யை பெரம்பூர் வியாரத்தில் பவுத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

நரசு பொதுவாக, அவரது சகோதரர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி, தனிமைப்பட்டே வாழ்ந்து வந்தார். சமூக மத மூடப் பழக்க வழக்கங்கள், குறிப்பாக சாதிய அமைப்பு மற்றும் அன்றாட சடங்குகளை எதிர்த்து அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களுடன் அவர் கொண்டுள்ள நெருங்கிய உறவு ஆகியவற்றை அவரது குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அனைத்து வகையான சமூக இழிவுகளுக்கும் எதிராகவே தொடர்ந்து செயலாற்றி, சமூகத்திற்கு, குறிப்பாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்த அவர், இதய நோய் காரணமாக 1934, சூலை 14 ஆம் நாள் தமது 73 ஆவது வயதில் மரணமடைந்தார். மயிலாப்பூர் சுடுகாட்டில், எளிமையான பவுத்த முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

‘மெட்ராஸ் மெயில்' என்ற ஆங்கில நாளேடு, 23 சூலை 1934 பதிப்பில் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது:

‘அண்மையில் சென்னையில் மறைந்த பேராசிரியர் லட்சுமி நரசு அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவுகளைப் போற்றும் வகையிலும் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் சனிக்கிழமையன்று ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் கூட்டம் கூடிய அந்நிகழ்ச்சிக்கு திவான் பகதூர் ஏ. ராமசாமி (முதலியார்) தலைமை வகித்தார். மறைந்த பேராசிரியருடன் இருபது ஆண்டு காலம் பழகியவரான டாக்டர் சுரேந்திர நாத் ஆர்யா, பேராசிரியரின் அறிவுத்திறன், பொதுநலத் தொண்டு குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், அவரது மறைவின் மூலம் பொதுநலத்திற்கு தொண்டாற்றும் ஒரு முக்கிய ஆளுமையை இழந்துவிட்டோம் என்று குறிப்பிட்டார். திரு. பி. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் பவுத்தத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் கொண்டிருந்த ஆர்வத்தைப் போற்றினார். இந்த மாநிலத்திலேயே தனது சாதியைத் துறந்து, தான் போதித்தவற்றைத் தானே பின்பற்றிய ஒரே மனிதர் பேராசிரியர் நரசுதான் எனவும் அவர் குறிப்பிட்டார். பவுத்த நோக்கத்திற்காக பேராசிரியர் ஆற்றிய பணிகளை, சென்னை பவுத்த சங்கத்தின் செயலாளரான திரு. மோனியர் தொகுத்தளித்தார். நிகழ்ச்சியின் தலைவர் தனது இறுதியுரையில், பேராசிரியர் சிறந்த குணங்களை உடைய, உறுதியான சுதந்திர மனோபாவம் உடைய ஒரு மனிதராகத் திகழ்ந்தார் எனக் குறிப்பிட்டார். லட்சுமி நரசுவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும், அவரது நினைவுகளைப் போற்ற ஒரு குழு அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”

தொழில் ரீதியாக நரசு ஓர் இயற்பியல் அறிஞர். ஆனால், உண்மையை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாகவே அவர் அறிவியலை கண்டார். அவர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1882 ஆம் ஆண்டு மாணவராக இருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது பிஷப் ஹீபர் கல்லூரி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி கிறித்துவக் கல்லூரியில் பின்னர் அவர் இளநிலை விரிவுரையாளராக சேர்ந்தார் எனத் தெரிகிறது. 1892 - 94 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆரணி ஜகிர்தார் தங்கப் பதக்கம் பெற்றவர்களில் ஒருவராக அவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளது. 1894 ஆம் ஆண்டு அவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர் மாணவர்கள் இடையே மிகவும் புகழ்பெற்ற ஆசிரியராகத் திகழ்ந்தார். கல்லூரியின் சமூக வாழ்வில் தீவிரமாக ஈடுபட்ட அவர், மாணவர் தங்கும் விடுதிகளின் பொறுப்பாளராகத் திகழ்ந்தார்.

‘தி இந்தியன் ரிவ்யூ' போன்ற இதழ்கள், பெருமை வாய்ந்த கல்லூரி இதழ்கள் போன்றவற்றில் நரசு தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார். கல்லூரியின் மூத்தப் பேராசிரியரான மறைதிரு. மொபாத் அவர்கள் இல்லாத நேரங்களில் வகுப்புகள் எடுக்கும் பொறுப்பை நரசு ஏற்றபோது, கல்லூரி நிர்வாகிகளால் அவரது நுட்பமான அறிவுத் திறன் அங்கீகரிக்கப்பட்டது. அவருக்கு அவரது துறையில் இருந்த ஆழமான அறிவின் காரணமாக, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள அவர் தயங்கியதில்லை. ஆங்கிலேயரான பேராசிரியர் வில்சன் என்பவருடன் அவர் நடத்திய துறை சார்ந்த விவாதம், அவரது வாழ்நாள் முழுவதும் மாணவர்களிடையேயும், சக ஆசிரியர்களிடையேயும் பேசப்பட்டதாக இருந்தது.

பிற்காலத்தில் நரசுவின் நூல் ஒன்றினை அறிமுகம் செய்வதற்காக, நரசுவின் வாழ்க்கை குறித்த ஆய்வை மேற்கொண்ட அம்பேத்கரின் கவனத்திற்கு இந்த விவாதம் வந்தது. வலிமை மிக்கவர்களின் திமிரை துணிவுடன் சந்தித்த அவரது நேர்மையான உறுதிதான் - நரசுவின் ஆளுமைக்கு சான்றளிப்பதாகவும், அவரது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் பிரதிபலிப்பதாகவும், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவரை நெருக்கமானவராகவும், அதே வேளையில் அவரது சக ஊழியர்கள் மற்றும் ஆதிக்கவாதிகளிடமிருந்து அவரை ஓரளவிற்கு விலக்கி வைப்பதாகவும் இருந்தது.

1909 ஆம் ஆண்டு நரசு, கிறித்துவக் கல்லூரியிலிருந்து விலகி, பச்சையப்பன் கல்லூரியில் முழு நேரப் பேராசிரியராக சேர்ந்தார். 16 ஆண்டுகள் அவர் அக்கல்லூரியில், பல்வேறு விவாதங்களிலும் நடவடிக்கைகளிலும் பங்கேற்றும், கல்லூரியின் பொது நிர்வாகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும் சிறப்பாகப் பணிபுரிந்தார். ஒரு சிறந்த ஆசிரியராக, அவரது பணிகள் தேர்வு மேற்பார்வையாளர் மற்றும் உயர்நிலை கல்விக் குழுக்களின் உறுப்பினர் போன்றவற்றிற்கு - சென்னை பல்கலைக்கழகத்தாலும், வேண்டி பயன்படுத்தப்பட்டது. 1925 ஆம் ஆண்டு அவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவப்படம் அக்கல்லூரியில் நிறுவப்பட - அவரது சக ஊழியர்களும், மாணவர்களும் எடுத்த முயற்சிக்கு அவர் இசைவு அளித்தாரா என்பது தெரியவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் சென்னை மாகாணத்தில் குறிப்பிடத்தக்க பகுத்தறிவு சீர்த்திருத்தவாதியாக நரசு அறியப்பட்டார். ஏற்கனவே பவுத்தத்தின் மீது அவர் கொண்டிருந்த பிடிப்பு, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு இணைந்து, பரந்த மனப்பான்மை கொண்ட சிறந்த ஆளுமையாக அவரை பரிணமிக்க வைத்தது. மனித நலனுக்குரிய எதையும் தேவையற்றதாகவோ அவரது நேரம், செயல் திறன், ஈடுபாடு ஆகியவற்றை வீணடிக்கக் கூடியதாகவோ அவரால் பார்க்க இயலவில்லை. அக்காலத்தில் உருவெடுத்த பல முற்போக்கான சீர்த்திருத்த அமைப்புகளால் மிகவும் நாடப்பட்ட ஒரு முக்கிய நபராக அவர் திகழ்ந்தார். அனைத்து வகையான சமூக ஒதுக்குதல்களையும் அவர் எதிர்த்தார்.

‘மெட்ராஸ் எக்ஸ்செல்சியார் கிளப்', இந்து சமூக சீர்த்திருத்த சங்கம், தென்னிந்திய சங்கம், தேசிய நிதியம் மற்றும் தொழிற்சங்கம், சென்னை மகாஜன சபா, யங் மென்ஸ் பிரதர்ஹுட், சென்னை சமூக மாநாடு, தென்னிந்திய ஆசிரியர் கூட்டமைப்பு, மெட்ராஸ் டீச்சர்ஸ் கில்ட், ராயபுரம் தர்ம அண்ணா சாலா, நாயுடு சங்கம், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரி, குழந்தைகள் பாதுகாப்பிற்கான சென்னை சமூக அமைப்பு, இந்திய தொழிற்சங்க மாநாடு, யங் மென்ஸ் லிட்டரரி அசோசியேசன், ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுச் சங்கம், புரசைவாக்கம் திராவிட சங்கம், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு மாநாடு மற்றும் பல்வேறு பவுத்த சங்கங்கள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

லட்சுமி நரசு இன்றுவரை நினைவுக் கூரப்படுவது - அவரது துறை சார்ந்த பங்களிப்புகளுக்காகவோ, பல்வேறு பொது நலத் தொண்டுகளுக்காகவோ அல்ல. மாறாக, அவரது காலத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களின் இருத்தல் குறித்து எழுந்த கேள்விகளுக்கான பதிலாக புத்தரின் போதனைகளை மீட்டுருவாக்கம் செய்ய அவர் எடுத்த முயற்சிகளுக்காகவே ஆகும். நவீன காலத்தின் தோற்றத்தால், அனைத்து வகையான சமூக மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ நடக்கும் தொடர்ந்த நியாயமற்ற வேறுபாடுகள் ஆகியவை ஒருபுறம் அங்கீகரிக்கப்பட்டு வந்த அதே வேளையில், அவற்றிற்கு எதிரான போராட்டங்களும், சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தவிர்க்க இயலாததாக ஆகி விட்டன. விரும்பியோ விரும்பாமலோ, ஆங்கிலேய ஆதிக்க அரசு, தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக துணைக் கண்டத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் மிக மோசமான பகுதிகளான பார்ப்பனிய மூடத்தனங்களுக்கு புது தெம்பு அளித்துவிட்டன. அதற்கு இணையாக, வலிமை பெற்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களும், பண்பாடு - மரபு என்ற பெயரில் அவற்றையே தங்கள் அரசியல் கொள்கை மற்றும் செயல் திட்டத்திற்கு அடித்தளமாக ஆக்கிக் கொண்டன.

புத்தரும் அவரது போதனைகளும், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் சமூகங்களால், தங்களுக்கு ஓர் உலகளாவிய பார்வை அளிப்பதற்கான மூலாம்பரமாக - மனித சமத்துவம் மற்றும் சமூக விடுதலைக்கான அவர்களது தொடர்ந்த எதிர்வினைக்கான அடித்தளமாகப் பார்க்கப்பட்டது. நிலவும் பழமைவாத சிந்தனைகளோடு போட்டியிடக் கூடிய மற்றொரு பழமைவாத சிந்தனையாக, நிறுவப்பட்ட புனித நூல், மொழி மற்றும் புனித சடங்குகளைக் கொண்டதாக பவுத்தத்தை வெளிப்படுத்தும் பிற முயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இது இருந்தது. நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து, பிரச்சாரம் செய்த லட்சுமி நரசுவை, ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்குப் பிறகு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்வு, நடவடிக்கைகள் மற்றும் செய்தியால் உச்சத்தை அடைந்த ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட பவுத்தம்' என்று அழைக்கப்பட்ட சிந்தனையின் முன்னோடியாகவே காணலாம். பாபாசாகேப் அவர்களே பேராசிரியர் நரசு அவர்களை தனது முன்னோடியாகக் கருதியது தற்செயலானது அல்ல!

சாதி குறித்த நரசுவின் நூலை அறிமுகப்படுத்தி எழுதியுள்ள பிக்கு தேவப்பிரியா வலிசின்கா, நரசு இலங்கைக்குச் சென்றிருந்தபோது, வெளிப்படையாக பவுத்தத்தைத் தழுவிக் கொண்டார் எனக் குறிப்பிடுகிறார். இது குறித்து வேறு எந்த ஆதாரமும் நமக்கு இல்லை. ஆனால், நரசுவிற்கு பவுத்தத்தின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அவரது வாழ்க்கையின் தொடக்கக் காலங்களிலேயே இருந்ததை நாம் அறிய முடிகிறது. குறிப்பாக, மகாபோதி சங்கத்தின் சென்னை கிளை தொடங்கப்பட்ட ஆண்டான 1890க்கு முன்பே எனக் கூறலாம். அங்காரிகா தர்மபாலா, சென்னையில் தனது சங்கத்தின் கிளையைத் தொடங்க முடிவு செய்தபோது, ஏற்கனவே புத்தரின் அறிவுரைகளைப் பரப்புவதில் அர்ப்பணிப்போடு செயல்படக்கூடிய மூன்று முக்கியமானவர்கள் நகரில் இருந்தனர். எம். சிங்காரவேலு, பி. லட்சுமி நரசு மற்றும் அயோத்திதாசர் ஆகிய அம்மூவரும் ‘தியாசபிகல் சொசைட்டி'யின் கர்னல் ஆல்காட் அவர்களின் ஊக்கத்தையும் ஆதரவையும் பெற்றிருந்தனர். இவர்களைத் தவிர வேறு சில பரவலாக அறியப்படாதவர்களும் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்றைய காலத் தில் காலனிய ஆதிக்க அரசின் துணையோடு பார்ப்பனிய ஆதிக்கம் மிகுந்ததாக உருவாகிக் கொண்டிருந்த இந்து மதத்திற்கு ஒரே மாற்றாக, இவர்கள் அனைவருமே பவுத்தத்தையே கருதினர். இவர்களின் சமூகப் பின்புலம் வெவ்வேறாக இருந்ததன் காரணமாக, பவுத்தத்தின் மீதான அர்ப்பணிப்பில் ஒன்றுபட்டு நின்ற போதிலும், தங்களது இருத்தல் தேவைகளின் அடிப்படையில் பவுத்தத்தை வெவ்வேறான பார்வையிலேயே அணுகினர்.

மேற்கே எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த கம்யூனிச மாதிரிகளின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக, சிங்காரவேலர் புத்தரை ஒரு நாத்திக பகுத்தறிவுவாதியாக கண்டார். லட்சுமி நரசுவை பொறுத்தவரையில், புத்தர் ஒரு மிகச் சிறந்த மாந்த நேய பகுத்தறிவுவாதி. அயோத்திதாசரை பொறுத்த வரையில், புத்தரும் அவரது அறிவுரைகளும் முக்கியமாக தமிழ் - திராவிட மரபுகளுக்குள் பொருந்தக் கூடியதாக பழமைவாத வேத மற்றும் இந்திய பண்பாடு மற்றும் வரலாற்று மரபுகளுடன் போட்டியிடக் கூடியதாக, அதனால் சமூக பண்பாட்டுப் புரட்சிக்கு முக்கிய உந்து சக்தியாக மறுகட்டமைக்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதினார். தர்ம பாலாவின் மகாபோதி சங்கத்தை உருவாக்கும் பணியில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். தங்களுக்கு இடையேயும், தர்மபாலாவுடனும் நிலவிய பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையேயும், அவர்கள் ஒரு காலகட்டம் வரையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடு, நகரின் பல்வேறு பகுதிகளில் கருத்துரைகளை ஒழுங்கு செய்வதிலும், மக்களின் மொழியில் துண்டறிக்கைகள் மற்றும் ஆங்கிலத்தில் இதழ்கள் வெளியிடுவதிலும், பவுத்த விழாக்களை கொண்டாடுவதற்கு ஒழுங்கு செய்வதிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

அயோத்திதாசருக்கு பிந்தைய காலத்தில் சாக்கிய தென்னிந்திய பவுத்த சங்கத்துடன் நரசுக்கு இருந்த ஈடுபாடும், குறிப்பாக அதன் பெரம்பூர் கிளையை அமைப்பதிலும் அதை நிர்வகிப்பதிலும் நரசுவின் பங்களிப்பும் மகா போதி பவுத்தத்தின் இத்தகு நடவடிக்கைகளைவிட பலன் அளிக்கத்தக்கதாக இருந்தன. இச்சங்கம், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிறப்பு வாய்ந்த அயோத்திதாசரின் வழிகாட்டுதலின் கீழ், தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட் அவர்களின் ஊக்கம் மற்றும் ஆதரவைப் பெற்று, தலைநகரில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்களால் கூட்டாக நிர்வகிக்கப்பட்டது.

மகா போதி சங்கத்தில் ஒரு காலகட்டம் வரை அயோத்தி தாசருடன் இணைந்து செயல்பட்டதோடு, ராயப்பேட்டையில் இருந்த ஆசிரமத்தில் உருவாகிக் கொண்டிருந்த சாக்கிய திராவிட தென்னிந்திய பவுத்த சங்கத்தை உருவாக்குவதிலும் நரசு அயோத்திதாசருக்கு தனது ஒத்துழைப்பை நல்கினார். அயோத்திதாசர், லட்சுமி நரசு இருவருமே, உறுதியான குண இயல்புடைய, இயற்கையான அறிவுத் திறனுடன் கூடிய உணர்வுப்பூர்வமான மனதும், திட்டமிட்டு கவனமாக வளர்த்தெடுத்த கல்வியறிவும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். அனைத்திற்கும் மேலாக இருவருமே சிறந்த நோக்கமுடையவர்களாக, தற்கால நியாயமற்ற சமூகத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு, நியாயமான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய திசையில் அவற்றை திருப்பும் முயற்சியில் ஓய்வின்றி செயல்படக் கூடியவர்களாக இருந்தனர்.

ஆனால், அவர்கள் இருவரின் சமூக நிலையும் வெவ்வேறாகவே இருந்தது. நரசு, பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த போதிலும், ஓரளவு வளமிக்க குடும்பத்திலிருந்து வந்திருந்தார். அவரது குடும்பத்தினர் அன்றைய காலனிய அரசில் மதிப்புமிக்க பதவிகளை எட்டும் நிலையிலிருந்தனர். அதோடு நவீன ஆங்கிலம் மற்றும் அறிவியல் அறிவும் பெறக்கூடிய சூழல் அவருக்கு இருந்தமையால், அறிவாதிக்க உலகோடு தொடர்பு கொள்ளவும் நகரில் உள்ள அத்தகு மனிதர்களோடு பழகவும் அவருக்கு வாய்ப்பு இருந்தது. மற்றொரு புறத்தில் அயோத்திதாசர் நரசுவைப் போன்றே இயற்கையான அறிவுத் திறன் உடையவராகவும் தமிழ் இலக்கியப் புலமை மற்றும் மருத்துவ அறிவு உடையவராக இருந்தபோதும் அன்றைய ஆதிக்க மொழியின் வழியாக வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாதவராக இருந்தார். குறிப்பாக பறையர்கள் என்று ஒதுக்கப்பட்ட, காலனிய அரசால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே இருந்து வந்தவராக அவர் இருந்தார்.

வேறுபாடுகளுக்கு இடையிலும், அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டனர். நரசு ராயப்பேட்டை ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உரைகள் நிகழ்த்துவார். அயோத்திதாசரின் மறைவிற்குப் பிறகு ‘சாக்கிய தென்னிந்திய பவுத்த சங்க'த்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களால் லட்சுமி நரசு, தமிழ் பவுத்த இயக்கத்தின் நண்பராக, வழிகாட்டியாக, தத்துவாசிரியராக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

தமிழ் பவுத்த இயக்கத்திடம் நரசு கொண்டிருந்த ஈடுபாடும் அதில் அவரது பங்களிப்பும் பன்முகத் திறன் கொண்டவை. நாம் முன்பே குறிப்பிட்டதுபோல், சங்கத்தின் பெரம்பூர் கிளை, பெரும்பாலும் கற்றறிந்த இந்தப் பேராசிரியரின் கைத்திறனேயாகும். அமெரிக்க பவுத்த பெருமாட்டி மேரி பாஸ்டர் அவர்களின் தாராள நிதியில் ஒரு பங்கை தனது நண்பர் அங்காரிகா தர்மபாலாவின் மூலம் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுத்ததில் இவரது பங்கு அளப்பரியது.

நரசு தொடக்கத்தில் இருந்தே தன்னைச் சுற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளை உருவாக்கிக் கொண்டார். அவர்களின் துணையோடு ஒரு நிதியம் அமைத்து, வியாரம் ஒன்றும் பள்ளி ஒன்றும் கட்டினார். அப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் பயிற்றுவிக்கப்பட்டனர். தங்கள் அளவில் தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவர்களாகவும், சுதந்திர சிந்தனையுடையவர்களாகவும் அர்ப்பணிப்புடைய செயல்வீரர்களாகவும் இருந்த அவருடைய சீடர்களிடம் நடத்திய தொடர் விவாதங்கள் மற்றும் வாராந்திர உரைகள் இவற்றின் வழியாக நரசு உருவாக்கிய ‘நவீன பவுத்தம்' இங்குதான் வடிவம் பெற்றது. சங்கத்தில் அவரது சக ஊழியர்களான வி.பி.எஸ். மோனியர், பெரம்பை மாணிக்கம் ஆகியோர் பேராசிரியருடன் இணைந்து ‘இந்து மதமும் பவுத்தமும்', ‘மணிமேகலையில் பவுத்தம்' என்ற இரு தமிழ் நூல்களைப் பதிப்பித்தனர். பெரம்பூர் கிளை 1917இல் அமைக்கப்பட்டது. பாஸ்டரின் நிதியுதவியோடு எழுப்பப்பட்ட அதன் கட்டடம், 1921இல் திறக்கப்பட்டது. இங்கு சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர் பல தனி நபர்களை இந்தப் புதிய மதத்திற்கு அழைத்து வந்தார். அதோடு பார்ப்பன புரோகிதர் இன்றியும் வேத சடங்குகள் இன்றியும் நடத்தப்பட்ட பல சீர்த்திருத்த திருமணங்களுக்குத் தலைமையேற்றார். இந்த திருமண முறை அக்காலகட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த சுயமரியாதை திராவிடர் இயக்கத்தில் புகழ் பெறத் தொடங்கியது.

ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்திலும், அதைவிட அதிகமாக 1924 இல் அவர் ஓய்வு பெற்ற பின்னரும், தென்னிந்திய பவுத்த சங்கத்தின் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். மாகாணத்தின் பிற நகரங்களான பெங்களூர், திருப்பத்தூர், கோலார் தங்க வயல் போன்ற இடங்களுக்கு சங்கக் கிளைகள் அமைப்பதற்கும் முக்கிய விழாக்களில் கலந்து கொள்ளவும், சிறப்பு உரைகள் நிகழ்த்தவும், திருவிழா கொண்டாட்டங்களை சிறப்பிக்கவும் அவர் பயணம் மேற்கொண்டார். நகரத்தில் புதிய கிளைகள் அமைக்கவும் அவர் முயற்சிகள் மேற்கொண்டார். சங்கத்தின் சார்பில் ஒரு பொது மாநாடு நடத்துவது என்பது, அயோத்திதாசரின் நிறைவேறாத கனவாக இருந்தது. அத்தகைய ஒரு மாநாட்டிற்கான ஓர் அறிவிப்பை, அவர் ‘தமிழன்' இதழில் வெளியிட்டார். அதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டன. ஆனால், முதல் மாநாடு பண்டிதரின் மறைவுக்குப் பிறகு 1917இல் தான் நடத்தப்பட்டது. சென்னை மூர் அரங்க மக்கள் பூங்காவில் நடந்த அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்க பேராசிரியர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு மேலும் மூன்று மாநாடுகள் நடத்தப்பட்டன. இரண்டாவது 1920இல் பெங்களூரிலும், மூன்றாவது மீண்டும் சென்னையில் 1928லும், நான்காவது கோலார் தங்கவயலில் 1932லும் நரசுவின் காலத்திலேயே நடத்தப்பட்டது. இவை அனைத்திற்கும் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னிந்திய ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தினரால் பவுத்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதின் அடிப்படை நோக்கம், அவர்களது முழுமையான நிலையான, விடுதலையை நோக்கியதாக இருந்தது. அன்றைய காலனிய அரசால் சட்டமாக்கப்பட்டு வந்த பல சமூக, அரசியல் சிக்கல்களுக்கு இது தீர்வு காண முயன்றது. அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்தவை, குழந்தைகளின் கல்விக்குத் தேவையான நிதியும் சட்டத்துணையும், போதுமான அளவு அரசியல் பிரதிநிதித்துவமும் ஆகும். காலனிய அரசோடு பேசி தீர்க்க வேண்டிய இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தையை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு லட்சுமி நரசுவிடமே ஒப்படைக்கப்பட்டது. நரசு தொகுத்த புத்தரின் அறிவுரைகள் நிலைத்திருப்பதாகவும் விடுதலை அளிப்பதாகவும் காணப்பட்டன. சங்கத்தின் மதம் குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையாக அவரது ‘பவுத்தத்தின் சாரம்' ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்காலத்தில் ‘தமிழன்' இதழின் ஆசிரியராக இருந்த ஜி. அப்பாத்துøரயார் இந்நூலை தமிழில் மொழிபெயர்க்கும்படி பணிக்கப்பட்டார்.

நவீன பவுத்தத்தின் மறு உருவாக்கத்திற்கு லட்சுமி நரசுவின் எழுத்துகளே, உண்மையான நீடித்த பங்களிப்பாக இருக்கிறது. அவரது பரந்த வாசிப்பு, ஆழ்ந்த வெளிப்பாடு மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஆண்கள் பெண்களுடன் அவர் கொண்டிருந்த நீடித்த தொடர்புகள் ஆகியவற்றின் விளைவே - பல்வேறு தளங்களில் அவர் நிகழ்த்திய பல உரைகளுக்கு அடிப்படை ஆகும். இவை திருத்தப்பட்டு நன்கு எழுதப்பட்ட கட்டுரைகளாக வடிவமைக்கப்பட்டு பல வார, மாத இதழ்களில் வெளிவந்தன. அவற்றிற்கு எழுந்த வரவேற்பின் அடிப்படையில் அக்கட்டுரைகள் மேலும் விரிவாக்கப்பட்டு, எளிய, நேரடியான, தெளிவான நூல்களாக வெளியிடப்பட்டன. நரசு மூன்று முக்கிய நூல்களை வெளியிட்டார். ‘பவுத்தத்தின் சாரம்' (1907), ‘பவுத்தம் என்றால் என்ன?' (1916), ‘சாதி குறித்த ஆய்வு' (1922), ‘பவுத்தம் சுருக்கமாக' என்ற மற்றொரு நூலைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ஆனால், இந்நூல் கிடைக்கவில்லை. நரசு பல்வேறு தலைப்புகளிலும் கட்டுரை எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பான்மையானவை இன்னமும் சேகரிக்கப்படவில்லை. எனினும் நமக்கு கிடைத்திருப்பவை ‘சதர்மா' குறித்து அவரது விளக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. அதோடு அவரது பரந்த அறிவுத்திறன், முதிர்ச்சியான சிந்தனை, எளிமையான தெளிவாக்கும் திறன் இவற்றிற்கு மேலாக அவரது சார்பற்ற நேர்மையான முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு சான்றாக அமைகின்றன.

1954இல் ரங்கூனில் நடந்த பவுத்த தோழமையின் 3 ஆம் உலக மாநாட்டில் அவரது இளைய சகாக்களான வி.பி.எஸ். மோனியர் மற்றும் ஆர்.பி. தங்கவேலனார் ஆகியோர் நரசுவின் எழுத்துகள் குறித்து கீழ்க்கண்டவாறு தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்:

‘தங்கள் மக்கள் பின்பற்றக்கூடிய பவுத்தம் குறித்த பொருத்தமான ஒரு நூலை தேடிக்கொண்டிருந்த ஜப்பானியர்களை நரசுவின் ‘பவுத்தத்தின் சாரம்' வெகுவாக ஈர்த்தது. இந்நூலை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தனர். அந்நாட்டில் இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்தன. சுருக்கமாக, ஆனால் அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட பவுத்தம் குறித்த ஆய்வுகளை உள்ளடக்கிய ‘பவுத்தம் என்றால் என்ன?' எனும் சிறிய நூல், செக்கோஸ்லோவாக்கிய நாட்டின் முதல் அதிபரான ழான் மாரிக்கை பெரிதும் கவர்ந்தது. அவர் அதை தங்கள் மொழியில் மொழிபெயர்த்து, ஆசிரியருக்கு ஒரு பிரதியும் அனுப்பி வைத்தார். பின்னர் ‘இயற்கைத் தத்துவம்' பற்றிய ஓர் இதழில் இந்நூலின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு வெளிவந்தது. அவரது மூன்றாவது நூல் ‘சாதி குறித்த ஆய்வு' அவரது சமூக, அரசியல் சிந்தனைகளைக் கொண்டதாகவும் அவர் தனது காலத்தைக் கடந்து சிந்திப்பவராக இருந்ததை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது...”

உள்நாட்டைப் பொருத்தவரையில், ‘பவுத்தத்தின் சாரம்' நூல் அம்பேத்கரை பெருமளவில் பாதித்தது. இதுவரை பவுத்தம் பற்றி வெளியான நூல்களிலேயே சிறந்தது இதுவென அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ‘சதர்மா' குறித்து அறிந்து கொள்ள விரும்பிய அனைவருக்கும் வேறுபாடின்றி அவர் இந்நூலை பரிந்துரைத்தார். 1948 இல் தனது முன்னுரையுடன் இந்நூலை அவர் மீண்டும் அச்சிட்டார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புத்தர் குறித்தும் பவுத்தம் குறித்தும் வெளிவந்த பல்வேறு எழுத்துகளிலிருந்து நரசுவின் எழுத்து தனித்துவம் பெறக் காரணம் என்ன? பொருளாதாரத்தை விவசாயமயமாக்குதல், சமூகத்தைப் பார்ப்பனியமயமாக்குதல் என்ற காலனிய முயற்சியின் பக்க துணையாக அமைந்த புத்தரின் தொடக்கால எழுத்துகளின் கீழ்திசை கண்டுபிடிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளுக்கு மாற்றாக, லட்சுமி நரசு விடுதலை தரும் பவுத்தத்தின் அடித்தளத்தை துணைக் கண்டத்தில் நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார். விழிப்புணர்வு மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கு அடித்தளமாகவும் அதன் மூலம் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் விடுதலை பெற்ற சமூக வாழ்விற்கு இட்டுச் செல்லக் கூடியதாகவுமே அவர் ‘விடுதலை தரும் பவுத்தத்தை' கட்டமைத்தார். அன்றைய காலத்தில் இருந்த பகுத்தறிவு மற்றும் மாந்த நேய சிந்தனைகளின் துணையை அவர் இதற்கு பெற்றார். ‘பவுத்தத்தின் சாரம்' நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரையில் இந்த செயல்திட்டம் விளக்கப்பட்டுள்ளது.

‘தனது ஆசானின் போதனைகளை எடுத்துரைக்கும்போது, அந்த போதனைகள் எதன் மீது எழுப்பப்பட்டிருக்கிறதோ, அந்த அடிப்படைக் கருத்துகளை தவற விடாதிருப்பது சீடரை சார்ந்துள்ளது. புத்தரை பொருத்தவரையில், அவரது குரல் உண்மையை அடித்தளமாகக் கொண்டது. அதனால் உண்மை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறதோ, அங்கெல்லாம் சீடர்கள் செல்ல வேண்டும். ‘எதுவெல்லாம் சரியான காரணங்களோடு இல்லாதிருக்கிறதோ, எதுவெல்லாம் உண்மையோடு பொருந்தாமல் இருக்கிறதோ, அவை எதுவும் ஆசானின் அறிவுரைகளாக இருக்க இயலாது' என்பதே பவுத்தத்தை போதிக்கும் பள்ளிகள் அனைத்திலும் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதிமொழியாகும். தங்கள் மதத்தை குறித்து விளக்க வந்த அனைத்து முக்கிய பவுத்த எழுத்தாளர்களும், பகுத்தறிவு மற்றும் உளவியலின் துணையை நாடியுள்ளனர். சிந்தனையின் பொதுவான நம்பகத் தன்மை குறித்து அவர்களுக்கு இருந்த அக்கறையின் காரண மாக, பொதுவாக தங்களுடைய மதத்தின் அடிப்படையாக கருதப்படும் சூத்திரங்களை, அவர்கள் பெரும்பாலும் ஒதுக்கியுள்ளனர். ஒரு பவுத்தர் என்ற நிலையிலிருந்து மாறாமல், தொடக்கக் காலத்திலிருந்து நிலவி வந்த பவுத்த மரபை பின்பற்றியே நூலாசிரியர், நவீன அறிவுத் தெளிவோடு பவுத்தத்தை தெளிவாக்க முற்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பவுத்தத்திற்கு ஒரு நவீன தன்மையை அளித்துள்ளார் என்றால், அது நவீன சிந்தனைகளோடு சிறிதளவு பவுத்தத்தை கலந்து தருவதாக அல்லாமல், அனைத்து வகையான பவுத்த மரபுகளின் அடி ஆழம் வரை சென்று, அடிப்படையான உண்மைகளை வெளிக்கொணர்வதின் மூலமேயாகும்.”

அனைத்து வகையான சீர்திருத்த எதிர்ப்புகள், மத மூடத்தனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக தாக்குப்பிடிக்கக் கூடிய ஒன்றாக பவுத்தத்திற்கு அவர் அளித்த பகுத்தறிவும் விடுதலை உணர்வும் மிக்க விளக்கமும், சமூக மூடத்தனத்தின் மிகக் கேடான வடிவமான சாதியை அதன் அத்தனை நுட்பமான, காலத்திற்கேற்ற விளக்கங்களோடு, நரசு தனது எழுத்துகளில் விவரித்த தன்மையும், நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்குதலில் பெரும் பங்காற்றியது. இந்தியாவிற்குள், அவ்வாறு இன்னமும் அங்கீகரிக்கப்படாத போதிலும், அம்பேத்கரிய பவுத்தத்தின் முன்னோடியாகவே நரசு நிற்கிறார். அம்பேத்கரின் எழுத்துகளுடன் இணைந்து நோக்கும்போது, துணைக் கண்டத்தில் ஒரு மனிதநேய சமூகத்தை அமைப்பதில் ஒரு சாத்தியமான விரும்பத்தக்க கொள்கை நெறியாளராகவே நரசு திகழ்கிறார்.

தமிழாக்கம்: பூங்குழலி
Pin It